தண்ணீர் வடிகட்டியாகும் ஆரஞ்சு தோல்!

வீணாகும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல்களை வைத்து, அசுத்தமான நீரை வடிகட்டவும், அதிலுள்ள பய னுள்ள உலோகங்களை பிரித் தெடுக்கவும் முடியும் என, மெக் சிகோ மற்றும் ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர். உலகெங்கும் ஆண்டுதோறும் வீணாகும், 3.8 கோடி டன்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களின் தோல்களை, உயர் அழுத்த முறையில் பதப்படுத்தினால், அத்தோல் பொருட்களுக்கு, நீரை வடிகட்டும் திறன் உருவாகிறது என்பதை ஸ்பெயினின் கிரனடா பல்கலைக்கழகம் மற்றும் மெக்சிகோவிலுள்ள மின் வேதியியல் ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட பழத் தோல்களை வடிகட்டிகளில் அடைத்து, அசுத்த நீரை சுத்தமாக்க பயன்படுத்துவதோடு, பல பயனுள்ள உலோகங்களையும் வடித்தெடுக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை கரி அடிப்படையிலான வடிகட்டிகளை விட அதிக பயன் தரக்கூடியவையாக இருப்பதால், பழத்தோல் வடிகட்டிகளை வர்த்தக ரீதியியிலும் தயாரித்து வினியோகிக்க முடியும் என, ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தூய்மையில்லா நீரை குடிநீராக்க, வீணாகும் பழத்தோல்கள் உதவுவது ஆச்சரியம்தானே?

வெப்பநிலைக்கு ஏற்ப மாறும் துணி!

வெயில், குளிர் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, பல வகை உடை களும், ‘ஏசி’, மின் விசிறி போன்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், உடையே எந்த தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு மாறி நம்மைக் காக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் செய்கிறது, ‘அதர்லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஒரு புதுவகை துணி.

நைலான், பாலியஸ்டர் போன்ற பொருட்களின் அடுக்குகளைக் கொண்டு, வெளியே குளிர் அதிகமாக இருந்தால் கதகதப்பையும், வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியையும் தரும் விதத்தில் இந்த புதுவித துணி இருக்கிறது.இரு வேறு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி விரிவடையும் தன்மையுள்ள இரு விதமான இழைகளை இணைத்து உருவாக்கிய துணியால், வெளியே குளிர்ச்சி ஏற்பட்டால், துணியின் இரு அடுக்கு இழைகள் விரிவடைந்து இடைவெளியை ஏற் படுத்துகின்றன.

இதனால் அணிபவர் கதகதப்பை உணர்வார். வெளியே வெப்பம் அதிகமாக இருந்தால், இரு இழை அடுக்குகள் சுருக்கமடைய, அணிபவர் குளிர்ச்சியை உணர்வார்.இந்த புதுவகை துணியை சோதனைக்காக பிறர் அணிந்தபோது, அவர்கள் மிகவும் இதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது சந்தைக்கு வந்தால், குளிர் சாதனங்கள் போன்றவை தேவைப்படாது என்கிறது.

அபூர்வ புதைப்படிவம்

எரிமலைக் குழம்பு ஏரியில் 48 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன பாம்பின் புதை படிவத்தை கண்டெடுத்ததே வியப்பின் உச்சம். அதிலும் அப்படிப் புதைபடிவமாகிப்போன பாம்பின் உடலுக்குள் ஒரு பல்லியும், அந்தப் பல்லியின் வயிற்றில் ஒரு வண்டும் காணப் பட்டால்! வண்டை விழுங்கிய பல்லியை ஒரு பாம்பு விழுங்கிய ஓரிரு தினங்களில் எரிமலை ஏரியில் சிக்கி புதையுண்டு மரித்துப்போயிருக்கிறது. அதே நிலையில் புதைபடிவமாகிப்போனதால் இத்தனை கோடி ஆண்டுகளாக அது சிதையாமல் ஒரு அபூர்வமான உணவுச் சங்கிலியையும் அப்படியே தக்கவைத்திருக்கிறது.

தனித்துவ பதனப்படுத்துதல்

இந்த அதிசயப் புதைபடிவத்தை ஜெர்மனியின் ஃபிராங்கஃபர்ட் நகரின் அருகில் உள்ள மெஸ்ஸல் பிட் பகுதியிலிருந்து ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பொதுவாக விலங்குப் புதைபடிவங்களுக்குள் உணவைக் காண்பது அரிது. ஆனால் மெஸ்ஸல் பகுதியில் காணப்படும் தனித்துவமான பதனப்படுத்தும் தன்மை யால், ஏற்கெனவே இதுபோன்று ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. காலத்தைக் கணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டுபோன குதிரையின் வயிற்றில் திராட்சையும் இலைகளும், பறவையின் குடலில் மகரந்தம், புதைபடிவமாகிப்போன மீனின் வயிற்றுக்குள் பூச்சிகள் இப்படிப் பலவற்றை ஃபிராங்ஃபர்ட் நகரில் உள்ள செங்கர்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

கோடி ஆண்டுகளுக்கு முன்

மூன்று அடுக்கில் புதை படிவமாகிப் போன உணவு சங்கிலியைக் கண்டு பிடித்திருப்பது இதுவே முதல் முறை. 3.4 அடி நீளமான பாம்பின் உடம்புக்குள் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள பல்லி காணப்படுகிறது. அதுவும் அந்தப் பாம்பின் எலும்புக் கூட்டுக்குள்ளேயே இந்தப் பல்லி படிவமாகிக் கிடப்பதால், அதை நிச்சயமாகப் பாம்புதான் விழுங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

மேம்படுத்தப்பட்ட கணினித் திரை மூலமாக டாக்டர் ஸ்மித்தும் அவருடன் இணைந்து பணியாற்றும் அகஸ்டின் ஸ்கான்ஃபர்லாவும்தான் பாம்புக்குள் இருக்கும் பல்லியின் படத்தை முதன் முதலில் கண்டெடுத்தார்கள். அதிலும் பல்லியின் வயிற்றில் வண்டைக் கண்டதன் மூலம் ஒரு புதிய நிலைப்பாட்டை எட்டியிருக்கிறார்கள். இதற்கு முன்னால் கிடைத்த பல்லியின் புதை படிவங்களுக்குள் தாவரங்களின் மிச்சம் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்தப் பல்லியின் வயிற்றில் வண்டு இருப்பதால், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல்லிகள் தாவரங்களை மட்டுமல்லாமல் பூச்சிகளையும் உண்டு வந்திருப்பது இதன் மூலமாகத் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படிப் பல வர லாற்று புரியாத முடிச்சுகளை அவிழ்த்துள்ளது இந்த

அபூர்வமான புதைபடிவம். கருந்துளைகளை படம்பிடிக்க முடியுமா?

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் அது அண்மையில் முடிந்திருக்கிறது.

ஒரு மாபெரும் கருந்துளை, ஈர்ப்பு அலைகளால் உந்தித் தள்ளப்பட்டு, ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அதி வேகமாக வெளியேறும் அந்தக் காட்சியை ஹப்பிள் பதிவு செய்ததை, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’ உறுதி செய்திருக்கிறது.

சாலையில் வாகனங்கள் பிரேக் போடும்போது ஏற்படும் உராய்வால், தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்ற உலோகங்களின் நுண்துகள்களும், சக்கர ரப்பர் துகள்களும் காற்றில் கலக்கின்றன. அப்படி கலக்கும்போது ஏற்கனவே நகரக் காற்றிலிருக்கும் நச்சு வேதிப் பொருட்களுடன் வினை புரிந்து, மேலும் நச்சுத் தன்மையை கூட்டுகின்றன.

இவற்றை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல சுவாச நோய்கள் வர வாய்ப் பிருப்பதாக, ‘என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.

---

அறிவியல் துளிகள்

தூக்கத்திற்கு மரபணு  

தூக்கத்திற்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பதை மட்டுமல்ல, தூக்கத்தின் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுவை, அமெரிக் காவிலுள்ள வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எலி, ஈ போன்றவற்றில் இந்த மரபணுவை ஆராய்ந்த பிறகு, மனிதர்களின் மூளையிலும் இந்த மரபணு இருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட் டுள்ளது. புழுவைப் போல நெளிந்து செல்லும் ஒரு புதிய வகை திரவத்தை அமெரிக்கா விலுள்ள பிராண்டெய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக திரவங்கள், சாய்வான தளங்களில் தான் கீழ்நோக்கி ஓடும். ஆனால், இப்புதிய திரவம், சம தளத்திலேயே, எந்தவித உந்து சக்தியும் இல்லாமல் நெளிந்து நெளிந்து செல்கிறது. உயிர் களின் செல்களுக்குள் புரோட்டீன் போன்றவை நார்ச் சத்துக்களின் பலத்துடன் பயணிப்பதை கவ னித்து இத்திரவத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.

காற்று வெளியை
சுத்தம் செய்யும் கருவி!   

கழுத்தில் நகை போல அணியும் காற்று வடிகட்டியான, ‘ஏர்விடா’ அணிபவரைச் சுற்றியுள்ள காற்றினை சுத்தப்படுத்துகிறது.

காற்றில் மிதக்கும் துசுகள், வேதியல் மாசுகள், மகரந்தங்கள் போன்றவை பலருக்கு சுவாச நோய்களையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்து கிறது. இந்த மாசுகளை ஏர்விடா சாதனம் எதிர்மறை அயனிகளை உருவாக்குவதன் மூலம், அணிபவரை காக்கிறது.எதிர்மறை அயனிகள் மாசுகளை ஈர்க் கின்றன. இதனால் அந்த மாசுகள் திரண்டு கனமாகி, தரையை நோக்கி செல்கின்றன. எனவே, ஏர் விடாவை அணிந்திருப்பவருக்கு எப்போதும் துய காற்றே சுவாசிக்கக் கிடைக்கிறது.

கணிப் பொறியின், யு.எஸ்.பி., மூலம் மின்னேற்றம் செய்து கொள்ளக்கூடிய இந்தக் கருவியின் எடை வெறும், 70 கிராம் தான். குறிப்பிட சில நாட்களுக்கு ஒரு முறை இக்கருவியின் வடிகட்டியில் சேறும் துசுகளை சுத்தப்படுத்த வேண்டியிருக்கும் என்கிறது ஏர்விடாவின் இணைய தளம்.

அறிவியல் துகள்கள்

ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர்.

வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்துகொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி கொண்டது. ஆனால், அதே சிலந்தியின் விஷத்தில் உள்ள ஒரு பொருள், பக்கவாதம் தாக்கப்பட்ட மனித மூளையில் செல்கள் அழிந்துவிடாமல் காக்கும் திறன் கொண்டது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ரோபோக்கள் மனிதர்களுடன் பழகும்போது, மனிதர்கள் சொல்வது புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். இந்த குழப்பத்தை தவிர்த்து, மனிதர்களிடம் சரியான கேள்விகள் கேட்டு, விளக்கம் பெறும் திறனை ரோபோக்களுக்கு அளித்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

சிலிக்கன் சில்லுக்குள் மரம்!

ரோபோக்களை வேலைக்கு அமர்த்துவது இப்போது செய்தி களில் அடிபடுகின்றன. இந்த ரோபோக்கள் இயங்க மின்சக்தி அவசியம். ஆனால், இவற்றுக்கான மின்கலன்கள் அதிக எடையுள்ளவையாக இருப்பதால், ரோபோக்களை சிறிய அளவில் தயாரிப்பது சவாலாக உள்ளது.இதற்கு இயற்கையிடமிருந்து ஒரு உத்தியை, அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மரம் எப்படி நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி, இலைகளின் மூலம் சர்க்கரையை உருவாக்கி, தனக்கு வேண்டிய சக்தியை உருவாக்கு கிறது என்பதை கவனித்து, அதே போல, ஒரு சிறிய சிலிக்கன் சில்லில் செயற்கையாக ஒரு சாதனத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ’ட்ரீ ஆன் எ சிப்’ எனப்படும் இந்த தொழில்நுட்பம் பரிசோதனை நிலையை தாண்டினால், சில சர்க்கரை கட்டிகளை வைத்தே சிறிய ரோபோக்களை இயக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


புற்றுநோய் கட்டிகளை நீக்க உதவும் ஒளிரும் திரவம்

புற்றுநோய் கட்டியை துல்லியமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது சவாலானது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு ஒளிரும் திரவத்தை புதிதாக உருவாக்கியுள்ளனர்.

இதை உடலில் செலுத்தினால், புற்றுநோய் கட்டி முழுவதும் ஒளிரும். அதை வைத்து, புற்றின் சுவடே இல்லாமல் கட்டியை முழுமையாக நீக்க முடியும் என, இதை உருவாக்கிய வேதியல் விஞ்ஞானி ஹையிங் லியு தெரிவித்துள்ளார்.

நம் உடலில் ஒரு கடிகாரம் உண்டு. ஆனால், அது எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கு, ‘கரன்ட் பயாலஜி’ ஆய்விதழில், நரம்பியல் விஞ்ஞானியான எரிக் ஹெர்சாக் விடை யளித்திருக்கிறார்.

இதுநாள் வரை செல்களின் உள் அமைப்பில் இருக்கும், ‘அஸ்ட்ரோசைட்’ எனப்படும் பகுதியை, செல்களுக்கு ஆதரவாக இருக்கும் துணை செல்கள் அல்லது வெறும், ‘இடம் நிரப்பிகள்’ என்று கருதப்பட்டன. உடலின் பெரும்பாலான செல்களில் இருக்கும் அவை தான் உயிரி கடிகாரம் போல செயல்படுகின்றன என்கிறார் ஹெர்சாக்.

நிலாவில் மொபைல் நெட்வொர்க்!  

நிலாவில் கால் பதிக்கும் முதல் வர்த்தக நிறுவனமாக தங்களுடையது இருக்கும் என்று அறிவித்துள்ளது, அய்ரோப்பாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு. ‘பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் அந்த குழு, 2018ல், இரண்டு சிறிய ஊர்திகளை, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், பால்கன் 9 ராக்கெட்டுகள் மூலம் நிலாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

பெர்லின் நகரைச் சேர்ந்த அக்குழு, வோடபோன் நிறுவனத்துடன் சேர்ந்து நிலாவில் ஒரு மொபைல் சமிக்ஞை நிலையத்தை அமைக்க வுள்ளது. நிலாவில் பல ஊர்திகளை பரிசோதனை முறையில் அனுப்ப, இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் தனியார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால், அந்த ஊர்திகள், நிலாவிலிருந்து பூமிக்கு தகவல் பரிமாற இந்த நிலையம் உதவும் என, பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ் அமைப்பின் தலைவர் ராபர்ட் போஹெமி தெரிவித்துள்ளார். ‘மனித குலம் பூமித் தொட்டிலை விட்டு வேறு கிரகங்களுக்குச் செல்ல வேண்டியதை உணர்ந்திருப்பதால், அதற்கேற்ற தகவல் தொடர்பு சேவைகளை நாம் பூமிக்கு அப்பாலும் உருவாக்க வேண்டும்‘ என்று ராபர்ட் கூறியுள்ளார். ‘அலினா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலா ஊர்தி, வருங்காலத்தில் விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் வைக்கும்போதும் மிக்க பயனுள்ளதாக இருக்கும். பூமியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எல்.டி.ஈ., எனப்படும் மொபைல் தொழில்நுட்பமே நிலாவிலும் பயன்படுத்தப்படும் என்று பார்ட் டைம் சயின்டிஸ்ட்ஸ் குழு தெரிவித்துள்ளது. ‘இத்திட்டம் வெற்றி பெற்றால், ஜெர்மனியின் முதல் நிலவு முயற்சியாகவும் இருக்கும்‘ என்று, ஜெர்மனியின் வோடபோன் தலைவர் ஹான்ஸ் அமெட்ஸ்ட்ரெய்டர் தெரிவித்தார்.


பற்களை வார்க்கும் 3டி பிரின்டர்!

மருத்துவத் துறையில் முப்பரிமாண அச்சு இயந் திரங்கள் அருமையான சேவைகளை செய்து வரு கின்றன. உச்சந்தலை முதல், பாதம் வரை பல உறுப்பு களை, மருத்துவர்கள் முப் பரிமாண அச்சு இயந்திரங்களின் உதவியால் செய்து விடுகின்றனர்.

சிங்கப்பூரை சேர்ந்த, ‘ஸ்ட்ரக்டோ’ தயாரித்துள்ள, ‘டென்டாபார்ம்‘ என்ற இயந்திரம் பற்களை வார்த் தெடுக்க உதவுகிறது. மிகச் சிறிய அளவே உள்ள டென்டாபார்ம், பல் மருத்துவர்களுக்கு வேகமாக, கச்சிதமாக பற்களை அச்சிட்டு தந்துவிடுகிறது.டென்டா பார்ம், 50 மைக்ரோ மீட்டர் துல்லியத்தில் பற்களை அச்சிட வல்லது.  ஏற்கனவே, இதே சிங்கப்பூர் நிறுவனம், ஆர்த்தோ பார்ம் என்ற எலும்புகளை அச்சிடும் முப்பரிமாண இயந்திரத்தை தயாரித்துள்ளது குறிப் பிடத்தக்கது. ‘டென்டாபார்மில் பயன்படுத்தப்படும், ‘மாஸ்க் ஸ்டீரியோ லித்தோகிராபி’ தொழில்நுட்பம், பல் மருத்துவர்களின் எல்லா தரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், பல் மருத்துவ உலகில் டிஜிட்டல் புரட்சியை விரைவு படுத்தும்‘ என்கிறார், ஸ்ட்ரக்டோ வின் நிறுவனர்களுள் ஒருவரான ஹப் வான் எஸ்ப்ரோயக்.

ஆய்வுக்கூடத்தில் ‘வளர்ந்த’ கோழிக் கறி!

கோழி இல்லாமல், கோழிக் கறி சமைக்க முடியுமா? ‘மெம்பிஸ் மீட்ஸ்’ என்ற அமெரிக்க உணவு ஆராய்ச்சி நிறுவனத்தால் முடிந்தி ருக்கிறது.
அண்மையில், அது உலகிலேயே முதல் முறையாக, அசல் கோழியின் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் வளர்த்து உருவாக்கிய செயற்கை இறைச்சியை அறிமுகப்படுத்தியிருக் கிறது.கோழி, ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்ப்பதற்கு, மேய்ச்சல், பண்ணை என்று எந்த முறையை கடைபிடித்தாலும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் அதிக சேதாரம் நிகழ்வதை தடுக்க முடிவ தில்லை.
ஆனால், ‘சிந்தெடிக் பயாலஜி’ எனப்படும் செயற்கை உயிரியல் முறையில், ‘மெம்பிஸ் மீட்ஸ்’ போன்ற உணவு நிறு வனங்கள் உருவாக்கும் இறைச்சிகளுக்கு நீர், தீவனம், நிலப்பரப்பு போன்றவை அதிகம் தேவையில்லை. விலங்கு கள் வெளியேற்றும் பசுமைக் குடில் வாயுக்கள், ஓசோன் படலத்தை சிதைக்கும் ஆபத்தும் தவிர்க்கப்படுகிறது. தவிர, செயற்கை உயிரியல் முறையில், அசல் விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்ப தால், விலங்கு வதை குறித்த கவலைகளும் கிடையாது.வேறு ஒரு நிறுவனம் ஆய்வகத்தில் உருவாக்கிய செயற்கை மாட்டிறைச்சி, 2013இல் அறிவிக்கப்பட்டபோது, அதன் சுவை நன்றாக இல்லை என்ற புகார் எழுந்தது.

ஆனால், மெம்பிஸ் மீட்சின் கோழி இறைச்சி அசல் போலவே இருப்பதாக அதை ருசித்தவர்கள் புகழ்ந்துள்ளனர். மெம்பிஸ் மீட்சின் தலைமை செயல் அதிகாரியான உமா வலேட்டி ஒரு அமெரிக்கா வாழ் இந்தியர். இவர், ‘பீர் தயாரிக்கப்படுவதற்கு ஒப்பான முறையை நாங்கள் கோழி இறைச்சியை உருவாக்க பயன்படுத்துகிறோம். 2021 வாக்கில் மெம்பிஸ் மீட்சின் கோழி, வாத்து இறைச்சிகள் எங்கள் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும்‘ என்கிறார்.அசல் கோழி இறைச்சியின் சுவை, தோற்றம் இருந்தாலும், மெம்பிஸ் மீட்சால், விலை மட்டும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

மிதக்கும் சூரிய மின் நிலையம்

இந்தியாவின் மிகப் பெரிய மிதக் கும் சூரிய மின் நிலையம் கேரள மாநிலம் காயம் குளத் தில் அமைக்கப்பட் டுள்ளது. ராஜீவ் காந்தி கூட்டுச் சுழல் மின்உற்பத்தி ஆலை யில்  100 கிலோ வாட் பீக் ஆற்றல் அளவுகொண்ட சூரிய மின்தகடுகள் பதிக்கப் பட்டுள்ளன. தேசிய அனல் மின் கழகம்  இந்தத் தகடுகளை நிறுவியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்குள் சூரிய மின் நிலையம் அமைப்பதால் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் வெப்பம் குறைக்கப்படுகிறது. இதனால் மின் ஆற்றல் உற்பத்தி இழப்பும் குறையும். மேலும் இந்தத் தகடுகளை மேலே நிறுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாவதும் குறையும். அதனால் மிதக்கும் சூரிய மின் நிலையம் இப்போது உலகம் முழுவதும் பரவலாகிவருகிறது. உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் தென்கொரியாவின் அன்சியோங் நகரத்தில் நிறுவப்பட்டது.

ஒளிரும் தவளை

உலகின் முதல் ஒளிரும் தவளை அர்ஜெண்டினா வில் சாண்டஃபே என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப் பட் டுள்ளது. காலை வெளிச்சத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தத் தவளைகள் இரவில் நீலம், பச்சை நிறங்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன.     ‘Proceedings of the National Academy of Sciences’     என்னும் இதழில் இது குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. குறைந்த அலைநீளத்தில் ஒளியை கிரகித்து, நீண்ட அலை நீளத்தில் ஒளியைப் பிரதிபலிப்பதனால்தான் இந்த ஒளிரும் தன்மை ஏற்படுகிறது.

உலகின் மிகச் சிறிய காந்தம்
புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானிகள்

அறை அளவுக்குப் பெரிதாக இருந்த கணினி இன்று உள்ளங்கையில் வைத்து இயக்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. அந்த வகையில் முதல் தலைமுறை கணினி யிலிருந்து நான்காம் தலைமுறை கணினிக்கு வந்தடைந்திருக்கிறோம். அதேபோல ஆரம்ப கால கிராமஃபோன் இசைத் தட்டுகள் ஹோட்டல் தோசை போலப் பெரிதாக இருந்தன. அதிலிருந்து பாக்கெட் அளவு ஆடியோ கேசட் வந்தபோது, அதில் அதிக அளவாகச் சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அளவுக்கு இசையைப் பதிய முடிந்தது.

அடுத்து சி.டி. டிஸ்க், எம்.பி. 3 சி.டி., பென் டிரைவ், தம் டிரைவ் எனப் படிப்படியாகச் சாதனங்களின் அளவு சிறுத்தும், அதில் பதிவு செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இப்படித் தொழில்நுட்பம் பெரிய எல்லைகளை ஒவ் வொரு முறையும் தொடும்போது தொழில்நுட்பச் சாதனங்களில் அளவு சிறுத்துக்கொண்டே போகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஒரு கிரெடிட் கார்டின் அள விலான பகுதியில் 35 கோடி பாடல்களைப் பதியும் நாள் தொலைவில் இல்லை என நிரூபித்துள்ளனர் நானோ அறிவியல் விஞ்ஞானிகள்.

ஒரு அணுவில் ஒரு பிட்

கலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள அய்.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மய்யத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை பிட் தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.

அணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் நோபல் பரிசு வென்ற ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி  மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.

கணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு பிட்  எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற் போதுள்ள வன்தட்டு இயக்கியில்  ஒரு பிட்டைப் பதிவு செய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த அய்.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள். தொழில் நுட்பத்தை முடிந்த அளவுக்குச் சுருக்கினால் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை மேற்கொண்டோம் என்கிறார் நானோ ஆய்வாளர் கிரிஸ்டோபர் லட்ஸ்.

1,000 மடங்கு அதிகம் பதியலாம்

இது நானோதொழில்நுட்பத்தின் 35 ஆண்டு கால வரலாற்றில் மைல் கல். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு காந்த அணுக்களில் தகவல் பதிய அவற்றுக்கு இடையில் ஒரு நானோமீட்டர் இடைவெளி இருந்தாலே போதுமானது. (ஒரு நானோமீட்டர் இடைவெளி என்பது ஒரு குண்டூசி தலையின் அகலத்தில் 10 லட்சத்தில் ஒரு பங்கு.) இந்தக் கண்டுபிடிப்பு மூலமாகத் தற்போது உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ் மற்றும் மெமரி சிப்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிக அடர்த்தியில் பதியலாம்.

ஆகவே, கூடிய விரைவில் எல்லோருடைய கணினி, கைபேசி உட்பட அத்தனை சாதனங்களும் இன்னும் பல மடங்கு அளவில் சிறுத்துத் திறனில் மேம்படும். இந்த ஆய்வு முடிவு நேச்சர் ஆய்விதழில் மார்ச் 8 அன்று வெளியானது. நாம் இது வரை அடைந்ததில் உச்சபட்ச சாத்தியம் இந்த ஒற்றை அணு. இதுவரை நாங்கள் பார்த்த சேமிப்பு சாதனங்களிலேயே இதுதான் அதிஅற்புதமானது. அதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்றார் முன்னாள் அய்.பி.எம். ஆய்வு விஞ்ஞானியும் தற்போது கொரியாவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் சயின்ஸ்-ன் விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச்.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை

450 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக்-அய் இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. மார்ச் 11-ம் தேதி ஒடிசாவில் உள்ள சாந்திபூர் கடல் பகுதியில் இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது.

இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப்பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம்வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இப்போது அதன் வேகத்தை 450 கிலோ மீட்டராக அதிகப்படுத்தியுள்ளனர்.

இதன் வேகத்தை 800 கிலோ மீட்டராக மாற்றும் ஆய்வு இப்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மோஸ்க்வ ஆகிய இரு நதிகளின் பெயரை இணைத்து இந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Banner
Banner