எழுத்துரு அளவு Larger Font Smaller Font


15.06.1930- குடிஅரசிலிருந்து...

திருப்பதி சாமிக்கு வருஷம் ஒன்றுக்கு 17 லட்சம் ரூபாய் காணிக்கை வருகிறது. இதுதவிர, அந்தச் சாமிக்கு ஏழரை கோடி ரூபாய் பெறுமான சொத்துமிருக்கிறது. அந்தச் சொத்துக்களை விற்று 100க்கு மாதம் எட்டணா வட்டிக்குக் கொடுத்து வாங்கினாலும், வருஷத்தில் நாற்பது லட்சம் ரூபாய் வட்டி வரும். இவைதவிர, அந்தக் கோவிலுக்கும், உற்சவத்துக்கும், வேண்டுதலைக்கும், காணிக்கை செலுத்துவதற்கும் யாத்திரை போகும் ஜனங்களின் ரயில் சார்ஜ் முதலிய செலவுகளைக் கணக்குப் பார்த்தால் அதிலும் நாற்பது அய்ம்பது லட்ச ரூபாய் கணக்கும் ஆக இந்த மூன்று இனங்களில் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு சாமியால் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீணாகிறது.

இதுபோலவே, சற்றே ஏறக்குறைய தமிழ் நாட்டில் மாத்திரம் திருச்செந்தூர், இராமேவரம், மதுரை, சிறீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர் முதலிய கோயில்களையும், சங்கராச்சாரி, பண்டார சந்நதி ஆகிய மடங்களையும், கும்பகோணம் மகாமகம் போன்ற உத்சவங்களையும் மற்றும் 108 திருப்பதி 1008 சிவலிங்கம் வகையறா பாடல் பெற்ற தலங்களையும் மற்றும் மாரியாயி, ப்ளேகாயி, காளியாயி முதலிய கிராமதேவதை முதலியவைகளுக்கும் மற்றும் சடங்கு, சிரார்த்தம், கருமாதி ஆகும் செலவு மெனக்கேடு வகையறாக்களையும் சேர்த்தால் எத்தனை பத்துக்கோடி ரூபாய்கள் ஆகுமென்று சற்றுப் பொறுமையாயிருந்து கணக்குப் போட்டுப் பாருங்கள். இவையெல்லாம் மனிதனைக் கெடுக்கவும், அவனது அறிவைப் பாழாக்கவும், என்றும் தரித்திரவானாகவேயிருந்து அடிமை யாயிருக்கவுமே அந்தச் சாமிகள், உற்சவங்கள், சடங்குகள், மோட்சங்கள் என்பவைகளெல்லாம் சுயநலக்காரர்களால் அயோக்கிய எண்ணத் துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

என்ன பலன்?

நிற்க, திருப்பதி யாத்திரையால் மனிதனுக்கு என்ன பலன் ஏற்படுகிறது? அதனால் என்ன ஒழுக்கம் காண்கிறோம்? ஒருவன் 2000 ரூபாயைக் கொண்டு போய் திருப்பதி உண்டியலில் கொட்டி விட்டு வருவானேயானால் அவனுடைய அரையங் குலமாயிருந்த நாமம் இரண்டங்குலமாக அகல மாவதும், சனிக்கிழமை பிடிப்பதும் மக்களைக் கண்டால் என்னைத் தொடாதே! எட்டிநில்! என்பதைத் தவிர வேறு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ ஏற்படுகிறதா? தவிரவும் திருப்பதிக்குப் போனதினாலேயே அதுவரையில் செய்த பாவ மெல்லாம் ஒழிந்துவிட்டதென்று கருதி இனிப் புதுப் பாவமும் செய்யலாம் என்கிற தைரியம் உண்டாகி விடுகிறது.
தவிர, இந்த மாதிரியான சாமிகளால், உற்சவத்தால் இதுவரை நாட்டிற்கு யாதொரு பலனும் ஏற்பட்ட தில்லை என்பது கண்கூடு.

அறிவை கொண்டு ஆராய்ந்து பாருங்கள்
15.06.1930- குடிஅரசிலிருந்து...

கூட்டம் முடிந்து செல்லும் உங்களிற் சிலர் இராமசாமி சரியாய்த்தான் பேசினான். அதில் என்ன தப்பிருக்கிறதென்று ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்வீர்கள். ஆனால் பக்கத்தில் கேட்டண்டை ஒரு பார்ப்பான் நின்று கொண்டு உங்களைப் பார்த்து நன்றாய் நாஸ்திகப் பிரச்சாரம் கேட்டீர்களா? பாகவதத்தில் இத்த னையாவது காந்தத்தில், இந்த மாதிரி, இன்ன இடத்தில், இத்தனை மணிக்கு,  இன்னான் வந்து இந்த மாதிரி நாஸ்திகம்  பேசுவான். ஜனங்கள் ஞானமில் லாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அது தான் கலி வந்ததற்கு அடையாளம்.

அது சமயம் ஜாக்கிரதையாயிருந்து அதை மறக்கடிக்க ஒவ்வொருவராக முயல வேண்டு மென்று பகவான் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். ஆதலால் இவற்றை நம்பாதீர்கள்! என்று சொல்லுவான்.

நீங்களும் திடுக்கிட்டு ஆ! என்ன பிசகு செய்தோமெனக் கருதி இந்த விஷயத்தைக் கேட்டதற்காக உங்கள் காதைக் கழுவிக் கொள்வீர்கள். இப்படியேதான் உங்களை ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆகையால், எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாய் நம்பிவிடாமல் உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்து அதன் முடிவின்படி நடவுங்கள்.விவசாய விஷயத்தில் சாமிகளையும், விதியையும் நம்புவது சரியா?
15.06.1930- குடிஅரசிலிருந்து...

விவசாய விஷயத்திலும் சாமிகளையும், விதியையும், பழைய பழக்க வழக்கங்களையும் நம்பி எவ்வளவோ நஷ்டம் அடையும்படியான பிற்போக்கிலேயே இருக்கிறோம். நம் நாட்டு விவசாயம் 2000 வருஷத்திற்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமையில்தான் இருக்கிறதே தவிர, சிறிதும் முற்போக்கடைய வில்லை. இந்த நாட்டில் ஒரு ஏக்கராவுக்கு நூறு ரூபாய் லாபம் வருவதானால் மேல்நாட்டில் ஏக்கராவுக்கு ஆயிரம் ரூபாய் வரும்படியாக வேலை செய்கிறார்கள்.  ஆனால், நாமோ விவசாயத்திற்கொரு கடவுளைக் கற்பித்து, மாட்டையும் ஒரு கடவுளாக நினைத்து, அதனது கொம்பில் ஒரு தெய்வத்தையும், வாலில் ஒரு தெய்வத்தையும், காலில் ஒரு தெய்வத்தையும், தொடையில் ஒரு தெய்வத்தையும், சாணியிலும் மூத்திரத்திலும் மோட்சங் கொடுக்கிற சக்தியையும் கற்பித்து மாட்டிற்குப் பூஜை செய்து பொங்கல் போட்டு சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிப்பதோடு நமது விவசாய ஆராய்ச்சி முயற்சி முடிந்து விடுகிறது. இன்னுங் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டு மானால், ஏர் உழுவதற்கு முன் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள் கண்டு பிடித்து ஏருக்கும், கொழுவுக்கும், நுகத்துக்கும், கருவத்தடிக்கும், உழவுகோலுக்கும், ஒவ்வொரு தெய்வங்களைக் கற்பித்து,  சாம்பிராணி புகை போட்டு பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து ஏர் கட்டுவதோடு ஆராய்ச்சி முடிந்து விடுகிறது. இந்தப் பூஜையும், நல்ல நாளும் பார்ப்பானுக்குக் கொடுத்த காசும் கொஞ்சங்கூட நமது விவசாயத்துக்குப் பொறுப்பாளி யல்லவே யல்ல. விளையாவிட்டால் விதியோடு பொறுப்பு நின்று போய் விடுகிறது.

மேல்நாட்டானோ விவசாயத்தில் ஒரு கடவு ளையும் லட்சியஞ் செய்யாமல் தன்னையும், தன் அறிவையும், முயற்சியையும் பொறுப்பாக்கி எந்தவிதமான பூமிக்கு எந்தவிதமான பயிர் செய்வது என்பதிலும், எந்தவிதமான பயிருக்கு எந்தவிதமான எரு விடுவது என்பதிலும் கவலையெடுத்து வேலை செய்கிறான். ஆஸ்திரேலியாவில் பழ விவசாயக் காரர்கள் புளிப்பான பழங் காய்க்கும் மரத்தை இனிப்பாக்கவும், நூற்றுக்கணக்காக பழம் காய்க்கும் மரங்களை ஆயிரக்கணக்கான பழங்கள் காய்க்கும் படிச் செய்யவும், பத்து நாட்களில் கெட்டுப் போகும்படியான பழத்தை ஒரு மாதத்திற்கு கெடாத படியான பழம் காய்க்கும்படி செய்யவும் வேண்டிய காரியங்கள் ரசாயண கூட்டுகள் மூலமாகவும், திராவகங்களை செடிகளில் செலுத்துவதன் மூல மாகவும் பயிர் செய்கிறார்களென்று நமது நண்பர் திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் தனது ஆஸ்தி ரேலியா யாத்திரையைச் சொல்லும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு மனிதனுக்கு முப்பது ஏக்கரா நிலமிருந்தால், அதில் அய்நூறு பேர்களுக்குச் சதா வேலையிருக்கும் படியான ஒரு தொழிற்சாலை மாதிரி விவசாயஞ் செய்யலாமென்றும் சொல்லியிருக்கிறார். நாம் அந்த விதமான துறைகளில் சிறிதுகூட விசாரமில்லாமல் அதிகமாகப் பயிர் பிடிக்க வேண்டுமானால் பிடிக் காததற்கு முன்னமே எங்கே கண் திருஷ்டிப் பட்டு விடுமோ என்று பயந்து கொண்டு பயிர் செய்திருக்கும் பூமியில் ஒரு கோலை நட்டு அதில் ஒரு விசாரமும், ஆபாசமுமான உருவத்தைக் குத்தி கையில் எதையோ கொடுத்து தலையில் சட்டியைக் கவிழ்த்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்திவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறோம். இந்த நிலையில் உள்ள உங்களை வெள்ளைக்கார அர சாங்கம் பாழாக்கிற்றா?. உங்கள் கடவுளும் விதியும் பாழாக்கிற்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.


விபூதி பூசினால் மோட்சம் வரும் என்பது மூடநம்பிக்கை
15.06.1930- குடிஅரசிலிருந்து...

எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால், விபூதி பூசினால் மோட்சம் வருமென்று மூடநம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப்படுகிறோமா அது போலவேதான் தக்ளி சுற்றினால், உப்புக் காய்ச்சினால் விடுதலை வருமென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம்.

பஞ்சாட்சரத்திலும், விபூதியிலும் நமக்குள்ள மூட நம்பிக்கைதான் தக்ளியிலும், உப்புக் காய்ச்சுவதிலும் திருப்பி விட்டுவிட்டதே தவிர வேறில்லை. அதில் நமது கடுகளவு ஆராய்ச்சியாவது செய்திருப் போமானால், இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும்.

பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக் கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner