எழுத்துரு அளவு Larger Font Smaller Font

31. 01. 1932 - குடிஅரசிலிருந்து...

கொலம்பஸ் என்பவர் அமெரிக்கா என்ற புது உலகத்தைக் கண்டுபிடித்தார். வாஸ் கோடகாமா என்பவர் இந்தியாவை முதன் முதலில் கண்டுபிடித்தார். எடிசன் என்பவர் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். ஜகதீஸ் சந்திர போஸ் என்பவர் தாவரங்களுக்கும் உயிரிருக் கிறதென்பதைக் கண்டுபிடித்தார்.

ஆனால் நமது உலக சிரேஷ்டராகிய காந்தியார் கண்டுபிடித்த பெரிய அதிசயத்தைச் சென்ற வாரம் குடிஅரசில் வெளியிட்டிருந் தோம். அதுதான் கடவுள் உண்மை சொரூபம் என்ற அரிய விஷயத்தைக் கண்டுபிடித்தி ருக்கிறார். அவர் கொலம்பியா கம்பெனியா ருக்கு கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி ஒரு பிளேட் கொடுத்திருக்கிறார். எந்த பாஷையில் அவர் பேசியிருக்கிறார் என்று உடனே வாச கர்கள் சந்தேகப்பட்டு விடக் கூடும். தேசிய பாஷை யாகிய இந்தியில் அல்ல. அந்நிய பாஷையாகிய ஆங்கிலத்தில்தான். ஏனெனில் தேசிய பாஷையில் கொடுப்பதாயிருந்தால், கொலம் பியா கம்பெனியார், வேண் டாம்; நாங்கள் விளையாட்டிற்கு கேட்டோம்; பிளேட் டும் வேண்டாம்; கிளேட்டும் வேண்டாம் என்று உடனே சொல்லியிருந்திருப் பார்கள் அதுவும் காந்திக்குத் தெரியும். அதனால்தான் அந்நிய பாஷையாகிய அடிமை பாஷையாகிய மிலேச்ச பாஷை யாகிய, இங்கிலீஷில் பிளேட் கொடுத் திருக் கிறார். இந்த பிளேட் முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று பெங்களூர் நாகரத்தினம் மாதாட. பாரகேனா என்ற கீர்த் தனையைக் கொடுத்திருக்கும் மாதிரி, பிளேட் டின் இரண்டு பக்கங்களிலும் கொடுத்திருக் கிறார். இது 6 நிமிஷ நேரம் பேசிய பேச்சாகும், இதன் வருமானத்தின் ஒரு பகுதி காங்கிரசுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே இந்த பிஸினஸ் (க்ஷரளநேளள) நடத்தியிருப்பதாகவும் அறிகிறோம். இந்த ஆங்கில சொற்பொழிவின் தமிழ் பெயர்ப்பை சென்ற வாரம் குடிஅரசில் வெளியிட்டிருந் தோம். அதை மறுமுறையும் வாசகர்கள் கவன மாய்ப் படித்து விட்டு கீழ்க்கண்ட நமது அபிப் பிராயங்களைப் பற்றி யோசிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

இதில் முதலாவதாக கவனிக்க வேண்டியது யாதெனில், காந்தியார் உலகத்தில் மக்கள் புதிதாய் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய நூதனமான விஷயங்கள் எவ்வளவோ இருக்க, கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி  பேசுவா னேன்? இதற்குக் காரணம் மூன்று. முதலாவ தாக, அவருக்கு இது தவிர வேறோன்றும் பிறருக்குப் பிரயோஜனமாகக் கூடியதாகக் சொல்லத் தெரியாது. இரண்டாவதாக, கடவுள் நம்பிக்கை உலகத்தின் பல பாகங்களிலும் குறைந்து வருவதால், அது ஒன்றையே தனது யோக்கியதையாகக் கொண்டிருக்கின்ற காந்தியாரின் மதிப்பு குறைந்துவிடும், மூன்றா வதாக, கடவுள் என்ற இவ்விஷயந்தான் எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் அது தவறு, இது பிழை யென்று எந்தப்பயலும் சொல்ல முடியாது, என்பது அவருடைய கருத்து, மேலும் இவ் விஷ யத்தைப் பற்றி பிரத்தியேகமாகவோ, அநுபவ மூலமாகவோ எவ்வித திருஷ்டாந் தங்களும் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

இனி கடவுள் என்றதைப் பற்றி அவர் சொல்லியிருப்பவைகளில் முக்கியமானவை களை எடுத்துக் கொள்வோம்.

கடவுள் கைது புலன்களையும் கடந்து நிற்கிறது. அதன் அற்புதம் வாயிட்டு வர்ணிக்க முடியாதது; ஆனால் அதை நான் உணர்கிறேன்; என்றார் காந்தியார். உணர்ச்சியென்பதே புலன் களுக்குக் கட்டுப்பட்டதாகும். புலன் களால் அறியமுடியாத ஒரு விஷயத்தைப் பற்றி மனிதனால் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாது. பேயை (பிசாசு) நம்புகிற வர்களும் இப்படித்தான் வர்ணிக்கிறார்கள். பேய் இருப்பதாக ஏதோ ஒரு உணர்ச்சி  மாத்திரம் தங்களுக்கு இருப்பதாகச் சொல்லு கிறார்கள். அதைப் பார்க்க முடியாது; ஆனால் இருப்பது மாத்திரம் பொய்யல்ல என்று பிசாசு நம்பிக் கைக்காரர்கள் சொல்லுகிறார்கள். பூச்சாண்டி யைப் பற்றியும் குழந்தைகள் இப்படித்தான் சொல்கின்றனர். பூச்சாண்டியை அவர்கள் கண்டதில்லை ஆனால் ஏதோ பூச்சாண்டி என்றதை சொன்னவுடன் பயப்பட  மாத்திரம் தெரியும்.  பூச்சாண்டி ஆகியவை களுக்கெல் லாம் பயத்தினால்  உண்டாகக்கூடிய அர்த்த மற்ற கற்பனை எண்ணங்களைக் குறிக்கும். வார்த்தைகளைத் தவிர வேறில்லை. இன்னும் சொல்வோமானால், மனிதன் அய்ம்புலன் களால் கட்டுப்பட்டவன் அவை களுக்கு அடங்கியவைகளைப் பற்றித்தான் அவன் கவலை கொள்ளமுடியும். அதற்கு மீறியவை களைப் பற்றி அவன் பேசுவதோ, நினைப்பதோ பைத்தியக்காரத் தனமேயாகும்.

எப்படியெனில் ஒரு பைத்தியக்காரன் (மூளைக் கோளாறுடையவன்) திடீரென்று நடு வீதியில் நின்று கொண்டு ஆகாயத்தை  பார்த்த படியே யாரடா அவன்; நான் எப்படி யாவது போகிறேன் உனக்கென்ன? அரிவாளைக் காட்டாதே! அதற்கெல்லாம் பயப்படமாட்டேன் . சீ! போ! என்று திட்டிவிட்டு எச்சிலைக் காரித் துப்புகிறான்.  பக்கத்தில் போகும் நாம், அவன் பார்க்கும் ஆகாயத்தைப் பார்க்கிறோம்; அங்கு எந்த மனிதனும் இல்லை. அரிவாளும் இல்லை; ஆகாயத்தில் (அந்தரத்தில்) மனிதன் தொங்க வில்லை என்பதை நமது புலன்கள் நமக்குச் சொல்லுகின்றன. ஆகையால் அவன் மூளை யில் ஏதோ கோளாறு இருக்க வேண்டுமென்று சொல் கிறோம். ஆனால் அவனோ, அதோ நிற்கிறான். உங்களுக்கெல்லாம் தெரியாது. அய்ம்புலன் களையும் கடந்து நிற்கிறான். உங்களுக்குப் பார்க்க சக்தியில்லை. இதோ எனக்குத் தெரிகிறான் என்று நம்மிடம் சொல்லு கிறான், உடனே நாம் என்ன சொல்வோம். அவன் ஒரு பெரிய மகாத்மா; அவன் சொல்வது உண்மை யாகத்தான் இருக்கும் என்று சொல் வோமா? மாட்டோம். பைத்தியம் பிடித்தவன் அல்லது பயங்காளி என்று சொல்லிவிட்டுப் போய் விடுவோம். இதைப் போலவேதான் காந்தியார் சொல்லும் கடவுளும் இருக்கிறது. பைத்தியக் காரனாவது தன் கண்ணிற்காவது அம்மனிதன் தெரிகிறதாகச் (உண்மையில் அதுவும் இல்லை) சொல்லுகிறான். ஆனால் காந்தியாரோ, தன் கண்ணுக்கும் தெரிய வில்லை; ஒருவரும் பார்த்ததும் இல்லை; பார்க் கவும் முடியாது, ஆனால் கட்டாயம் இருக்கிறது; நம்ப வேண்டும் என்கிறார்; இதில் யார் மேலானவர் என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.

பிறகு காந்தியார் அரசன் உதாரணத்தைச் சொல்கிறார். அரசன் யாரென்று குடி ஜனங் களுக்குத் தெரியாவிட்டாலும் கூட அரசன் இருப்பதென்பது எப்படி உண்மையோ, அதைப்போலவே கடவுள் இருப்பதாகத் தெரியாவிட்டாலும், கடவுள் இருப்பது உண்மை என்கிறார்.

தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner