12.04.1931 - குடிஅரசிலிருந்து...

பகத்சிங்

1. (ஏ) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(பி)பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(சி) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பெண் உரிமை

3.  (ஏ) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டு மென்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது. (பி) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடை களையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வநிலைக்கும் தகுந்த அளவில் குழந்தை களைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4. 1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும், 2. தனது செய்கை களுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால்  ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும், 3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும் 4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

29-03-1931 - குடிஅரசிலிருந்து...

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.  மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.  இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.  போதாக்குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும்  கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வல மாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.  பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.  போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக்கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவதற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லு வதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவ தாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமுகத்தையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

புதியமுறை சீர்திருத்த மணம்

31.05.1931 - குடிஅரசிலிருந்து...

சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப் படுபவைகள் எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங் களேயாகும்.  சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர் களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில்  ஒரு மனைவி ஏற்கெனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கெனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத் திலும் இருந்து கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண் டாவதாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும்.  இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும்.  பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய  பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது.

பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல் யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது.

பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார்.  அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திரு மணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன்.  மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம்  அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர்.

பெண் சிறீவைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார்  என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர்.  அவற்றை யெல்லாம் அடியோடு விட்டு விட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத் திற்கு இசைந்தனர்.

ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர்  பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)

 

 

 

ஒலியின் வேகத்தை மிஞ்சிப் பறக்கும் பயணியர் விமானங்கள் இன்று இல்லை. விரைவில் இந்த நிலை மாறும் என, விமானத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டு தனியார் துறை நிறுவனங்கள், சொந்த விமானங்களை வாங்க விரும்புவது, சர்வதேச பயணியர் அதிகரித்து வருவது ஆகிய வற்றை இலக்கு வைத்து, ‘ஏரியோன் சூப்பர்சோனிக், ஸ்பைக் ஏரோஸ் பேஸ், பூம் சூப்பர்சோனிக்‘ போன்ற விமான நிறுவனங்கள், ஒலியை மிஞ்சும் வேகமான ஜெட் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்

துள்ளன.

ஒலியை மிஞ்சும் வேகத்தை, ‘மாக்‘ என்ற அளவையால் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். இதை, ‘சூப்பர்சோனிக்‘ வேகம் என்றும் அழைப்பர்.

அய்ரோப்பிய தயாரிப்பான, ‘கான்கார்டு’ ரக விமானங்கள் மாக் 2 வேகத்தில் (மணிக்கு, 2140 கி.மீ.,) பறந்தன. 1976ல் துவங்கிய கான்கார்டு விமான சேவை, 2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

ஜூலை, 2000த்தில் ஏற்பட்ட மோசமான கான்கார்டு விபத்து, அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் ஆகியவற்றை அடுத்து, கான்கார்டு விமானத்திற்கு வரும் பயணியரின் வரத்து வெகுவாகக் குறைந்தது.

பிரிட்டன் மற்றும் பிரான்சின் கூட்டுத் தயாரிப்பான கான்கார்டு, மொத்தமே, 20 விமானங்களைத்தான் உருவாக்கியது. அதில், 14 மட்டுமே வர்த்தக சேவையில் இருந்தன.

மொத்தம், 128 பயணியரை சுமக்கும் திறன் கொண்டது கான்கார்டு. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சோனிக் விமானங்கள் அதைவிட குறைந்த அளவு பயணியரையே சுமக்கும்.

விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முன்னேற்றங்களால், குறைந்த அளவு பயணியர் பறக்கும் சூப்பர் சோனிக் விமானங்களை லாபகரமாக இயக்க முடியும் என, விமானத்துறை வல்லுநர்கள்

தெரிவித்துள்ளனர்.

காற்றிலிருந்து எரிபொருள்!

வாகனப் புகையால் காற்றில் கலக்கும் கார்பன் - டை - ஆக்சைடை திரும்பவும் எடுத்து, எரிபொருளாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கார்பன் இன்ஜினியரிங்.

கனடாவை சேர்ந்த இந்நிறுவனம், காற்றை உறிஞ்சி, அதிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடை பிரித்து, திரவ ஹைட்ரோ கார்பன் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை வெள்ளோட்டம் பார்த்துள்ளது.

இதுபோன்ற முயற்சிகள் ஏற்கெனவே நடந்துள்ளன. என்றாலும், அவற்றுக்கு அதிகமாக செலவு பிடிக்கும் என்பதால் பிரபலமாகவில்லை.

காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுத்து ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு எரிபொருளை உருவாக்க, 67 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.

ஆனால், கார்பன் இன்ஜினியரிங் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் மூலம், 6,700 ரூபாய்க்கே ஒரு மெட்ரிக் டன் எரிபொருளை உருவாக்க முடியும் என, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவழ்ந்து செல்லும் காற்றை, விசிறிகள் மூலம் இழுத்து, ஒரு ஆலையில் செலுத்தி, கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை திரவ ஹைட்ராக்சைடு மூலம் பிரித்தெடுத்து, கார்பனேட் வில்லைகளாக மாற்றுகின்றனர் கார்பன் இன்ஜினியரிங்கின் விஞ்ஞானிகள்.

பின் திட வடிவத்திலுள்ள கார்பனேட்டை சூடாக்கி, மீண்டும் சுத்தமான கார்பன் - டை - ஆக்சைடாக மாற்றுகின்றனர்.

அடுத்து அந்த வாயுவை வைத்து திரவ வடிவிலான செயற்கை ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்கின்றனர். இதை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது.

கார்பன் இன்ஜினியரிங் தனது பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 2015ல் ஒரு மாதிரி ஆலையை துவங்கியது. அது குறைந்த செலவில் எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட பின், ‘ஜூல்’ என்ற எரிசக்தி ஆய்விதழில் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.

காற்று மாசை வைத்தே, மாசில்லாத எரிபொருளை தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பது இனிதான் தெரியும்.

சீனாவின் புதிய விண்வெளி நிலையம்

அண்மையில் தான் சீனாவின் விண்வெளி நிலைய மான டியான் கோங்- 1 கடலில் விழுந்தது.

இந்த கரும்புள்ளியை துடைக்க, சீனா, 2019இல் ஒரு விண் நிலையத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. 2022 முதல் இயங்கத்துவங்கும் இந்த நிலையத்தில் ஆய்வுகள் செய்ய, பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத் திருக்கிறது சீனா.

அய்.நா., சபைக்கான சீன துதர் ஷி ஜோங்ஜுன் இதற் கான அழைப்பை விடுத்திருக்கிறார். ‘சீன விண்வெளி நிலையம் சீனாவுடையது மட்டுமல்ல, அது இந்த உலகிற்கானது. இதில் சிறிய நாடு முதல், பெரிய நாடு வரை எந்த நாடும் பங்கேற்கலாம்‘ என, அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையத்தில் என்ன விதமான ஆய்வுகளை செய்ய விருப்பம் எனத் தெரிவித்து அரசுகளும், தனியார் அமைப்பு களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் அறிவித்திருக்கிறார். விண் ணப்பங்களுக்கான கடைசி தேதி ஆகஸ்ட், 31.

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ, பல ஆண்டுகளாக வெளிநாட்டு அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, செயற்கைக் கோள்களை ஏவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கூகுள்’ நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்!

கடந்த ஆண்டு கூகுளின் நிறுவனர்களுள் ஒருவரான லாரி பேஜ், தன் ரகசியத் திட்டமான பறக்கும் காரின் மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

‘கிட்டி ஹாக்‘ என்ற அவரது சொந்த நிறுவனம் உரு வாக்கிய, ‘பிளையர்’ விமானம் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஆனால், அதை மேம்படுத்தி அண்மையில் வெள்ளோட்டம் பார்த்த பிளையர் விமானம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஒரு நபருக்கான இந்த விமானம் மின்சார பேட்டரி களால் இயங்குகிறது. எனவே அதிக சத்தம் போடாது. என்றாலும் அதிக நேரம், அதிக உயரம் பறக்கவும் முடியாது.  காரணம் அவ்வளவு சக்திவாய்ந்த மின்கலன்கள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. தவிர, சிவில் விமான சட்டங்கள் இத்தகைய குட்டி விமானங் களுக்கு அனுமதி அளிக்க தயங்குகின்றன.

இப்போதைக்கு மேம்படுத்தப்பட்ட பிளையரால் 10 அடி உயரத்தில், 20 நிமிடங்கள் வரை தான் பறக்க முடியும்.

பிளையரின் எடை, 114 கிலோ. மின்சார மோட்டார்களால் இயங்கும், 10 விசிறிகளைக் கொண்டு பறக்கும் பிளை யருக்கு தற்போது நீர்ப் பரப்பின் மேல் பறக்க மட்டுமே அமெரிக்க அரசு அனுமதித்திருப்பதால், தண்ணீரின் மேல் மிதப்பதற்கு இரு மிதவைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன.  ‘யூடியூப்’ நட்சத்திரமான கேசி நெய்ஸ்டாட் என்பவரை அழைத்து, இரண்டு மணி நேர பயிற்சி தந்து, பிளையரை பறக்கவைத்து விளம்பரம் செய்திருக்கிறது கிட்டி ஹாக்.

இப்போதைக்கு இது மாதிரி விமானம் தான். இது எப் போது விற்பனைக்கு வரும், என்ன விலை என, லாபி பேஜ் அறிவிக்கவில்லை. ஆனாலும், பலர் இந்த விமா னத்தை வாங்க, ‘புக்கிங்’ செய்யத் துவங்கிவிட்டனர். தற்போதே உலகெங்கும், 19க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பறக்கும் கார் திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

விமான ஜாம்பவான்களான போயிங், ஏர்பஸ், வாடகை கார் நிறுவனமான உபேர், சீனாவை சேர்ந்த இ-ஹாங் என்று பிரபலமான நிறுவனங்களோடு கூகுளின் நிறுவனர், சொந்தமாக நடத்தும் கிட்டி ஹாக்கையும் சேர்த்துப் பாருங் கள், பறக்கும் கார் கனவு, அடுத்த சில ஆண்டுகளில் நன வாகி விடும் என, வல்லுநர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

துணி துவைக்கும் இயந்திரம், இடத்தை அடைக்கும். அதிர்வில் அங்கும் இங்கும் நகரும். உருவில் பெரியது என்பதால் போகுமிட மெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது.

சோனிக் சோக்  என்ற சிறு கருவி, துணி துவைக்கும் இயந்திரம் செய்யும் சகல வேலைகளையும் செய்கிறது. ஆனால், கைக்கு அடக்கமானது.

இது எப்படி துணியை துவைக்கிறது? லேசான சோப்புக் கலந்த நீரில் சோனிக் சோக் கருவியை மூழ்க விட்டு, துணியைப் போட்டு, முடுக்கிவிட்டால், நம் செவி உணரா அதிர்வலைகளை எழுப்புகிறது வினாடிக்கு 50 ஆயிரம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளை எழுப்புவதன் மூலம் துணியில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் கறை, உணவுக் கறை போன்றவை துணியின் நுலிலிருந்து பிரிந்து தண்ணீரில் கரையும். துணியும் சுத்தமாகிவிடும்.

சோனிக் சோக்கில் மின்சாரப் பயன்பாடும் குறைவாக இருப்பதால், விரைவில் வீடுகளில் சோனிக் சோக் இடம் பிடித்துவிடும் என, இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர்.

அய்ரோப்பாவில், ‘ஸ்ட்ரா’வுக்கு வருகிறது தடை!

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகிறது, அய்ரோப்பிய யூனியன். ஏற்கனவே, 2015இல் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், பயன்படுத்தவும் விதித்த தடை, அய்ரோப்பிய மக்களால் வரவேற்கப்பட்டது.

இதனால் கிடைத்த பலன்களை அடுத்து, கடற்கரைகள் மற்றும் இதர நீர் நிலைகளுக்கு அருகே குவியும் 10 பிளாஸ்டிக் பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை தடை செய்யும் திட்ட வரைவை உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது, அய்ரோப்பிய யூனியன்.

குளிர் பானங்களை உறிஞ்ச உதவும் ஸ்ட்ரா, உணவுத் தட்டுகள், பிளாஸ்டிக் மீன் பிடி கருவிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி துக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.

உறுப்பினர் நாடுகள் விரைவில் இதற்கு ஒப்புதல் வழங்கியதும், அடுத்த சில மாதங்களில் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துவிடும்.

 

நிலவில் தொழிற்சாலை

பூமியில் கனரக உற்பத்தித் தொழில்களை இனிமேல் செய்யக்கூடாது என, சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் அறிவித் திருக்கிறார் ‘அமேசான்’ அதிபர் ஜெப் பெசோஸ்.

பின் எங்கே உற்பத்தி செய்வது... நிலாவில் தான்! இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தனது ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி அமைப்பின் மூலம், 2020இல் செய்ய விருப்பதாகவும் பெசோஸ் அறிவித்து அசத்தியிருக்கிறார்.

பூமியிலிருந்து மூன்று நாள் பயணத்தில் நிலாவில் தரையிறங்க முடியும். நிலாவின் சூரிய ஒளி எட்டாத இரு துருவங்களில் உறைந்த நிலையில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நிலா மெதுவாக சுழல்வதால் சூரிய ஒளி அதிக நேரம் அந்த துணைக் கோள் மீது விழுகிறது. எனவே சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் கன ரக தொழிற்சாலைகளை இயங்க வைக்க முடியும் என்பது பெசோசின் திட்டம்.

இதற்காக அமெரிக்காவின் நாசா, அய்ரோப்பாவின், ஈ.எஸ்.ஏ., ஆகிய விண்வெளி அமைப் புகளிடம் கூட்டுச் சேர தயாராக இருப்பதாகவும், அதற்கு அவர்கள் மறுத்தால், ப்ளூ ஆரிஜினே விண்வெளியில் தொழிற் சாலை அமைப் பவர்களுக்கு உதவிகள் செய்யும் நிறுவன மாக மாறி ராக்கெட்டுகள், மூலப் பொருட்களை அனுப்பும் வர்த்தக சேவையை செய்யும் என்றும் பெசோஸ் அறிவித் துள்ளார்.

பூமியைவிட்டு நாம் வெளியேறத்தான் போகிறோம். அடுத்த 100 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியிலிருந்து நிலாவுக்கு போவதும் வருவதும் சகஜமாகிவிடும் என, ரொம்ப கூலாக தெரிவித்தார் பெசோஸ்.

எச்சரிக்கும் எலக்ட்ரானிக் மூக்கு!

நச்சுப் பொருட்கள், கெட்டுப் போன பொருட்கள், உயிரைப் பறிக்கும் விஷ வாயுக்கள். இவை எல்லா வற்றிற்கும் குறிப்பிட்ட வகை வாடை உண்டு.

அவற்றை கண்ட றிவதற்கென, ஜெர்மனியை சேர்ந்த கார்ல்சுருகே தொழில்நுட்ப நிலையம் ஒரு மின்னணு மூக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது.

கையடக்கமான இந்த செயற்கை மூக்கில், பல நுண்ணிய உணரிகள் இருக்கின்றன.

இந்த உணரிகளின் மீது, காற்றிலுள்ள வாடைகள் படும்போது, அவற்றின் வேதித் தன்மையை பகுத்தறிந்து, இதே கருவி யில் இருக்கும் சிலிக்கன் சில்லிற்கு தெரிவிக்கின்றன.

ஏராளமான வாடைகளை முன்பே இந்த சில்லில் பதிந்து வைத் திருப்பதால், அவற்றுடன் ஒப்பிட்டு, தீய வாடை ஒரு வினாடி எதனுடையது என்பதை இந்தக் கருவி வினாடியில் சொல்லி விடும்.

செயற்கை மூக்கு தொழில்நுட்பத்தை கார்ல்சுருகே நிலையம் வர்த்தக ரீதியில் விரைவில் வெளியிட இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் செல்பேசிகளில் மொபைல் போன்களில் இந்தக் கருவியின் சிறிய அவதாரம் இடம் பெறக்கூடும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

டிரோன்கள் மூலம் உணவு விநியோகத்துக்கு அனுமதி

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்இ.மீ என்ற நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்திலுள்ள ஜின்ஷன் தொழிற்பூங்காவிலுள்ள 17 இடங்களில் டிரோன் கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த தொழிற்பூங்காவிலுள்ள 58 சதுர கிலோமீட்டர் பகுதிகளுக்கு டிரோன்கள் மூலம் உணவை விநியோகிப் பதற்கு இதன் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜின்ஷன் தொழிற்பூங்காவில் செயல்படும் 100 உணவகங்களுகளில் ஆர்டர் அளித்தால், அது டிரோன்கள் மூலம் இருபது நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும்.

ஒவ்வொரு பாதையிலும் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு குறிப்பிட்ட இடங்களுக்கிடையில் மட்டுமே டிரோன்கள் இயக்கப்படும் என்று தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்டர்களை பெறும் பணியாளர் உணவகத்துக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு சென்று அதை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு அனுப்புவார். அங்கிருக்கும் மற்றொரு பணியாளர், உணவை பெற்று வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார். சாதாரண சாலை வழி உணவு விநியோக செலவை ஒப்பிடும்போது, டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது செலவை குறைப்பதாக அந்த இணையதளம் தெரிவித் துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆறு கிலோ வரையிலான உணவுப்பொருட்களை 20 கிலோ மீட்டர் தொலைவு வரை அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் கொண்டுசெல்வதை இதே நிறுவனம் முன் னோட்டம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
Banner