பகுத்தறிவு

20-10-1929 - குடிஅரசிலிருந்து...

பண்டிகைகளையும் உற்சவம் முதலியவை களையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில் லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடையவர்களு மாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்ப னர்களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டி ருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர் களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பா ளர்களாவார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்த வர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக் காரர்களாகவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர் களுமாயிருந்தவர்களே அரசர் களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.

இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசிய முடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப்பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட் டான். செல்வமிருக்குமானால் அரசனுக்குப் பயப்பட மாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல் லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம் பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்க வுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டு மானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களையெல்லாம் பாலும் நெய்யும் தேனு மாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப் பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரி யான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.

தந்தைபெரியார் பொன்மொழிகள்

* சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள், நம்மை எப்படி மதிப்பார்கள் என்கின்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதோடு அந்தப்படி நினைப்பவன் மனிதச் சமுதாயத் தொண்டுக்கு அருகனாகவே மாட்டான் என்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.

* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும்.  மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை

புதிய விதிமுறைகள் வெளியீடு

சென்னை, டிச.7  அய்அய்எம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

அய்.அய்.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறும் வகையில் ஆண்டுக்கு 100 தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதில் தலைசிறந்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 100 பேருக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்து ஒரே இடத்தில் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவது நடைமுறை சாத்தியமில்லாதது என ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கான விதிகளுடன், கூடுதலாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிகள் என்ன?: ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பல்வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம். பயிற்சியை ஒரே நகரத்தில் மட்டும் மேற்கொள்ளாமல், திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களிலும் நடத்தலாம். ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு நிறுவனங்களை அங்கீகாரம் செய்யலாம். இப்போதுள்ள சந்தை விலை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம், பயிற்சிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யலாம்.

பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேரும் ஆதிதிராவிடர் பயிற்சியாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கலாம். பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தாட்கோவால் நிதி அளிக்கப்படும் மாணவ-மாணவிகள் பயிற்சி நிறுவனங்களின் வழக்கமான வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். தரமான பயிற்சியை அளிக்கும் வகையிலும், பயிற்சியாளர்களின் வருகையில் குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் தனி வகுப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது.

மாணவர்கள் வழக்கமான வகுப்புகளில் சேர்க்கப்பட வேண்டும். இணையதளம் அல்லது விரைவாக முடிக்கும் வகுப்புகளாக இருக்கக் கூடாது. பயிற்சியின் காலம் குறைந்தபட்சம் 100 மணி நேரம் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் பயிற்சி நிறுவனத்தின் கட்டணம் அல்லது ரூ.50 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று ஒட்டெம் டாய் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

17.11.1929 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனியத் திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப் படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்துகொண்டதாக அப்புராணத்தில் சொல் லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்டநிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண் மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப் பட்டு  ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப்படியே, ஒரு காவியம் பாடச் செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும் சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச்செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனர் குதிருக்கே போய்ச் சேரும்படியும் செய்துகொண்டு வந்திருப்பதுடன், அந்த இராமாயணக் கதையில் சொல்லியுள்ளபடியே இராமாயணத்தில் வரும் ராமனுக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், லட்சுமணன், பரதன், சத்துருக்கணன் ஆகியவர்களுக்கு ஆளுக் கொரு ஆயிரமாயிரம் கோயில்களும் அனுமா ராகிய குரங்குக்கு ஒரு பதினாயிரம் கோயில்களும், மற்றவைகளுக்கு நகை என்றும், வாகனம் என்றும் மண்டபம், சப்பரம், தேர் என்றும் மேளம், தாளம், தாசி, பூஜை உற்சவம் என்றும், மற்றும் இவை போன்றவைகளுக்கு என்றும் முதலாகியவைகளுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதும் இவற்றில் பெரும்பகுதி பார்ப்பனத் தொந்தியில் விழும்படியாகவும் செய்து, மற்றும் வீடுகள் தோறும் ராமன் படமும், சீதை படமும், அனுமான் படமும், சுவர்களில் தொங்க விட்டு, அதற்கு புஷ்பம், கற்பூரம், தேங்காய், பழம் பூஜையும் நடந்து வரும் படியாகவும் செய்யப்பட்டு இன்றைய தினமும் வழக்கத்தில் நடந்தும் வருவதை எவரும் மறுக்க முடியாது. இது மாத்திரமல்லாமல் ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள், தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும்,  பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும் மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் என்றும் இஷ்ட சித்தியாகம் என்றும் சொல்லி நம்பச் செய்து, அதன் மூலமாகவும், மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவு உண் டாக்கப்பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இவை மாத்திரமல்லாமல், ராமன், லட்சுமணன், சீதை முதலியவர்களுக்கு பார்ப்பன அடையாளமும், மற்ற, அதாவது இராவணன், கும்பகர்ணன், தாடகை, சூர்ப் பனகை முதலியவர்களுக்கு பார்ப்பனரல்லா தார் அடையாளமும் பெயர்களும், அது போலவே, அருவருக்கத்தக்கதாகவும் கெட்ட கருத்துக்கள் கொண்டதாகவும் கற்பித்து அவற்றை தேவர் அசுரர் என்பது போலவும், பிராமணர் சூத்திரர் என்பது போலவும் கருத் துக்களையும் ஏற்றி அதாவது இப்போது பார்ப் பனர்கள் என்பவர்கள் எல்லாம் தேவர்களைக் கருதும்படியும், இப்போது அவ்வொழிந் தவர்கள் அசுரர்களாகக் கருதும்படியும் சூழ்ச்சி செய்து, அதையும் நமது மக்கள் மனத்திற்குள் புகுத்தி விட்டார்கள்.

எனவே இப்பேர்ப்பட்ட புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் பெரும்பான் மையான நம்மக்களுக்கு ஏற்பட்ட இழிவையும் ஒழிக்கக் கருதி, மேற்கண்ட மாதிரியான மூடநம்பிக்கையிலும், பாமரத் தன் மையிலும் ஈடுபட்டு நஷ்டமடைந்து மானமற்று மிருகங் களிலும் கேவலமாய் பிழைக்கும் மக்களின் மடமையை நீக்க வேண்டுமென்ப தாய் இராமாயண ஆராய்ச்சி என்றும், இரா மாயண புரட்டு என்றும், இரா மாயண ஆபாச மென்றும், இராமாயண இரகசியமென்றும், மற்றும் பலவிதத் தலைப்புகளின் கீழ் அப்புரட்டுகளைச் சுயமரியாதை உணர்ச்சி யுள்ள பல பெரியோர்களும் அறிஞர்களும் கொஞ்ச காலமாய் வெளிப்படுத்தி வரும் விஷயங்கள் யாவரும் அறிந்ததாகும்.

இவ்வித வெளியீடுகளுக்கு நாட்டில் ஏற்பட்டஎதிர்ப்புகளும், தடைகளும் கொஞ்சமல்லவென்பதும் பொதுமக்கள் உணர்ந்ததே யாகும்.

அவர்கள் இதுவரை இராமாயணத் தினால் ஆதிக்கம் பெற்று வயிறு வளர்த்து வரும் பார்ப்பனர்களும் அவர்களது புல்லுரு விகளும் கூலிகளும் செய்து வந்த எதிர்ப்புகள் என்ன என்றால், இராமாயணத்தைக் குற்றம் சொல் லுவது மகாபாதகம் என்றும், அது கடவுள் நிந்தனை என்றும் மதத்துரோகம் என்றும், இராமனை கடவுளாக வணங்கும் இந்துக்கள் மனம் புண்படுகின்றது என்றும், மற்றும் பலவிதமான தந்திரவார்த்தைகளையும், மருட்டு வார்த்தைகளையும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிவந்தார்கள்.

,இந்நிலையில் அவைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டு மென்று கருதியே இராமா யணம் நடந்த கதை என்று நம்புபவர்களுக்காக அப்படி நடந்திருக்க முடியாது என்பதற்குள்ள பல காரணங்களையும், இராமன் கடவுள் என்று நம்புபவர்களுக்கு, அவன் கடவுளாயிருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும், இராமாயணம், தேவர்கள், அசுரர்கள் சண்டை என்று நம்புகின்றவர் களுக்கு அது தேவர்கள் அசுரர்கள் கதை அல்லவென்பதற்கு பல காரணங்களையும் சொல்லி வருவதோடு, எதற்கும் அசையாமல், குரங்குப்பிடியாய் இராமன் கடவுள் என்றும், இராவணன் அசுரன் என்றும், மற்றும் அதில் கூட ராமன் வடதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், இராவணன் தென்தேசத்துக்காரன் என்றும், வடக்கே இருந்து தெற்கே வந்து சண்டை போட்டான் என்றும், மற்றும் இதிலிருந்து வடதேசத்து ஆரியர்கள் தேவர் களாயிருக்கக் கூடும் என்றும், தென்தேசத்துத் திராவிடர்கள் அசுரர்களாயிருக்கக் கூடும் என்றும், நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களது மடமையைப் போக்க வேண்டி அதற்குத் தகுந்தபடி பல காரணங்களையும் காட்டிப் பேசியும் எழுதியும் வரப்படுகின்றது.

ஒரத்தநாடு, நவ.23 கஜா புயல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன.

இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பல இடங்களில் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை லாரிகளில் ஏற்றி பலகை அறுக்க விவசாயிகள் அனுப்பி வருகிறார்கள். இந்தநிலையில் கஜா புயலில் சுமார் 5 ஏக்கர் தென்னை மரங்களை இழந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தஞ்சை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 57). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார்.

இந்த தென்னை மரங்களில் பெரும்பாலானவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கிய கஜா புயலில் முறிந்து விழுந்தன. இதனால் சுந்தர்ராஜன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோகத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுந்தர்ராஜன் இரவு வரையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுந்தர்ராஜன் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் பிணமாக கிடந்தார். அவர் அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சுந்தர்ராஜன் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தென்னை மரங்கள் சாய்ந்ததால் சுந்தர்ராஜன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பாப்பாநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த சுந்தர்ராஜனுக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதா என்ற மகளும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி(வயது 52). விவசாயியான இவருக்கு சொந்தமாக 1 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கஜா புயல் தாக்கியதில் இவரது வீடு மற்றும் தென்னந்தோப்பு ஆகியவை சேதம் அடைந்தது. வீடு சேதம் அடைந்ததால் இவர் தனது தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று காலை இவர் தனது தென்னந்தோப்புக்கு சென்று புயலால் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். தான் ஆசை, ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் புயலுக்கு சாய்ந்து கிடப்பதை பார்த்து வேதனை அடைந்த அவர், கீழே கிடந்த தென்னை மரங்களின் அருகில் சென்று அவற்றை தடவிக் கொடுத்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு குணமதி என்ற மனைவியும், ஆனந்தன், கார்த்தி என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர்.

வல்லம், நவ.23 சைல்டுலைன் - 1098 நோடல் நிறுவனம் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சைல்டு லைன் இணை நிறுவனம் செட் இண்டியா சார்பாக நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் பாது காப்பு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தஞ்சை பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 13.11.2018 அன்று பெரியார் சமுதாய வானொலி 90.4 விபிக்ஷ் இல் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவருமான முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் தலைமை யேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகை யில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கினார். மேலும் அதனை தொடர்ந்து சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந் தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான கார ணங்கள் குறித்து சைல்டுலைன் இணை நிறுவனம் செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆலோசகர் தர்ஷனா, குழு உறுப்பினர் ரஞ்சித் மற்றும் செண்பக மலர் ஆகியோர் கலந்துரை யாடினர். அதிலும் சிறப்பாக சைல்டுலைன் சேவை குறித்தும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் விழிப்புணர்வு பாடலை பாடி பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்கள். இதனை சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவி லஷ்மிபிரியா தொகுத்து வழங்கினார்.

சைல்டுலைன் - 1098 நோடல் நிறுவனம், சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனம் மற்றும் சைல்டுலைன் இணை நிறுவனம் செட் இன்டியா சார்பாக நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சைல்டுலைன் - 1098 சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் சுவர் ஒட்டிகள் வெளியிடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் வெளியிட குழந்தைகள் அதனை பெற்றுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு சுவரெட்டிகளை அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை பாதுகாப்பு வாகனங் களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவருமான முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ் டின், செட் இன்டியா இயக்குநர் பெ.பாத்திமாராஜ் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ஞானராஜ், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைதொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மாவட்ட வன அலுவலர் - சமுக தணிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவ லர்கள் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழுமத்தின் அலுவலர்கள், தொழி லாளர் நலத்துறை அலுவலர்கள், அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண் டர்கள் அனைவருக்கும் குழந்தைகள் மூலம் சைல்டுலைன் எனது நண்பன் என்ற வாசகங்கள் அடங்கிய கயிறை கட்டி இனிப்புகள் வழங்கியும் மற்றும் சைல்டு லைன் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு வழங்கி வருவ தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். மேலும் சைல்டு லைன் - 1098 சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு கொடுத்தும், விழிப்புணர்வு சுவர் ஒட்டிகளை பொது இடங்களில் ஒட்டியும் பொதுமக்களுக்கு சைல்டுலைன் - 1098 சேவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Banner
Banner