எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலிகட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது.

விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்துகிறார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல்

அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளா விட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியச அனுபவத்திற்கும் தோன்று வதை நம்பாமல் எவனோ ஒருவன்  எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம்  அவர்கள் மதமும், கடவுளும் ஆகும்.

வினா: கிருஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மதவிஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையில் அவர்கள் (பாப்பார்கள்) எல்லோரையும்

விட முன்னேறியிருக்க முடிந்தது. மதவிஷயத்தில் பார்ப்பனர் களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள்.  ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடையவேண்டி யவர்களாவார்கள்.

வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத் திற்குப் போக நேர்ந்து விட்டால்  அங்கு போய் தங்கள் வியபாசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதிபூசுபவரும் பயப்பட வேண்டியத்தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவரம் பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலை கூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

வினா: சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது  தான் சாதி சமயக்கட்டுபாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை: கடவுள் எங்கு மறைந்து போவாறோ, என்று பயந்து அவரைக்க காக்க பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

விடை: இந்தியார் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை: தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா: இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவை களுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.

பார்ப்பனத்திகள் வெளியிலிருந்து வந்தவர்களா?
9.11.1930, குடிஅரசிலிருந்து...

ஜாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப் பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறுநாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் முகத்தில் தோன்றிய பார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியா ரென்றும் அதன் கீழ்ப்பாகமாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களை விட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்றும் பாதங்களில் தோன்றிய சூத்திரர் இவர்கள் எல்லோரையும் விட கீழானவர் என்றும் கூறல் சரியா? ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளை களிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத்தாழ்ந்த ருசியையுமுடையதாயிருக்கின்றதோ அவ்வாறில் லாமல் எல்லாம் ஒரே விதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத் தானேயிருக்க வேண்டும். கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவை வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்தி ருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டா வதில்லை.

அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப் பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டா காமலிருக்க வேண்டுமே? அவ்வாறின்மையால் மனிதர்களனைவரும் ஒரே ஜாதி யென்பது விளங்க வில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றி னான் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்க மில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத் திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக் காட்டாக வியாசமுனி மீன்வாணிச்சியினின்றும், கவுசிக முனி சூத்ரச்சியினின்றும், விசுவாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பராசரமுனியும் பிறந்தததாக காணக்கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பனர்களாக ஏன் அவர்களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக் கின்றனர்? இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை. சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக்  கணக்குப்படி 100க்கு ஒருவர் பிராமணராயும், மீதி 99 பேரும் சூத்திரரா யுமிருக்கின்றார்களே. பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் சத்திரியரும், வைசியரும் கிடையாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடைய வர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்பனர்கள் மற்றைய ஜாதியார் களைவிட இத்துணை குறைவாகவும் சூத்திரர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணந்தானென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினை களுண் டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்தமாட்டே னென மறுத்தலும் ஏதற்கு? பிரம்மதேவன் முகத்திலும், புஜத்திலும், தொடையிலும், பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற் கென்றும், ஆண்குறி எதற்கென்றும் கேள்விப்பிறக் கின்றது. எனவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக்கதைகளுண்டு பண் ணியவர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம்.

எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி  மூன்று வித மாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய்  இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய் கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ  பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப் பது? இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல் லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக் குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
-  தந்தை பெரியார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner