பகுத்தறிவு

சென்னை, ஜூலை 23 தென் சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர்  அணி - மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னை, பெரியார்  திடலில்,  15.07.2018 அன்று  காலை 11.00 மணியளவில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் மு.இரா. மாணிக்கம்  தலைமை ஏற்றார். பேராசிரியர் ஜெ.குமார், பேராசிரியர்  டி.இரா ஜாஜி கருத்துரை வழங்கினார்கள்.

மா.அழகிரிசாமி

சிறப்பு அழைப்பாளர் ப.க. மாநில தலைவர் மா.அழகிரிசாமி பேசியதாவது: தென்  சென்னை  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், அவர்களது பகுதியில், பகுத் தறிவாளர் கழகம் சார்பில், மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை, கருத்த ரங்கம் அல்லது விவாதம் போன்று, நல்ல பேச்சாளர்களை அழைத்து பேச வைக்க வேண் டும். அதன் மூலம் நமது கருத் துக்கள் மக்களிடையே சென்று அடையச்செய்யலாம். பள்ளி மாணவர்களுக்காக சில நிகழ்ச்சி களை நடத்த வேண்டும்  என்று கூறினார்.

பிரின்சு என்னாரெசு பெரியார்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: கூட்ட நிகழ்ச்சிகளுக்கான தலைப்பு, வழக்கமான தலைப்புகளில் இல் லாமல், பொதுவான  தலைப்பு களில் பேச, பேச்சாளர்களை அழைக்கலாம் என்று கூறினார். நிகழ்ச்சி பற்றிய செய்திகளை, முகநூல் மூலம் விளம்பரம் செய்து, மக்களிடையே கொண்டு செல்லலாம் என்றும், இதனால் அதிக செலவு இல்லாமல், பல தரப்பட்ட மக்களையும், உடனடியாக செய்திகள் சென்று அடையும் என்று கூறினார்.

சி. தமிழ்ச்செல்வன்

பகுத்தறிவாளர் கழக மாநில பொருளாளர் சி. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா போன்று  அவசியம் நடத்துதல் வேண்டும் என்று கூறியதோடு, எல்லா முயற்சிகளையும் முன்னெ டுங்கள், வழி காட்டுதல் மற்றும்  தேவையான உதவிகள் செய்கி றோம்  என்றும் கூறினார்.

மேலும், விழா நடத்துவதற்கான திட்டமிடுதல்  அவசியம் என்று கூறினார்.

அ  தா.சண்முகசுந்தரம்

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்  அ  தா.சண்முக சுந்தரம்  பேசியதாவது: கருத்தரங்க கூட்டத்திற்கு தலைப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றியும், பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து, பேசச் சொல்வதன் மூலம், மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

சிறீ. அருட்செல்வன்

பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் சிறீ.அருட்செல்வன் பேசிய தாவது:& கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், பகுத்தறிவு கருத் துக்கள்,  மாணவர்களுக்கு, சென்ற டையும் வகையில், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்ற கூறினார்.

இந்த கலந்துரையாடல் கூட் டம், தென் சென்னை மாவட்ட ப.க.,மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, ஒரு கருத்தரங்கத்தை உடனடியாக  நடத்துவது  பற்றிய விவாதமாக அமைந்தது. அனைத்து உறுப்பினர்களும், விவாதத்தில் மிகவும் ஆர்வமாக, தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில்,  மூன்று  தீர்மானங்கள், முன் மொழி யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு:

1. தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தென் சென்னை மாவட்டப் பகுதிகளில்,  இடங்களைத்தேர்வு செய்து, கருத்தரங்கம் அல்லது விவாத அரங்கம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், முதல் கூட்டம், 26.08.2018, ஞாயிற் றுக்கிழமை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, சென்னை கலைஞர் கருணாநிதி  நகரில் நடத்துவது   என தீர்மானிக்கப் பட்டது.

2. பகுத்தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது

3. மாத இதழுக்கு, பகுத் தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணி  உறுப்பினர் களையும், பொறுப்பாளர்களை யும், முதலில் சந்தாதாரர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது. எம்.இளங்கோவன் நன்றி கூறினார்.

27.09.1931  - குடிஅரசிலிருந்து....

இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற. ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப் போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம்  மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்ட தாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விடவேண்டும், அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?

இரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து? என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்துவந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?

பிள்ளைகளுக்குச் சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காகச் சில தப்புகள் செய்யவேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும், ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அந்தத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத் தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உருப்போடவும் கண்முடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லட்சியத்திலும் போதனா முறையிலும் தான். இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்கவேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.

13.09.1931  - குடிஅரசிலிருந்து....

இந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.

அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டி கட்டின சாமியையும்  கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள்.

ஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்தி ருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும்வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப் படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.  புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது.

ஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்துவருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க  நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம்.

இதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதிகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)

ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது?  என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது?  எப்படி இருக்கின்றது? என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன?

இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப்படு கின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டி யிருக்கின்றது. இந்தக்காரண மேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடு தலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சவுகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

தற்கால நிலை மையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவ தாய் இருந்தால். அவன்  பூமியுடையவும், சூரியனுடையவும் நடப் பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான்.

இதே விஷயத்தைப் பற்றி மத சாதிரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.

இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப் படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர் களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.

இது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்துகொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான்.

ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான  நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.

அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டு மிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.

புதிய வரவுகள்

1) ராஜராஜசோழன் பார்ப்பன அடிமையா?

- டி.எஸ்.கிருஷ்ணவேல்

2) திருக்குறள் லெ.நாராயணசாமியின் 80 ஆண்டுகால வாழ்நாள் சாதனை வரலாறு - லெ.நாராயணசாமி

3) புதிய பாடம் (கதைத் தொகுப்பு) - இராமியா

4) புறநானூறு அல்ல இது புது நானூறு - இராமியா

5) எஸ்.ஆர்.இராதா (வாழ்க்கை வரலாறு) - இராமியா

6) எழுத்தில் பூத்த எண்ண மலர்கள் - பாவலர் சீனிபழனி

7) Kalai Kaviri Resurgence Ambitions and Accomplishments.

8) A Profile of Rev.MSGR. S.M.George

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.

- நூலகர்

Banner
Banner