பகுத்தறிவு

27.09.1931  - குடிஅரசிலிருந்து....

இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற. ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப் போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம்  மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்ட தாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விடவேண்டும், அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?

இரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து? என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்துவந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?

பிள்ளைகளுக்குச் சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காகச் சில தப்புகள் செய்யவேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும், ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அந்தத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத் தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உருப்போடவும் கண்முடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லட்சியத்திலும் போதனா முறையிலும் தான். இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்கவேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.

13.09.1931  - குடிஅரசிலிருந்து....

இந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.

அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டி கட்டின சாமியையும்  கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள்.

ஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்தி ருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும்வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப் படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.  புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது.

ஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்துவருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க  நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம்.

இதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதிகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)

ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது?  என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது?  எப்படி இருக்கின்றது? என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன?

இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப்படு கின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டி யிருக்கின்றது. இந்தக்காரண மேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடு தலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சவுகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

தற்கால நிலை மையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவ தாய் இருந்தால். அவன்  பூமியுடையவும், சூரியனுடையவும் நடப் பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான்.

இதே விஷயத்தைப் பற்றி மத சாதிரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.

இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப் படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர் களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.

இது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்துகொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான்.

ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான  நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.

அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டு மிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.

புதிய வரவுகள்

1) ராஜராஜசோழன் பார்ப்பன அடிமையா?

- டி.எஸ்.கிருஷ்ணவேல்

2) திருக்குறள் லெ.நாராயணசாமியின் 80 ஆண்டுகால வாழ்நாள் சாதனை வரலாறு - லெ.நாராயணசாமி

3) புதிய பாடம் (கதைத் தொகுப்பு) - இராமியா

4) புறநானூறு அல்ல இது புது நானூறு - இராமியா

5) எஸ்.ஆர்.இராதா (வாழ்க்கை வரலாறு) - இராமியா

6) எழுத்தில் பூத்த எண்ண மலர்கள் - பாவலர் சீனிபழனி

7) Kalai Kaviri Resurgence Ambitions and Accomplishments.

8) A Profile of Rev.MSGR. S.M.George

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.

- நூலகர்

 

 

25.10.1931 - குடிஅரசிலிருந்து....

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப் படுவதற்கும், தீண்டாதவர் களாய் நடத்தப்படுவதற்கும் முக்கிய காரணமென்ன என்பதை யோசித்துப்பாருங்கள், வெள்ளைக் காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீன, ஜப்பான் காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ்ஜாதியாராகவும் நடத்து கின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப் பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும்? என்பன, போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவனாவது, முகமதியானாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின் றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பௌத்தர் களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார்  நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள்.

நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள் தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும் நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை, பெரிதும் வேறு நாட்டாரும் வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பௌத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லு கின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதினாலும் அவர்களையாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே புத்தி கற்பித்து விடுவார்கள். ஆதலால் நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் இந்து என்னும் மதம் தான் நம்மை தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய வேறு எந்தக் காரணத்திலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா?

ஆகவே நம்மில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான் பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகுகால மாக நமது முன்னோர்கள் காலந்தொட்டு நாம் சண்டாளப் பறையராய் தீண்டாதாராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன்மூலம் நாமே நம்மைத் தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக் கின்றோம். அப்படி இருக்க இன்றுநாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

 

கழுதைக்கும் எருமைக்கும் 1000 வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது... மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்தச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

 

பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்ற வனல்ல; ஒழுக்கக் கேடானவனல்ல; சூழ்நிலை, சற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கியனாகவும் மடையனாகவும் ஆகின்றான்.          - தந்தை பெரியார்

மாறுதலுக்கு இடம் கொடுப்பதே சரியான மார்க்கம்

2.8.1931 - குடிஅரசிலிருந்து....

நான் இஸ்லாம் சமுக கொள்கைகள் முழுவதை யும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரி யாதைக் கொள்கைகள் என்று  சொல்வதாகவோ யாரும்  தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன்.

இந்து  மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடபழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமுகத்திலும் பலர்  செய்து  வருவதைப் பார்க்கிறோம். சமாது வணக்கம், பூஜை, நெய்வேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமுகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல்  இஸ்லாம் சமுகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும்  நாகூர் முதலிய ஸ்தல விஷேசங்களும் சந்தனக்கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடை பெறுகின்றன.

இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமுகத்தில் பிரத்தியட்சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம்  களை முளைத்தது போல் புதிதாக தோன்றிய வையாகவுமிருக்கலாம்.  சகவாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம்.

ஆனால்  இவை ஒழிக்கப்பட்ட பின்பு தான்  எந்தச் சமுகமும் தங்களிடம் மூடக்கொள்கைகள்  இல்லை என்று பெருமை  பேசிக் கொள்ள முடியும். ஆனால், ஒரு விசேஷம். சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டி கையைப் பற்றி ஈரோடு  கூட்டத்தில் நான்  கண்டித்துப் பேசினேன்.

எனது ஈரோடு முஸ்லிம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப்பட்டார்கள். அதன் பயன்  இந்த வருஷம்  அடியோடு அந்த பண்டிகை அங்கு நின்றுவிட்டது. எனக்கு  மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டிருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால், இந்து மார்க்கத்திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தியாருக்குக் காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு  செய்தேன்.  கடைசியாக அது இந்த இரண்டு வருஷமாய் என்னால் நடத்தப் படுவதாக்காணப்பட்டு வந்ததைவிட பல மடங்கு மேலாக நடத்தப்பட்டு விட்டது. இந்தக்கூட்டத்தார்தான் தங்களை மேலான மதக்காரர் என்றும்  தேசியவாதிகள் என்றும், பகுத்தறிவாளர்கள் என்றும் சொல்லிக்கொள்கின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் எம்மீது கோபித்துக் கொண்டு பாமர மக்களைத் தூண்டி விட்டு வையும்படியும் சாபம் கொடுக்கும்படியும் செய்தார்கள். இதன் பயனாகவே இந்தத்தமிழ் நாட்டில் எனக்கு  ஒரு பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர் தேர்தலுக்குக்கூட ஓட்டு கிடைக்காது. அது எப்படியோ போகட்டும். உலகமெல்லாம் ஒரு கொள் கையின் கீழ்வரவேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்கிவரத்தயாராயிருக்க வேண்டும். உலகம் சீர்த்தி ருத்தத்திற்கு அடிமைப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

மனித சமுகம் அடையவேண்டிய சீர்த்திருத்தம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றது என்பது  உறுதி. மனிதன் காலதேசவர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டவ னாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது  மனிதன் வாழ்க்கைக்கு வழி காட்டி என்பதைக்கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக்கூடிய தாகும். கால்நடை வழி,  ஆடு கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டை வண்டிவழி, மோட்டார் வழி, இரயில் வழி, ஓடம் கப்பல் வழி கடைசியாக ஆகாயவிமான வழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தது போல்  வழிதிருத்தப்படவேண்டும். அதுபோலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம் கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்..

 

Banner
Banner