நீர் நிலைகளில் அதிக நேரத்தைக் கழிக்கும் முதலைகள், அடிக்கடி கற்களையும் விழுங்குவது உண்டு.  இது எதனால் என்பது, உயிரியலாளர்களுக்கு தெளிவாக தெரியாமல் இருந்தது.

சில பறவைகள், கடினமான இரைகளை செரிமானம் செய்வதற்காக, நுண் கற்களை கொத்தித் தின்பது உண்டு.  அதுபோல, காட்டெருமை போன்ற கடினமான இறைச்சிகளை வேட்டையாடும் முதலைகளும், உண்ட இரை  சீக்கிரம்  செரிப்பதற்காக, கற்களை உண்பதாகவே உயிரியலாளர்களில் ஒரு தரப்பு கருதியது.

ஆனால், குட்டி முதலைகள் சிலவற்றை ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், நீருக்கு அடியில் அதிக நேரம் இருப்பதற்காக, தன் எடையை கூட்டுவதற்காகத் தான் கற்களை முதலைகள் உண்பதாக கண்டறிந்துள்ளனர்.

தன் உடலின் எடையில், 2.5 சதவீதம் எடையுள்ள கற்களை விழுங்கும் முதலைகள், வழக்கத்தைவிட, 88 சதவீதம் கூடுதல் நேரம் நீருக்கடியில் வலம்வர முடிந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

 

பாலங்கள், கட்டடங்கள், குழாய்கள் போன்றவை துருப்பிடித்து பலவீனமடைந்தால், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். துருப்பிடிக்காமல் இருக்க பல வழிகள் இருந்தாலும், அவை, யாராவது நேரில் வந்து சோதித்துத் தான் தடுக்க முடியும்.

தானே துருவை அடைக்கும் ஒரு பொருள் இருந்தால், எப்படி இருக்கும்? அதைத்தான், அமெரிக்காவின் வடமேற்கு பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள் ளனர்.

படகு, நீரைக் கிழித்துச் சென்றதும், அதன் பின்னே நீர், மீண்டும் இலகுவாக ஒன்றிணைகிறது. அதேபோல, இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பூச்சு, இரும்பின் மேல் கீறல், விரிசல் ஏற்பட்டால் உடனே மூடிக்கொள்கிறது. இதனால் காற்று, நீர் போன்றவை பட்டு துரு உருவாகாமல் தடுக்க முடியும்.

வட மேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எண்ணெய் பசை அதிகமுள்ள ஒரு திரவத்தில், இலகு ரக கிராபீன் துகள்களைக் கலந்து உருவாக்கியுள்ள இந்த பூச்சு, திரவமாகவும், அதே சமயம் வழிந்து கீழே ஓடாமலும், உலோகப் பரப்பின் மீது பிடிப்புடன் இருக்கின்றது.

இதனால், உலோகத்தின் மேல் சிறு கீரல் விழுந்தாலும், அந்த இடத்தை இட்டு நிரப்பி, அந்த கட்டுமானத்தை காப்பாற்றிவிடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நவீன முப்பரிமாண அச்சு இயந்திரங்கள், பிளாஸ்டிக் முதல் எஃகு வரை பல பொருட்களில், வேண்டிய வடிவத்தை அச்சிட்டு எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், அவை ஒரு பொருளை அடுக்கடுக்காகத் தான் அச்சிடுகின்றன என்பதால், சில மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.

அண்மையில், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இந்திராசென் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு அதிவேக முப்பரிமாண அச்சு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.

இது, 30-,120 விநாடிகளுக்குள், ஒரு முழு பொருளையும் அச்சிட்டு கொடுத்துவிடுகிறது.

ஒரு புரஜக்டர் போன்ற கருவியில்,வடிவமைக்க வேண்டிய பொருளின் உருவத்தை ஒளி மூலம் பாய்ச்சி, அதை சுழலும் மேடையில், ஒளிபட்டதும் கெட்டியாகும் பாலிமர் அல்லது ஹைட்ரோஜெல் திரவத்தின் மீது படச் செய்தால், ஓரிரு நிமிடங்களில், சிறிய உதிரி பாகம் முதல் ஒரு சிறிய சிலை வரை அச்சிட்டு எடுக்க முடியும்.

அச்சிடப்பட்ட பொருளின் மேற்பரப்பு, பிற முப்பரிமாண அச்சு முறைகளில் தயாரிக்கப்பட்டதை போல கரடு முரடாக இல்லாமல், மிகவும் வழுவழுப்பாக இருக்கிறது.

விமான உதிரி பாகங்கள் முதல் சாதாரண திருப்புளி வரை அச்சிடும் திறன் கொண்டது, இந்த அச்சு இயந்திரம்.

Banner
Banner