பகுத்தறிவு

15, 20 வருஷத்திற்கு முன் ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக் கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத் தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப் பார்த்து, என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய் என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனரை ஓர் அறை செவுளில் அறைந்து, யாரடா சூத்திரன்? என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்த துண்டு.

- -தந்தை பெரியார், ஈரோடு - 7.12.1936

நூல்: உண்மை இந்து மதம்

உணவு விடுதியின் தலைப் பில் கொட்டை எழுத்துக்களில் ஜாதியின் அறிகுறி இருப்பது வேறு எந்த நாகரிக நாட்டிலும் காண முடியாத மாசு ஆகும்!

இந்த மாசைப் போக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் ஈ.வெ.ரா. நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், ஜாதியின் வாலை ஒழித்தது போலவே, உணவு விடுதிகளின் பெயரில் உள்ள பிராமணாள் என்ற சொல்லையும் எடுத்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன்; எதிர்பார்த் தவாறு நடக்கவில்லை.

உணவு விடுதிகளில் பிராமணரே இருந்து நடத்தும் விடுதிகள் சில; பிராமணர் அல்லாதார், பிராமணரைக் கொண்டு உணவு சமைக்கச் சொல்லி, தாம் தலைவராய் உட்கார்ந்து சீட்டுப் பெற்று, பணம் பெற்று வரவு - செலவு கணக்குகள் பார்த்து நடத்தும் விடுதிகள் பல.

அந்தச் சில விடுதிக்காரரும் திருந்தவில்லை. இந்தப் பல விடுதிக்காரரும் திருந்தவில்லை! சொல்லாமலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தக் கடமையைச் சொல்லியுமே, செய்யவில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். ஜாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்த முடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்ந்து வருந்த நேரும். அன்று பெரியார் ஈ.வெ.ராவின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.

டாக்டர் மு.வரதராசனார் (தந்தை பெரியார் 79ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலேசியா வாழ் தமிழர்கள் வெளியிட்ட மலரில் இடம்பெற்ற கட்டுரையிலிருந்து)நாம் எந்த விதத்தில் தேசத் துரோகிகள்? இந்தத் தேசத் துக்கு அந்நிய ஆட்சி யென் பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கும் என்றும் நிலைபெறும்படி யான ஆட்சிக்குக் கட்டிடம் கட்டிக்கொடுத்து அவற்றிற் குத் தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத் துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதித்திராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ, இந்தத் தேசத்துக்குத் துரோகம் செய் ததாக ஏதாவது ஓர் உதார ணத்தை எடுத்துக்காட்டட் டும்; நாம் உடனே அதற்குப் பிரா யச்சித்தம் செய்துகொள் ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என் றும், அவர்களும் தாங்களும் ஒரே சாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சா யலும் ஒரேமாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்க ளும் இராஜ்யாய்ப்போய் இந்த நாட்டில் நிரந்தரமாய் வாழவேண்டும் என்றும் நேற்றுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர் கள் ஒழிந்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்றுகூட, பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய வேண் டுமானாலும் சரி, வெள்ளைக் காரப் பூண்டு இந்தியாவில் இருக்கக்கூடாது என்று தீர் மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்கப்புறம் நடப்ப தென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத் திரம் சொல்லிவிடட்டும்; நாங்க ளும் கையெழுத்துப் போடுகி றோம். அதற்கு ஆகப் பார்ப் பனர்கள் எத்தனை பேர் சாகி றார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத் தைக் காட்டிக்கொடுத்துக் கக் கூசில் போய் ஒளிந்துகொள்ப வர்கள்? என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு, உண் மைக் காரணம் என்ன என் பதை மறைத்துவிட்டு எங்க ளைக் கோழைகள் என்றும், தேசத்துரோகி என்றும் சொல் லிவிடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா என்றுதான் கேட்கின்றேன்.

தோழர் சத்தியமூர்த்தியை விட நான் எதிலும் பயந்தவ னல்ல. அவர் ஒருதடவை ஜெயிலுக்குப் போயிருந்தால் நான் 7, 8 தடவை ஜெயிலுக் குப் போயிருப்பேன்; என் குடும்பமும் ஜெயிலுக்குப் போயிருக்கும். இத் தமிழ் நாட்டில் அரசியலில் கும்பல் கும்பலாக எதிர்வாதம் செய் யாமல் வலுவில் ஜெயிலுக் குப் போவதற்கு வழிகாட்டி னவன் நானும் என் குடும்ப முமாகும்.
அதுவும் சத்தியமூர்த்தி செல்வத்துக்கும் அவரது செல் வாக்குக்கும் அவர் பொது வாழ்வில் அடைந்திருக்கும் நிலைமைக்கும் நான் ஒன்றி லும் குறைந்தவனல்ல என்றா லும், அவர் ‘ஏ’ கிளாஸ் கைதியாய்ச் சிறையிலிருந் தார்; நான் ‘சி’ கிளாஸ் கைதி யாய் மூத்திரச்சட்டியில் தண் ணீர் சாப்பிட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டு கோணிச் சாக்கில் படுத்துக் கொண்டு சிறையில் இருந் தேன்.

சென்ற வருஷம் எனக்குக் கிடைத்த தண்டனையின் போதுகூட, எனக்கு ‘சி’ கிளாஸ் கொடுக்கவேண்டும் என்று எனது ஸ்டேட்மெண் டிலேயே எழுதிக்கொண் டேன். அதை எனது தோழர் சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்தான் அடித்து விட் டார்கள்.

பிறகு எனக்கு ‘ஏ’ கிளாஸ் கொடுத்தார்கள். இராஜம கேந்தரம் ஜெயிலில் எனக்குக் கொடுத்த கட்டில், மேசை, மெத்தை எல்லாவற்றையும் வேண்டாம் என்று வாபீஸ் செய்துவிட்டு, ‘சி’ கிளாஸ் கைதியாகவே இருந்தேன். சாப்பாடு மாத்திரம் டாக்டர் சிபாரிசின் மீது கோதுமை ரொட்டி கிடைத்தது. மற்றபடி நான் ஜெயிலில் எந்த உயர் நிலையிலும் இருக்கவில்லை; சவுகரியம் அடையவும் இல்லை; ஜெயில் சட்டத்தை எந்த வழியிலும் மீறவும் இல்லை.

ஆகவே, நாங்கள் சத்திய மூர்த்தியாரை விடவோ, மற்ற யாரையும் விடவோ பாப்பர் என்றோ கோழை என்றோ கஷ்டத்துக்குப் பயந் தவர்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.

காங்கிரசுக்காரர்கள் அடி பட்டார்கள், உதைபட்டார் கள், இலட்சம்பேர் ஜெயிலுக்குப் போனார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்கின்றேன்.

இன்று அவை தப்பு என்று எண்ணவில்லை என்று சொல் வதானாலும், அதனால் பிர யோஜனமில்லை என்றும், அந்த மாதிரி தியாகத்தால் வெள்ளைக்காரர்கள் மனதை இளகச் செய்ய முடியவில்லை என்றும், இனி செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் தீர்மா னித்துவிட்டதா, இல்லையா? என்று கேட்கின்றேன். காங் கிரஸ் 1933இல் தீர்மானித்தால், பார்ப்பனரல்லாதார் இயக்கம் 1920லேயே இப்படித் தீர்மா னித்தது. இதில் என்ன தப்பு சொல்ல முடியும்? இதனால் பார்ப்பனரல்லாதார் கோழை களாகி விடுவார்களா? தேசத் துரோகிகளாகி விடுவார்களா?

-- குடிஅரசு, 14,6,1936

நாங்குநேரித் தாலுகாவில் மறவர் வகுப்பினர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்போலோர் திருட்டு முதலிய தீயதொழில்களை யுடையவர்களாய் கல்வியறிவற்றிவர்களாய் வாழ்வதை கண்டு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டு மென்று   இத்தாலுக்கா போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகிய திருவாளர் முத்தையா பிள்ளையவர்கள் போலீஸ் ஜில்லா சூப்பரின்டென்டென்ட் வின்டில் துரையுடன் கலந்து பேசி 1927ம் ஆண்டில் மறவர் சங்கம் என ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கன். வின்டில் துரையே இச்சங்கத்தின் தலைவர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன்முயற்சியின் பயனாக மறவர்களனைவரும் ஒற்றுமையாகக்கூடித் தங்கள் வகுப்பாரின் முன்னேற்றத்திற்குப் பொருள் சேர்த்து வேண்டுவன செய்துவருகிறார்கள். இதனால் 1929 ஜனவரியில் ஒர் கூட்டம் கூடி அறிவை வளர்த்து நல்லொழுக்கத்தைத் தருவது கல்வியேயாதலால் கல்வியைத் தம் மக்களுக்குக் கற்பிப்பது இன்றியமையாத முதற்கடமையென தீர்மானித்து அதுபற்றி மஞ்சின்குளம், முதலைக்குளம், புதூர், செண்ப கராமநல்லூர் என்ற நான்கு ஊர்களிலும் மறவர் சங்கத்திலிருந்து ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்துவது, என்றும் தீர்மானமாயிற்று. மறவர் சங்க முன்னேற்தத்திற்கு திரு.முத்தைய பிள்ளையவர்களுக்கு உடன் உழைப்பார் மஞ்சன்குளம் திரு திரவியத்தேவர் என்பவர். இவருடைய தீவிர முயற்சியால் மஞ்சள் குளத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டிட முடிவாயிற்று. இன்ஸ்பெக்டரவர்கள் அதைப் பார்வை யிடுவதற்கு 7.2.1929 வியாழக்கிழமையன்று காலையில் நாங்கு நேரி போர்டு உயர்தரக்கலா சாலைத் தலைமைப் பண்டிதர் திரு. இ.மு.சுப்பிரமணியபிள்ளைய வர்களுடன் சென்றனர். பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்ட பின் திரு. முத்தையா பிள்ளையவர்கள்  அவ்வூர் மறவர் களையெல்லாம் அழைத்து திரவியத்வேவர் வீட்டுக்கு போய் அவர் வீட்டில் தயாரித்த பலகாரங்களையுண்டனர். அப்போது அவர்கள் பேசியதன் சுருக்கம் பின் வருமாறு:

மறவர்களின் தலைவர்களே! நீங்கள் இங்கே இவ்வளவு விரைவில் பள்ளிக்கூடம் கட்டி முடித்ததைப்பார்த்து மகிழ்ச்சி யடைகிறேன். நீங்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் சுத்த முடையவர்களாகவும் இருக்க வேண்டும். சாதி வித்தியாச மென்பது கிடையாது நீங்கள் சுத்தமில்லாதவர்களாக  மாமிச முண்டு வருவதானாலேயே மேல் சாதியென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் உங்களோடு சேராமல் தாழ்த்துகிறார்கள். இப்போது மேல்வகுப்பு சொல்லுகிறவர்களில் ஒருவனாகிய நான் உங்களில் ஒருவராகிய திரவியத்தேவர் வீட்டில் உண்ணுவதை நீங்கள் இதோ நேரே பார்க்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுத்தமுடைவர்களாக ஆவீர்களாகில் உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை. ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஒழுக்கமுடைய வர்களாக விரைவில் ஆக்க வேண்டும். மேலும் நான் எப்படி இப்போது உங்களிடையே வேறுபாடில்லாமல் உடன் உண்ணுகிறேனோ அதைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகயிருக்கும் ஆதிதிராவி டர்களிடம் சுத்தம் கண்ட இடத்து உடன் உண்ணவோ நெருங்கிப் பழகவோ தயாராயிருக்க வேண்டும். மனிதர்களுக்குள் என்ன உயர்வு தாழ்வு? நாம் எல்லோரும் ஒன்று தானே என்று பேசி முடித்தார்கள். அவ்வூராரனைவரும் பிள்ளையவர்களுக்கு நன்றி செலுத்தி அவ்வாறே செய்ய இசைந்தார்கள். போலீஸ்இன்ஸ்பெக்டர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன் முயற்சி மிகவும் பாராட்டத் தகுந்தது. ஏனைய போலீஸ் அதிகாரிகளும் இவர்களைப் போல நடந்து நாட்டுக்கு ஒரு உண்மைத் தொண்டாற்று வார்களாக.

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, “குடிஅரசு” 17.6.1928

பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா?

பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள்.

பார்வதி: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படி-யானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டி யில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்; அடித்துக்கூட தின்று விடுகிறார்களே, அது ஏன்?

பரமசிவன்: நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை; நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்வதி: அதுதான் போகட்டும்; நமது குமாரனாகிய கணபதியின் வாகன மாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ பாவம்!

பரமசிவன்: கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்லுவது!

பார்வதி: அதுதான் போகட்டும்; தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகின்றார்களே, அது என்ன காரணம் நாதா?

பரமசிவன்: கண்மணி, அதுவும் பக்தர்களில் அறியாத் தனம்தான்; ஆனாலும், அது மலம் சாப்பிடுகின்றதல்லவா! அதனால் அதன்மீது சிலர் அசுசியப்படு கின்றார்கள்போல் இருக்கின்றது.

பார்வதி: என்ன நாதா, பைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்து களையெல்லாம் சாப்பிடுகிறதே; அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும் போது, மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது? அதுதான் போகட்டும். நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொள் வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்! இது என்ன அநியாயம்!

பரமசிவன்: அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பார்வதி: நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கவுரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும் நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே; தவிர, விஷ்ணுவின் பெண் ஜாதியான மகாலட்சுமி கூட இதனா லேயே அடிக்கடி என் னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொண்டு மரியாதை செய்கிறார்களே, இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.

பரமசிவன்: என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்து விட்டான். விதியா ரைவிட்டது, சொல் பார்ப்போம்! என் கண்மணி, நீ இதற்காக அழ வேண்டாம்; உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.

பார்வதி: சரி, சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறா அழுக வேண்டும்! போனால் போகட்டும். இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.

இந்து மதம் யாருக்கு சொந்த மதம்?

1929 குடிஅரசிலிருந்து.,

பண்டிதப் பெரு மக்கள் இந்து மதம் யாருக்கு சொந்த மெனக்கண்டும் கண் மூடித்தனமாகவோ அல்லது பண்டிதத் தன்மைக் குப்பங்கம் வருமென்னும் நோக்கங் கொண்டோ, பாமர மக்களை பாழ்படுத்துகின்றனர். சரித்திர சம்பந்தப்பட்ட வரையிலும் ஆரியராலேயே இந்து மதம் ஸ்தாபகமானதெனக் காணலாம். ஆரியரின் குடியேற்றத்தின் பின்னர் இந்து மதமுண்டாயிற்றென்பதில் மயக்கமில்லை. இது நமது பண்டிதர்களும் அறிந்த இரகசியமே. ஆரியர்கள் தங்கள் கபட நாடகத்தால் தமிழ் மக்களை வயப்படுத்தி தமிழ் நாட்டிலிருந்த சில வழிபாடுகளை தமது வழி பாட்டுடன் ஜோடித்து  மக்களை மயக்கி விட்டனர். நாம் எவ்வளவு தூரம் துருவிச் சென்றாலும் இந்துமதம் தமிழ் மக்களாகிய நமக்கு சொந்தமன்று என்ற முடிவுக்கே வருகிறோம்.

சொந்தமற்றதை சொந்தமாகப் பாவிப் பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். ஆரியரால் உண்டாக்கப் பட்ட நான்கு வருணங் களையும் எண்ணிலடங்கா சாதி களையும் உடைய இந்து மதத்திற்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாத பூர்வத் தமிழ் மக்க ளாகிய ஆதி திராவிட ரெனும் சமூகத்தினருக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! இமயகிரிக்கும் குண்டுமணிக்கு முள்ள வித்தியாசத்தை ஒக்கும். இந்து மதமல்லவா பஞ்சமரென்று சண்டாளரெனவும், தீண்டப்படாதவ ரெனவும், தெருவில் நடக்கப் படாதவரெனவும் இன்னும் மிருகத்திலும் கேவலமாக மதிக்கச் செய்தது.

அதனையல்லவா சுயமரியாதை இயக்கம் கண்டிப்பது. இதை அறியாமல்  சகஜாந்தசுவாமி சுயமரியாதைச் சங்கத்திற்கு விரோதமாக போலி ஆஸ்திகர் சங்கத்தில் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்கி அதை தாங்கிப் பேச தலைமை வகித்தது. நன்றியை கொன்றதற்கு ஒப்பாகும். ஆதிதிராவிட ரென்னும் பூர்வத் தமிழ்பெருமக்கள் இந்துமதத்தை விடும் பரியந்தம் பஞ்சமர் தீண்டாதவர் என்னும் பட்டம் மாறவே மாறாது என்றும் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும் கேவலமாகத் தான் வாழவேண்டும்.

(9.2.1968 - விடுதலையிலிருந்து)

பாவமன்னிப்பு சாதனங்கள் எதையும் மனிதர்களை யோக்கிய மாய், நேர்மையாய் நடந்து கொள்வ திலிருந்து பிறழத்தான் செய்யும் என்பது மாத்திரமல்லாமல் நல்ல மனிதர்களையும்கூட அயோக்கி யமாக நடத்தத்தான் தூண்டும்.
மனித சமுதாயம் சீர்பட வேண் டுமானால் எந்த உருவத்திலும் பாவமன்னிப்பு இருக்கக் கூடாது. அரசியலிலும் எந்த லட்சியத்தில் தவறு செய்தாலும் செய்தவனுக்கு மன்னிப்பே இருக்கக் கூடாது.

ஏனென்றால், மூன்றாந்தர, நாலாந்தர நடத்தை உள்ளவர்கள் எல்லாம் தன்னை தேசபக்தன், தியாகி என்று காட்டி பதவிக்கு வர நேர்ந்ததாலே எனது 40 ஆண்டு அனுபவத்தில் அரசியல் என்பது போராட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம், நாசம், கேடு, பலாத்காரம், மோட்சம், புரட்டு, போட்டி, ஒருவரையொருவர் வசை கூறுவது, பழி கூறுவது, கவிழ்க்கச் சூழ்ச்சி, அரசாங்கத்தை அதிகாரிகளை அலட்சியப்படுத்துதல் முதலிய காரியங்களாகத் தானே இருந்து வருவதாகத்தானே பார்க்கிறேன். மத இயல், அரசியல் இரண்டிலுமே நேர்மையாளர் காணவில்லையே?
அதுபோலவேதான் எனது 70 - 75 வருஷ அனுபவத்தில் எந்த பக்திவானிடத்திலும், நாமக்காரன் விபூதிக்காரனிடமும், நாணயம், நேர்மை பார்க்க முடியவில்லையே! எனக்கு அரசர் களைத் தவிர்த்து அவர்களுக்கு அடுத்து எல்லா பெரிய மனிதர் களையும், அரசியல் தலைவர்களையும் பதவியாளர்களையும் தெரியும். என் அனுபவத்தைத்தான் சொல்கிறேன்.

எதனால் இந்தத் தவறு செய்யும் நிலை ஏற்பட்டதோ, அதையே பின் பற்றும்படி நமது பின் சந்ததியை தூண்டும்படியான காரியங்களையே நாம் கடவுள், மதம், சாஸ்திரங்கள், புராணங்கள், இலக்கியங்கள், முன்னோர்கள் முதலியவற்றின் பெயரால் செய்து வருகிறோம். அப்படி செய்யப்படுபவைகளில் ஒன்றுதான் அடுத்து வரப்போகும் மாமாங்க உற்சவமாகும்.  ஒரு அரசியல் காரனுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. கம்யூனிஸ்ட்கள் என்பவர்களுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. நான்தான் பாராங்கல்லில் முட்டிக்கொள்பவர்கள்போல் ஏதோ இப்படி எல் லாம் உளறி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.  இளை ஞர்கள், மாணவர்கள் கூட்டமாவது சிந்தித்துப் பார்க்கட்டும் என்பதற்குத்தான் இதை சொல்லுகிறோம்.  

விக்கிரக வணக்கமும் மனிதன் தலைவிதியும்

(10.2.1929 - குடிஅரசிலிருந்து)

திருநெல்வேலி பி.திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்கள் ரிவோல்ட் பத்திரிகையில் எழுதியதைத் தழுவி மொழி பெயர்த்தது.

கர்மத்தைப் பற்றியும் விக்கிரக ஆராதனையைப் பற்றியும் என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதாயிருந்தாலும் இந்த இரண்டும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமான முட்டுக்கட்டையாயிருந்து வந்திருக்கின்றன. கர்மம் என்பது மனிதனை தன் முயற்சியோடு வாழ்க்கையில் பிரவேசிப் பதையே தடுத்து விடுகின்றது. அதோடு மாத்திரமல்லாமல் மனிதன் என்ன தான் முயற்சி செய்தாலும் நடப்பது நடந்தே தான் தீரும் என்கின்ற ஒரு எண்ணத்தை உண்டாக்கி மனிதனை சோம்பேறி நிலையிலிருந்து அசைய விடாமல் செய்து விடுகின்றது.
விக்கிரக ஆராதனை மனிதன் அக்கிரமங்கள் செய்வதற்கு முதற்காரணமாயிருக்கின்றது. அன்றியும் மக்களில் படித்த வர்களும் படிக்காதவர்களும் எல்லோரும் ஒரே மாதிரியாகவே தாங்கள் என்னதான் அக்கிரமம் செய்தாலும் விக்கிரகங்களுக்கு வேண்டிய பூஜை ஆராதனை அபிஷேகம் உற்சவம் முதலிய வைகளைச் செய்து விட்டால் சகல குற்றங்களும் மன்னிக்கப் பட்டு என்றைக்கும் சவுக்கியமாக இருக்கலாம் என்கின்ற எண்ணம் கொண்ட வர்களாகவே இருக்கின்றார்கள்.

நம்ம ஜனங்கள் தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் அவர்கள் தங்கள் முன் ஜன்மத்தின் கர்மம் என்று நினைத்து அதிலிருந்து தப்புவிக்க விக்ரகங்களை வணங்குகிறார்கள். அதன் மூலம் கடவுள் தயவைத்தேடி கர்மத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். தங்களுக்கு ஏதாவது வியாதி வந்தாலுங்கூட அவைகள் தாங்கள் சுகாதார முறையை கவனிக் காததால் வந்தவை என்று எண்ணாமலும் இனி மேலாவது சுகாதார முறையைக் கைக் கொள்ளலாம் என்பதில் சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமலும் போன ஜன்மத்தில் தாங்கள் செய்த கர்மத்தின் பலன் என்றே நினைத்து விடுகின்றார்கள்.

இந்த மாதிரி கர்மத்தை ஒப்புக்கொள்ளும்படியான கொடுமையான கொள்கையானது நமது அறிவையும் முயற்சியையும் கெடுப்பதோடு அதனால் ஏற்படும் கஷ்டத்திலிருந்து விலகும் படியான மார்க்கத்தையும் அடைந்து வெறும் கடவுள் பாதத்தையே நம்பி சுகவாழ்வு முறைகளைக் கையாளமுடியாமல் செய்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஊரில் காலரா ஏற்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். காலரா என்கின்ற விஷபேதி வியாதி தண்ணீரிலிருந்து உண்டாகும் விஷப்பூச்சிகளால் உண்டா கின்றது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம். எங்கெங்கு தண்ணீரைச் சுத்தமாக வைத்திருக்கூடிய முறைகள் போதுமானபடி கையாளப்பட்டு வருகின்றதோ அங்கு காலரா வருவதில்லை. இதுவே சென்ற 25 வருஷ காலமாக இங்கி லாந்தின் அனுபவமாகவும் இருந்து வருகின்றது. ஆனால் நமது ஜனங்களுக்கு மாத்திரம் இந்த விஷயங்கள் அறிவிக்கப்படு வதுமில்லை அறிவிக்கக் கவலை எடுத்துக் கொள்வதுமில்லை.

அது மாத்திரமல்லாமல் இந்த உண்மையான விஷயங்களை அவர் கவனத்துக்கு யாராவது கொண்டு வந்தாலும் கூட அவற்றை அவர்கள் அலட்சியமாய் கருதி பரிகாசம் செய் வதோடு கெட்ட தண்ணீர் சாப்பிடுபவர்கள் எல்லோருமா செத்துப் போகின்றார்கள். விதி மூண்டவன் தானே சாகிறான் என்று விதியில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைப்பற்றி அந்த சமயம் பெருமை பேசிக்கொள்ளு கின்றார்கள். எம்.ஏ., பி.ஏ., பி.எல்., பாஸ் செய்ததால் அதிகமான பகுத்தறிவாளிகள் என்று சொல்லும்படியான படித்த கூட்டத்தார்களும் கூட வியாதி களை நீக்குவதற்கு மருந்துகளிலும் சுகாதார விதிகளிலும் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடமே நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள்.

மேற்குலத்தார் என்று சொல்லப்படுகின்றவர்களும் கூட எந்தவிதமான வியாதிகளுக்கும் தங்களது முன் ஜன்ம கர்மத்தின் பலன் என்றே சொல்லிக்கொண்டு அவ்வியாதி களைப் போக்குவதற்கு விருந்து, உற்சவம், மேளம், வேடிக்கை, முதலானவைகள் செய்வதன் மூலம் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து மாற்ற முடியாத கர்ம பலனை அவரால் மாற்றச் செய்து தப்பித்துக் கொள்ள முயலுகின்றார்கள். மனிதர்கள் பொதுவாகவே, தலைவிதியை மீறி எவ்வளவு வேண்டு மானாலும் தப்பிதம் செய்யலாம் என்றும் அதனால் வரும் படியான ஆபத்திற்கு பயப்பட வேண்டியதுமில்லை என்றும் ஆனாலும் நம் முன்னோர்கள் நடந்து வந்த பழக்கப்படியும் அவர்களது வாக்கியப்படியும் கடவுளுக்கு ஏதாவது சிறு லஞ்சம் கொடுத்து விட்டால் போதுமானது என்றும் அதனாலேயே கடவுளின் முழு ஆசிர்வாதமும் தங்களுக்கு கிடைத்து விடு மென்றும் என்ன செய்தாலும் சாவு கூட கிட்டநெருங்காதென்றும் கருதியிருக்கிறார்கள்.

கீழ்த்தர மக்கள் என்று சொல்லப்படுபவர்களும் இது போலவே தொத்து வியாதி முதலிய நோய்களுக்கு தங்கள் கிராமத்திலுள்ள கிராம தேவதைகளின் இரத்த வெறியினால் ஏற்பட்ட கோபம் தான் காரணமென்று கருதி அதைத் திருப்தி செய்து சாந்தப்படுத்த ஜீவபலி, மாமிசம், கள்ளு, சாராயம் முதலியவைகள் கொடுத்து வியாதிகளிலிருந்து தப்ப முயற்சிக் கிறார்கள். இதைப் பார்க்கின்ற மேல் குலத்தார்கள் என்பவர்கள் கீழ்க் குலத்தார்களை அவர்களின் இச்செய்கைகளுக்காக முட் டாள்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கருதுவதில் மாத்திரம் குறைவில்லை. ஆனாலும் உண்மையிலேயே இவ் விஷயத்தில் மேல்குலத்தார் என்பவர்களுக்கும் கீழ்க்குலத்தார் என்பவர் களுக்கும் யாதொரு வித்தியாசம் இல்லை என்பதே நமதபிப்பிராயம்.

ஆகையினால் எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்தியர்களாகிய நாம் சமூக இயல் அரசியல் பொருளாதார இயல் ஆகியவைகளில் ஏதாவது முற்போக்கடைய வேண்டு மானால் மனிதத் தன்மையையே அடியோடு அழிக்கத்தக்கதான மேல்கண்ட இரண்டு விஷயங்களையும் அதாவது விக்கிர கங்களை வணங்குவது என்கின்ற கொள்கையையும் தலை விதி கர்ம பலன், முன் ஜென்மத்தின் வரம், ஊழ்வினை என்ப வைகள் போன்ற நம்பிக் கையையும் அடியோடு ஒழித்தாக வேண்டும் என்பதேயாகும். எனவே “ரிவோல்ட்” பத்திரிகை இந்த விஷயத்தில் தீவிர முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டுமாய் எதிர்பார்க்கின்றேன். இதுவே சுயமரியாதை இயக்கத்தினு டையவும் முக்கிய கடமை என்று கருதுகின்றேன்.

மனிதன் தன்னுடைய மனிதத்தன்மைக்கு அதாவது அற்புதமான மனித சக்திக்கு, மதிப்புக் கொடுக்கும்படியாய் கற்பிக்கப்பட வேண்டும். முன் நாம் செய்த கர்ம பலனை நாமே அடையவேண்டும் என்பது உண்மையானால் அதை அழித் துக் கொள்ளும் சக்தியும் நம்மிடம் உண்டு. கர்மம் என்கின்ற உணர்ச்சியை அழிக்கும் காரியத்தை நமது முயற்சியால் தான் நாம் செய்து கொள்ள முடியுமே தவிர நம்முடையதல்லாத வேறு எந்த சக்தியினாலும் திருமூர்த்தி என்பவர்களினுடைய சக்தியானலும் கூட ஒன்றுமே செய்துவிட முடியாது என்ப தையும் உணரவேண்டும். “தீமைகளோடு நாமே தான் போர் புரிந்தாக வேண்டும், நம்மாலேயே அவைகளை வெல்லவும் முடியும்“ என்ற மோதி என்கின்ற ஆங்கிலகவிவாக்கே நமது ஞாபகக்குறிப்பு வார்த்தையாக இருக்க வேண்டும்.

சிவலிங்க ரஹசியமும் தமிழ் மக்களின் அறியாமையும்

(24.2.1929 - குடிஅரசிலிருந்து)


அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆகிய இவை இரண்டும் செய்விக்காத கெட்டசெய்கை கிடையாது. உதாரண மாக சாம்பலையும் மண்ணையும் முகத்திலும் உடம்பிலும் பூசிவிட்டு கழுத்திலும் கைகளிலும் ஏதேதோ கொட்டை மாலைகளை மாட்டி வெளியில் அனுப்பி வேடிக்கை பார்க்கிறது.

இன்னும் பார்ப்பனர்கள் காமபித்து அதிகமாய்ப் போய் ஆண்குறியும் பெண்குறியும் பிரஜாவிருத்தி, சரீரசுகம் இல் வாழ்க்கை இவைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் இவைதான் கடவுளர் பூஜிக்கப்பட வேண்டுமென்று சுமார் 2000 வருஷங்களுக்குமுன் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி னார்களாம்.

அப்பொழுது அறிவாளிகளான நம்மவர்கள் இந்தத் தீச்செயலை எல்லாவித உபாயங்களாலும் தடுக்கத் தொடங் கினார்கள். நம்மவர்களுக்கு பயந்து சிலர் இந்த கடவுள் வணக் கத்தை ரகசியமாகவும், சிலர் பிரத்தியட்சக் கடவுளை விட்டு மண் ணாலும், கல்லாலும் பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்தி ருக்கும் விதமாகச் செய்வது அதை வணங்கியும் மற்றுஞ்சிலர் முழுமனித வடிவம் நிர்வாணமாகச் செய்தது அதை வணங்கி வந்தார்களாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்கடவுள்கள் உயர்ந்த விலையுள்ள புடவை உடுத்துகிறதும் விபசார உற்சவம் செய் கிறதுமான சாமிகளாக மாறிவிட்டன. ஆஹா இந்த சாமி களுக்குத்தான் நம்மவர்கள் வருஷாவருஷம் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து நாசமாக்குகிறார்கள்.

பெரிய மதில் தின்ன பிராகாரம் கட்டி தங்கள் அறியாமையின் ஞாபகச்சின்னத்தை நிலைநாட்டுகிறார்கள். பால் பழம் சர்க்கரை கொண்டு தினம் 5 வேளை பூஜை செய்து ஆண் பெண் குறி களுக்கு தடவி வழித்துக் கொடுக்கிற பஞ்சாமிர்தத்தை கொஞ்சம் போதும் (மிகவும் கொஞ்சமாக, ஏனென்றால் பார்ப்பன பூசாரி கணக்காகத்தான் கொடுப்பான்) தின்று கடைத்தேறி விட்டதாக நினைக்கிறார்கள்.

தமிழர்களே! சுயபுத்திக்கு மேன்மைகொடுத்து பட்சபாத மில்லாமல் தினமும் 2 நாழி நேரமாவது சாம்பல் பூசுதல், யானைத் தலை கடவுள், மூன்று தலைச்சாமி, ஒத்தைக்கால் தெய்வம், முதலியவற்றை அராய்ந்து பார்த்தால் இந்த ஆபாசத் தின் உண்மை விளங்காமல் போகாது.

இனிமேலாவது ஒவ்வொரு ஊரிலும் கோவில் என்பவற்றில் உள்ள சாமி என்பவற்றை பெய்ர்த்து தூரவைத்து விட்டு அதனுடைய வருமானத்தைக் கொண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமும் அறிவு வளர்ச்சிக்காக புத்தகாரியமும் ஏற் படுத்தி நாட்டை சயமரியாதை உள்ளதாகச் செய்யுங்கள். இன்னும் இந்த ஆண்குறி பெண்குறி தெய்வங்களை கும்பிட்டுக் கொண்டும் சாம்பலை பூசியும் சாணியைத்தின்று கொண்டுமே இருந்தால் பின்னால் இன்னும் எதைத்தான் தின்ன நேரிடுமோ தெரியாது. இவ்வளவு காலம் அறியாமையில் கிடந்து நஷ்டமும் கஷ்டமும் பட்டது போதும்,போதும். கடைசியில் நீங்கள் பூசிக்கும் லிங்கம் என்ன என்பதை மேனாட்டார் தெரிந்து கொண்டு உங்களை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை நினைப் பூட்டுகிறேன். பிறர் சொல்லுவானேன். நமக்கே நம்முடைய இந்த வெட்கக்கேடான ஆசாரத்தில் அவமானத்தினால் தலை குனிந்து போகிறதில்லை. ஏன்! இது அறியாமை! மூடநம்பிக்கை!

Banner
Banner