குழந்தைகள் போரடித்தால், அந்த வெறுமையை விரட்டுவதற்கு, மூன்று நீட்சிகளைக் கொண்ட, ‘பிட்ஜெட்’ பொம்மையை கையில் வைத்து சுற்றி விளையாடுவர். இப்போது, பெரியவர்களும் தங்கள் பதற்றத்தை தணிக்க, அதை அலுவலகத்தில் வைத்திருப்பதுண்டு.

அந்த சாதாரண விளையாட்டுச் சாமான், உயிர் காக்கும் கருவியாக பயன்படுத்த முடியும் என்பதை, தைவானைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பால் பியரிங்கை மய்யமாக வைத்துச் சுழலும் அந்த பொம்மையின் மூன்று நீட்சிகளிலும், சிறிய குழாய்களில் ரத்தத்தை ஊற்றி அடைத்து வேகமாக சுற்றிப் பார்த்தனர் விஞ்ஞானிகள்.

நான்கு முதல் ஏழு நிமிடங்கள் வரை இப்படிச் சுற்றியபோது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவும், செல்களும் தனியே பிரிந்து மிதந்தன.

இதில் ரத்த சோதனைக்குத் தேவையானதை எடுத்து சோதித்துப் பார்த்ததில், 30 சதவீத பிளாஸ்மா பிரிந்து வந்திருந்தது. அது, 99 சதவீத தூய்மையுடன் இருந்தது. மின்சாரத்தில் இயங்கும் விலை உயர்ந்த மய்யவிசைச் சுழற்சி மோட்டார்களை வைத்துத் தான் இதுவரை உலகெங்கும் ரத்தத்தை பிரித்து வந்தனர்.

இப்போது, அந்த வசதியில்லாத குக்கிராம மருத்துவமனையில்கூட, இந்த விளையாட்டு பொம்மையை கருவியாக பயன்படுத்தி, ரத்த பரிசோதனையை விரைவில் நடத்தலாம் என, ‘அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி’ ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

 

கடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால், பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நுறு கிலோமீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது, அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை பூமியின் ஆழப் பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து, பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப் போக, கடினம் குறைந்து, பூமியின் உள் மய்யப் பகுதி, இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது. எனவே, பூமியின் ஆழப் பகுதியில் பூகம்பம் ஏற்படும்போது, அதன் அதிர்வலைகள், பூமியின் மய்யம் வரை பயணித்து, மறுபக்கம் வரை சென்று, மீண்டும் திரும்பும்.

ஆனால், சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

உதாரணமாக, 1994இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில், 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும், மய்யப் பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது.

இதை வைத்து, பூமிக்கடியிலும் கடினமான மலைப் பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

மனிதக் குடல் பகுதியில் உள்ள, இதுவரை இனம் காணப்படாத, 1,952 புதிய நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.மனித உடலில் பல ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ் கின்றன. இவற்றில் குறிப்பாக மனிதனின் குடல் பகுதியில் வசிக்கும் நுண்ணுயிரிகள் உணவை ஜீரணிக்க மட்டுமல்லாமல், மன நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். வல்லுனர்களின் மதிப்பீட்டின்படி குடலில், 1,000 முதல் 40 ஆயிரம் வரை வேறுபட்ட நுண்ணுயிரி இனங்கள் இருக்கலாம். இவற்றை விஞ்ஞானிகள் வகைப்படுத்த ஆரம்பித்துவிட்டாலும், வகைப் படுத்தப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பல்லாயிரம்.பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மெட்டா ஜீனோமிக்ஸ் என்ற கணினி மாதிரியின் அடிப்படையில் மனிதக் குடலில் உள்ள நுண்ணு யிரிகளின் மரபணுக்களை ஆராய்ந்து, 1,952 வகை புதிய நுண்ணுயிரிகளை கண்டறிந்துள்ளனர்.இந்த கண்டுபிடிப்பு பற்றி, நேச்சர் ஆய்விதழில் வெளி யாகியுள்ளது.

ஆய்விற்கென பல நாடுகளைச் சேர்ந்தோரின் குடல் நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிர்பார்த்தபடியே, ஒருவர் வாழும் இடத்தைப் பொறுத்து, நுண்ணுயிரி வகைகள் மாறுபட்டிருந்தன. ஐரோப்பியர் மற்றும் வட அமெரிக்கரின் குடலில் வாழும் பல நுண்ணுயிரிகள் ஒத்துப்போயின. ஆனால், தென்னமெரிக்கர் மற்றும் ஆப்ரிக்கர்களின் குடல் வாழ் நுண்ணுயிரிகள் முற்றிலும் மாறுபட்ட வையாக இருந்தன.

எனவே, பல நாடுகளைச் சேர்ந்தோரின் நுண்ணுயிரிகளை விரிவாக ஆராய்வது அவசியம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய ஆய்வுகள், உடல் ஆரோக்கியத்திற்கான காரணி களையும், நோய்களுக்கான காரணிகளையும் விரைவாக, துல்லியமாகக் கண்டறியவும், உரிய சிகிச்சைகளை உருவாக்கவும் உதவும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
Banner