பகுத்தறிவு


15.06.1930- குடிஅரசிலிருந்து...

திருப்பதி சாமிக்கு வருஷம் ஒன்றுக்கு 17 லட்சம் ரூபாய் காணிக்கை வருகிறது. இதுதவிர, அந்தச் சாமிக்கு ஏழரை கோடி ரூபாய் பெறுமான சொத்துமிருக்கிறது. அந்தச் சொத்துக்களை விற்று 100க்கு மாதம் எட்டணா வட்டிக்குக் கொடுத்து வாங்கினாலும், வருஷத்தில் நாற்பது லட்சம் ரூபாய் வட்டி வரும். இவைதவிர, அந்தக் கோவிலுக்கும், உற்சவத்துக்கும், வேண்டுதலைக்கும், காணிக்கை செலுத்துவதற்கும் யாத்திரை போகும் ஜனங்களின் ரயில் சார்ஜ் முதலிய செலவுகளைக் கணக்குப் பார்த்தால் அதிலும் நாற்பது அய்ம்பது லட்ச ரூபாய் கணக்கும் ஆக இந்த மூன்று இனங்களில் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு சாமியால் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீணாகிறது.

இதுபோலவே, சற்றே ஏறக்குறைய தமிழ் நாட்டில் மாத்திரம் திருச்செந்தூர், இராமேவரம், மதுரை, சிறீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர் முதலிய கோயில்களையும், சங்கராச்சாரி, பண்டார சந்நதி ஆகிய மடங்களையும், கும்பகோணம் மகாமகம் போன்ற உத்சவங்களையும் மற்றும் 108 திருப்பதி 1008 சிவலிங்கம் வகையறா பாடல் பெற்ற தலங்களையும் மற்றும் மாரியாயி, ப்ளேகாயி, காளியாயி முதலிய கிராமதேவதை முதலியவைகளுக்கும் மற்றும் சடங்கு, சிரார்த்தம், கருமாதி ஆகும் செலவு மெனக்கேடு வகையறாக்களையும் சேர்த்தால் எத்தனை பத்துக்கோடி ரூபாய்கள் ஆகுமென்று சற்றுப் பொறுமையாயிருந்து கணக்குப் போட்டுப் பாருங்கள். இவையெல்லாம் மனிதனைக் கெடுக்கவும், அவனது அறிவைப் பாழாக்கவும், என்றும் தரித்திரவானாகவேயிருந்து அடிமை யாயிருக்கவுமே அந்தச் சாமிகள், உற்சவங்கள், சடங்குகள், மோட்சங்கள் என்பவைகளெல்லாம் சுயநலக்காரர்களால் அயோக்கிய எண்ணத் துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

என்ன பலன்?

நிற்க, திருப்பதி யாத்திரையால் மனிதனுக்கு என்ன பலன் ஏற்படுகிறது? அதனால் என்ன ஒழுக்கம் காண்கிறோம்? ஒருவன் 2000 ரூபாயைக் கொண்டு போய் திருப்பதி உண்டியலில் கொட்டி விட்டு வருவானேயானால் அவனுடைய அரையங் குலமாயிருந்த நாமம் இரண்டங்குலமாக அகல மாவதும், சனிக்கிழமை பிடிப்பதும் மக்களைக் கண்டால் என்னைத் தொடாதே! எட்டிநில்! என்பதைத் தவிர வேறு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ ஏற்படுகிறதா? தவிரவும் திருப்பதிக்குப் போனதினாலேயே அதுவரையில் செய்த பாவ மெல்லாம் ஒழிந்துவிட்டதென்று கருதி இனிப் புதுப் பாவமும் செய்யலாம் என்கிற தைரியம் உண்டாகி விடுகிறது.
தவிர, இந்த மாதிரியான சாமிகளால், உற்சவத்தால் இதுவரை நாட்டிற்கு யாதொரு பலனும் ஏற்பட்ட தில்லை என்பது கண்கூடு.

அறிவை கொண்டு ஆராய்ந்து பாருங்கள்
15.06.1930- குடிஅரசிலிருந்து...

கூட்டம் முடிந்து செல்லும் உங்களிற் சிலர் இராமசாமி சரியாய்த்தான் பேசினான். அதில் என்ன தப்பிருக்கிறதென்று ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்வீர்கள். ஆனால் பக்கத்தில் கேட்டண்டை ஒரு பார்ப்பான் நின்று கொண்டு உங்களைப் பார்த்து நன்றாய் நாஸ்திகப் பிரச்சாரம் கேட்டீர்களா? பாகவதத்தில் இத்த னையாவது காந்தத்தில், இந்த மாதிரி, இன்ன இடத்தில், இத்தனை மணிக்கு,  இன்னான் வந்து இந்த மாதிரி நாஸ்திகம்  பேசுவான். ஜனங்கள் ஞானமில் லாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அது தான் கலி வந்ததற்கு அடையாளம்.

அது சமயம் ஜாக்கிரதையாயிருந்து அதை மறக்கடிக்க ஒவ்வொருவராக முயல வேண்டு மென்று பகவான் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். ஆதலால் இவற்றை நம்பாதீர்கள்! என்று சொல்லுவான்.

நீங்களும் திடுக்கிட்டு ஆ! என்ன பிசகு செய்தோமெனக் கருதி இந்த விஷயத்தைக் கேட்டதற்காக உங்கள் காதைக் கழுவிக் கொள்வீர்கள். இப்படியேதான் உங்களை ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆகையால், எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாய் நம்பிவிடாமல் உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்து அதன் முடிவின்படி நடவுங்கள்.விவசாய விஷயத்தில் சாமிகளையும், விதியையும் நம்புவது சரியா?
15.06.1930- குடிஅரசிலிருந்து...

விவசாய விஷயத்திலும் சாமிகளையும், விதியையும், பழைய பழக்க வழக்கங்களையும் நம்பி எவ்வளவோ நஷ்டம் அடையும்படியான பிற்போக்கிலேயே இருக்கிறோம். நம் நாட்டு விவசாயம் 2000 வருஷத்திற்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமையில்தான் இருக்கிறதே தவிர, சிறிதும் முற்போக்கடைய வில்லை. இந்த நாட்டில் ஒரு ஏக்கராவுக்கு நூறு ரூபாய் லாபம் வருவதானால் மேல்நாட்டில் ஏக்கராவுக்கு ஆயிரம் ரூபாய் வரும்படியாக வேலை செய்கிறார்கள்.  ஆனால், நாமோ விவசாயத்திற்கொரு கடவுளைக் கற்பித்து, மாட்டையும் ஒரு கடவுளாக நினைத்து, அதனது கொம்பில் ஒரு தெய்வத்தையும், வாலில் ஒரு தெய்வத்தையும், காலில் ஒரு தெய்வத்தையும், தொடையில் ஒரு தெய்வத்தையும், சாணியிலும் மூத்திரத்திலும் மோட்சங் கொடுக்கிற சக்தியையும் கற்பித்து மாட்டிற்குப் பூஜை செய்து பொங்கல் போட்டு சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிப்பதோடு நமது விவசாய ஆராய்ச்சி முயற்சி முடிந்து விடுகிறது. இன்னுங் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டு மானால், ஏர் உழுவதற்கு முன் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள் கண்டு பிடித்து ஏருக்கும், கொழுவுக்கும், நுகத்துக்கும், கருவத்தடிக்கும், உழவுகோலுக்கும், ஒவ்வொரு தெய்வங்களைக் கற்பித்து,  சாம்பிராணி புகை போட்டு பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து ஏர் கட்டுவதோடு ஆராய்ச்சி முடிந்து விடுகிறது. இந்தப் பூஜையும், நல்ல நாளும் பார்ப்பானுக்குக் கொடுத்த காசும் கொஞ்சங்கூட நமது விவசாயத்துக்குப் பொறுப்பாளி யல்லவே யல்ல. விளையாவிட்டால் விதியோடு பொறுப்பு நின்று போய் விடுகிறது.

மேல்நாட்டானோ விவசாயத்தில் ஒரு கடவு ளையும் லட்சியஞ் செய்யாமல் தன்னையும், தன் அறிவையும், முயற்சியையும் பொறுப்பாக்கி எந்தவிதமான பூமிக்கு எந்தவிதமான பயிர் செய்வது என்பதிலும், எந்தவிதமான பயிருக்கு எந்தவிதமான எரு விடுவது என்பதிலும் கவலையெடுத்து வேலை செய்கிறான். ஆஸ்திரேலியாவில் பழ விவசாயக் காரர்கள் புளிப்பான பழங் காய்க்கும் மரத்தை இனிப்பாக்கவும், நூற்றுக்கணக்காக பழம் காய்க்கும் மரங்களை ஆயிரக்கணக்கான பழங்கள் காய்க்கும் படிச் செய்யவும், பத்து நாட்களில் கெட்டுப் போகும்படியான பழத்தை ஒரு மாதத்திற்கு கெடாத படியான பழம் காய்க்கும்படி செய்யவும் வேண்டிய காரியங்கள் ரசாயண கூட்டுகள் மூலமாகவும், திராவகங்களை செடிகளில் செலுத்துவதன் மூல மாகவும் பயிர் செய்கிறார்களென்று நமது நண்பர் திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் தனது ஆஸ்தி ரேலியா யாத்திரையைச் சொல்லும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு மனிதனுக்கு முப்பது ஏக்கரா நிலமிருந்தால், அதில் அய்நூறு பேர்களுக்குச் சதா வேலையிருக்கும் படியான ஒரு தொழிற்சாலை மாதிரி விவசாயஞ் செய்யலாமென்றும் சொல்லியிருக்கிறார். நாம் அந்த விதமான துறைகளில் சிறிதுகூட விசாரமில்லாமல் அதிகமாகப் பயிர் பிடிக்க வேண்டுமானால் பிடிக் காததற்கு முன்னமே எங்கே கண் திருஷ்டிப் பட்டு விடுமோ என்று பயந்து கொண்டு பயிர் செய்திருக்கும் பூமியில் ஒரு கோலை நட்டு அதில் ஒரு விசாரமும், ஆபாசமுமான உருவத்தைக் குத்தி கையில் எதையோ கொடுத்து தலையில் சட்டியைக் கவிழ்த்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்திவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறோம். இந்த நிலையில் உள்ள உங்களை வெள்ளைக்கார அர சாங்கம் பாழாக்கிற்றா?. உங்கள் கடவுளும் விதியும் பாழாக்கிற்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.


விபூதி பூசினால் மோட்சம் வரும் என்பது மூடநம்பிக்கை
15.06.1930- குடிஅரசிலிருந்து...

எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால், விபூதி பூசினால் மோட்சம் வருமென்று மூடநம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப்படுகிறோமா அது போலவேதான் தக்ளி சுற்றினால், உப்புக் காய்ச்சினால் விடுதலை வருமென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம்.

பஞ்சாட்சரத்திலும், விபூதியிலும் நமக்குள்ள மூட நம்பிக்கைதான் தக்ளியிலும், உப்புக் காய்ச்சுவதிலும் திருப்பி விட்டுவிட்டதே தவிர வேறில்லை. அதில் நமது கடுகளவு ஆராய்ச்சியாவது செய்திருப் போமானால், இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும்.

பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக் கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றுமொரு தொல்லை
11.11.1934- பகுத்தறிவிலிருந்து...

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகலை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக்கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன. தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.

மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.

இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட்டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.

மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.

நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத்தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்துவரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.


மதநம்பிக்கையின் விளைவு
27.05.1934- புரட்சியிலிருந்து...

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப் பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டுமென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது. இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்!

மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமை களும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.

இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரண மல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத் தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.

காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப் போமானாலும் இன்று உலகில் புருஷ னைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசி யமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம். ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத் தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக் கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை. மண் குதிரையை நம்பின பலன்

மண் குதிரையை நம்பின பலன்
02.09.1934- பகுத்தறிவிலிருந்து

தோழர் காந்தியாருக்கும், காங்கிரசுக்கும் அர சியல் வாய்ப்பூட்டு ஏற்பட்டு விட்டதின் பிறகு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கா விட்டால் தங்களை உலகம் மறந்து விடுமோ என்று பயந்து சமுதாயத் துறையில் வேலை செய்ய எண்ணங்கொண்டு ஹரிஜன சேவை, ஆலயப் பிரவேசம் என்னும் பெயர்களால் சுற்றுப் பிரயாணம் செய்ததும், வசூலித்தல் யாவரும் அறிந்ததாகும். இதை மெய்யென்று நம்பின சில அரசியல் பிழைப்புக் காரர்கள் ஆலயப் பிரவேச மசோதா, தீண்டாமை விலக்கு மசோதா முதலியவை கொண்டு வந்து விளம்பரங்கள் செய்து கொண்டதும் இந்தியர்கள் அறிவார்கள்.

பிறகு என்ன ஏற்பட்டது?  மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின பலன்தான் ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது என்றால் தோழர் காந்தியார் தமது பரிவாரங்களுடனும் சுற்று பிரயாணம் செல்லு கையில் அவருக்கு ஏற்பட்ட கருப்புக் கொடி, தடியடி, வெடிகுண்டு ஆகியவை பிரயோகமும், காந்தி கூட்டத்தார் மற்றவர்கள்மீது பிரயோகித்த தடியடிப் பிரச்சாரமும் சேர்ந்து காந்தியாரைப் பயப்படுத்தி விட்டது. இதன் பயனாக தோழர் ராஜகோபாலாச் சாரியார் மூலம் ஓர் அறிக்கை வெளியிட வேண்டிய தாய் விட்டது. அந்த அறிக்கையானது காங்கிரசும் காந்தியாரும் சமுகத் துறையில் கொண்டுள்ள உள் எண்ணத்தை நிர்வாணப் படுத்திக் காட்டிவிட்டது என்றுதான் சொல்லுவோம். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி  என்கின்ற பழமொழி போல் ஆலயப் பிரவேசம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றும், அரசியல் உரிமைகளும், பொருளாதார முன்னேற்றமும் கிடைத்தால் போதும் என்று கருதி, அதற்காக அரசாங்கத்தினிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்த தீண்டப்படாதார் என்னும் மக்களை ஜாதி பாதக வேஷம் போட்டு அங்கேண்டி மகளே ஆலாய்ப் பறக்கின்றாய், இங்கு வா காற்றாய்ப் பறக்கலாம் என்ற மாதிரியில் அழைத்து அவர்களை (தீண்டாதார்கள்) ஏமாற்றியாகிவிட்டது. ஹரிஜன வேலை செய்யாமல் ஹரிஜனங்களுக்காக பாடுபடா மல் உயிர் வைத்து இருக்க முடியாது. அதற்காகப் பட்டினிகிடந்து சாகப் போகிறேன் என்று சொல்லி விடுதலை பெற்று வந்ததின் பயன் இன்று விளங்கி விட்டது. இந்திய தேசிய சபையின் சர்வாதிகாரியும் ஏக பிரதிநிதியும் என்று சொல்லப்பட்ட தோழர் காந்தி யாரின் முயற்சியும் ஹரிஜன சேவையும் தீண்டப்படாத வர்களுக்கு இந்தப்பயனை கொடுத் திருக்குமானால், இனி அவர்களுக்கு தேசாபிமானத் தால், இந்திய மக்களை நம்புவதால் என்ன பயன் கிடைக்கக் கூடும் என்பதைப் பற்றி நாம் ஜோசியம் கூற வேண்டியதில்லை.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தீண்டப்படாதாருக்குச் சம சுதந்திரம் கொடுக்க இஷ்டப்படவில்லை என்று முடிவு ஏற்பட்டுவிட்டால் அதுவும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மனித உரிமை, சுதந்திரம் கூட கொடுக்க இஷ்ட மில்லை என்று ஏற்பட்டு  விட்டால் அவர்களை இனியும் இந்த தேச மக்களையும், சுதந்திரம் கொடுக்க சம்மதியாத மதத்தையும், சாதிரத்தையும் நம்பிக் கொண்டு அவர்கள் கூட இருக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ஆலயப் பிரவேசப் பேச்சும், வார்த்தையும் எல்லாம் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட அரசியலில், தனித் தொகுதி தேர்தல் உரிமையையும், உத்தியோ கத்தில் தனி பிரதிநிதித்துவத்தையும் பாழாக்கு வதற்காக ஏற்பட்ட சூழ்ச்சி தவிர வேறில்லை என்பது இப்போதாவது தீண்டப்படாத மக்களுக்கும், கீழ் ஜாதியராய்க் கருதப்படும் மக்களுக்கும் நன்றாய் விளங்கிற்றா, இல்லையா என்று கேட்கின்றோம்.

இன்று தேர்தலுக்காக என்று வெளியிட்டிருக்கும் காங்கிர கொள்கைத் திட்டங் களிலும் நன்றாய் வெளிச்சமாய் மதக் கொள்கைகளில் நடுநிலைமை வகிப்பதாகவும், மத சம்பந்தமான பழக்க வழக்கங் களில் பிரவேசிப்பதில்லை என்றும், அவற்றை காப்பாற்றுவதாக வாக்குறுதி கொடுப்ப தாகவும் கண்டிருப்பதை யாரும் காணலாம்.

இந்த நிலையில் மதத்தால், சாஸ்திரங்களால், பழக்க வழக்கங்களால், கீழ்ப்பட்டு இழிவு படுத்தப் பட்டு தீண்டாதாராய், கிட்ட வரக்கூடாதவராய், பாவிகளாய் கருதப்பட்டு அந்தப்படி நடத்தப்பட்டு வரும் மக்கள் இனியும் காங்கிரசையும், காந்தியாரையும் நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகாதா என்று கேட்பதோடு, எப்பாடுபட்டாவது, என்ன தியாகம் செய்தாவது, தனித் தொகுதி முறை யையே அரசாங்கத்தினிடம் வற்புறுத்தி அடைவதற்கு முயற்சிக்க வேண்டியது தாழ்த்தப்பட்ட மக்களின் கடமை என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மகப்பேறு யாகம்
11.12.1943  - குடியரசிலிருந்து...

இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம்,அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்கு ஆக, ஆடு, மாடு குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன பறப்பன ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உணடாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா? இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயண மாகலாம்.

நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரை யுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டி ருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம்) இரவு முடிந்தவுடன், இந்த கௌசலையையும் தசரதனின் மற்றும் இரு மனைவிகளாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்துவிட்டுப் பிறகு, அதற்கு ஆகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.

இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத் தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார். இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப்பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக்குலாவித் திரிவதும் இயற்கையே யாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடை யாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மையற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.

அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்?

உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடம் இல்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவப் பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற ( சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப் படி - பிறந்தவர் களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப்படு கிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புளுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.     மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கி யவர்கள், அல்லது பெற்றவர்கள், மனிதர்களாகக் கூட இருந்திருக்க வில்லை யென்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப்பேறுக்கும் சம்பந்தமில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.

பெண்களை புராணக் கதைகளைப் படிக்கவிடக் கூடாது
15-6-1943, விடுதலையிலிருந்து...

பெண்களுக்கு இன்றுள்ள புராணக் கதைகளைக் கேட்கவோ படிக்கவோ சிறிதும் இடம் கொடுக்கப்படாது. கற்பு என்றால் அதற்கு அறிவுக்கேற்ற அல்லது இருவர் நலனுக்கேற்ற கருத்துக் கொள்வதே இல்லை. கற்பு என்றால் நடைப்பிணமாய் இருக்க வேண்டும். வாய், கண், செவி ஆகிய மூன்று யந்திர உணர்ச்சிகூட இருக்கக் கூடாது என்ற பொருளே கொடுக்கப்படுகிறது. இதனால் யாருக்காவது பயன் உண்டா? கற்பு என்பதற்கு இது அழுத்த மானால் குருட்டுப் பெண்ணும் மொண்டி ஊமைப்பெண்ணும் மேலானதாகும்.

பெரியபுராணம் (ஈ.வெ.ரா)
02-10-1943 - குடிஅரசிலிருந்து...

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண் மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளை களும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக் களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர் களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்த வர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண் மையா?    உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டி னத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற் புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதை விட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனை களா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப் பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலா மிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்த மானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப் படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?     முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரிய புராண சிவன் இருக்கிறாரா?

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வை ணவர், மாத்துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள் ளுகிறார்களா?

---------------

திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனை வருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.  - -
- தந்தை பெரியார்

 

1947-இல் ‘விடுதலை' (15.4.1947) இதழில் எழுதப்பட்ட தலையங்கம் இது.

மாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ்விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.

இப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஓய்வை நமது  திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

கோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர்.  ஆனால், இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரச்சாரம் செய்துவிட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடுகளையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.

இறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன?

இது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.

இவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக்கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.

நம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர் கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.

பின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார்? வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுதுபோக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களேயாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக்கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக்காமல் திராவிட மாணவர்கள்  கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

மாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் கற்றதனால் ஆய பயன் என்ன?

நம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்கவேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.

நம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரச்சார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப்பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.

இராமாயண முக்கிய
பாத்திரங்களின் யோக்கியதை

18.12.1943 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும் கதையில் முக்கிய பாத்திரங் களாக விளங்கும் தசரதன், இராமன், சீதை, லட்சுமணன் முதலியவர்களின் யோக்கியதையை சற்று ஆராய்வோம்.

இராமாயணத்தில், யாகத்துக்கு அடுத்தாற்போல் தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் சேதி குறிப்பிடத்தக்கதாகும். இதில் தசரதன், அவனுடைய பிள்ளைகள், மனைவிமார்கள், மந்திரி, குரு முதலானவர் களுடைய தன்மைகள் இன்னவை என நன்கு விளங்கும்.

தசரதன்

1. தசரதன் கைகேயியை மணக்கும்போதே, கைகேயியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்தியைக் கொடுக்கிறேன் என்பதாக வாக்குக் கொடுத்து இருக்கிறான். மற்றும் கதை வாசகப்படி பார்த்தால், தசரதன் தனது விவாகத்தின் போதே கைகேயி வசம் நாட்டை ஒப்புவித்து விட்டு, கைகேயிக்கு ஆக கைகேயிக்குப் பிரதிநிதியாய் இருந்து நாட்டை ஆண்டு வந்தானெனவே தெரிகிறது.

2. அதாவது, கைகேயிக்கு தசரதன் அயோத்தியை சுல்கமாகக் கொடுத்துவிட்டான் என்று மூலத்தில் இருக்கிறது.

3. இந்த சங்கதி இராமனுக்கும் கோசலைக்கும் தெரியும். என்றைக்கு பரதன், அவன் மாமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் பட்டாபிஷேகத்துக்குத் தக்க காலம் என்பது எனது கருத்து என்று, இராமனிடம் வெளிப்படையாய் தசரதன் சொல்லுகிறான். பரதனை நாடு பெறச் செய்யாமல் ஏமாற்றுவதற்கு ஆகவே, அவனை அவனது பாட்டனார் வீட்டில் தசரதன் பத்து வருஷ காலம் விட்டு வைக்கிறான்.

4. திடீரென்று ஒரு நாள் நினைத்துக்கொண்டு, குடிகளுக்குச் சமாதானம் சொல்லி, அடுத்த நாளே இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறான்.

5. இந்தத் துரோகமான காரியத்துக்கு, மந்திரிகளும், வசிட்டன் முதலிய குருமார்களும், இராமனும் சம்மதிக் கிறார்கள்.

6. கோசலையும் இராமனுக்குப் பட்டம் கிடைக்கச் சதா தபசு செய்கிறாள்.

7. பரதனுக்கும், சத்துருக்கனுக்கும், ஜனகனுக்கும், கேகய மன்னனுக்கும், கைகேயிக்கும் தெரிவிக்காமலும், இவர்களுக்கு அழைப்புக்கூட அனுப்பாமலும், இவ்வளவு முக்கியமான முடிசூட்டை அவசர அவசரமாக நடத்த ஏற்பாடு செய்கிறான்.

8. இராமனிடம் தனிமையில் பேசும்போது, பட்டாபிஷேகம் நடைபெறாமல் தடை செய்யவேண்டிய அவசியம் பரதனுக்கு இருந்தாலும், அது முடிந்துவிடுமாயின், பிறகு பரதன் வந்தாலும் தகராறு செய்யாமல் அதற்குச் சம்மதித்து சும்மா இருந்து விடுவான். ஏனெனில், பரதன் சாது, நல்லவன், நடந்துவிட்ட காரியத்தை ஒத்துக் கொள்ளுவது உயர்ந்த குணம் படைத்தவர்களின் கடமை. ஆதலால் சீக்கிரம் முடியவேண்டும் என்கிறான்.

9. இந்தப் பட்டாபிஷேகச் சேதியறிந்து, கைகேயி, இராஜ்யத்தைத் தன் மகன் பரதனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றும் அந்த முடி பரதனுக்கு நிலைக்கச் செய்ய இராமன் காட்டுக்குப் போக வேண்டுமென்றும் சொல்லும் போது, கைகேயியை ஏமாற்ற தசரதன் அவள் காலில் விழுந்து கெஞ்சுகிறான்.

10. எவ்வளவோ ஏற்பாட்டுடன் செய்த காரியத்தைக் கெடுத்துவிட்டாயே என்கிறான். ஆனால், நாடு மூத்த மகனாகிய இராமனுக்குத் தானே உரிமை என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவே இல்லை. தசரதனுக்குக் கைகேயி இணங்காமல் போன பின்பு தசரதன் இராமனை அழைத்து, இராமா, நான் புத்தி சுவாதீனம் இல்லாத சமயத்தில் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன்; என்றாலும் நீ அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.... என்னைப் பட்டத்திலிருந்து தள்ளி விட்டு நீ இராஜ்யத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து கொண்டு இரு என்று துர்யோசனை சொல்லிக் கொடுக்கிறான்.

11. இவையெல்லாம் பயன்படாமல் போகவே, தசரதன் சுமந்திரனை அழைத்து,இராமனுடன் நாட்டிலுள்ள பொக்கிஷம், தானியக் களஞ்சியம், குடிகள், படைகள், வியாபாரிகள், வேசையர்கள் ஆகிய எல்லாவற்றையும் காட்டிற்கு அனுப்பிக் கொடுத்துவிடு என்கிறான்.

12. இதைக் கைகேயி ஆட்சேபித்தவுடன் தசரதன், நீ, நாடுதான் கேட்டாயே ஒழிய இவைகளை எல்லாம் சேர்த்துக் கொடு என்று கேட்கவில்லையே என்று அடாவழக்குப் பேசுகிறான்.

13. பிறகு பொக்கிஷத்தில் உள்ள நகைகளையெல்லாம் வாரி சீதைக்குக் கொடுத்து விடுகிறான்.

14. தனது மற்றொரு மகன் இலட்சுமணன் காட்டுக்குப் போவதைப் பற்றித் தசரதன் துக்கப்படவில்லை.

பெரியபுராணம்  (ஈ.வெ.ரா.)
02-10-1943-  குடிஅரசிலிருந்து

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக் கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்கு மானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களையெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்பு கிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண்மையா?    
உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?    
சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதைவிட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனைகளா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப்பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலாமிருகமும் நிஜமாய்த் தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன் மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ் வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங் களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?

முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரியபுராண சிவன் இருக்கிறாரா?
சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?

அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வைணவர், மாத் துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா?

Banner
Banner