பகுத்தறிவுஇன்று பெண்களுக்கு படிப்பு இல்லாததாலும், சுதந்திர உணர்ச்சியோ மான உணர்ச்சியோ இல்லாதபடி அடிமைத் தன்மைக்கு ஏற்ற வண்ணம் பெற்றோர்களால் வளர்க்கப்படுவதாலும், பெண்கள் பெரிதும் திருமணம் என்றால் அடிமை வாழ்வுக்கு தலை நீட்டுவதுதான் என்று கருதி இருப்பதாலும், இப்படிப்பட்ட அடிமைப்பெண்களே பதிவிரதைக் கூட்டத்தில் சேர்க்கப்படுவதாலும் நம் பெரும்பாகம் பெண்களுக்கு அடிமைத் திருமணம் ஆனந்தமாயிருக்கிறது. ஆண்களும் வாழ்க்கை இன்பம், வாழ்க்கை முயற்சி என்பவை இன்னது என்று தெரியாத காலத்திலே மணம் செய்து கொள்ளுகிறபடியால் மனைவியின் அடிமைத்தனமும், புணர்ச்சி தோற்றமும் சரியாய் இருப்பதைக் கொண்டே மணத்தில் திருப்தி அடைந்து வாழ்க்கையிலும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். அல்லது தன்னை தனக்கு கிடைத்த பெண்ணுடன் கூடி இருப்பதற்கு ஏற்றபடி சரிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அல்லது இதுதான் வாழ்க்கை இயற்கை என்று சரிப்படாத தன்மையையும் சகித்துக் கொள்ளுகிறார்கள்.

காதல் மணங்களும், காந்தர்வ மணங்களும் துணைவர்களுக்கு காம உணர்ச்சியும் அதில் தகுதியும் இருக்கும்வரை தான் இன்பம் அல்லது திருப்தி அளிக்கும். அதுவும் மற்ற வகையில் ஒத்தில்லாத பட்சம் அடிமைத்தனத்தோடு முடிந்துவிடும். பிறகு அது வாழ்க்கை என்னும் வண்டிக்கு வலுவில் பழக்கி பூட்டப்பட்ட எருதுகள் போல் வாழ்க்கை முறை என்னும் வண்டிக்காரனால் அதட்டியும், அடித்தும் ஓட்டப்பட்ட மாடுகள் போல் இளைப்பாற நேரம் இல்லாமல் போய்க் கொண்டே இருந்து முடிவெய்த வேண்டியதுதானே ஒழிய வேறில்லை.

( 23-04-1943ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தோழர்கள்

ஏகாம்பரம் - மனோன்மணி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.. )

இராமாயணப் பாத்திரங்களின் யோக்கியதை-2

25.12.1943 - குடியரசிலிருந்து...

சென்ற வார தொடர்ச்சி...

20.தன் மனைவி சீதையைப் பார்த்து, நீ பரதன் மனங் கோ ணாமல் அவனிஷ்டப்படி, நடந்து கொள். அதனால் நமக்குப் பின் னால் லாபம் ஏற்படும் என்கிறான்.

21. இராமன் காடு சென்ற சேதி கேட்டு, மனம் வருந்தி பரதன் இராமனைக் கூப்பிடக் காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது, பரதா!
குடிகள் உன்னை விரட்டி விட்டார்களா? தந்தைக்குப் பணிவிடை செய்ய இஷ்டமில்லாமல் வந்து விட்டாயா? என்று கேட்கிறான்.

22. மற்றும், உன் தாய், அவளது எண்ணம் நிறைவேறி சுகமாய் இருக்கிறாளா? என்றும் கேட்கிறான்.

23. பரதன், இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக் கொடுத்தப் பிறகே தசரதன் நாட்டை கைகேயிக்கு ஏற்கனவே சுல்கமாக கொடுத்து விட்ட செய்தியை பரதனுக்குச் சொல்லுகிறான். பரதன் இராஜ்யத்தைக் கொடுத்து விட்டு இராமனுடைய பாதரட்சையை வாங்கி வந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 ஆண்டுகாலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில்இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத்தயாராயிருப்பவனை, இராமன் சந்தேகப்பட்டு அனுமானை விட்டு, நான் படைகளோடும், விபூஷ்ணன், சுக்ரீவன் ஆகியவர் களோடும் வருகிறேன் என்று சொல்லு. அப்போது அவன் முகம் எப்படி இருக்கிறது? இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான்? என்பவைகளைக் கவனித்து வந்து சொல்லு. ஏன் எனில் எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? என்று சொல்லிப் பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான்.

24. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருக் கிறான். மனைவி நெருப்பில் குளித்துவிட்டு வந்த பிறகும்,பாமர மக்கள் மீது சாக்குப்போட்டு அவள், கர்ப்பமானதைப் பற்றிச் சந்தேகப்பட்டு அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய்க் கண்ணைக்கட்டி விட்டுவிடச் செய்கிறான்.

25. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும், இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாக வேண்டியதாயிற்று.

26. தமயனைக் கொல்லச் செய்து, ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற வேண்டு மென்று கருதித் துரோக சிந்தனை யோடு வந்த சுக்கிரீவன், விபூஷ ணன் ஆகிய அயோக்கியர் களை அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.

27. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியை, சகோதர துரோகிக்காக வேண்டி, மறைந்து இருந்து திடீரென்று கொல்லுகிறான்.

28. விபூஷணனை ஏற்கும்போது தன்னை அறியாமலே தனது கெட்ட எண்ணத்தையும் வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்திவிடுகிறான். அதாவது, தனக்கு மூத்தவன் தீயவனாக இருந்தாலும் அவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் என்கின்ற அறத்தை எல்லோரும் கைக்கொள்ள மாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப் போல் ஆவார்களா? என்கிறான். இதில்தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக்கொள்கிறான்.

29. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, மிருகங் களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டியதில்லை என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப் போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்கு ஆகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக் கூட வாலியை சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.

30. இராமன், பல பெண்களை மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து அங்கஈனமாக்கி கொடுமை செய்யச் செய்திருக்கிறான்.

31. பல பெண்களைக் கொன்று இருக்கிறான்.

32. பெண்களிடம் பொய் பேசி இருக்கிறான்.

33. பெண்களை கேவலமாய் மதித்து இருக்கிறான். பெண்களை நம்பக்கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தை சொல்லக் கூடாது என்கிறான்.

34. அதிக காமாந்தகாரனாக இருக்கிறான்.

35. அனாவசியமாக உயிர்களைக் கொன்றும் தின்றும் இருக்கிறான்.

36. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகதான் யாருக்கோ வாக்கு கொடுத்துவிட்டு காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான்.

37. அரக்கர்களோடு வலிய சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே, சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக்கிறான்.

38 கரனோடு போர்புரியும்போது உங்களை எல்லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட்டேன் என்கிறான்.

39. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகியாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்கு ஆக சரண மடைகிறான். என்னை ஆட்கொள்ள வேண்டும், கருணை காட்டவேண்டும் என்கிறான்.

40. இலங்கையை விபூஷணனுக்குப் பட்டம்கட்டி விட்டு, சீதையை விட்டுவிட்டால், இராவணனுக்கு இலங் கையை விட்டு விடுவதாக அங்கதனிடம் இராமன் சொல்லி அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன் மீது வேறு குற்றமில்லை என்று தெரிகிறது.

41. பரதனும் கைகேயியும் குடிகளும் குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும், சத்தியாக்கிரகம் செய்தும் அழைத்தபோது, தந்தை சொல்லைக் காப்பாற்று வேனே ஒழிய வேறு யாருடைய பேச்சையும் கேட்கமாட்டேன் என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்துவிட்ட இராமன் அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய், அயோத்தியை பட்டம் கட்டிக் கொள்ள மாத்திரம் எப்படி சம்மதிக்கிறான்?   

42. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல்,திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளுகிற வரை அதே கவனமாக, ஆசையாக, நம்பிக்கையாக இருந்திருக்கிறான்.

43. தபசு செய்ததற்கு ஆக சூத்திர வாலிபனைக் கொன்று இருக்கிறான்.

44. கடைசியாக சாதாரண மனிதர்களைப் போலவே, இராமன் இலட்சுமணனையும் தள்ளி விட்டு, தானும் (எமனால்) ஆற்றில் விழுந்து சாகிறான். பிறகு உப இந்திரனாக ஆகிறான்.

குறிப்பு:- (தோழர் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தனது மொழிபெயர்ப்பு அயோத்தியாகாண்டம் சருக்கம் 8, பக்கம் 28இல் இராமன் பட்டமகிஷியாக சீதையை விவாகம் செய்து. கொண்டாலும் அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்து போகத்துக்கு ஆக பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான் என்று வெள்ளையாகவும் காட்டி இருக்கிறார்.

பொறுக்கு மணிகள்

23.10.1943  -  குடிஅரசிலிருந்து....

. மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

. தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்கமுடியாது ? இருந்தால் அது மிக மிக அதிசயம்தான். இதற்கு உதாரணம் கோர்ட்களில் ஜட்ஜும் வக்கீலும் வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகியவர்களை உனக்கு என்ன ஜீவனம் என்று ஒருகேள்வி கேட்பதும்; மக்கள் அதிகப்படுத்திச் சொல்லுவதுமே போதுமானது.

. பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது. உண்மையான விபசாரித்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியில் இருந்தும், ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது.  .

29.10.1933  - குடிஅரசிலிருந்து... -

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே சட்டப்படி முழுவிடுதலையும் பெற்று இருக்கிறார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண் களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால்கூட தீட்டுப் போகாது. அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

25.12.1943 - குடியரசிலிருந்து...

இராமன் இனி இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும்.

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான்.

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சி களுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக்கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான்.

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான்.

6. நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படுகிறான்.

7. நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே என்று தாயாரிடம் சொல்லி சங்கடப்படுகிறான். (ஆனால், காட்டில் மாமிசத் தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்.)

8. என் கைக்குக் கிடைத்த இராஜ்ஜியம் போன தோடல் லாமல் நான் காட்டுக்கும் போக வேண்டியதாயிற்றே என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல்லி துயரப்படுகிறான்.

9. எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்துவரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப்பானா என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான்.

10.இராமன் பல மனைவிகளை மணந்து இருக்கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான தோழர் சி.ஆர்.சீனிவாசய்யங்காரும், தோழர் மன்மதநாத்தத்தரும் தெளி வாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாயணத்தில் பல இடங்களில் இராமனின் மனைவிமார்கள் என்றே வாசகங்கள் வருகின்றன.)

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்துவருகிறான்.

12. கைகேயி தீய குணமுடையவள்.

13. அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்.

14. என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடுவாள் என்று சொல்லி இருக்கிறான்.

15. காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கருதக்கூடிய சம்பவம் ஏற்படும் போ தெல்லாம், கைகேயி எண்ணம் ஈடேறிற்று, கைகேயி திருப்தி அடைவாள் என்று பலதடவை சொல்லி இருக்கிறான்.

16. தனக்கு ஆபத்து வரப்போவதாக நினைத்த மற்றொரு சமயத்தில், இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் எந்தவித எதிர்ப்புகளும் இன்றி சுகமாய் அயோத்தியை ஆளுவான் என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17.கைகேயி இராமனிடம், இராமா! அரசர் நாட்டை பரத னுக்கு முடிசூட்டுவதாகவும், நீ காட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார் என்று சொன்னபோது இராமன், அரசர் நாட்டைப் பரதனுக்கு கொடுப்பதாக என்னிடம் சொல்லவில்லையே என்று சொல்லுகிறான்.

18. தந்தையை, மடையன், புத்தியில்லாதவன் என்று சொல்லுகிறான். தந்தையை நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டு கொண்டு இரு; நான் காட்டுக்குப் போய் வந்து விடுகிறேன் என்று சொல்லிப் பரதனுக்கு முடி சூட்டுவதைத் தடுக்கிறான்.

19. எனக்குக் கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரி களைக் கொன்று என்னை அயோத்திக்கு அரசனாக்கிக் கொள்வேன். உலகத்தார் பழிப்பார்களே என்றுதான் சும்மா இருக்கிறேன் என்கிறான். இதனால் இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.    அடுத்த வாரமும் தொடரும்...

26.02.1933 - குடிஅரசிலிருந்து...

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக் காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.
சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்தபோதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவ தில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீ ரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.

சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோத மாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட் டிருக்கிறது. இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன் றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத் துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க் கத்தைப்பற்றி பேச வேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடுகளை யெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக்கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண் யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்கார னையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத்தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப் பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத்தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்த வர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள்.

சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவா தவர்களை காவல்  காக்கப் போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றி னார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்குவரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறா யிருப்பவைகளை இடித் தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சௌகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள்.

ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர்கேட்பார்கள்? யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.  இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?  முதலாவது உங்களைக் கேட்கிறேன்.

நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள்கி ன்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண்டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெனில், இன்னும்  அநேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித் திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவை களைக் கவனித்துக்கொண்டிருந்தால் பல னில்லை. சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக் கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருதுகின்றீர்களா? இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும்.

சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண் டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீனவுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?  இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன் றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண் ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.

ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.  அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற் காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக் கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா. இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்து விட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச் சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும்.

மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல்கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களேயானால் வந்து விட்டது. அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள். அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும் நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க் கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்.

எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுப விப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.  ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப்பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது.  ஆண் களைப்போலவே பெண்கள் செய்யத்தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.  உண் மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானா லும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கலியாணம் செய்து கொள் ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக்கியனாக வில்லை. 

ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இது போல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம். இஷ்டப் பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்ட மில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும், பயப்படக்கூடாது.

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி  கணக்கு வழக் கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது. இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண் டுமென்று ஆசீர்வாதம் செய்கின்றார்கள்.

இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட்டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதை யாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத் தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்த வர்களாவீர்கள். எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல்வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான்.

இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற்காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றை யும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.

(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)
‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931

Banner
Banner