மலேரியா கிருமிகள் தொற்றிக்கொண்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்துக்கூட, அந்த நோய் இருப்பதை கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன. இந்த நிலையில், எந்த அறிகுறிகளுமே இல்லாமல் மலேரியா கிருமிகளை சுமப்போருக்கு, அந்த நோய் இருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியம்.

இந்த நிலையில் மலேரியாவை சுமப்பவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் தனித் தன்மையுடன் இருக்கும் என்பதை மேற்கு கென்யாவில் உள்ள மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்களால் இதை முகர்ந்து பார்த்து துல்லியமாக சொல்லிவிட முடியும் என்று பொருளல்ல. தோல் மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து கேஸ் குரோமடோகிராபி, மாஸ் ஸ்பெக்ட்ரோகிராபி சோதனைகள் மூலம், மலேரியா கிருமித் தொற்று உள்ளோரையும், இல்லாதோரையும் கென்ய மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது.

மேலும், அறிகுறிகள் உள்ளோர், அறிகுறிகள் இல்லாமலேயே ரத்தத்தில் மலேரிய தொற்றை சுமப்போரையும், மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது. இந்த கண்டுபிடிப்பு முறைப்படுத்தப்பட்டு பரவலானால், மலேரியா தாக்கியோரை விரைவில் கண்டறிந்து சிகிச்சையை சீக்கிரமே துவங்க முடியும்.

செவ்வாயில் பறக்கப்போகும் ஹெலிகாப்டர்!

மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக் காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’. ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம்.

மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா எடுத்துள்ளது. என்றாலும் பறவைப் பார்வையில் செவ்வாயின் மேற்பரப்புகளை படம்பிடித்து ஆராய்வதன் மூலம், அக்கிரகத்தைப் பற்றி நமக்கு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என, நாசா நம்புகிறது.

காற்று மாசை கண்டறியும் கருவி: தமிழக மாணவர்கள் சாதனை

நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது.

காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியா வசியமாகிவிட்ட பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு மாசுபடுத்துகிறது.

வாகனப்புகையில் கலந்துள்ள சல்பர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சுக்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கக்கூடிய காற்றை விஷமாக மாற்றுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந்த பொறியியல் மாணவர்களான முத்துக்கருப்பன், லியோ ஆல்டர்ன்ராஜ், மதன்ராஜ், மனோரஞ்சன் ஆகியோரது கண்டுபிடிப்பு தான் “ஃபால்கான்”.

இந்த கருவி காற்றில் உள்ள நச்சுக்களை படம்பிடித்து அதை அப்படியே கணினியில் காட்டுகிறது.  இந்த ஃபால்கான் கருவியானது கண்காணிப்பு கேமரா மற்றும் இணைய இணைப்பு கொண்ட கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

ஃபால்கானை ட்ரோனுடன் இணைத்து பறக்கவிடும் போது பறக்கும் பகுதியில் எவ்வளவு வாகனங்கள் உள் ளன. அவற்றிலிருந்து வெளிவரும் புகையால் காற்றில் என்னென்ன நச்சுக்கள் எவ்வளவு விகிதத்தில் கலந் துள்ளன என்பதை இணைய இணைப்பு கொண்ட கணினியில் நேரிடையாக பார்க்கலாம். மேலும் கணினியின் வாயிலாகவே இந்த கருவியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இந்த ஃபால்கான் கருவியினை கூகுளுடன் இணைத்துக் கொண்டு வாகனம் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பொருத்தினால் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, அந்த இடத்தில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்கள், நச்சுக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். இந்த காற்று மாசு தகவலை அருகிலுள்ள காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையத்திற்கு தெரிவித்து காற்று மாசினையும் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இந்த ஒரு கருவியின் மூலம் நாம் சிறந்த பயன்களை பெறமுடியும் என்கின்றனர் இதனை வடிவமைத்த மாணவர்கள்.

காற்று மாசு

இது குறித்து பேசிய நான்கு மாணவர்களுள் ஒருவரான முத்துக்கருப்பன் கூறுகையில், “இந்தியாவில் காற்று மாசானது தொழிற்சாலை புகைகளுக்கு அடுத்து நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் தான். அதிலும் குறிப்பாக வாகன நெரிசலின் போது மட்டுமே இந்தியாவில் சுமார் 22 சதவிகித காற்று மாசடைகிறதாக இந்திய காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மொத்தமாக 39 காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 90 சதவிகித  அதாவது சுமார் 23 நிலையங்கள் மனித சக்தியால் இயங்கக் கூடியவையாக உள்ளன. இங்கு பயன்படுத்தக்கூடிய கண்காணிப்பு கேமராக் களானது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலானது. இந்த கேமராக்களால் பதிவுகளை சேமிக்க முடியும், நேரலையாக பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள ஃபால்கான் கருவியால் தகவல்களை சேமிப்பதோடு நேரலையாக பார்க்கவும் முடியும். இதனை நாங்கள் வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு உருவாக்கி யுள்ளோம்“, என்கிறார் மகிழ்வுடன்.

இந்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின் ஆதர வோடு பாம்பே அய்அய்டி நிறுவனமானது அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆலோசனைகளை அளிக்க கோரியது. அதாவது பொறியியல் படிக்கும் மாணவர் களிடமிருந்து உலக பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி அவற்றை காட்சிபடுத்தலாம் என்று கோரியிருந்தது. அதில் ஃபால்கான் கருவியோடு சாரநாதன் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து லியோ ஆல்டர்ன்ராஜ் என்ற மாணவர் கூறுகையில், “இந்த போட்டியில் இந்தியா முழுவதிலு மிருந்து சுமார் 256 கல்லூரிகள் கலந்து கொண்டன. அவற் றில் முதல் சுற்றில் 105 கல்லூரிகள் தேர்வாகின. இக் கல்லூரிகளில் 72 கல்லூரிகள் மட்டுமே தங்களது ஆய்வு ஆலோசனைகளை, கருவிகளின் மாதிரிகளோடு சமர்பித் தன. இந்தியாவை அய்ந்து மண்டலங்களாக பிரித்து 72 கல்லூரிகளுக்குக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.

தென்மண்டலத்திலிருந்து தேர்வான இரண்டு கல்லூரிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. அதில் எங்களது கல்லூரியும் ஒன்று. எங்களது ஆய்வுகளையும், ஆலோ சனைகளையும் மாதிரிகளோடு செயல்முறை படுத்திக் காட்டினோம். இந்த போட்டியில் எங்களது தயாரிப்பான ஃபால்கான் முதல் பதினெட்டு இடங்களுக்குள் தேர்வாகியுள்ளது. இதனை மேலும் செம்மைபடுத்தி, நவீனப்படுத்த முயன்று வருகிறோம். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது பெற்றோர், கல்லூரி நிர்வாகம், முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என அனைவரும் முழு ஆதரவளித்து, ஊக்கப்படுத்தினர்”, என்றார் அவர்.

மாணவர்களின் சாதனை

இம்மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியை காயத்ரி கூறுகையில், “ஃபால்கான் எனும் இந்தக் கருவியை அவர்களாகவே யோசித்து உருவாக் கியது. அவர்களை சுதந்திரமாக யோசிக்க விட்டதால் பல கல்லூரிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் முதல் பதினெட்டு இடங்களுக்குள் வர முடிந்தது. இதற்கு அவர்களின் முயற்சியே காரணம்.

அடுத்த கட்டமாக இந்தக் கருவிக்கு காப்புரிமை பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்தக் கருவி எதிர்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். திறமையும், உழைப்பும் நூறு சதவீதம் மாணவர்களுடையதே. நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி, முன்னேறும் வழியை காட்டும் வழிகாட்டி களாக மட்டுமே உள்ளோம்,” என்கிறார் இந்த உதவிப் பேராசிரியை.

மண் மற்றும் தண்ணீர் மீதான விழிப்புணர்வை பெற்ற அளவிற்கு மக்கள் மத்தியில் காற்றை பற்றிய விழிப் புணர்வானது குறைவாகவே உள்ளது. அடுத்த தெருவிற்கு கூட நடக்காமல் வாகனத்தில் செல்வதால் காற்றில் என்ன மாதிரியான நச்சுக்கள் கலந்து மாசடைகிறது என்பதை கண்முன்னே காட்சிப்படுத்தி காட்டுகிறது ஃபால்கான்.

மாற்று எரிபொருளுக்கான மாபெரும் தேடலை மேற்கொண்டி ருப்பவை கார்கள் மட்டுமல்ல, லாரிகளும்தான். அமெரிக்காவிலுள்ள ‘நிக்கோலா மோட்டார்ஸ்,’ ஹைட்ரஜனில் ஓடும் கனரக லாரிகளை தயாரித்து வருகிறது.

ஹைட்ரஜனை ஒரு முறை நிரப்பினால், 1,280 முதல் 1930 கி.மீ., வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது தங்களின் ‘நிக்கோலா ஒன்’ என்கிறது நிக்கோலா மோட்டார்ஸ்.

மதுபானங்களை விற்கும் ஆன்ஹியுசர் புஷ் நிறுவனம், அண்மையில் நிக்கோலாவிடம் 800 ஹைட்ரஜன் லாரிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

பிரபலமான மது மற்றும் பீர் பானங்களை தயாரித்து விற்கும் ஆன்ஹியுசர், தனது ‘சரக்கு’களை லாரிகள் மூலமே வினியோகிக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என, மின்சார லாரி உட்பட பல மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.  நிக்கோலாவின் லாரிகளை, 2019இல் தங்கள் நிறுவனத்தில் ஆன்ஹியுசர் பன்படுத்த ஆரம்பிக்கும்.

நிக்கோலா ஒன் லாரியில் பயன்படும் ஹைட்ரஜனால், துளிகூட காற்று மாசு ஏற்படாது.  எனவே, ஆன்ஹியுசர் பயன்படுத்தும், 800 ஹைட்ரஜன் லாரிகளால், ஆண்டுக்கு 13 ஆயிரம் பெட்ரோலிய கார்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க முடியும்.

ஹைட்ரஜன் லாரிகள் உலகெங்கும் பரவலானால் நிச்சயம் காற்று மற்றும் ஒலி மாசு வெகுவாக குறையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சுற்றுலாவினால் காற்று மாசுபடுகிறதா?

உலகின் 92 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காற்று, பலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய அளவுக்கு கெட்டுள்ளது. இப்படி மாசு ஏற்படுவதற்கு, என்னென்ன தொழில்கள் காரணம் என, ஆராய்ந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

அண்மையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக காற்று மாசுபாட்டில்  சதவீதம், சுற்றுலா பயணம் மேற்கொள் பவர்களால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுற்றுலா செல்வோர் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியேற்றும் புகையால் மட்டுமல்ல, அவர்கள் பொருட்களை வாங்குவது, உண்ணும் உணவு போன்றவற்றாலும் காற்றில் நச்சுக்கள் கலக்கின்றன. இந்த ஆய்வு 2009லிருந்து 2013 காலகட்டத்திற்குள் மட்டுமே ஏற்பட்ட பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, எந்தெந்த நாடுகளில் சுற்றுலாவால் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டது... அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த நாடுகளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால்தான் அதிக அளவுக்கு காற்று மாசு ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’

சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணை மண்டலத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டி களின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது.

“முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்ற போது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணை மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை,” என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித் தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ணிகீ 95 என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ்  என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், “2004 ணிகீ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும்.

இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது,” என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், “கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை,” என்று கூறு கிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் அனுமானம்‘  தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண் டிருக்கலாம். 2004 ணிகீ 95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது.

2004 ணிகீ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல். நாசாவின் நியூ ஹாரிசான்ஸ்  ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தரவுகளை அறிய முடியும்.

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு

அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற அய்ரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்  சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது.  பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித்ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்

பிர்மாவுக்குக் கல்தா!

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு வேலை இல்லை

மனித உயிர் உருவாக்கத்தில் ஆண், பெண் சேர்க்கையில்லாமல் ஆய்வகத் திலேயே கருவை உருவாக்கிட முடியும் என்று 76ஆண்டுகளுக்கு முன்னால் (1942) தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்குடன் இனி வரும் உலகம் நூலில் அறிவியலில் வளர்ச்சி ஏற்படும் என்று குறிப்பிட்டார். அதன்படி அறிவியலில் வளர்ச்சி ஏற்பட்டு, சோதனைக் குழாய் குழந்தை உருவானது.

1968ஆம் ஆண்டுகளில் பன்னாட்டளவில் சோதனைக் குழாய் குழந்தை பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், 25.07.1978ஆம் ஆண்டில் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை வெற்றிகரமாக பிறந்தது.

மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரின் தொடர் ஆராய்ச்சியின் பயனாய் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இங்கிலாந்து ஓல்டுஹாம் நகரில் பொதுமருத் துவமனையில் லூயிஸ் ஜாய் பிரவுன் எனும் சோதனைக் குழாய் குழந்தையை லெஸ்லி பிரவுன் எனும் பெண்மணி ஈன்றெடுத்தார். மருத்துவரின் ஒன்பது ஆண்டுகால தொடர் முயற்சியின் பயனாய் அவர் 38 வாரங்களில் கருவை சுமந்து சோதனைக் குழாய் குழந்தையை ஈன்றெடுத்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வரை பன்னாட் டளவில்  சுமார் 65 லட்சம் சோதனைக் குழாய் குழந்தைகளில் லூயிஸ் ஜாய் பிரவுன் முதலாமவர் ஆவார்.

கருமுட்டை, விந்தணு இல்லாமல்...

அறிவியல் வளர்ச்சியில் அடுத்த கட்ட நகர்வாக, கருமுட்டை, விந்தணுக்கள் இல்லாமல், ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களைக் கொண்டே உயிர் உருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சி அறிக்கை வெற்றிகரமாக அறிவியலாளர் களால் பன்னாட்டு சமூகத்தின் முன்பாக அளிக்கப்பட்டுள்ளது.

இன்று (2018ஆம் ஆண்டில்)   கருமுட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைக்கொண்டே, உயிரை உருவாக்க முடியும் என்பதுதான் அறிவியலில்  வளர்ச்சி பெற்றுள்ள தகவலாகும். வேறுபட்ட இரண்டு வகையிலான குருத் தணுக்களைப் பயன்படுத்தி, ஆய்வுக்குழு ஆராய்ந்து வந்தது. ஆய்வில் மனிதக் கருவின் வளர்ச்சிக்கான தொடக்க நிலையை வெளிப்படுத்தியது.  இந்த குறிப்பிட்ட ஆய்வின்மூலமாக, புதிய கண்டுபிடிப்புக்கான வழி ஏற்பட்டது. வரையறை இல்லாத அளவுக்கு அதிகப்படியான குருத்தணுக் களைக் கொண்டு புதிதாக திறன்மிகுந்த கருக்களை உண்டாக்க முடியும் என்று தெரியவந்தது.  கருப்பையில் உள்ள கரு வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளைக் களைந்திடவும் இந்த ஸ்டெம் செல்கள் எனப்படும் குருத்தணுக்கள் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளமுடியும் என்பதும் கண்டறியப்பட்டது.

உயிர் உருவாக்கம், படைப்பு என்பது கடவுளின் செயல் என்று கூறப்பட்டு வரும் கருத்தை முறியடிப்பதாக இந்த அறிவியல் வளர்ச்சி உள்ளது.

உயிர்களை படைக்கின்ற பணியை கடவுள் தான் செய்துவருவதாக கூறப்பட்ட தற்கு மரண அடியாக இன்றைய அறிவியல் வளர்ச்சி காணப்படுகிறது.

மாஸ்டிரிட்ச் பல்கலைக்கழகத்தில் மெர்ல்ன் (MERLN) இன்ஸ்டிடியூட் மற்றும் நெதர்லாந்தில் உள்ள ஹப்ரெக்ட் இன்ஸ்டி டியூட்  (KNAW) ஆய்வுகள் நடத்தப்பட்டன.

டாக்டர் நிக்கோலஸ் ரிவ்ரான்

அறிவியலாளர் குழுவின் தலைவர் டாக்டர் நிக்கோலஸ் ரிவ்ரான் கூறியதாவது:

கரு உற்பத்தியில் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிடவும்,  சரியான பாதையை புரிந்துகொள்ளவும் எங்களின் ஆய்வு உதவியுள்ளது என்றார்.

கிளெமென்ஸ் வான் பிலிட்டர்ஸ்விஜிக்

மாஸ்டிரிட்ச் பல்கலைக்கழகத்தில் மெர்ல்ன் (MERLN) இன்ஸ்டிடியூட் கரு மருத்துவயியல் துறைத் தலைவர் பேராசிரியர் கிளெமென்ஸ் வான் பிலிட்டர்ஸ்விஜிக் கூறியதாவது:

உயிர் மருத்துவத்துறையில் புதிய நகர்வுக் கான பாதையை இந்த ஆய்வு திறந்து வைத்துள்ளது. பெரிய அளவிலான எண் ணிக்கையில் மாதிரி கருக்களை எங்களால் உருவாக்க முடியும். புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். புதிய மருத்துவ தொழில் நுட்பங்கள், சிறந்த மருந்துகளை உருவாக்க முடியும். விலங்குகளிடம் மேற்கொள்ளப் படுகின்ற ஆய்வுச் சோதனை களை  வியக்கத்தக்க அளவில் இந்த ஆய்வு முடிவுகள் குறைத்துவிடும் என்றார்.

அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் 1997ஆம் ஆண்டு மனித குளோனிங் என்பது சட்ட விரோதமானது என்று கூறப்பட்ட நிலையில், அறிவியல் வளர்ச்சியில் எந்த ஓர் ஆபத்தும் கிடையாது என்று நிரூபணமாகி யுள்ளது. மருந்துகள் ஆய்வு, மலட்டுத்தன்மை குறித்த ஆராய்ச்சி களுக்கு மாறாக, இந்தத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஸ்டெம் செல்கள் எனப்படும் குருத் தணுக்கள் மூலமாக மரபணு சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் நடை பெற்று வருகின்றன. குருதி வங்கி இருப்பதைப் போன்று, ஸ்டெம் செல் வங்கித்திட்டம் அண்மைக்காலமாக பெருகி வருகிறது. மரபியல் ரீதியில் உள்ள நோய்களான சிறுநீரக நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை முற்றிலும் குணப் படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குருத்தணுக்கள் சேமிப்புத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மகப்பேறின் போது துண்டித்து ஒதுக்கப்படுகின்ற தொப்புள் கொடியை துண்டித்து வீணாக் காமல், முன்னதாகவே உரிய மருத்துவ நிறுவனங்களிடம் பதிவு செய்துகொண்டால், முறையாக தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் தொப்புள் கொடியை அகற்றி சேமித்துக்கொள்ளும் பணிகளை மருத்துவ நிறுவனங்கள் ஸ்டெம் செல் சிகிச்சைக்காக ஸ்டெம் செல் வங்கித் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இனி வரும் உலகம் நூலில் தந்தை பெரியார்

1942ஆம் ஆண்டில் செய்யாறு திருவத்திபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை அண்ணா குறிப்பெடுத்து, தம்முடைய திராவிட நாடு இதழில் (21.1.1943, 28.1.1943) வெளியிட்டார். தந்தை பெரியார் ஆற்றிய திருமண விழா உரை, இனி வரும் உலகம் எனும் தலைப்பில் சிறு நூலாக திராவிடர் கழக வெளியீடாக வெளியிடப்பட்டது. சோதனைக் குழாயில் குழந்தை வளர்கின்ற படம் நூலின் அட்டையில் வெளியிடப்பட்டது.

இனி வரும் உலகம் நூலின் மறுபதிப்பில் பின் அட்டையில், அய்யாவின் (பெரியாரின்) கணிப்பு வென்றது என்று குறிப்பிடப்பட்டு, ஒரு தகவல் இடம் வெளியிடப்பட்டது. ஆண்-பெண் உடல் உறவு இல்லாமலே விஞ்ஞானிகள் செயற்கை முறையில் குழந்தைகளை உற்பத்தி செய்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்தச் சோதனை வெற்றி அடைந்து விட்டது. இதுகுறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக மகப்பேறு இயல் பேரா சிரியர் டாக்டர் டக்டஸ் ஈவிஸ் கூறியதாவது: சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தறிப்பு நிகழ்ந்த பிறகு பெண் ணின் கர்ப்பப் பையில் அக்கரு செலுத்தப்படு கிறது. அப்படிச் செலுத்தப்பட்டு, மூன்று செயற்கைக் குழந்தைகள் உருவாக்கப்பட் டுள்ளன. அம் மூன்று குழந்தைகளில் ஒன்று பிரிட்டனில் பிறந்துள்ளது. ஒரு குழந்தை பிறந்து 18 மாதமாகின்றது. மூன்று குழந்தை களும்  நலமுடன் வளர்ந்து வருகிறது.

-16.7.1974 பத்திரிகைச் செய்தி

தந்தை பெரியார் ஆற்றிய உரையில் குறிப்பிடுகையில்,

...பிள்ளைப்பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும் படியாக பொலிகாளைகள்போல் தெரிந் தெடுத்து மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன்மூலம் பெண்கள் கருப் பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தை களைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் - பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவ தற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டுவந்துவிடக் கூடும்... இனி வரும் உலகம் நூலில் மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அன்று தந்தை பெரியார் குறிப்பிட்ட சிந்தனைகள் இன்று செயல்வடிவில் உள்ளன.

அறிவியல் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. மனிதனின் பகுத்தறிவால் அறிவியலில் முன்னேற்றம் பெற்று வருகிறான். இது பன்னாட்டளவில் இருந்து வருகிறது. ஆனால், இந்துத்துவா ஆட்சி நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் ஆட்சியில் எல்லா நிலைகளிலும் பிற்போக்கு நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

-ந.கதிரவன்

Banner
Banner