பகுத்தறிவு

14.07.1929 - குடிஅரசிலிருந்து...

திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராம ராஜ்யத்தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசையிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்ய மாக்கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்குப் போய்க் குடியிருந்து கொள்ள வேண்டு மாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமஸ்தானம் ராமராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே ஜாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் சாட்சாத் மகாவிஷ்ணு வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படி யென்றால் திருவாங்கூர் ராஜ்யம் பத்ம நாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும், ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ மகாவிஷ்ணுவாகும். எனவே, மகாவிஷ்ணு வின் அவதாரமாகிய ராமராஜ்யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராம ராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசியம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும். அதோடு வெள்ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே-தேசிய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெருமை என்னவென்று பார்ப்போ மானால் அதுமிக்க அதிசயிக்கத் தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர் ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்ன வென்றால், திருவாங்கூர் ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது என்பதாகும்.

இரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட  பெருமையையுடையதாகும். அதாவது 1881ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களையுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16.5-லட்சம் கிறிஸ்துவர்களை உண்டாக்கியிருக்கின்றது. திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை கொண்டதாகும். இதில் 16.5 லட்சம் கிறிஸ்துவர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாப சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19.5 லட்சம் ஜனங்களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவே பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் பத்மநாபசாமி எழுந் தருளும் தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்) இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்ம நாப சாமியைக் கும்பிடுவதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர் களுடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் திருவாங்கூர் ராஜ்யமானது இப் போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசிய சமஸ்தானங் களை நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசிய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர்களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

* சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமுகங்களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக்கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கி யிருக்கிறது.

* பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.

 

 

“கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்பிரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள்.

இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதேடு, காடு, மேடு, குப்பை கூளங்களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூட நம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன.

முதலாவது,

ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவிமார் களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங்கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந் ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

அடுத்த கதை.

ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழு முதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகி விட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வரு கின்றார்களே அவர் தான் பெரியவர்’ என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், தாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு காலமாய் வருகின்றாய் என்று கேட்கவும் நான் பரம சிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கிறேன் என்றதாம். உடனே பிரம்மன். நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம் .

அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன்கோபங் கொண்டு பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது’ என்றும் சாபமிட்டாராம்.

உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும் என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம் .

இதுதான் திருவண்ணாமலைப் புராண மாகிய அரு ணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.

இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப் படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா?

மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத்துரோகி, மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள். சிறி தாவது பொறுமைகொண்டு, நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.”

தந்தைபெரியார்

நூல்: “இந்துமதப் பண்டிகைகள்”

பக்கம் 33 - 35

இந்த உண்மையை உணர்ந்த பிறகும் கார்த்திகை தீபம் என்ற பண்டிகையை கொண்டாடுவது மானக்கேடு அல்லவா? அருள் கூர்ந்து முட்டாள்தனமான மூடப் பண்டிகைகள் எதையும் கொண்டாடாதீர்கள்.

27.03.1932 - குடிஅரசிலிருந்து...

தீண்டாமையை ஒழிக்க இடந்தரவில்லை என் பதைப்பற்றி நாம் அதிகமாக ஒன்றும் கூறவேண்டிய அவசியமில்லை பெரிய புராணத்திலுள்ள நந்தனார் கதை ஒன்றே போதுமானதாகும். நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளிடத்தில் பக்தியுள்ளவ ராகிக் கோயிலுக்குள் செல்ல விரும்பிய தீண்டா தாராகிய நந்தனாரை அந்த உடம்புடன் கோயிலுக் குள் வந்து தன்னை வணங்குவதற்கு அந்த நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளே சம்மதிக்காமல் நெருப்பில் மூழ்கி இறந்து பார்ப்பன சரீரத்தைப் பெற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் வர வேண்டு மென்று சொல்லி அவ்வாறே நந்தனாரும் நெருப்பில் மூழ்கிப் பார்ப்பன உடம்பு பெற்றுக் கொண்டு

கோயிலுக்குள் போனதாகத்தானே பெரிய புராணத் தில் சொல்லப்படுகின்றது?

தீண்டாமை விலக்குக்கும் சமத்துவத்துக்கும் இடமிருப்பதாகச் சொல்லப்படும் பெரியபுராணம் என்பதே இவ்வளவு கொடுமையாக இருக்குமானால் மற்ற சின்ன புராணங்களைப் பற்றிச்சொல்லவும் வேண்டுமா?

இனி, சங்கராச்சாரியார் என்பவர் தீண்டாமையை ஒழிக்கப் போதனை செய்தார் என்று கதை சொல்லுகிறார்கள். அவர் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் பண்ணிவிட்டு வரும்போது எதிரில் வந்த ஒரு தீண்டாதானைக் கண்டு விலகியதாகவும், உடனே அத்தீண்டாதான் சங்கரரை நோக்கி  ஆத் மாவில் என்ன வித்தியாசம்? என்று கேட்டதாகவும், பிறகு சங்கராச்சாரியார் ஆத்ம சமத்துவத்தையறிந்து அவனைக் கட்டித்தழுவிக் கொண்ட தாகவும், அவனுடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டியதாகவும், அதற்காக சங்கராச் சாரியார் பஞ்சதசி என்ற நூலைச் செய்ததாகவும் அவருடைய கதையில் சொல்லப் படுகிறது. இந்தக் கதையும் ஆத்ம சமத்துவத்தைச் சொல்ல வந்ததே ஒழிய சரீர சமத்துவத்தைச் சொல்ல வரவில்லையே! ஆகையால் இந்தக் கதையினால் பிறப்பு வித்தியாசமும், தீண்டாமையும் இருப்பதைக் காணலாம்.

மேற்கூறிய காரணங்களிலிருந்து தீண்டாமை நமது நாட்டில் தோன்றி நிலைத்திருப்பதற்கு இந்து மதமும், இந்து மத சாத்திரங்களும் அவைகளின் மூலம் உண்டான மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களுமே என்பதை அறியலாம்.

28.4.1929 - குடிஅரசிலிருந்து...

மற்ற நாட்டினர்களின் கடவுள் உணர்ச்சியைவிட நமது கடவுள் உணர்ச்சியும் பக்தியும் பூசையும் நம்மை ஓட்டாண்டிகளாக்கி அறிவிலிகளாக்கி நம்மை நமது நாட்டை விட்டுத் துரத்திக் கொண்டு வருகின்றது. அதுபோலவே மற்ற நாட்டினர்களின் மதத்தைவிட நமது மதம் நம்மை பிரித்துவைத்து இழிமக்களாக்கி அன்னிய ஆட்சிக்கு உட்படுத்தி மனிதத்தன்மை இல்லாமல் வாழச் செய்கின்றது. இவை நேற்று இன்று என்றில்லாமல் ஆராய்ச்சிக்கு எட்டும் சரித்திரகாலம் தொட்டு இப்படியே இருப்பதாய்க் காணப்படுகின்றது. இதற்கு, அர்த்த மில்லாமல் வெள்ளைக்காரர்கள் மீது பழி போடு வதிலும் சுயராஜ்ஜிய சாக்கு சொல்லுவதிலும் பயன் என்ன? என்று தான் கேட்கின்றோம். ஏனெனில் சுயராஜ்ஜியமும் அதற்கு மேற்பட்ட ராமராஜ்ஜியமும் கிருஷ்ணராஜ்யம் முதலிய ராஜ்ஜியங்களும் இருந்த காலத்தில் இருந்த நிலையைவிட வெள்ளைக் காரன் ராஜ்ஜிய காலம் எப்படி இந்நிலைக்கு அதிக மான பொறுப் புடையது என்பது தான்.

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தெருவில் நடக்கவிடாதது ஆப்பிரிக் காரர்களுடைய அகம்பாவமாக இருக்கலாம். அமெரிக்காவில் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை அவமரியாதை செய்தது அமெரிக்கர்களுடைய ஆணவமாக இருக்கலாம். திரு.காந்தியை தண்டித்தது இங்கிலீஷ் காரருடைய இறுமாப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியனை இந்தியாவில் தெருவில் நடக்க விடாததும் இந்துக்கடவுள் கோவிலுக்குள் செல்ல இந்துவை விடாததும் யாருடைய அகம்பாவம், ஆணவம், இறுமாப்பு என்று கேட்கின்றோம்.

திருவாளர்கள், காந்தியும் லஜபதியும் கோவிலுக்குள் சென்று அவர்களது கடவுளை வணங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய கொடுமையையும் அவமானத்தையும் இழிவையும் விடவா திரு தாகூரை அமெரிக்கர்கள் அவமானப் படுத்திவிட்டார்கள் என்று யோசித்தால் இந்தி யர்கள் அயோக்கியர்களா? முட்டாள்களா? என்பதும் அமெரிக்கர்கள் அயோக்கியர்களா? முட்டாள்களா? என் பதும். இந்திய அரசர்கள் ஆட்சி அய்ரோப்பிய அரசர்கள் ஆட்சியைவிட மேலானதாயிருக்குமா என்பதும் விளங் காமல் போகாது. எந்த நாட்டிலாவது குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையில்லாதவனும் தெருவில் நடக்க உரிமையில்லாதவனும் தங்களது உரிமையை மறுக்கின்றவர் களுடன் சேர்ந்து சுயராஜ்யம் அடைய முயற்சிப் பார்களா என்று யோசித்துப் பார்த்தால் சுயராஜ்ஜியத்திற்கு யார் முட்டுக்கட்டை போடு கின்றார்கள் என்கின்ற உண்மை ஒரு மூடனுக்கும் விளங்காமல் போகாது. கடவுளையும் மதத்தையும் கோவில் களையும் காப்பாற்றுகின்றோம் என்று வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து பார்ப்பனக் கட்சியை சாதிக்கப் போவதாக வெளி வந்திருக்கும் ஆஸ்திக கனவான்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் கோவில்களின் பேராலும் நடக்கும் கொடுமை களை ஒழிப்பதற்கு ஏதாவது செய்கின்றார்களா, நினைக்கின்றார்களா, செய்தார்களா, நினைத்தார்களா என்று தான் கேட்கின்றோம். எனவே பார்ப்பனர்கள் தேர்தலுக்கு ஏற்படுத்திக் கொண்ட நாடகத்தில் வரும் வேஷங்களைக் கவனிக்காமல் அந்த வேஷக்காரர்கள் யார்? அவர்களின் அறிவு, ஒழுக்கம், லட்சியம், பிழைப்பு, யோக்கியதை ஆகியவைகள் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால் கண்டிப்பாய் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கூற்றின் உண்மை விளங்காமல் போகாது.

Banner
Banner