பகுத்தறிவு

- சித்திரபுத்திரன் -

29.10.1933  - குடிஅரசிலிருந்து...

கேள்வி:- பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும், விபசார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழு விடுதலையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ, ஆண்கள் தங்கப் பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை. துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம் வேறுயாராவது தொட்டால் கழுவினால் கூட தீட்டுப்போகாது.

அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாகவேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடு தலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

23.10.1943  - குடிஅரசிலிருந்து...

 

மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்கமுடியாது ? இருந்தால் அது மிக மிக அதிசயம்தான். இதற்கு உதாரணம் கோர்ட்களில் ஜட்ஜும் வக்கீலும் வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகியவர்களை உனக்கு என்ன ஜீவனம் என்று ஒருகேள்வி கேட்பதும்; மக்கள் அதிகப் படுத்திச் சொல்லுவதுமே போதுமானது.

பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது.

உண்மையான விபசாரித்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியில் இருந்தும், ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது.

சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுஉடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும். ஆனால் அறிவும்,துணிவும், தனக்கென வாழாது தன்னல மறுப்பும் கொண்டவனே, பொது உடமையையும் நாஸ்திகத்தையும் பயன்படும்படி எடுத்துச் சொல்ல முடியும். இவை இல்லாதவர்கள அவற்றின் பேரால் பிழைக்கத்தான் முடியும்.

தலைவிதியும், மோட்ச நரகமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேரா சையும் மடமையும் இரண்டையும் நம்பச்செய்கிறது. மனி தர்கள், எப்படி உண்மையான மக்களை மதிக்கா மலும் நம்பாமலும், அயோக்கியர்களையும் வேஷக் காரர்களையும் நம்புகிறார்களோ, அதுபோல் தான் உண்மையான மதத்தை (கொள்கைளை) நம்பாமல், புரட்டும் பித்தலாட்டமும் உள்ள மதங்களையே நம்புகிறார்கள். ஏனெனில் மக்கள் சுபாவம் ஆசை யும் சுயாநலமுமே ஆனதால், புரட்டும் பித்த லாட்டமும் தான் ஆசையையும், சுயநலத்தையும் திருப்தி செய்வதாக வாக்களிக்கிறது.

ஆசையும் சுயநலமுமற்றவனுக்கு கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்கவேண்டிய அவசியமே இல்லை.

ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குச் சுற்றிலும் கைபிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை புத்தி இருந்தால் ஜாக்கிரதையாய் நடக்கட்டும் இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அது போலவே, ஒரு நல்ல கடவுள், சாத்தானை (தீமை களை) உண்டாக்கி விட்டுத் தனது பிள்ளைகளான குழந்தைகளை புத்தி இருந்தால் சாத்தானுக்குத் தப்பிப் பிழைக்கட்டும் இல்லாவிட்டால் சாத்தானால் நரகத்தில் வீழட்டும் என்று சொல்லுவானா?

பெண்களுக்கு மதிப்பில்லாது போனதேன்?
15-06-1943 - விடுதலையிலிருந்து...

பெண்களுக்கு மதிப்பற்றுப் போனதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாய் தங்களை சிங்காரித்துக் கொள்வதேயாகும்.

தங்களது முட்டாள் ஆசையும் மூடபக்தியுமே ஆகும். ஆண்களை விட விலை உயர்ந்த துணி மணிகள் அணிவதுமேயாகும். அலங்கரித்துக் கொள்ளப்பட்ட பெண் தெருவில் நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும்போதும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்படித்தெரியும்?

மனதில் என்ன தோன்றும்? என்பதையும் அறிவு உலகத்தில், பொதுத்தொண்டு உலகத்தில் இவர் களுக்கு எவ்வளவு இடமிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அலங்கரித்துக் கொள்ளுவதின் இழிவு புலப்படாமல் போகாது.

நானுஞ் சொல்லுகிறேன் (சு.ம.வின் சீடன்)
13.11.1943 - குடிஅரசிலிருந்து...

நான் சொல்லுகிறேன் என்ற தலைப்பில் சென்ற வாரக் குடிஅரசின் 13-ஆம் பக்கத்தில் சு.ம. அவர்கள் ஆஸ்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருந்தார். அதில் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் மதம், கடவுள் இவைகளின் குணங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சில நிபந்தனைகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இவையிரண்டுக்கும் சிருஷ்டி கர்த்தர்களாயுள்ளவர்கள் ஆரியர்-பார்ப்பனர் ஆகையால் அவர்களைப் பற்றி சில விஷயங்களைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆரியப் பார்ப்பனர்களே! அவர்களது கால்வருடும் கண்ணிய வான்களே! நாங்கள் ஆரியப் பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால், அவர்களைத்துவேஷிக்கக் கூடாதென்பீர் களானால், அவர்களைப் பகைக்கக்கூடாதென்பீர்களானால், அவர் களையும் உடன்பிறந்தார்களைப் போல் (1)பாவிக்க வேண்டுமென் பீர்களானால், அவர்கள் தன்மானத் தமிழர்களாகிய நாங்கள் விரும்புகிறபடி, அதாவது அறிவு உலகம் ஒத்துக்கொள்கிறபடி இருந்தால், அவசியம் ஏற்றுக்கொள்கிறோம்.

(1.) ஆரியர் தங்களது ஜாதியைக் குறிக்கும் அடையாளத்தை நெற்றியிலோ, உடலிலோ அளிக்ககூடாது. உடையைக் கொண்டோ, தலைமயிரைக் கொண்டோ, பேச்சைக் கொண்டோ அவர்கள் தமிழர்களுக்குப் புறம்பானவர்கள் என்று கண்டுகொள்ள முடியாதபடி இருக்கவேண்டும்.

(2) கோவில்களிலுள்ள கல்லையும் செம்பையும் கழுவி வயிறு வளர்க்கும் வேலையை அடியோடு விட்டுவிட வேண்டும். அதாவது கோவில்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கக் கூடாது. அவைகளை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துவதை இவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடுக்கவோ எதிர்க்கவோ கூடாது.

(3) தாங்களே ஊட்டிய நஞ்சைத் தாங்களே எடுக்கவேண்டு மென்ற நீதிப்படி எல்லாத் தமிழர்களுடனும் கலப்பு மணஞ் செய்து கொள்ளச் சம்மதிக்கவேண்டும். இதற்கு இடையூறாக உள்ள சட்ட திட்டங்களை ஒழித்துவிட வேண்டும்.

(4) வண்டியோட்டுதல், ரிக்ஷா முதலிய வண்டிகளை இழுத்தல், விறகு வெட்டுதல், உழுதல், தண்ணீர் இறைத்தல், சுமை தூக்குதல், வீடு கட்டுதல், தெருப்பெருக்குதல், அசுத்தத்தை அள்ளுதல், சவரஞ் செய்தல், துணி வெளுத்தல், மாடு மேய்த்தல் முதலிய இன்னும் பல்வேறு தொழில்களை ஏழைகளாயுள்ள தமிழர்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ, அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனரும் செய்ய வேண்டும்.

(5) அங்காடி விற்றல், நெல்குத்துதல், நடவு நடுதல், சிறு சுமைகள் தூக்குதல், பாத்திரம் தேய்த்தல் முதலிய தொழில்களையும் இன்னும் பல்வேறு தொழில்களையும் ஏழைகளாயுள்ள தமிழ்ப் பெண்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனப்பெண்களும் செய்யவேண்டும்.

(6) ஆயுள் ஹோமம், கலியாணம், கருமாதி, திதி, புண்ணியாதானம், புது வீடு புகுதல், சீமந்தம், சோதிடம், அமாவாசை, அர்ச்சனை, அபிஷேகம், கும்பாபிஷேகம், தேர், திருவிழா, கோவில் கட்டுதல் முதலிய எந்த விதமான காரணத்தைக் கொண்டும் தமிழர்களிடமிருந்து ஒரு பைசாவோ, வேறு ஒரு சிறு துளியோ வாங்கவே கூடாது. இவைகளெல்லாம் முழுப்புரட்டு என்பதையும், தமிழர்களை முழு முட்டாள்களாக ஆக்குவதற்காகவே சைவம், வைஷ்ணவம், வழக்கம், சாஸ்திரம் என்ற வேறு பெயர்களால் தங்களால் உண்டாக்கப்பட்டவை என்பதையும் கண்ணியமாக ஒத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும்.

(7) ஜாதிவேற்றுமையையும், மதப் பூசல்களையும், மூட எண்ணங்களையும், அடிமைத் தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும், கோழைத் தனத்தையும் தமிழர்களிடம் உண்டாக்குவதற்காகவே கற்பிக்கப்பட்டுள்ள எல்லா இதிகாசங்களும், எல்லாப் புராணங்களும், கட்டுக் கதைகள், நாவல்கள், மறக்கப்பட வேண்டியவைகள், ஒழிக்கப்பட வேண்டியவைகள் என்பதைக் கண்ணியமாக ஒப்புக் கொள்ளவேண்டும். (தமிழர்களிலேயே எவ்வளவோ பேர் இவ்வாறு சொல்ல மாட்டார்களே என்று வீண் சாக்குக் கூறக்கூடாது. ஆணிவேரை அறுத்துவிட்டால் சல்லி வேர்கள் மறுநாளே மடித்துப் போகும்.)

(8) ஆரியரை (பார்ப்பனர்)க் குறிக்கக்கூடிய அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, ராவ் முதலிய பட்டங்களை எந்த சந்தர்ப்பத்திலும் உபயோகிக்கக் கூடாது.

(9) உலக வாழ்க்கைக்கோ, மனிதர்களின் நல்லொழுக்கத்திற்கோ உதவாத வேதபாராயணம், யாகம், பூஜை, அர்ச்சனை முதலியவைகளும், சங்கராச்சாரியர், மாதவாச்சாரியார், ஜீயர் முதலியஅமைப்புக்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும்.

செத்து மடிந்துபோன சமஸ்கிருதத்தை விட்டொழித்து உயிருள்ள மொழிகளைப் பயில வேண்டும்.

10.தீபாவளி, சரஸ்வதி பூஜை, விநாயக சதுர்த்தி, ஸ்ரீ ராம நவமி, அறுபத்து மூவர் விழா, கந்தர் சஷ்டி, சிவராத்திரி, கிருஷ்ண ஜயந்தி முதலிய பண்டிகைகள் மூடத்தனத்தையும், மத வெறியையும், சமுகச்சண்டையையும், அறிவீனத்தையும் தமிழர்களிடம் வளர்ப்ப தற்காகவே தங்களால் ஏற்படுத்தப்பட்டவைகள் என்பதைக் கண்ணிய மாக ஒப்புக்கொண்டு இவைகளை அடியோடு நிறுத்திவிட வ்ண்டும்; நிறுத்தும்படியாக அடிமைகளாக்கப்பட்ட தமிழர்களிடம் பிரச்சாரஞ் செய்யவேண்டும். (இப்பண்டிகைகளுக்குப் பதிலாக என்ன விழாக்களைக் கொண்டாட வேண்டுமென்பது பிற்காலத்தில் ஏற்படும் திராவிடநாட்டு சர்க்காரால் நிர்ணயிக்கப்படும்.)

இப்போதைக்கு இந்த நிபந்தனைகள்போதும். இவைகளின்படி நடக்கும் ஆரியர் பார்ப்பனர் திராவிடநாடு ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்படுபவர்; அன்னியராகக் கருதப்படமாட்டார். எங்கே பார்க்கலாம்! எத்தனை ஆரியர்கள் முன்வருகிறார்கனென்று!


இவ்வளவு தானா?

20.11.1932  - குடிஅரசிலிருந்து...

இவ்வளவு மாத்திரம் தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசு தாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர் களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சபுத்திரர்களே!! நீங்கள் முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது வைத்து கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக் கிறீர்கள்.

இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டி ருக்கும் இச்சுக போகம் உங்களுக்குக் கிடைத் ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலம் கடவுள் பக்தர்களான பாதிரிகுரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம் மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோட்சலோகத்திலும் சுலபமாக  இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்  என்ப தேயாகும். ஆகவே தோழர்களே! இந்த காரணங் களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன  என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூ னிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிர பந்தங் களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்து கொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்ற வனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.   - தந்தை பெரியார்

தலைவிதி
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சி யும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,

ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக் கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேச மேயாகும்.

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.

ஆதியில்....
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங் களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.  அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவை களும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவை களாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத் தெரியப் பட வேண்டும்.

கடவுள்
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.

கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரசாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப் படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது. கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.


கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.09.02.1930 - குடிஅரசிலிருந்து...

சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?

வைணவன் : - ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டுகால் பிராணிகளில் ஏணி வகையறாவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகையறாக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டுமரம் முதலியவைகளையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவ தாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.

சைவன் : - அப்படியா இது நல்ல சைவம்தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போகவேண்டும். நான் போய்விட்டு வருகிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ? என்று நினைத்து ஓடிவிட்டார்.)

உதிர்ந்த மலர்கள்
16. 02.1930 - குடிஅரசிலிருந்து...

1.  புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்ன வென்றால் அவை  எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித் தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் இப் புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும் என்னும் எழுதி வைத்ததே காரணமாகும்.

2. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்றும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

3. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான். ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும்
நடந்த சம்பாஷணை
- சித்திரபுத்திரன் -

16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

மகா விஷ்ணுவான சிறீரங்க ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்ஸ்வரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான சிறீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப் பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால்தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம்கூட கைவைத்துவிட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப் பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?

விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்துவிட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்றுதானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

விஷ்ணு:- பின்னயேன் லாட்டரி சீட்டு போடச்செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்ப தற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரிச் சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம் தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்றுவதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்து வமாகும்.

விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்.

கடவுள், மதம், வேதம்
02.02.1930- குடிஅரசிலிருந்து...
அய்க்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்பு

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும், உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றி பேசிய புகழ் வார்த்தைகளும், தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்துகொண்ட மாதிரியும் பார்த்துதான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்த தென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லி விட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரதாபங்களைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும், ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள்கைகளுக்கும், தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும், ஊக்கமும் ஏற்பட்டு விட்டதென்றும், யோக்கியமான எவ்வித அரசியல்காரர்களும், மத இயல்புக்காரர்களும், சமுக இயல்புக் காரர்களும், அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்படவேண்டிய தில்லை என்றும் சுயமரியாதையும், சமத்துவமும், அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சிய மென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்றுதான் உறுதியாய்க் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ, ஆதரவையோ உண்டாக்க வரவில்லை யென்றும், மற்றவர்களைப்போல் பணம் வசூல் செய்து மூட்டை கட்டிப்போக வரவில்லையென்றும், உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோ மென்றும் அதற்குத் தக்க உதாரணங்கள் காட்டிப் பேசினார். கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.


மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சி யாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மான முடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான். -தந்தை பெரியார் பொன்மொழி


நல்ல வர்க்கம்
30-06-1929 - குடிஅரசிலிருந்து...

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது.  ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியா வதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக் குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது.

ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமதானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான். என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு.  ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

இப்பொழுது மதம் எங்கே?
16-06-1929 - குடிஅரசிலிருந்து...

திருப்பதி தேவஸ்தான சமகிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள் ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல் லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாச மும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட் கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குப் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது.  

இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும்

- சித்திரபுத்திரன் -

03-02-1929 - குடிஅரசிலிருந்து....

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாதிரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்ம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய  பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன் னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்து விட்டால் கிறிஸ்தவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உப யோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்தி வாரமே ஆடிப் போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாதிகத்தை உபயோகிப்ப தேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரம மான வாக்கியங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு 1 பெண்களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமி களுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ் வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கு மென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாஸ்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாஸ்திகப் பட்டம் கிடைப் பது ஒரு அதிசயமா?

‘நாஸ்திக’த்தின் சக்தி
23-06-1929  - குடிஅரசிலிருந்து...

ருஷ்யாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடு களும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது.

இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங் களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டி வருகின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகை களில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலை யுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். நாஸ்தி கத்தின் சக்தியே சக்தி!

வட இந்தியாவிலும்
நாஸ்திகம்
16-06-1929  - குடிஅரசிலிருந்து...

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் போல்ஷ்விக்காரர் (எதிரிகள்) கடவுள், நம்பிக்கையை ஒழிப்பவர்கள்.

இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள் பவுத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்துமதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துவிட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள்.

கடவுளுக்கு எதிர்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்..... இக்கொள்கைக்காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அனுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வரு கிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும் லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படு கின்றது என்று கூறினார். வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிறதென்பதற்கும் அதிகமாகப் பேசப் படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.  

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் எனது ஆசை.

சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி, இவைதான் பெரி தும் மனிதனை இதர மிருகங்கள் பிராணிகளிடமிருந்து பிரித் துக் காட்டுவன வாகும். தன் சிந்தனா சக்தியைக் கொண்டுதான் மனிதன் மாற்றமோ முன்னேற்றமோ அடைந்து வருகின்றான்.Banner
Banner