பகுத்தறிவு

 

28-06-1931 - குடிஅரசிலிருந்து...

நாம் இங்குதான் பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள்  என்று மேடையேறிப் பேசிக்கொள்ளுகின்றோமே யொழிய, ஓர் அராபிதேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்து விட்டால் நமது மக்கள் ஆண் பெண் அடங்கனும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளிதேசத்திலிருந்து எவன் வந்தாலும்  அவனைக்கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம்.

வெளிநாட்டுக்காரன்  இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும்  நாணயமும் அற்றத்தன்மையேயாகும்.

நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன்  4 ரூபாய்  பெறும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்து விட்டு 6 மாதம் பொறுத்து வந்து பணம் கேட்டால்  வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்கு காணிக்கை கொடுப்பது போல் பயபக்தியுடன் கொடுத்து விடுகிறோம், அவனைக் கண்டால் நடுங்குகின்றோம்,

உள்ளூர்வாசியிடம்  கடன்பட்டிருந்தாலோ, அவனுடைய கடனைக்கொடுக்க  மறுப்பதுமல்லாமல் பண்ணுவதைப்பண்ணு என்றும் சொல்கிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன? ஏனெனில் நமது தைரியம் அவ்வளவில் தானிருக்கின்றது மற்றும்  ஓர் உதா ரணம்  என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன்  இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாகயிருந்தாலும்  கூட  நாம் அவ்வண்டியில் ஏறமாட்டோம்.

நாம்  பத்து பெயர்கள் வரை  ஒரு அறையி லுட்கார்ந்து  அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும்கூட  வடதேசத்தானொருவன் தைரியமாக அங்கு வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலிசெய்துவிடுவோம். ஆனால் நாம், காளி, வீரன், கருப்பன், முனியன், சடையாண்டி முதலியவீரம் பொருந்திய தெய்வங்களை கும்பிடு கிறவர்களாகவுமிருக்கிறோம்.  எதற்காகக் கும்பிடு கிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரி யம் நமக்கும் வரவேண்டுமெனவேதான் என் கிறோம்.

ஆனால், நாம் அதனால் தைரியமுடையவர்களாக வாழ்ந்திருகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படி யுமில்லை, நமது தைரியமெல்லாம் முதலில் அடி பார்க்கலாம் என்பதிலும் அடிவிழுந்தால் ஓடுவ தற்குள் என்ன அவசரம் என்பதிலேயே தானிருக் கின்றது. யார் அடித்தாலும், திருப்பி யடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று  இல்லை.

(மதுரை ஜில்லா, திண்டுக்கல் அடுத்த சித்தயங் கோட்டையில் 22.06.1931ஆம் தேதி மக்கள் விடு தலை சங்கம் திறப்பு விழாவில் ஈ.வெ. ராமசாமியின் சொற்பொழிவு)

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத் தன்மை இன்று நேற்றல்லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவை களாகும்.  திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக்கொள்ளுபவர்களாய் இருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்த வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள். ஆகவே, நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.

-----------------------

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று; இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை. இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு உபாத்தியாயரின் யோக்கியதை

10.05.1931 - குடிஅரசிலிருந்து....

நமது ஜில்லாவில் ஒரு கனவானிடம்  ஒரு பார்ப்பன உபாத்தியாயர் ஒரு தக்க சிபார்சுடன் வந்து தனக்கு ஜீவனத்திற்கே மிகக் கஷ்டமாயிருப்பதாகவும் எப்படியாவது தனக்கு உபாத்தியாயர் உத்தியோகம் காலியில்லை என்று சொல்லியும் பட்டினிக்கிடப்பதாக துக்கப்பட்டத னால் மனமிளகி, டெம்பரவரியாகத் தற்கால சாந்தியாக ஒரு உத்தியோகத்தைக் காலியாக்கி பதிலியாகக் கொடுத்தார் மற்றும் இந்தப்படியே அடிக்கடி, காலிவேலைகளை பதிலியாகவே இவருக்குக் கொடுத்துக் கொண்டும் வந்தார்.

ஆகவே, இந்த உபாத்தியாயருக்கு அப்பெரியார் தன்னுடைய ஜில்லா எல்லைக்குள் ஏற்படும் தற்கால காலி ஸ்தானங்களை எல்லாம் இவருக்கு அப்போதைக்கப்போது கொடுத்துக் கொண்டுவந்திருக்கின்றார் என் றாலும் டெம்பரவரியாக நியமிக்கப்பட்ட இப்படிப்பட்டவருக்குப் பள்ளிக்கூட வெயில்கால நீண்ட விடுமுறைச் சம்பளம் கொடுக்கச் சட்டப்படி நியாயம் கிடையாது என்பது யாவரும் அறிந்ததாகும்.

இப்படி இருக்க சென்ற வருஷம் ஒரு நாள் அதாவது வேலையில்லாத காலத்தில் உபாத்தியாயர் அப்பெரியார் வீட்டிற்கு வந்து தனக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லையன்றும், இரண்டு மூன்று, நாள் பட்டினி, கிடப்பதாகவும் சொன்னார்  இதை நம்பி அப்பெரியார் தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினார். இதைப் பெற்றுக் கொண்டு ஊருக்குப் போன உபாத்தியாயருக்குப் பள்ளிக்கூடம் திறந்த உடன் மறுபடியும் ஒரு காலி ஸ்தான பதிலி உத்தியோகம் கொடுத் தார்.  இந்தப்படியாக இந்த உபாத்தியாயருக்கு அக்கனவான் அடிக்கடி வேலை கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறார்.  இப்படிப்பட்ட பெரியாருக்கு அந்த உபாத்தியாயர் எழுதி ரிஜிஸ்டர் செய்து அனுப்பி இருக்கும் கடிதத்தில் கண்ட சில குறிப்புகளைக் குறிப்பிடுகின்றோம்.  அதாவது:-

அய்யா... நான் தங்களிடம் வேலைப் பெற்றதில் ஒரு வருஷம்தான் கோடைக்கால லீவு சம்பளம் கிடைக்கப்பெற்று இருக்கிறேன்.  மற்ற வருஷ விடுமுறை காலங்களில் சம்பளமில்லாமல் தவித்து இருக்கிறேன்.  ஒரு பிராமணன் இவ்வாறு அலைக்கப்படுவது நியாயமா?

உங்களுக்கும் இந்தக்கதியை நான் விரும்பாவிட்டாலும் நீங்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்?

செல்வம் தங்கி இராது. அதிகாரம் நிலைக்காது.. தங்கள் ஆத்மா பாவத்தைச் செய்யலாகாது.

நான் சென்ற மே மாதத்தில் தங்கள் வீட்டில் பட்டினி விரதமிருந்தபோது தாங்கள் ஒரு ரூபாய்க் கொடுத்தீர்கள்.  அந்த ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு இதில் அனுப்பி இருக்கிறேன்.

எங்கள் குடும்பம் வேதம் ஓதிய பெரியவாள் வம்சம். உங்கள் ஆத்துமா பரிசுத்தமடைய வேண்டுமானால் அந்தப் பக்தர்கள் நிறைந்த வம்சத்திற்குத் தீங்கு செய்யலாகாது. என்னைக் காப்பாற்றுவதன் மூலம், தங்களைக்  காத்துக் கொள்ளுவீர் என்று நம்புகின்றேன் .

வேதம், உண்மை, கடவுள் சத்தியம், காயத்திரி ஜபம் வீணாகாது.   பதிவிரதைகள் வாக்கு பலியாமல் போகாது.  பிராமணர்களை சதா கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

தாங்கள் அடைந்துள்ள பதவியில் மமதைக் கொண்டு.... பதவி பூர்வ புண்ணியத்தால் உண்டானது. அடுத்த ஜன்மத்திற்கு உங்கள் குலத்தில் சேஷம லாபத்தைத்  தேடுங்கள்.

ஏழைகளுக்குச்  செய்யும் தீமை தங்களுக்குச் செய்து கொண்டதாகும். நான் அடையும் இன்ப துன்பம் பகவான் சத்திய ரூபிக்குச் சாரும் என்பதாக எழுதியிருக்கின்றார் இவர் ஒரு பார்ப்பனர். ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்டவர்.

இன்றைய உபாத்தியாயர்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்களின் யோக்கிதையும். இப்படிப்பட்டதாகும் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் நம்மிடமிருக்கின்றன.

மற்றொரு சமயம் ஒரு ஹெட்மாஸ்டர் ஒரு பள்ளிக்கூட காரிய தரிசிக்கும் கடிதம் எழுதும் போது ஆனால் கையெழுத்தில்லாமல் மொட்டை கடிதமாய் எழுதப்பட்டது. அதாவது அய்யா, நீர் இப்போதுதான் சீமைக்கு அனுப்பி கல்வி கற்பித்த உம்முடைய மகனைத்தின்று இருக்கீறீர்.  இன்னும் ஒரே ஒரு பெண்தான் இருக்கிறது.  எனக்குத்  துன்பம் செய்தால் பகவான் அந்த ஒரு பெண்ணையும்  தின்றுவிடும்படி செய்து விடுவார் என்று எழுதியிருந்தார். இதிலிருந்து இந்த உபாத்தியாயர்கள் வேதம் முதலியவற்றைப் போற்றுவதைப் பற்றியும்,  நன்றி விசுவாசம் முதலிய குணங்கள் இல்லாததைப் பற்றியும் நாம் குற்றம் சொல்லவரவில்லை.  ஆனால் இவர்கள் எவ்வளவு மூடர்கள். இவர்களது மூடநம்பிக்கை எவ்வளவு இவர்களின் அற்பபுத்தியின் நிலைமை எவ்வளவு? இந்த மாதிரி தரமுள்ள மக்களைப் பிள்ளைகளுக்குப் படிப்புக் கற்றுக் கொடுக்கும்படி சொன்னால் அந்தப் பிள்ளைகள் உருப்படுவார்களா? அறிவு பெறு வார்களா? என்றுதான் கவலைப்படு கின்றோம்.  ஆகவே இன்று நம் நாட்டு மக்களில் படித்தவர்கள் என்பவர்களிலேயே 100க்கு 90பேர்  பகுத் தறிவு அற்ற மூடர்களாய் இருப்பதற்கும் மூட பக்திகாரராய்  இருப்ப தற்கும் காரணம் எல்லாம்.  இந்த மாதிரி முழு மூடர்களான உபாத்தியாயர்களுக்குக் படிப்புப் பெறச்செய்திருக்கும்  முறையேயாகும்.  இந்த நிலையில் இவர்களுக்கு இந்த உபாத்தியாயர்களுக்கு   கொடுக்கப்படும் சம்பளமோ  நினைத்தால் அளவுக்கு எத்தனையோ மடங்கு மீறியதாகும்.  சாதாரணமாக இன்றைய நிலையில் உபாத்தியாயர்களுக்கு  மாதம் 20 ரூபாய்க்கு கம்மி இல்லாமலும் 50 ரூபாய்க்கு மேற்படாமலும் சம்பளம் கொடுத்தால் தாராளமான சம்பளமாகும்.  ஆனால் இன்றைய சம்பளத்திட்டம் ஏழைகள் படிக்கக்கூடாது என்றும், உடல் பிரயாசைப்பட்டு சம்பாதிக்கின்ற தொழிலாளி பிள்ளைகள் படிக்கக்கூடாது என்றும், ஆனால் ஊரை ஏமாற்றி சோம்பேறியாய் இருந்து அயோக்கியத்தனம்  செய்து   பாட்டாளிகளின் பலனைக் கொள்ளையடிக்கும் அயோக்கிய வஞ்சகர்களின் சந்ததிகளே படிக்க வேண்டும் என்றும், அவனும் மூடனாகவும் அயோக்கியனாகவுமே இருந்து இந்த நிலைமையை வளர்க்க வேண்டும் என்றும் அடிப்படையான தத்துவத்துடனேயே கல்வித் துறையை ஏற்பாடு  செய்யப்பட்டு வருக்கின்றதென்றே கருதவேண்டி இருக்கின்றது.

ஆகவே சம்பள விகிதத்தைப்பற்றியும், அதன் தகுதியைப் பற்றியும் பின்னால் எழுதுவோம். இப்போது அவர்களது தகுதியைப்பற்றியும் குறிப்பிடவே இதை எழுதினோம். இந்தப்படி இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக் கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.

இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம்.  இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.

தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பன ரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக் கிறார்கள்.

ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படுகிறார்கள்.

மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களைத் (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலை யெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமானதென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக்கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக்கின்றது.

இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது.

அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது.  ஆகவே அவ் விஷ யத்தில் இந்து மதம்  இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும்.

ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம்.

இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அர்ச்சகர் -ஜோசியர் சம்பாஷணை - சித்திரபுத்திரன்

10.05.1931 - குடிஅரசிலிருந்து....

அர்ச்சகர்: என்ன ஜோசியரே கோவிலுக்கு முன் போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: என்ன காரணம்? அர்ச்சகர்: இந்த இழவு எடுத்த சுயமரியாதைதான்!

ஜோசியர்: சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை. பூதம் இல்லை என்று  சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போக கூடாது  என்று பிரச்சாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர்:  இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை இன்னமும் ஆயிரம்  தடவை  சாமி  இல்லை பூதம்  இல்லை என்று சொல்லட்டும். கோவிலை வேண் டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால்  நமக்கு ஒன்றும்  கெட்டுப் போகாது.

ஜோசியர்: மற்றென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்: கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான, முக்கிய கைங்கரியத்தைப் பற்றிக் கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்கள் அல்லவா  அதனால் தான்.

ஜோசியர்: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால்   எல்லாம் மக்களுக்கும் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்ச்சகர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்?  கடவுள்தான் எங்கும் நிறைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வரவேண்டுமா?

ஜோசியர்: மற்றெததற்காக வருகின்றீர்கள்?

அர்ச்சகர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு  வருகின்றார்கள்.

1. தன்னை பக்திமான்  என்று பிறர் மதிக்க வேண்டும்

2. அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும்  இரண்டாவது விஷயத்திற்கு தான் அதிகப் பேர்  வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வழிகள்  சிறிது வயதானவர் களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய்   வரா விட்டால்  குடும்பப் பெண்களும் வருவதில்லை.  ஆக இப்படிப்பட்ட இரண்டு  கூட்டம் வந்தால்தானே.  காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு  ஆகியவைகள் கிடைக்கும் ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில்  என்ன பிரயோசனம்?   கோவில் சம்பளமாகிய  மாதம் 1-12-0

ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?

ஜோசியர்: அப்படியா சங்கதி? அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ?

அர்ச்சகர்: என்ன வழி?

ஜோசியர்: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி,நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்ச்சகர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர் களுக்கு நகை,புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சவுகரியம், வீடு,வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவைகள் வேண்டாமா?  இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது? நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து  சரிபண்ணி  அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 பெற்றுக்கொண்டு கஷ்டமில்லாமல்,  நஷ்டமில்லாமல்  சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோசியர்: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது.

அர்ச்சகர்:  உங்களுக்கு  என்ன வந்தது?

ஜோசியர்: இப்போது  எந்தத்தேவடியா மகன்  நம்மிடம்  ஜோசியம் பார்க்க வரு கின்றான்?  பிள்ளைக்கும்,  பெண் ணுக்கும்  பார்க்கின்ற  வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.

அர்ச்சகர்: ஏன் ?

ஜோசியர்: என்ன அதுகளே பெண்ணும் மாப்பிள் ளையுமே  பொறுத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்ச்சகர்: இருந்தாலும் இப்ப கிரகதோஷம் பார்க்க வாவது  வருவார்களே.

ஜோசியர்:  அதாவது வந்தாலும் பரவாயில்லை.  அதற்கு தான் எங்கு வருகின்றார்கள்? திருட்டுத் தேவடியா பிள்ளை  காயலா தலைவலி வந்தால் உடனே  டாக்டர்கள்  இடம் போய் விடுகின்றார்கள் . நம்மிடம்  வருவதேயில்லை. நம்மை கண்டால்  சிரிக்கின்றார்கள் . என்னடா என்றுக் கேட்டால்  சுயமரியாதையடா  என்கின்றார்கள்.

அர்ச்சகர்:  சரி. இவ்வளவு ஆனதுக்கு அப்புறம்  எனக்கு ஒன்று தோன்றுகின்றது.

ஜோசியர்: என்ன?

அர்ச்சகர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வ தாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது. எப்படி என்றால்  இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான்  அதாவது நானும் சுயமரியாதைக் காரன் என்று சொல்லிக்கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கிறார்களே அதுபோல.

ஜோசியர்: அது நல்ல வழிதான். நம்முடைய பெரியவாள் பவுத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள்.  ஆனால், இந்தச் சுயமரியாதை பயல்கள் (சுயமரியாதைக் காரர்கள்) இது தெரிந்துதான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்ப தில்லை என்று தீர்மானித்து விட்டார்கள்.

அர்ச்சகர்: அதுவும் அப்படியா? அப்படியானால் இந்தப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும்  இந்த  சு.ம காரர்கள் நாசமாய், நிர் மூலமாய்ப் போகட்டும், நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து  கொள்ளுவோம்.

 

 

மக்களுக்குத் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன் றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.

- தந்தை பெரியார்

 

 

12.07.1931 - குடிஅரசிலிருந்து...

பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கும் என்ன நன்மை செய்ய  சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள்.

பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதாவ தானால் ஆகட்டும். இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச்  சேருவதற்கு மார்க்க மில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இன்றைய தினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டால் இந்த ஏழை நாளைக்கு கயாசிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி, அபிசேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டே பணத்தைத் தொலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும் தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும் தான் மறுபடியும் பணக்காரன் ஆகிவிடுவான் என்பதும் எனக்குத் தெரியும்.  ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒருபக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும், யாருக்கும் எந்தத் தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும், படிக்கவும் சவுகரியமும் அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன். வருணாசிரம சுயராஜ்யத்தில் யார் மனதை யும் புண்படுத்தாத சுயராஜ்யத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

உபாத்தியாரின் கடவுள் பாடம்

06.09.1931 - குடிஅரசிலிருந்து...

உபாத்தியாயர் :  பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத் தைக்கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?

மாணாக்கன்: தெரிந்ததுசார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.

உபாத்தியாயர்: என்ன சொல்?

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபாத்தியாயர்: முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.

மாணாக்கன்: ஏன் சார்? கேட்டால் என்ன சார்?

உபாத்தியாயர்: அது! நிரம்பவும் பாவம்.

மாணாக்கன்: பாவம் என்றால் என்ன சார்?

உபாத்தியாயர்: சீ! வாயை மூடு. நீ அயோக்கியன். குடிஅரசு படிக்கிறாயோ? ஏறு பெஞ்சிமேல்.


இஸ்லாம் - இந்து வித்தியாசம்

02-08-1931 - குடிஅரசிலிருந்து....

நான் இந்து  மதத்தைப்பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு   மதத்தி னுடையவும்  ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதி விடாதீர்கள்.  அந்த வேலையை ஒரு பரீட்சை மாண வனுக்குக் கொடுத்து விடுங்கள் அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால், நான்  பேசுவது  என்பது இரண்டு  மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பான்மை யான  மக்களிடை இருந்து வரும் பிரத்தி யட்சக் கொள்கைகள்  சம்பந்த மானக்  காரியங்களையும் அதனால்  அவரவர்கள் பிரத்தியட்சத்தில்  அடைந்துவரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகிறேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில்  என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில்  பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக்கொள்ளும் வேஷமே தான்  மதம் என்றாலும்  அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்?  மக்கள் எப்படி நடத்தப்படு கின்றார்கள்.  அதனால் அந்த சமுகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள் தான்  மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக  விஷயங் களில் இந்து மதத்தைவிட  (கொள்கை களைவிட) இஸ்லாம் மதமே  (கொள்கை களே)  மேன்மை யான தென்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இஸ்லாம் மாணவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாதமேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும்.

அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள்  சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம்  இருக்கின்றது. வீரம் என்றால்  இலட்சியத்திற்கு உயிரை விட துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில்  ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாத, மனிதன் குளத்தில் இறங்கக் கூடாதமனிதன்,  கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங் குவதில்லை. அதற்குப்பெண்டு, பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பது மில்லை. அதற்குப் பூஜை, நைவேத் தியம்,  உற்சவம், நகை, துணிமணி, முதலியவற் றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை மற்றும்  அவர்களது பெண்களுக்குச் சொத்துரிமை, கல் யாண ரத்து, விதவை  மணம்  ஆகிய வைகளும் உண்டு. அவர்களுக்குள்ள  அன்பையும் வீரத்தையும்  பார்த்து நாம் அவர்களை முரடர்கள்  என் கிறோம். அது போலவே இந்துக் களுக்குள் ஒருவருக் கொருவர் உள்ள துவேஷத் தையும்  பயங்காளித் தனத்தையும் நாம் பார்த்து அவற்றைச் சாதுத்தன்மை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில்   ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லாமானவர்கள் வந்து விழுந்து  விடுகிறார்கள்.  இதைத்தான் நாம் முரட்டுத்தனம் என்கிறோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால்  மற்ற இந்துக்கள் அவன் யாரோ அடிப்படுகிறான், நமக் கென்ன கவலையென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப்பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான்  சாதுத்தனம் என்று பெருமை பேசிக்கொள்ளு கிறோம். அன்பும் சகோதரத் தன்மையும் இந்துவிடம் எங்கிருக்கின்றது?  ஆடுகோழி தின்னாதே  என்று சொல்லுவதில்  மாத்திரம்  இருக்கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப்பது, கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவன்தான் அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!! என்று பேசுகிறான். அன்பின்  உண் மையை அறியவே இல்லை.  இஸ்லாம் கொள்கையில்  வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமுக வாழ்விலும், ஆண்டவன் முன்னிலை என்பதிலும்  மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமுக வாழ்விலும்  கடவுள் முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட மலத்தை வாயில்  கவ்விக்கொண்டு செல்லும் மிருகத்தை விடக் கேவலமாய்  மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியட்சத்தில்  காண்கின்றோம். இதைத் தான்  அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள்  தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத்தத்துவ நூலை வேதம் என்பதை  இஸ்லாம் மார்க்கம்  செருப்புத்தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும்  என்று சொல்லி கற்றுக்கொடுப் பதையும் பார்க்கிறோம். இந்து மார்க்க வேதம்  என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம்  தவிர (பார்ப்பான் தவிர) மற்ற யாவரும் அவன் பிரபுவா னாலும் சரி, ஏழையானானாலும் சரி , யோக்கியனானாலும் சரி,  அயோக்கியனாலும் சரி ஒருவனுமே  பார்க்கவும், கேட்கவும்,  படிக்கவும் கூடாது  என்று இன்னும் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான்  சமத்துவ நோக்கம்  கொண்ட  மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள்.

மொண்டி முடம், கூன், குருடு ஆகியவர்களுக்கே உதவி செய் என்று இஸ்லாம்  மதம் பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது. சோம்பேறிகளுக்கே ஊரார்  உழைப்பில் உண்டுகளிப்பவர்க்கே உதவி செய்  என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்றுசேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள  முஸ்லிம்கள்  இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து  இருக்கின்றார்கள். இன்றும்  யாவரையும்  எப்படிப்பட்ட இழிவான வரையும்  எப்படிப் பட்ட இழிவானவர் என்று இந்து  மார்க்கத்தாரால்  கருதப் பட்டவர்களையும் தனக்குள்  சேர்ந்துக்கொள்ள கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவர்களையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில்   காவல்காக்கின்றது. தன்னவ னையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப்பற்றி வாய்த்தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை  முஸ்லிம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கியிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை  அடித்துக்கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக் கடையில் நின்று மறியல் செய்யும் இந்து  கொள்கையானது இந்துக் களில்  100க்கு 51 பேர்களுக்கு  மேல் குடிக்காரர்களாகச்  செய்திருப் பதோடு இந்து  கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில் களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து  பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத் தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படுகின்றன. இந்து கொள் கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாயுள்ள நாட்டை அந்நியர்கள் ஆளுகின்றனர். இந்தபடியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கை களாலேயே இந்துக் கொள்கைகளைவிட இஸ்லாம்  கொள் கைகள் எவ்வளவோ மேன்மையானபலன் கொடுத்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப்படி நான்சொல்லு வதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பேசுங்கள்.  பிறகு கொள்கைக்காக உயிரைவிடுங்கள்.

* 29.7.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள தமிழர் தலைவர் அரங்கத்தில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் கீழ்க்காணும் மாவட்டங்களின், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. *  மாவட்டப் பொறுப்பாளர்கள் கட்டாயம் கலந்து கொள்வதோடு, தங்கள் பகுதியில் உள்ள பகுத்தறிவாளர் கழகத் தோழர்களையும் பங்குபெறச் செய்திட வேண்டுமாய் மிகக் கனிவுடன் வேண்டுகிறோம். * பொருள்: 1.உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒப்படைத்தல் 2. மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா ஒப்படைத்தல், 3. இயக்கச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள், * பங்குபெறும் மாவட்டங்கள்: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்

* அன்புடன்: கோபு.பழனிவேல் (மாநிலதுணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.மின்சாரக் கட்டணம் செலுத்த செயலி அறிமுகம்

 

சேலம், ஜூலை 28 இந்தியாவின் முதன்மை பேமண்ட்ஸ் செயலியான PhonePe தற்போது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதை எளி தாக்கியுள்ளது.

PhonePe மூலம் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது, பயனர்களுக்கு உகந்த எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயலியின் முகப்புப்பக்கத்தில் உள்ள மின்சாரம் எனும் அய்கானைக் கிளிக் செய்தால், பல்வேறு மின்சார வழங்குநர்களின் பட்டியலில் தமிழ்நாடு மின்சாரவாரியம் (TNEB) என்பதைப் பார்க்கலாம்.

அதைத் தேர்வுசெய்ததும், உங்கள் கணக்கு எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும். கணக்கு எண்ணை உள்ளிட்ட பின்னர், BHIM UPI, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றில் ஒன்றைப் பேமண்ட் விருப்பமாகத் தேர்வுசெய்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்தால் போதும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்திவிடலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் PhonePe  மூலம் பணம் செலுத்துவதை ஏற்கெனவே ஆதரிக்கிறது.

சென்னை, ஜூலை 23 தென் சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர்  அணி - மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னை, பெரியார்  திடலில்,  15.07.2018 அன்று  காலை 11.00 மணியளவில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் மு.இரா. மாணிக்கம்  தலைமை ஏற்றார். பேராசிரியர் ஜெ.குமார், பேராசிரியர்  டி.இரா ஜாஜி கருத்துரை வழங்கினார்கள்.

மா.அழகிரிசாமி

சிறப்பு அழைப்பாளர் ப.க. மாநில தலைவர் மா.அழகிரிசாமி பேசியதாவது: தென்  சென்னை  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், அவர்களது பகுதியில், பகுத் தறிவாளர் கழகம் சார்பில், மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை, கருத்த ரங்கம் அல்லது விவாதம் போன்று, நல்ல பேச்சாளர்களை அழைத்து பேச வைக்க வேண் டும். அதன் மூலம் நமது கருத் துக்கள் மக்களிடையே சென்று அடையச்செய்யலாம். பள்ளி மாணவர்களுக்காக சில நிகழ்ச்சி களை நடத்த வேண்டும்  என்று கூறினார்.

பிரின்சு என்னாரெசு பெரியார்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: கூட்ட நிகழ்ச்சிகளுக்கான தலைப்பு, வழக்கமான தலைப்புகளில் இல் லாமல், பொதுவான  தலைப்பு களில் பேச, பேச்சாளர்களை அழைக்கலாம் என்று கூறினார். நிகழ்ச்சி பற்றிய செய்திகளை, முகநூல் மூலம் விளம்பரம் செய்து, மக்களிடையே கொண்டு செல்லலாம் என்றும், இதனால் அதிக செலவு இல்லாமல், பல தரப்பட்ட மக்களையும், உடனடியாக செய்திகள் சென்று அடையும் என்று கூறினார்.

சி. தமிழ்ச்செல்வன்

பகுத்தறிவாளர் கழக மாநில பொருளாளர் சி. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா போன்று  அவசியம் நடத்துதல் வேண்டும் என்று கூறியதோடு, எல்லா முயற்சிகளையும் முன்னெ டுங்கள், வழி காட்டுதல் மற்றும்  தேவையான உதவிகள் செய்கி றோம்  என்றும் கூறினார்.

மேலும், விழா நடத்துவதற்கான திட்டமிடுதல்  அவசியம் என்று கூறினார்.

அ  தா.சண்முகசுந்தரம்

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்  அ  தா.சண்முக சுந்தரம்  பேசியதாவது: கருத்தரங்க கூட்டத்திற்கு தலைப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றியும், பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து, பேசச் சொல்வதன் மூலம், மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

சிறீ. அருட்செல்வன்

பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் சிறீ.அருட்செல்வன் பேசிய தாவது:& கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், பகுத்தறிவு கருத் துக்கள்,  மாணவர்களுக்கு, சென்ற டையும் வகையில், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்ற கூறினார்.

இந்த கலந்துரையாடல் கூட் டம், தென் சென்னை மாவட்ட ப.க.,மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, ஒரு கருத்தரங்கத்தை உடனடியாக  நடத்துவது  பற்றிய விவாதமாக அமைந்தது. அனைத்து உறுப்பினர்களும், விவாதத்தில் மிகவும் ஆர்வமாக, தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில்,  மூன்று  தீர்மானங்கள், முன் மொழி யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு:

1. தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தென் சென்னை மாவட்டப் பகுதிகளில்,  இடங்களைத்தேர்வு செய்து, கருத்தரங்கம் அல்லது விவாத அரங்கம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், முதல் கூட்டம், 26.08.2018, ஞாயிற் றுக்கிழமை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, சென்னை கலைஞர் கருணாநிதி  நகரில் நடத்துவது   என தீர்மானிக்கப் பட்டது.

2. பகுத்தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது

3. மாத இதழுக்கு, பகுத் தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணி  உறுப்பினர் களையும், பொறுப்பாளர்களை யும், முதலில் சந்தாதாரர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது. எம்.இளங்கோவன் நன்றி கூறினார்.

Banner
Banner