எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.09.1931  - குடிஅரசிலிருந்து....

இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக்கின்ற. ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப் போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம்  மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்ட தாகும். மதம் என்னும் உலோகத்தினால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்து விடவேண்டும், அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?

இரண்டும் இரண்டும் அய்ந்து என்றால் எப்படி அய்ந்து? என்று கேட்கக்கூட உரிமை இல்லாத முறையில் கல்வி கற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்துவந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?

பிள்ளைகளுக்குச் சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காகச் சில தப்புகள் செய்யவேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும், ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அந்தத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவு பெறத் தகுதியாக்க வேண்டும். உபாத்தியாயர்களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்க வேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உருப்போடவும் கண்முடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லட்சியத்திலும் போதனா முறையிலும் தான். இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்கவேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.