மதம், சாதி ஆகியவற்றின் அடிமைத்தளத்திலிருந்து உழைப்பைச் சுதந்திரமாக்கினால் மட்டுமே இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். உழைப்பைச் சுதந்திரமாக்குவது என்றால், தொழிலாளியைச் சுதந்திரமானவனாக்குவது என்பதே பொருள். இந்தியத் தொழிலாளி இன்றும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிமையாகவே இருக்கிறான். சுகோமல் சென் கூறுகின்றார்: ....சுதந்திரத்திற்குப் பின் புரட்சியை வென்றெடுக்க வேண்டிய மிகக் கடினமான பணியை தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. மூலதனத்தின் ஆட்சி முடிவுறவும், சோசலிசத்தை, அதன் உண்மையான பொருளில் - மனிதனை மனிதன் வஞ்சிக்காத ஒரு சமூகத்தை - நிறுவுவது என்பதுதான் இந்தப் புதிய இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைய தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு சோசலிச உணர்வாக வளர வேண்டியிருக்கின்றது. இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் பெரும் பகுதி இன்னும் இந்த உணர்வை அடைய வேண்டியிருக் கின்றது. தொழிலாளிக்கு, அவனுடைய அறிவு ஆற்றலைப் பயன்படுத்தவும் சுதந்திரமாகச் சிந்திக்கவும் இயலாத காலம் வரை இந்த உணர்வு உண்டாகாது என்பதை இதுவரை உள்ள பட்டறிவு புகட்டுகின்றது. தெய்வீகத்திலிருந்து மானுடத்தை நோக்கிய மாற்றத்தினால் மட்டுமே தொழிலாளியை சோசலிச உணர்வுடையவனாக ஆக்க முடியும். இந்தக் கட்டத்தில் தொழிலாளிக்கு உதவ வேண்டியது பகுத்தறிவுவாதம் தான்.
மத ரீதியான மந்தப் போக்கிலிருக்கும் மக்களுக்கும் உண்மையை உணர்த்த வெறும் மார்க்சிய கல்வி மட்டும் போதாது என்றும், கடவுள் மறுப்புப் பிரச்சாரம் தேவையானது என்றும், லெனின் தன்னுடைய நூல்களில் தெளிவாகக் கூறுகின்றார். சி.பி.அய். (எம்.), சி.பி.அய். ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோட்பாடு ரீதியாக முழுமையாக அங்கீகரிக் கின்ற நிலைப்பாடே இது. ஆனால், பகுத்தறிவாளர் களுடன் ஒத்துழைத்து கடவுள் மறுப்புச் சிந்தனையையும் ஆராய்ச்சி அறிவையும் மக்களிடையில் ஏற்படுத்தும் பணிக்கு, கட்சித் திட்டங்களில் அவர்கள் முன்னுரிமை அளிக்கவில்லை. காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேர்தல்களில் மதம், சாதி ஆகியவற்றின் செல்வாக்குகளைப் பயன்படுத்தக் கூடிய கட்டாயத்துக்கு அவர்களும் உள்ளாவதைக் காண்கிறோம்.
மறுமலர்ச்சி இயக்கத்தின் வழியாகப் பரவிய பகுத்தறிவுச் சிந்தனைதான் அய்ரோப்பாவில் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு உதவியது என்பதையும், 1830இல் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு பிளாங்கி நிறுவிய சமத்துவத்திற்காக போராடுபவர்களுடைய குழு தான் கம்யூனிஸ்ட் லீக் ஆக வளர்ந்தது என்பதையும், அந்த முன்னணிக்காகத்தான் மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தயாரித்தார்கள் என்பதையும் அவர்கள் அறியச் செய்ய வேண்டும்.