பகுத்தறிவு

சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணி யம்மை மருத்துவமனையில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளையொட்டி 17.9.2018 திங்கள் காலை 9 மணி முதல் 1 மணிவரை நடைபெறும் சிறப்பு இலவச மருத்துவ முகாமில் கீழ்வரும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சேவையாற்ற இசைந்துள்ளார்கள்.

1. கண் மருத்துவ நிபுணர் Dr. எம்.இராதா கிருஷ்ணன் M.S.D.O.

மேனாள் இயக்குநர் - அரசினர் கண் மருத்துவமனை, சென்னை

2. Dr. ணி.பிரபு M.D (Nuclear Medicine) - அணு ஆற்றல் சிறப்பு மருத்துவர்)

3. Dr. சுந்தரேசன் M.D -  சிறப்பு மருத்துவர் (ஊடுகதிர் பிரிவு )

4. Dr. கே.அறவாழி M.B.B.S. D.L.O., FCIP.,

காது, மூக்கு தொண்டை நிபுணர்

5.  Dr. எம்.தேனருவி M.D., - பல் மருத்துவர்

6.  Dr. T. தங்கம் M.B.B.S., (MD) INT MED - மகளிர் மருத்துவம்

7.  R.G.STONE (ஆர்.ஜி.ஸ்டோன்) - Urology Specialist (சிறப்பு மருத்துவம் - சிறுநீரகவியல்)

8.  வாசன் அய் கேர் - கண் மருத்துவக் குழு தேவையான உபகரங்களுடன் பங்கேற்பு

இந்த இலவச மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

-இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவக் குழுமம்

06-11--1943, குடிஅரசிலிருந்து...

மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்று சொல்லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.

இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.

என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகா தய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவமொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.

சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வட மொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத் தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த் தாய், உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப் போய்விட்டேன் என்பது ஆக புலம்பு வதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்ப தாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண் டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந் தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழுகிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப்பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?

ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார்கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.

15.06.1930 - குடிஅரசிலிருந்து... திருப்பதி  சாமிக்கு வருஷம் ஒன்றுக்கு 17 லட்சம் ரூபாய் காணிக்கை வருகிறது. இதுதவிர, அந்தச் சாமிக்கு ஏழரை கோடி ரூபாய் பெறுமான சொத்துமிருக்கிறது. அந்தச் சொத்துக்களை விற்று 100க்கு மாதம் எட்டணா வட்டிக்குக் கொடுத்து வாங்கினாலும், வருஷத்தில் நாற்பது லட்சம் ரூபாய் வட்டி வரும். இவைதவிர, அந்தக் கோவிலுக்கும், உற்சவத்துக்கும், வேண்டுதலைக்கும், காணிக்கை செலுத்துவதற்கும் யாத்திரை போகும் ஜனங்களின் ரயில் சார்ஜ் முதலிய செலவுகளைக் கணக்குப் பார்த்தால் அதிலும் நாற்பது அய்ம்பது லட்ச ரூபாய் கணக்கும் ஆக இந்த மூன்று இனங்களில் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு சாமியால் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீணாகிறது.

இதுபோலவே, சற்றேறக்குறைய தமிழ் நாட்டில் மாத்திரம் திருச்செந்தூர், இராமேவரம், மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர் முதலிய கோயில்களையும், சங்கராச்சாரி, பண்டார சந்நதி ஆகிய மடங்களையும், கும்பகோணம் மகாமகம் போன்ற உத்சவங்களையும் மற்றும் 108 திருப்பதி 1008 சிவலிங்கம் வகையறா பாடல் பெற்ற தலங்களையும் மற்றும் மாரியாயி, ப்ளேகாயி, காளியாயி முதலிய கிராமதேவதை முதலியவைகளுக்கும் மற்றும் சடங்கு, சிரார்த்தம், கருமாதி ஆகும் செலவு மெனக்கேடு வகையறாக்களையும் சேர்த்தால் எத்தனை பத்துக்கோடி ரூபாய்கள் ஆகுமென்று சற்றுப் பொறுமையாயிருந்து கணக்குப் போட்டுப் பாருங்கள். இவையெல்லாம் மனிதனைக் கெடுக்கவும், அவனது அறிவைப் பாழாக்கவும், என்றும் தரித்திரவானாகவேயிருந்து அடிமை யாயிருக்கவுமே அந்தச் சாமிகள், உற்சவங்கள், சடங்குகள், மோட்சங்கள் என்பவைகளெல்லாம் சுயநலக்காரர் களால் அயோக்கிய எண்ணத் துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

என்ன பலன்?

நிற்க, திருப்பதி யாத்திரையால் மனிதனுக்கு என்ன பலன் ஏற்படுகிறது? அதனால் என்ன ஒழுக்கம் காண்கிறோம்? ஒருவன் 2000 ரூபாயைக் கொண்டு போய் திருப்பதி உண்டியலில் கொட்டிவிட்டு வருவானேயானால் அவனுடைய அரையங்குலமாயிருந்த நாமம் இரண்டங்குலமாக அகலமாவதும், சனிக்கிழமை பிடிப்பதும் மக்களைக் கண்டால் என்னைத் தொடாதே! எட்டிநில்! என்பதைத் தவிர வேறு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ ஏற்படுகிறதா? தவிரவும் திருப் பதிக்குப் போனதினாலேயே அதுவரையில் செய்த பாவமெல்லாம் ஒழிந்துவிட்டதென்று கருதி இனிப் புதுப்பாவமும் செய்யலாம் என்கிற தைரியம் உண்டாகிவிடுகிறது.

தவிர, இந்த மாதிரியான சாமிகளால், உற்சவத்தால் இதுவரை நாட்டிற்கு யாதொரு பலனும் ஏற்பட்டதில்லை என்பது கண்கூடு.

16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

மகா விஷ்ணுவான சிறீரங்கம் ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ள வர்களுக் கெல்லாம் அய்வரியம் கொடுத்து வரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான சிறீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்ன மும் எத்த னையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட் டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல் லாம்கூட கைவைத்துவிட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப்பாட்டுக்கே லாட்டரி போடும் படியாக ஏன் செய்யக்கூடாது?

விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்துவிட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்குக் கோப மாயிருந்தால் நாளைய தினமே அவர்களை யெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச்செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப் பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக் கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல் லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம் தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்றுவதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்துவ மாகும்.

விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக் காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிர மங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டி ருந்தால் போதும்.

ஈரோடு, செப்.12 09.09.2018 அன்று மாலை 4.30 மணிக்கு ஈரோடு  பெரியார் மன்றத்தில் பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஒருங் கிணைந்த  மாவட்டங்களின் ஆலோசனைக் கூட்டம் மாநில பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தர்ம.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம், மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு, மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாநில  இளைஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்  முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர்.

பகுத்தறிவாளர் கழகம் பற்றியும் இன்றைய சூழ்நிலையில் தந்தை பெரியாரின் பெரும் பணியை மக்களிடம் கொண்டு செல்லும் பணி யில்  பகுத்தறிவாளர் கழகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி மாநில  பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமியும், பேராசிரியர் ப.காளிமுத்துவும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மேட்டுப் பாளையம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் ப.ராஜமாணிக்கம், கோபி மாவட்ட ப.க. பொருளாளர், வி.சிவக்குமார், அ.குப்புசாமி, மேட்டுப்பாளையம் ப.க. மாவட்ட செயலாளர் பெ.திருவள்ளுவன்,  மேட்டுப் பாளைய மாவட்ட ப.க. தலைவர் கா.சு.ரங்கசாமி, சி.கிருஷ்ணசாமி, ஆ.ஜீவா னந்தம், இரா.அரிச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் கோ.கு.மணி, ஈரோடு மாணவர் கழக மாவட்ட தலைவர் மதிவாணன் பெரியசாமி, த.கவுதம், செயலாளர் வெ.குண சேகரன், கோபி மாவட்ட செயலாளர்  திரு நாவுக்கரசு, வீ.தேவராஜ், திமுக மகளிரணி பொறுப்பாளர் கனிமொழி நடராஜன், ஆனந்த லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள்.

மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு நகர பகுத்தறிவு ஆசிரியரணியின் தலைவராக ஆசிரியர் ரா.அரிச்சந்திரனை மாநில தலைவர் மா.அழகிரிசாமி நியமித்தார்.

தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: தமிழக முன்னாள் முதல்வர் மானமிகு சுயமரியாதைக்காரர் முத் தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழக முன்னணித் தோழர் நடராசன் துணைவியார் குஞ்சிதம் அவர்களின் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறி வாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நன்றியும், ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய  ஆளுநர் அவர்கள் உடனடியாக  நட வடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள் வதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 3. தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4. பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணிக்கு புதிய உறுப்பினர்களை அதிக மாக சேர்க்க அனைவரும் தீவிர பணியாற்றும்படி கேட்டுக் கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இந்நிகழ்வை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி அவர்கள் ஒருங்கிணைத்தார். இறுதியாக  ப.க.ஆசிரியரணி நகர தலைவர் தோழர் ரா . அரிச்சந்திரன் நன்றி சொல்லி நிறைவு செய்தார்.

Banner
Banner