எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நமது நாட்டு மக்களின் சராசரி வயது ஒவ்வொருவனுக்கு, 24 தான் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் மேல்நாட்டில் வயது 45 என்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு காரணமென்ன? அங்கு எமன் இல்லையா? நமது நாட்டு எமன் அவர்களிடம் சிறுவயதில் செல்லுவதில்லையா?

அவனுக்கு நம்மிடம்தானா சதா வேலையிருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். நமது நாட்டு மக்களிறந்து விட்டால் உடனே நாம் என்ன செய்வது. அவனுடைய சீட்டை பிரமதேவன் கிழித்து விட்டான். விதி முடிந்தால் யார் என்ன செய்ய முடியும்? என சொல்லிவிடுகின்றோம்.

ஆனால் மேல் நாட்டானோ அப்படியில்லை. அவன் யாராகிலும் காலராவிலிறந்து விட்டால் உடனே ஆகாரம், தண்ணீர், காற்று முதலியவைகளை கவனித்து, ஆராய்ச்சி செய்து தக்கமுறைகளைக் கண்டுபிடித்து மற்றவர்களோ சாகாமல் இருக்கப் பாடுபடுகின்றானேயொழிய நம்மைப் போல் ஓங்காளியம்மனைக் கும்பிடுவதில்லை.

நமது மதராசைப் பொறுத்தவரையிலும் ஒரு உதாரணம் என்னவென்றால், ஒரு தடவை சென்னையில் 15 நாட்கள் வரையிலும் காலராயிருந்ததினால், உடனே ஒரு மீட்டிங்கில் ஹெல்த் ஆபிசர் வேலைக்கு லாயக்கில்லை என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள்.

ஹெல்த் ஆபிசரும் அதற்குத் தக்கவாறு பதில் சொல்லி தனது முயற்சியில் 15 நாள் பொறுத்தாவது அடியோடு நிறுத்தப் பட்டதை எடுத்துக் காட்டினாரேயல்லாமல்  கடவுள் செயலுக்கு நான் என்ன செய்ய முடியு மென்பதாக உரைக்கவேயில்லை.

அந்நிய நாடுகளைப் பாருங்கள்!

27.12.1931, குடி அரசிலிருந்து..

நமது மக்களுக்கு தன்னம்பிக்கை சிறிதும் உண்டாகாதபடி “ஆண்டவன்” என்பவனை நம்புவதானாலும், பிரார்த்த னைகளை நடத்துவதாலுமே காரியங்களை முடிக்கலா மென்னும் மூடத்தனத்தைப் பரவச் செய்கின்றனர்.

எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவை உண் டாக்காமல், “மதக்கட்டளை”, “கடவுள் மொழி”, “பெரியோர் சொல்”, “மகாத்மா வாசகம்“ என்று சொல்லி அவற்றைச் சரியோ, தப்போ அப்படியே நம்பும்படியான மனப்பான் மையை உண்டாக்குகின்றனர்.

காலத்திற்கும் பொருந்தாத பழைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை உண்டாக்காமல் பழைமை யான நடவடிக்கைகள் பரிசுத்தமானவை, அவற்றை மாற்றிக் கொண்டால் நமது மதத்திற்கு  அழிவு வந்துவிடும்.

நமது புராதன நாகரிகத்திற்குச் சிதைவு வந்துவிடும்; ஆகையால் பழைமையை விட்டுவிடக்கூடாது என்ற எண் ணத்தை உறுதியாக நிலைக்கச் செய்யக்கூடிய வேலையையே செய்கின்றனர்.

நாகரிக தேசத்தார்கள், தம்முடைய நாட்டு மக்களை உலக நாகரிகத்திற்கு வேண்டிய சிறந்த கல்விகளைக் கற்கும்படி செய்கின்றனர்.

அதாவது; கைத்தொழில் சம்பந்தமான கல்வி, வியாபார சம்பந்தமான கல்வி, விவசாயம் சம்பந்தமான கல்வி, விஞ்ஞான சாஸ்திரம் சம்பந்தமான கல்வி, சுகாதார சம்பந்தமான கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி முதலிய உலக வாழ்க்கைக்குப் பயன்படத்தகுந்த கல்வியை வளர்க்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, மேற்கூறிய பலவகைப்பட்ட வசதியுள்ள நூல்கள் நிரம்பிய பாஷையையே நமது நாட்டை விட்டு ஒழித்துவிட வேண்டுமென்று வேலை செய்கின்றனர்.

மக்களுக்கு உலக நாகரிகத்தைப் போதிக்காமல், சோம்  பேறித் தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்கக் கூடிய சில புராணங்கள் மாத்திரம் உள்ளதும், சிறந்த இலக்கியங்கள் கூட இல்லாததுமாகிய இந்தி பாஷையையே எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணுகின்றனர்.

மற்ற நாட்டுத் தலைவர்கள் எல்லோரும், மக்களுடைய கஷ்டமான உழைப்பைக் குறைத்து, எல்லாத் தொழில்களையும் இயந்திரங்களைக் கொண்டு விருத்தி செய்து, நாட்டின் விவசாயம், கைத்தொழிலும், அந்நிய நாட்டு விவசாயத்துடனும், கைத்தொழில்களுடனும் போட்டி போடவும், வியாபாரத்தின் மூலம் தங்கள் நாட்டில் செல்வத்தைப் பெருக்கவும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ இயந்திரங் களோ இயந்திரங்களின் மூலம் தொழில்களை விருத்தி செய்ய வேண்டும் என்னும் எண்ணமே மக்களிடம் தோன்றாம லிருக்கும்படியும், எல்லாத் தொழில்களையும், பிறர் உதவியில்லாமல் தாமே கையினால் செய்து கொள்ள வேண்டு மென்னும் குறுகிய மனப்பான்மையும் தேசியம் என்னும் பெயரால் உண்டாக்குகின்றனர்.
இதனால் நாட்டின் விவசாயம், கைத்தொழில்கள் முதலியன வளர்ச்சியடைய ஒட்டாமலும், எந்த வகையிலும் அந்நிய நாடுகளுடன் வியாபாரம் செய்து போட்டி போட முடியாமலும், நாட்டின் செல்வ நிலை வளர முடியாமலும் பாழ்படுத்துகின்றனர்.

ஆயிரக்கணக்கான மேயோக்கள்
- சித்திரபுத்திரன்-
9.2.1928 குடிஅரசிலிருந்து...

ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் புத்திவராது என்பது உறுதி!

இந்த நாட்டில் பார்ப்பனியம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமயணமும், பாரதமும், பெரிய புராணமும் இருக்கும் வரையும் விஷ்ணு புராணமும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும்.

கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்து விட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.

சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக்கொண்டு போனவர் களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும், 2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும்.

சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும் கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமா யிருக்கும் வரையிலும்,  பட்டினி கிடந்து சாகப் போகிறவ னுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறி களுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருக் கிறவரையும், குடிக்கப் பாலில்லாத குழந்தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் கொத்திக் கொண்டும் எலிக்குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலைமையிலும் பாம்புப் புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும்,  ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாத குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும், குளங்களென்றும் கும்பாபி ஷேகமென்றும் வேதபாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிப்புகள் மிகுந்திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர்களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச் சாரிகளாக விட்டுக் கொண்டிருக்கு மட்டும்,  அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்ச வத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்கு மட்டும், மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும், மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது, கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலி யாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியா விலிருந்தே ஆயிரக் கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொல பொலவென கலகலவெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும் பண்டிதர்களும் உணர்வ தோடு, பார்ப்பனர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும், தேசத்தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner