எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

28-06-1931 - குடிஅரசிலிருந்து...

நாம் இங்குதான் பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள்  என்று மேடையேறிப் பேசிக்கொள்ளுகின்றோமே யொழிய, ஓர் அராபிதேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்து விட்டால் நமது மக்கள் ஆண் பெண் அடங்கனும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளிதேசத்திலிருந்து எவன் வந்தாலும்  அவனைக்கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம்.

வெளிநாட்டுக்காரன்  இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும்  நாணயமும் அற்றத்தன்மையேயாகும்.

நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன்  4 ரூபாய்  பெறும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்து விட்டு 6 மாதம் பொறுத்து வந்து பணம் கேட்டால்  வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்கு காணிக்கை கொடுப்பது போல் பயபக்தியுடன் கொடுத்து விடுகிறோம், அவனைக் கண்டால் நடுங்குகின்றோம்,

உள்ளூர்வாசியிடம்  கடன்பட்டிருந்தாலோ, அவனுடைய கடனைக்கொடுக்க  மறுப்பதுமல்லாமல் பண்ணுவதைப்பண்ணு என்றும் சொல்கிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன? ஏனெனில் நமது தைரியம் அவ்வளவில் தானிருக்கின்றது மற்றும்  ஓர் உதா ரணம்  என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன்  இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாகயிருந்தாலும்  கூட  நாம் அவ்வண்டியில் ஏறமாட்டோம்.

நாம்  பத்து பெயர்கள் வரை  ஒரு அறையி லுட்கார்ந்து  அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும்கூட  வடதேசத்தானொருவன் தைரியமாக அங்கு வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலிசெய்துவிடுவோம். ஆனால் நாம், காளி, வீரன், கருப்பன், முனியன், சடையாண்டி முதலியவீரம் பொருந்திய தெய்வங்களை கும்பிடு கிறவர்களாகவுமிருக்கிறோம்.  எதற்காகக் கும்பிடு கிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரி யம் நமக்கும் வரவேண்டுமெனவேதான் என் கிறோம்.

ஆனால், நாம் அதனால் தைரியமுடையவர்களாக வாழ்ந்திருகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படி யுமில்லை, நமது தைரியமெல்லாம் முதலில் அடி பார்க்கலாம் என்பதிலும் அடிவிழுந்தால் ஓடுவ தற்குள் என்ன அவசரம் என்பதிலேயே தானிருக் கின்றது. யார் அடித்தாலும், திருப்பி யடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று  இல்லை.

(மதுரை ஜில்லா, திண்டுக்கல் அடுத்த சித்தயங் கோட்டையில் 22.06.1931ஆம் தேதி மக்கள் விடு தலை சங்கம் திறப்பு விழாவில் ஈ.வெ. ராமசாமியின் சொற்பொழிவு)

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத் தன்மை இன்று நேற்றல்லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவை களாகும்.  திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக்கொள்ளுபவர்களாய் இருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்த வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள். ஆகவே, நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.

-----------------------

ஒருவன் சமதர்மத்திற்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று; இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்க வேண்டும் - கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை. இதைச் செய்யும் வரையில் எவ்விதப் பொருளாதாரச் சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர். நினைப்போர், ஆசைப்படுவோர் மனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு உபாத்தியாயரின் யோக்கியதை

10.05.1931 - குடிஅரசிலிருந்து....

நமது ஜில்லாவில் ஒரு கனவானிடம்  ஒரு பார்ப்பன உபாத்தியாயர் ஒரு தக்க சிபார்சுடன் வந்து தனக்கு ஜீவனத்திற்கே மிகக் கஷ்டமாயிருப்பதாகவும் எப்படியாவது தனக்கு உபாத்தியாயர் உத்தியோகம் காலியில்லை என்று சொல்லியும் பட்டினிக்கிடப்பதாக துக்கப்பட்டத னால் மனமிளகி, டெம்பரவரியாகத் தற்கால சாந்தியாக ஒரு உத்தியோகத்தைக் காலியாக்கி பதிலியாகக் கொடுத்தார் மற்றும் இந்தப்படியே அடிக்கடி, காலிவேலைகளை பதிலியாகவே இவருக்குக் கொடுத்துக் கொண்டும் வந்தார்.

ஆகவே, இந்த உபாத்தியாயருக்கு அப்பெரியார் தன்னுடைய ஜில்லா எல்லைக்குள் ஏற்படும் தற்கால காலி ஸ்தானங்களை எல்லாம் இவருக்கு அப்போதைக்கப்போது கொடுத்துக் கொண்டுவந்திருக்கின்றார் என் றாலும் டெம்பரவரியாக நியமிக்கப்பட்ட இப்படிப்பட்டவருக்குப் பள்ளிக்கூட வெயில்கால நீண்ட விடுமுறைச் சம்பளம் கொடுக்கச் சட்டப்படி நியாயம் கிடையாது என்பது யாவரும் அறிந்ததாகும்.

இப்படி இருக்க சென்ற வருஷம் ஒரு நாள் அதாவது வேலையில்லாத காலத்தில் உபாத்தியாயர் அப்பெரியார் வீட்டிற்கு வந்து தனக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லையன்றும், இரண்டு மூன்று, நாள் பட்டினி, கிடப்பதாகவும் சொன்னார்  இதை நம்பி அப்பெரியார் தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினார். இதைப் பெற்றுக் கொண்டு ஊருக்குப் போன உபாத்தியாயருக்குப் பள்ளிக்கூடம் திறந்த உடன் மறுபடியும் ஒரு காலி ஸ்தான பதிலி உத்தியோகம் கொடுத் தார்.  இந்தப்படியாக இந்த உபாத்தியாயருக்கு அக்கனவான் அடிக்கடி வேலை கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறார்.  இப்படிப்பட்ட பெரியாருக்கு அந்த உபாத்தியாயர் எழுதி ரிஜிஸ்டர் செய்து அனுப்பி இருக்கும் கடிதத்தில் கண்ட சில குறிப்புகளைக் குறிப்பிடுகின்றோம்.  அதாவது:-

அய்யா... நான் தங்களிடம் வேலைப் பெற்றதில் ஒரு வருஷம்தான் கோடைக்கால லீவு சம்பளம் கிடைக்கப்பெற்று இருக்கிறேன்.  மற்ற வருஷ விடுமுறை காலங்களில் சம்பளமில்லாமல் தவித்து இருக்கிறேன்.  ஒரு பிராமணன் இவ்வாறு அலைக்கப்படுவது நியாயமா?

உங்களுக்கும் இந்தக்கதியை நான் விரும்பாவிட்டாலும் நீங்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்?

செல்வம் தங்கி இராது. அதிகாரம் நிலைக்காது.. தங்கள் ஆத்மா பாவத்தைச் செய்யலாகாது.

நான் சென்ற மே மாதத்தில் தங்கள் வீட்டில் பட்டினி விரதமிருந்தபோது தாங்கள் ஒரு ரூபாய்க் கொடுத்தீர்கள்.  அந்த ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு இதில் அனுப்பி இருக்கிறேன்.

எங்கள் குடும்பம் வேதம் ஓதிய பெரியவாள் வம்சம். உங்கள் ஆத்துமா பரிசுத்தமடைய வேண்டுமானால் அந்தப் பக்தர்கள் நிறைந்த வம்சத்திற்குத் தீங்கு செய்யலாகாது. என்னைக் காப்பாற்றுவதன் மூலம், தங்களைக்  காத்துக் கொள்ளுவீர் என்று நம்புகின்றேன் .

வேதம், உண்மை, கடவுள் சத்தியம், காயத்திரி ஜபம் வீணாகாது.   பதிவிரதைகள் வாக்கு பலியாமல் போகாது.  பிராமணர்களை சதா கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

தாங்கள் அடைந்துள்ள பதவியில் மமதைக் கொண்டு.... பதவி பூர்வ புண்ணியத்தால் உண்டானது. அடுத்த ஜன்மத்திற்கு உங்கள் குலத்தில் சேஷம லாபத்தைத்  தேடுங்கள்.

ஏழைகளுக்குச்  செய்யும் தீமை தங்களுக்குச் செய்து கொண்டதாகும். நான் அடையும் இன்ப துன்பம் பகவான் சத்திய ரூபிக்குச் சாரும் என்பதாக எழுதியிருக்கின்றார் இவர் ஒரு பார்ப்பனர். ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்டவர்.

இன்றைய உபாத்தியாயர்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்களின் யோக்கிதையும். இப்படிப்பட்டதாகும் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் நம்மிடமிருக்கின்றன.

மற்றொரு சமயம் ஒரு ஹெட்மாஸ்டர் ஒரு பள்ளிக்கூட காரிய தரிசிக்கும் கடிதம் எழுதும் போது ஆனால் கையெழுத்தில்லாமல் மொட்டை கடிதமாய் எழுதப்பட்டது. அதாவது அய்யா, நீர் இப்போதுதான் சீமைக்கு அனுப்பி கல்வி கற்பித்த உம்முடைய மகனைத்தின்று இருக்கீறீர்.  இன்னும் ஒரே ஒரு பெண்தான் இருக்கிறது.  எனக்குத்  துன்பம் செய்தால் பகவான் அந்த ஒரு பெண்ணையும்  தின்றுவிடும்படி செய்து விடுவார் என்று எழுதியிருந்தார். இதிலிருந்து இந்த உபாத்தியாயர்கள் வேதம் முதலியவற்றைப் போற்றுவதைப் பற்றியும்,  நன்றி விசுவாசம் முதலிய குணங்கள் இல்லாததைப் பற்றியும் நாம் குற்றம் சொல்லவரவில்லை.  ஆனால் இவர்கள் எவ்வளவு மூடர்கள். இவர்களது மூடநம்பிக்கை எவ்வளவு இவர்களின் அற்பபுத்தியின் நிலைமை எவ்வளவு? இந்த மாதிரி தரமுள்ள மக்களைப் பிள்ளைகளுக்குப் படிப்புக் கற்றுக் கொடுக்கும்படி சொன்னால் அந்தப் பிள்ளைகள் உருப்படுவார்களா? அறிவு பெறு வார்களா? என்றுதான் கவலைப்படு கின்றோம்.  ஆகவே இன்று நம் நாட்டு மக்களில் படித்தவர்கள் என்பவர்களிலேயே 100க்கு 90பேர்  பகுத் தறிவு அற்ற மூடர்களாய் இருப்பதற்கும் மூட பக்திகாரராய்  இருப்ப தற்கும் காரணம் எல்லாம்.  இந்த மாதிரி முழு மூடர்களான உபாத்தியாயர்களுக்குக் படிப்புப் பெறச்செய்திருக்கும்  முறையேயாகும்.  இந்த நிலையில் இவர்களுக்கு இந்த உபாத்தியாயர்களுக்கு   கொடுக்கப்படும் சம்பளமோ  நினைத்தால் அளவுக்கு எத்தனையோ மடங்கு மீறியதாகும்.  சாதாரணமாக இன்றைய நிலையில் உபாத்தியாயர்களுக்கு  மாதம் 20 ரூபாய்க்கு கம்மி இல்லாமலும் 50 ரூபாய்க்கு மேற்படாமலும் சம்பளம் கொடுத்தால் தாராளமான சம்பளமாகும்.  ஆனால் இன்றைய சம்பளத்திட்டம் ஏழைகள் படிக்கக்கூடாது என்றும், உடல் பிரயாசைப்பட்டு சம்பாதிக்கின்ற தொழிலாளி பிள்ளைகள் படிக்கக்கூடாது என்றும், ஆனால் ஊரை ஏமாற்றி சோம்பேறியாய் இருந்து அயோக்கியத்தனம்  செய்து   பாட்டாளிகளின் பலனைக் கொள்ளையடிக்கும் அயோக்கிய வஞ்சகர்களின் சந்ததிகளே படிக்க வேண்டும் என்றும், அவனும் மூடனாகவும் அயோக்கியனாகவுமே இருந்து இந்த நிலைமையை வளர்க்க வேண்டும் என்றும் அடிப்படையான தத்துவத்துடனேயே கல்வித் துறையை ஏற்பாடு  செய்யப்பட்டு வருக்கின்றதென்றே கருதவேண்டி இருக்கின்றது.

ஆகவே சம்பள விகிதத்தைப்பற்றியும், அதன் தகுதியைப் பற்றியும் பின்னால் எழுதுவோம். இப்போது அவர்களது தகுதியைப்பற்றியும் குறிப்பிடவே இதை எழுதினோம். இந்தப்படி இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner