மிதமிஞ்சிய போக்குவரத்து இரைச்சலுக்கும், இதய நோய் வருவதற்கும் தொடர்பிருப்பதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள், நார்வே மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த, 1.44 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தினர். அதிக போக்குவரத்து இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் சோதித்தனர். அதில் பலருக்கு இரைச்சலால் ஏற்படும் நாள்பட்ட மனச்சோர்வு போன்ற காரணங்களால், ரத்தத்தில், இதயநோய் பாதிப்பைக் காட்டும் புரதங்கள் இருப்பது தெரிய வந்தது. காற்று மாசுபாடும் இதய நலனை பாதிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

****

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலுள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் மிலானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இணைய அடிமைகளுக்கு ரத்த அழுத்தம் மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். தினமும் அதிக நேரம் இணையத்தை பயன் படுத்தும் வழக்கம் உள்ளதாக ஒப்புக்கொண்ட, 144 பேரிடம் நடத்தப் பட்ட அந்த ஆய்வில், இணையத்தை பயன்படுத்தி முடித்து எழும்போது, ரத்த அழுத்தம், 3-4 சதவீதம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அதேபோல ஆய்வில் கலந்து கொண்டவர்களின் இதயத் துடிப்பும் கூடுதலாக இருந்தது. இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை அல்ல. என்றாலும், அவர்களுக்கு உளவியல் பதற்றம் தொற்றிக் கொள்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு, ‘பிலோஸ் ஒன்’ இதழில் வெளியாகியுள்ளது.

****

பிரபஞ்சத்தின் காலவெளிப் பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு அலைகளை கண்டறியும், ‘லிகோ’ ஆய்வகம், அண்மையில் மூன்றாவது முறையாக, ஈர்ப்பலைகளை கண்டறிந்துள்ளது. முதல் இரு ஈர்ப்பலைகளைப் போலவே, இந்த ஈர்ப்பு அலையும், இரு பெரும் கருந்துளைகள் இணைவதால் ஏற்பட்டவையே என, லிகோ விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியனைவிட, 49 மடங்கு பெரிய கருந்துளைகள் அவை என்றும், அவற்றின் இணைப்பு பூமியிலிருந்து, 3 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றும், லிகோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

****

மூக்கின் வழியே நுரையீரலை சென்று தாக்கும், புளூ வைரஸ்களை தடுக்க, புதிய முறையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நுரையீரலில், வைரஸ்களை எதிர்க்கும் டி.ஆர்.எம்.எஸ்., என்ற செல்கள் உண்டு. ஆனால், ஆய்வகத்தில் அந்த செல்கள், அதிக காலம் உயிரோடு இருப் பதில்லை. இதனால் அவற்றை வைத்து தடுப்பு மருந்தை உரு வாக்க முடியாமலிருந்தது. மெல்போர்ன் விஞ்ஞானிகள், மனித மூக்கில் உள்ள திசுக்களிலும் அந்த செல்கள் இருப்பதையும், அவை அதிக காலம் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மூக்கில் உள்ள, டி.ஆர்.எம்.எஸ்., செல்களை வைத்து புளூ வைரசுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியுமா என,  தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

தோலை ஊடுருவிப் பார்க்கும் லேசர்!

சொரியாசிஸ் எனப்படும் சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும் தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண் களைத் தான் நம்ப வேண்டும்.

ஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொறி நோயை துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.

‘ஆர்சம்‘ என சுருக்கமாக அழைக்கப்படும், ‘ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ் கோப்பி’ தொழில்நுட்பம் மெல்லிய லேசர் துடிப்பு களை பயன்படுத்துகிறது.

லேசர் பட்டதும் தோலின் திசுக்கள் வெப்ப மடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் பகுதி, மீஒலி அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின் வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக் குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தக் கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க விளைவுகள் கிடையாது.

இந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின் நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்து வரால் முடியும் என்கின்றனர் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.
அடுத்த கட்டமாக தோல் புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றை கண்டறியவும் இக்கருவியை மேம் படுத்த உள்ளனர்.

குட்டி சில்லில் 30 பில்லியன் டிரான்சிஸ்டர்கள்!

நகத்தின் அளவே உள்ள, 5 நானோ மீட்டர் சிலிக்கன் சில்லில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களை பதித்து, புதிய சாதனை படைத்திருக்கிறது,  அய்.பி.எம்., இந்த சாதனைக்கு ‘சாம்சங் மற்றும் குளோபல் பவுண்டரீஸ்’ ஆகிய இரண்டும் உதவி யுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 7 நானோ மீட்டர் சிலிக்கான் தகடுகளில், 20 பில்லியன் டிரான் சிஸ்டர்களை, அய்.பி.எம்., பதித்து சாதனை புரிந்தது. ‘எக்ஸ்ட்ரீம் அல்ட்ராவயலட் லித்தோகிராபி’ என்ற அச்சு முறை மூலம், நேனோ அளவே உள்ள டிரான்சிஸ்டர்களை கச்சிதமாக பதித்துள்ளது, அய்.பி.எம்.தகவல்களை சேமிக்கவும், பரிமாறவும், அலசவும் டிரான்சிஸ்டர்கள் உதவுகின்றன.

இவ்வளவு டிரான்சிஸ்டர்களை, மிகக் குறுகிய இடத்திற்குள் குவித்திருப்பதால், இந்த சில்லுகள் மற்ற சில்லுகளை விட, மூன்று மடங்கு குறைவாகவே மின்சாரத்தை உறிஞ்சும். மேலும், இவற்றின் தகவல் பரிமாற்ற வேகமும், பல மடங்கு அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அய்.பி.எம்., உரு வாக்கிய, 7 நேனோ மீட்டர் சில்லுகளே, 2018இல் தான் சந்தைக்கு வரவுள்ளன.

எனவே, 5 நானோ மீட்டரில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட இந்த சாதனைச் சில்லு, சந்தைக்கு வர நான்கு ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது.  

அழிவை நோக்கி இந்திய தேனீக்கள்1

இந்தியாவில் தேனீக்களின் எண்ணிக்கை அழிந்து வருவதாக, ‘பயாலஜிகல் கன்சர்வேஷன்’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  அதிலும் குறிப்பாக, ஒடிசாவில் சில வகை தேனீக்களின் வரத்து, 2002லிருந்தே காணவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித் துள்ளனர். காடுகள் அழிப்பு, பூச்சி மருந்துகளின் பயன் அதிகரிப்பு, ஒரே பயிர் வகையை விதைப்பது போன்றவை தேனீக் களுக்கு ஆபத் தை விளைவித்திருப்பதாக, அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

பிளவில் அண்டார்டிகா பனிப்பாறை

மேற்கு அண்டார்டிகா பகுதியில் உள்ள, ‘லார்சன் சி’ என்ற பிரம்மாண்ட பனிப்பாறை, அண்மையில், 17 கி.மீ., நீளத்திற்கு பிளவு பட்டுள்ளது. இந்த பிளவு மேலும் தொடர்வதாக, பிரிட்டனைச் சேர்ந்த, ‘புராஜக்ட் மிடாஸ்’ என்ற விஞ்ஞானிகளின் அணி கணித்துள்ளது.

ஏற்கெனவே லார்சன் ஏ என்ற பனிப்பாறை, 1995லும், லார்சன் பி என்ற பனிப்பாறை, 2002லும் உடைந்து கடல் நீரில் மிதக்க ஆரம்பித்தன. இப்போது அவற்றுக்கு அருகில் உள்ளதும், அந்த இரண்டையும் விட பெரியதுமான, லார்சன் சி பனிப்பாறை அதே ஆபத்தில் உள்ளது. பனிப்பாறைகள் உடைந்தால், கடல் மட்டம் உயரவும், நிலப்பரப்பு குறையவும் நேரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் 319 புதிய வகை தாவரங்கள்!

இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு துறை, 2016இல் மட்டும், 319 புதிய தாவர வகைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதில், 206 தாவரங்கள், அறிவியலுக்கே புதியவை. மீதமுள்ள 113 தாவரங்கள், இதற்கு முன் காணப்படாத, புதிய பகுதிகளில் செழித்து வளர ஆரம்பித்துள்ளவை. காட்டு ஏலம், காட்டு இஞ்சி, காட்டு நெல்லி போன்ற புதிய வகைகள், மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு உதவக்கூடும் என, கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும், புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. என்றாலும், அதிகபட்சமாக, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில், 17 சதவீதமும், கிழக்கு இமாலய பகுதிகளில், 15 சதவீதமும், மேற்கு இமாலய பகுதிகளில், 13 சதவீதமும் புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை; இது புரதத்துடன் இணைந்து கொழுப்புப் புரதமாக’   மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும்; அதிகரித்தால், ஆபத்து காத்திருக்கும்.

கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல்.  என மூன்று வகைப்படும்: இவற்றில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. ரத்தத்தில் எல்.டி.எல். 100 மி.கி./ டெ.லி.க்குக் குறைவாகவும், வி.எல்.டி.எல். 25 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். அளவு அதிகரித்தால், இவை இரண்டும் கல்லீரலிலிருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் கெட்ட கொழுப்பு’ என்கிறோம்.

அதேவேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. எப்படி? இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கரைத்துவிடுகிறது. இதன்மூலம் இதயத் தமனியைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாப்பு தருகிறது. ஆகவே, இதற்கு நல்ல கொழுப்பு’ என்று பெயர். இது ரத்தத்தில் ஆண்களுக்கு 40 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

கொழுப்பு என்றாலே அது இதயத்தை மட்டும் தாக்கும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. அது மூளையைத் தாக்கிப் பக்கவாதத்தை ஏற்படுத்தும்; சிறுநீரகத்தைப் பாதிக்கும்; கல்லீரலைக் கெடுக்கும்; கை, கால் ரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டால், கை, காலை அகற்ற வேண்டிவரும். எனவே, ரத்தக் கொழுப்பைக் குறைத்தால், இதயம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கு முதல் வழி தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தினமும் 45 நிமிடங்கள் வீதம் குறைந்தது வாரத்துக்கு அய்ந்து நாட்களுக்குத் தொடர்ந்து தீவிர நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது கல்லீரலில் ஹெச்.டி.எல்.லை சுரக்கிற என்சைம்கள் தூண்டப்படுகின்றன. இதன் பலனால் இரண்டு மாதங்களில் 5%, ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். மேலும், நல்ல நடைப்பயிற்சி உடல் எடையையும் குறைக்கும். அப்போது, 3 கிலோ எடை குறைந்தால் 1% ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். நடைப்பயிற்சியின்போது மன அழுத்தம் குறைவதால், சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்துக் கல்லீரல் என்சைம்களைத் தூண்டுகின்றன. அப்போது ஹெச்.டி.எல். அதிகரிக்கிறது. என்றாலும், நல்ல கொழுப்பை அதிகரிக்க இவை மட்டுமே போதாது.

உடல் எடை சரியாக இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது ஆகாது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். ஸ்டேட்டின்’ மாத்திரைகளைச் சாப்பிடலாம். செக்கில் ஆட்டப்பட்ட தாவர எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண் ணெய், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்துள்ள பட்டாணி, அகத்திக்கீரை, அவரைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழிகளும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.

முட்டை, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, நெய், வெண்ணெய், பாலாடை, தயிர், இனிப்பு உணவுகள், ஐஸ்கிரீம், பீட்ஸா, பர்கர், கிரீம் கேக், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இவற்றை அடிக்கடி சாப்பிடாதீர்கள். வனஸ்பதி, பாமாயில் பயன்பாட்டைத் தவிருங்கள். வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, மிக்சர், முறுக்கு, காரச்சேவு, சீவல், சிப்ஸ், முட்டை போண்டா போன்ற நொறுக்குத்தீனிகளுக்கும், குக்கீஸ், வேஃபர், நூடுல்ஸ், கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற உடனடி உணவுகளுக்கும் துரித உணவுகளுக்கும் விடை கொடுங்கள். இவற்றில் ஊடுகொழுப்பு அதிகம். அது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.

கழுத்து வலிக்குத்
தலையணை வைத்துப் படுக்கலாமா?

சுகமான உறக்கத்துக்குப் படுக்கையும் தலையணையும் சரியாக அமைய வேண்டும். முக்கியமாக, கழுத்து எலும்புகளையும் நரம்புகளையும் வளைவுகளையும் சரியான உயரத்திலும் கோணத்திலும் தாங்கும் வகையில் தலையணை இருக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும். அவரவர் விருப்பத்துக்குத் தலையணை வைத்துக்கொண்டால், உறக்கம் வராமல் தவிப்பதற்கு தலையணையும் ஒரு காரணமாகிவிடும்.

பொதுவாக, ஒரு டர்க்கி டவல் அளவுக்கு மென்மை யான துண்டை, நான்காக மடித்தால் வரும் உயரம் போதும். இன்னும் தேவைப்பட்டால், சிறிய துண்டு ஒன்றைத் தலையணையின் மேல் விரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கையை மடக்கித் தலையணையில் வைத்துக் கொள்ளலாம்.

மிருதுவான தலையணையைப் பயன்படுத்த வேண் டியது முக்கியம். இரண்டு தலையைணைகளை வைத்துக் கொள்வது, உயரம் அதிகம் கொண்ட தலையணை அல்லது கெட்டியான தலையைணையைப் பயன்படுத்துவது போன் றவற்றால் மட்டுமே பிரச்சினைகள் ஏற்படும்.

சிறு குழந்தைகளுக்கு எலும்புகள் மென்மையாக இருக்கும். இவர்களுக்கு உயரமான தலையணையும் ஆகாது. கரடுமுரடான தலையணையும் கூடாது. மிகவும் குறைந்த உயரமுள்ள இலவம் பஞ்சுத் தலைணையைப் பயன்படுத்தினால் நல்லது.

கழுத்துவலி உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப் பதே நல்லது. இது எல்லோருக்குமான பொதுவான ஆலோசனை. இதைப் பின்பற்ற முடியாதவர்கள், சிறிய தலையணையைக் கழுத்துக்கு வைத்துக் கொள் வதோடு, சிறிது இறக்கி, தோள்களுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டால், கழுத்துத் தசைகளுக்கு முழுவதுமாக ஆதாரம் கிடைக்கும். இதனால், கழுத்து வலி குறைய வாய்ப்புண்டு. செர்விகல் தலையணை  என்ற பெயரில் சிறப்புத் தலை யணை உள்ளது. மருத்துவர் ஆலோசனைப்படி அதையும் பயன்படுத்தலாம்.

கழுத்துவலி உள்ளவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால் கழுத்துத் தசைகளுக்கு அழுத்தம் அதிகரித்து கழுத்துவலி கடுமையாகிவிடும். காற்றடைத்த தலையணைகளைக்  கழுத்துவலி உள்ளவர்கள் கண்டிப் பாகப் பயன்படுத்தக்கூடாது. அடுத்து, கழுத்துவலி உள்ள வர்களுக்கு முதுகுவலியும் இருக்குமானால், முழங்காலுக்கு அடியில் சிறு தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.

இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது; கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.

உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலை யணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபட லாம். இதனால் உறக்கம் கெடலாம்.

குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும் புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. மற்றவர்கள் தலையணையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை.

பருவநிலை மாற்றத் தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.

நிறம் தரக்கூடிய பாசி உருவாவதை தடுக்கின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறது

இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.

உடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பவள பாறைகளுக்கு இடையில் மீன்கள்படத்தின் காப்புரிமை   இந்த பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.

“ஆனால், எதிர்காலத்தில் காணப்படும் இந்த பவளப் பாறைகள் மிகவும் வேறுப்பட்டதாக இருக்கப்போகின்றன” என்று அவர்

பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

“ஏற்கெனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது நடைபெறும் காரியமல்ல. வேறுபட்ட இனங்களின் கலவை இதில் இருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போதைய நிலைமையில், கார்பன் வெளியேற்றம் தொடருமானால், ஆண்டுதோறும் நடைபெறும் பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போவது 2050க்குள் பல இடங்களில் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மரபணு மாற்றம் மூலம் புற்றுநோயை சரி செய்யலாம்:  லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை மரபணுவை மாற்றும் முறை மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற் றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும். முதற்கட்டமாக எலிகளின் மீது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டதில், இது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று உறுதிபடுத்த பட்டுள்ளது.

கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியரான ஜூஸ்ஸி டைபல் இதைப்பற்றிக் கூறுகையில், சாதாரண மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான உயிரணுக்கள் தனித்தனியே வளர்கிறது என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன் புற்றுநோய்க்கான மர பணுவை மட்டும் மாற்றுவது சாதாரண உயிரணுக் களின் வளர்ச்சிக்கு எந்த அபாயமும் விளை விக்காததோடு, புற்றுநோயைத் தடுக்கவும் செய்யும் என்று தெரியவந்துக் கொண்டோம் என்றார்.

மேலும் இது மிகவும் குறைவான நச்சுத்தன்மை வாய்ந்த தாகவும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயின் சிகிச்சைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வில் மார்பக, பெருங்குடல், சிறுநீரக பை, தைராய்டு புற்றுநோய்கள் மற்றும் நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா மற்றும் மைலோமா போன்ற பல வகையான புற்றுநோய் களுக்கு இத னால் தீர்வு காணமுடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பா இன மக்கள்

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராண வாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஷெர்பா இன மக்கள் தொடர்பான ஆராய்ச்சி படத்தின் காப்புரிமை தசை மாதிரிகளை கொண்டு சோதனை கடல் மட்டத்தில் உள்ள சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களைவிட இந்த ஷெர்பா இன மக்களின் பிராணவாயுப் பயன்பாட்டுத்திறன் அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகின்றது.

உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொள்கின்றனர் என்று கண்டறிய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

5,300 மீட்டர் உயரத்தில் உள்ள மலையேறுப வர்களின் தசை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக் கப்படுவது மற்றும் எவெரெஸ்ட் மலையின் அடிவார முகாமில் அவர்களை உடற்பயிற்சி செய்வதற்கான வண்டியை ஓட்ட வைப்பது போன்றவற்றை கொண்டதாக இந்த ஆய்வு அமைத்தது.

ஷெர்பா மக்களின் உடலில் உள்ள சாதகமான ஒரு மரபணு மாற்றமானது , அவர்களது இந்த நிலை களில் உயிர்வாழத் தேவையான ரசாயன வழிமுறை யை ( மெட்டபொலிசம்) அவர்களுக்கு அளிக்கின்றது என்கிறது அந்த ஆய்வு. இமயமலைப் பிரதேசத் தைப் பார்க்கவரு பவர்களை விட, குறைந்த பிராண வாயு உள்ள சூழலில் ஷெர்பா மக்கள் மட்டும் மூச்சுத் திணறலை சமாளிக்க முடிகிறது என்பது நீண்டகாலமாக ஒரு புதிராக இருந்தது குறிப்பிடத்தக்கதது.

உணவு உண்ண தூண்டும் பாக்டீரியாக்கள்

உயிரினங்களின் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிக்க உதவுவது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அந்த பாக்டீரியாக்கள், தாங்கள் குடியிருக்கும் விலங்கின் மூளைக்கு தகவல் தெரிவித்து, இன்ன வகை உணவை உண்ணும்படி துண்ட முடியுமா... முடியும் என்கிறது, ‘புளோஸ் பயாலஜி’ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை.

ஈக்களின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறிப்பிட்ட உணவுகளை உண்ணும்படி, பாக்டீரி யாக்களால், ஈக்களின் மூளைக்கு தகவல் அனுப்ப முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

சோதனைக்கு சில துளி உலர் ரத்தம் போதும்!

மருத்துவர்கள், நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளை எடுத்து, சேகரித்து, பாதுகாத்து வைப்பது, மிகவும் செலவு பிடித்த வேலை. இதற்கு, சுவீடனைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மாற்று வழிகளைத் தேடினர். சுவீடனிலும், டென்மார்க்கிலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருந்த, உலர் மற்றும் திரவ ரத்த மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

கடைசியில், உலர் ரத்த மாதிரிகளில், சில புரதங்கள் அழியத் துவங்கியிருந்தாலும், பெரும்பாலான ரத்த வேதியியல் அம்சங்கள் பாதுகாப்பாகவே இருந்ததை உறுதி செய்தனர். எனவே நோயறி தலுக்காக எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை, அதற்கென உள்ள காகிதத்தில், சில சொட்டுகளை ஒற்றி வைத்தாலே போதும் என்ற முடிவுக்கு, உப்சாலா ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

இதனால், மருத்துவ சோதனைக் கூடங்களுக்கு நோயாளிகள் போக வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே, சில சொட்டு ரத்த மாதிரியை எடுத்து, காகிதத்தில் ஒற்றி, தபாலில் அனுப்பினாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், ‘மாலிக்யூலர் ஆண்ட் செல்லுலர் புரோடியோமிக்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளன.


Banner
Banner