பகுத்தறிவு

 

12.07.1931 - குடிஅரசிலிருந்து...

பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கும் என்ன நன்மை செய்ய  சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள்.

பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதாவ தானால் ஆகட்டும். இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச்  சேருவதற்கு மார்க்க மில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இன்றைய தினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டால் இந்த ஏழை நாளைக்கு கயாசிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி, அபிசேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டே பணத்தைத் தொலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும் தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும் தான் மறுபடியும் பணக்காரன் ஆகிவிடுவான் என்பதும் எனக்குத் தெரியும்.  ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒருபக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும், யாருக்கும் எந்தத் தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும், படிக்கவும் சவுகரியமும் அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன். வருணாசிரம சுயராஜ்யத்தில் யார் மனதை யும் புண்படுத்தாத சுயராஜ்யத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

உபாத்தியாரின் கடவுள் பாடம்

06.09.1931 - குடிஅரசிலிருந்து...

உபாத்தியாயர் :  பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத் தைக்கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?

மாணாக்கன்: தெரிந்ததுசார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.

உபாத்தியாயர்: என்ன சொல்?

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபாத்தியாயர்: முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.

மாணாக்கன்: ஏன் சார்? கேட்டால் என்ன சார்?

உபாத்தியாயர்: அது! நிரம்பவும் பாவம்.

மாணாக்கன்: பாவம் என்றால் என்ன சார்?

உபாத்தியாயர்: சீ! வாயை மூடு. நீ அயோக்கியன். குடிஅரசு படிக்கிறாயோ? ஏறு பெஞ்சிமேல்.


இஸ்லாம் - இந்து வித்தியாசம்

02-08-1931 - குடிஅரசிலிருந்து....

நான் இந்து  மதத்தைப்பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு   மதத்தி னுடையவும்  ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதி விடாதீர்கள்.  அந்த வேலையை ஒரு பரீட்சை மாண வனுக்குக் கொடுத்து விடுங்கள் அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால், நான்  பேசுவது  என்பது இரண்டு  மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பான்மை யான  மக்களிடை இருந்து வரும் பிரத்தி யட்சக் கொள்கைகள்  சம்பந்த மானக்  காரியங்களையும் அதனால்  அவரவர்கள் பிரத்தியட்சத்தில்  அடைந்துவரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகிறேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில்  என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில்  பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக்கொள்ளும் வேஷமே தான்  மதம் என்றாலும்  அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்?  மக்கள் எப்படி நடத்தப்படு கின்றார்கள்.  அதனால் அந்த சமுகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள் தான்  மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக  விஷயங் களில் இந்து மதத்தைவிட  (கொள்கை களைவிட) இஸ்லாம் மதமே  (கொள்கை களே)  மேன்மை யான தென்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இஸ்லாம் மாணவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாதமேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும்.

அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள்  சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம்  இருக்கின்றது. வீரம் என்றால்  இலட்சியத்திற்கு உயிரை விட துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில்  ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாத, மனிதன் குளத்தில் இறங்கக் கூடாதமனிதன்,  கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங் குவதில்லை. அதற்குப்பெண்டு, பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பது மில்லை. அதற்குப் பூஜை, நைவேத் தியம்,  உற்சவம், நகை, துணிமணி, முதலியவற் றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை மற்றும்  அவர்களது பெண்களுக்குச் சொத்துரிமை, கல் யாண ரத்து, விதவை  மணம்  ஆகிய வைகளும் உண்டு. அவர்களுக்குள்ள  அன்பையும் வீரத்தையும்  பார்த்து நாம் அவர்களை முரடர்கள்  என் கிறோம். அது போலவே இந்துக் களுக்குள் ஒருவருக் கொருவர் உள்ள துவேஷத் தையும்  பயங்காளித் தனத்தையும் நாம் பார்த்து அவற்றைச் சாதுத்தன்மை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில்   ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லாமானவர்கள் வந்து விழுந்து  விடுகிறார்கள்.  இதைத்தான் நாம் முரட்டுத்தனம் என்கிறோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால்  மற்ற இந்துக்கள் அவன் யாரோ அடிப்படுகிறான், நமக் கென்ன கவலையென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப்பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான்  சாதுத்தனம் என்று பெருமை பேசிக்கொள்ளு கிறோம். அன்பும் சகோதரத் தன்மையும் இந்துவிடம் எங்கிருக்கின்றது?  ஆடுகோழி தின்னாதே  என்று சொல்லுவதில்  மாத்திரம்  இருக்கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப்பது, கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவன்தான் அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!! என்று பேசுகிறான். அன்பின்  உண் மையை அறியவே இல்லை.  இஸ்லாம் கொள்கையில்  வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமுக வாழ்விலும், ஆண்டவன் முன்னிலை என்பதிலும்  மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமுக வாழ்விலும்  கடவுள் முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட மலத்தை வாயில்  கவ்விக்கொண்டு செல்லும் மிருகத்தை விடக் கேவலமாய்  மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியட்சத்தில்  காண்கின்றோம். இதைத் தான்  அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள்  தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத்தத்துவ நூலை வேதம் என்பதை  இஸ்லாம் மார்க்கம்  செருப்புத்தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும்  என்று சொல்லி கற்றுக்கொடுப் பதையும் பார்க்கிறோம். இந்து மார்க்க வேதம்  என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம்  தவிர (பார்ப்பான் தவிர) மற்ற யாவரும் அவன் பிரபுவா னாலும் சரி, ஏழையானானாலும் சரி , யோக்கியனானாலும் சரி,  அயோக்கியனாலும் சரி ஒருவனுமே  பார்க்கவும், கேட்கவும்,  படிக்கவும் கூடாது  என்று இன்னும் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான்  சமத்துவ நோக்கம்  கொண்ட  மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள்.

மொண்டி முடம், கூன், குருடு ஆகியவர்களுக்கே உதவி செய் என்று இஸ்லாம்  மதம் பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது. சோம்பேறிகளுக்கே ஊரார்  உழைப்பில் உண்டுகளிப்பவர்க்கே உதவி செய்  என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்றுசேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள  முஸ்லிம்கள்  இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து  இருக்கின்றார்கள். இன்றும்  யாவரையும்  எப்படிப்பட்ட இழிவான வரையும்  எப்படிப் பட்ட இழிவானவர் என்று இந்து  மார்க்கத்தாரால்  கருதப் பட்டவர்களையும் தனக்குள்  சேர்ந்துக்கொள்ள கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவர்களையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில்   காவல்காக்கின்றது. தன்னவ னையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப்பற்றி வாய்த்தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை  முஸ்லிம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கியிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை  அடித்துக்கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக் கடையில் நின்று மறியல் செய்யும் இந்து  கொள்கையானது இந்துக் களில்  100க்கு 51 பேர்களுக்கு  மேல் குடிக்காரர்களாகச்  செய்திருப் பதோடு இந்து  கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில் களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து  பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத் தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படுகின்றன. இந்து கொள் கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாயுள்ள நாட்டை அந்நியர்கள் ஆளுகின்றனர். இந்தபடியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கை களாலேயே இந்துக் கொள்கைகளைவிட இஸ்லாம்  கொள் கைகள் எவ்வளவோ மேன்மையானபலன் கொடுத்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப்படி நான்சொல்லு வதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பேசுங்கள்.  பிறகு கொள்கைக்காக உயிரைவிடுங்கள்.

* 29.7.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள தமிழர் தலைவர் அரங்கத்தில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் கீழ்க்காணும் மாவட்டங்களின், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. *  மாவட்டப் பொறுப்பாளர்கள் கட்டாயம் கலந்து கொள்வதோடு, தங்கள் பகுதியில் உள்ள பகுத்தறிவாளர் கழகத் தோழர்களையும் பங்குபெறச் செய்திட வேண்டுமாய் மிகக் கனிவுடன் வேண்டுகிறோம். * பொருள்: 1.உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒப்படைத்தல் 2. மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா ஒப்படைத்தல், 3. இயக்கச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள், * பங்குபெறும் மாவட்டங்கள்: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்

* அன்புடன்: கோபு.பழனிவேல் (மாநிலதுணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.மின்சாரக் கட்டணம் செலுத்த செயலி அறிமுகம்

 

சேலம், ஜூலை 28 இந்தியாவின் முதன்மை பேமண்ட்ஸ் செயலியான PhonePe தற்போது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதை எளி தாக்கியுள்ளது.

PhonePe மூலம் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது, பயனர்களுக்கு உகந்த எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயலியின் முகப்புப்பக்கத்தில் உள்ள மின்சாரம் எனும் அய்கானைக் கிளிக் செய்தால், பல்வேறு மின்சார வழங்குநர்களின் பட்டியலில் தமிழ்நாடு மின்சாரவாரியம் (TNEB) என்பதைப் பார்க்கலாம்.

அதைத் தேர்வுசெய்ததும், உங்கள் கணக்கு எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும். கணக்கு எண்ணை உள்ளிட்ட பின்னர், BHIM UPI, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றில் ஒன்றைப் பேமண்ட் விருப்பமாகத் தேர்வுசெய்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்தால் போதும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்திவிடலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் PhonePe  மூலம் பணம் செலுத்துவதை ஏற்கெனவே ஆதரிக்கிறது.

சென்னை, ஜூலை 23 தென் சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர்  அணி - மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், சென்னை, பெரியார்  திடலில்,  15.07.2018 அன்று  காலை 11.00 மணியளவில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் மு.இரா. மாணிக்கம்  தலைமை ஏற்றார். பேராசிரியர் ஜெ.குமார், பேராசிரியர்  டி.இரா ஜாஜி கருத்துரை வழங்கினார்கள்.

மா.அழகிரிசாமி

சிறப்பு அழைப்பாளர் ப.க. மாநில தலைவர் மா.அழகிரிசாமி பேசியதாவது: தென்  சென்னை  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், அவர்களது பகுதியில், பகுத் தறிவாளர் கழகம் சார்பில், மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை, கருத்த ரங்கம் அல்லது விவாதம் போன்று, நல்ல பேச்சாளர்களை அழைத்து பேச வைக்க வேண் டும். அதன் மூலம் நமது கருத் துக்கள் மக்களிடையே சென்று அடையச்செய்யலாம். பள்ளி மாணவர்களுக்காக சில நிகழ்ச்சி களை நடத்த வேண்டும்  என்று கூறினார்.

பிரின்சு என்னாரெசு பெரியார்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: கூட்ட நிகழ்ச்சிகளுக்கான தலைப்பு, வழக்கமான தலைப்புகளில் இல் லாமல், பொதுவான  தலைப்பு களில் பேச, பேச்சாளர்களை அழைக்கலாம் என்று கூறினார். நிகழ்ச்சி பற்றிய செய்திகளை, முகநூல் மூலம் விளம்பரம் செய்து, மக்களிடையே கொண்டு செல்லலாம் என்றும், இதனால் அதிக செலவு இல்லாமல், பல தரப்பட்ட மக்களையும், உடனடியாக செய்திகள் சென்று அடையும் என்று கூறினார்.

சி. தமிழ்ச்செல்வன்

பகுத்தறிவாளர் கழக மாநில பொருளாளர் சி. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழா போன்று  அவசியம் நடத்துதல் வேண்டும் என்று கூறியதோடு, எல்லா முயற்சிகளையும் முன்னெ டுங்கள், வழி காட்டுதல் மற்றும்  தேவையான உதவிகள் செய்கி றோம்  என்றும் கூறினார்.

மேலும், விழா நடத்துவதற்கான திட்டமிடுதல்  அவசியம் என்று கூறினார்.

அ  தா.சண்முகசுந்தரம்

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்  அ  தா.சண்முக சுந்தரம்  பேசியதாவது: கருத்தரங்க கூட்டத்திற்கு தலைப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றியும், பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து, பேசச் சொல்வதன் மூலம், மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

சிறீ. அருட்செல்வன்

பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் சிறீ.அருட்செல்வன் பேசிய தாவது:& கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், பகுத்தறிவு கருத் துக்கள்,  மாணவர்களுக்கு, சென்ற டையும் வகையில், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்ற கூறினார்.

இந்த கலந்துரையாடல் கூட் டம், தென் சென்னை மாவட்ட ப.க.,மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி, ஒரு கருத்தரங்கத்தை உடனடியாக  நடத்துவது  பற்றிய விவாதமாக அமைந்தது. அனைத்து உறுப்பினர்களும், விவாதத்தில் மிகவும் ஆர்வமாக, தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில்,  மூன்று  தீர்மானங்கள், முன் மொழி யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

அவை வருமாறு:

1. தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தென் சென்னை மாவட்டப் பகுதிகளில்,  இடங்களைத்தேர்வு செய்து, கருத்தரங்கம் அல்லது விவாத அரங்கம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், முதல் கூட்டம், 26.08.2018, ஞாயிற் றுக்கிழமை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, சென்னை கலைஞர் கருணாநிதி  நகரில் நடத்துவது   என தீர்மானிக்கப் பட்டது.

2. பகுத்தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது

3. மாத இதழுக்கு, பகுத் தறிவாளர் கழகம்/பகுத்தறிவு ஆசிரியர் அணி  உறுப்பினர் களையும், பொறுப்பாளர்களை யும், முதலில் சந்தாதாரர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது. எம்.இளங்கோவன் நன்றி கூறினார்.

27.09.1931  - குடிஅரசிலிருந்து....

இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற. ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப் போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம்  மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்ட தாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விடவேண்டும், அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?

இரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து? என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்துவந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?

பிள்ளைகளுக்குச் சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காகச் சில தப்புகள் செய்யவேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும், ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அந்தத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத் தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உருப்போடவும் கண்முடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லட்சியத்திலும் போதனா முறையிலும் தான். இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்கவேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.

13.09.1931  - குடிஅரசிலிருந்து....

இந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.

அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டி கட்டின சாமியையும்  கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள்.

ஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்தி ருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும்வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப் படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.  புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது.

ஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்துவருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க  நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம்.

இதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதிகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)

ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது?  என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது?  எப்படி இருக்கின்றது? என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன?

இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப்படு கின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டி யிருக்கின்றது. இந்தக்காரண மேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடு தலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சவுகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

Banner
Banner