மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை.

ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது.

இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப் பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் திருப் பினால், விமானம் வேகமாக பறந்து செல்லும்.

ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 300 கி.மீ., துரத்தை ஈகிளால் பறந்து கடக்க முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் அது பறக்கும் என்பதால் தான், அதை ஜெட் விமானம் என்று லிலியம் சொல்கிறது.


‘பேஸ்புக்‘கின் ஒரு பிரிவு, மூளை -கணினி இடைமுகத் தொழில்நுட்பத்தில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால், எவரும், நினைத்ததை, நினைத்த வேகத்தில், கணினியில் தட்டச்சு செய்ய முடியும்.

இதே தொழில்நுட்பத்தை, வேறு பல ஆராய்ச்சி நிலையங்களும் சோதித்து வருகின்றன. ஆனால், பேஸ்புக்கின் தொழில்நுட்பம், மூளைக்குள் அறுவை சிகிச்சை மூலம், எந்த கருவியையும் வைக்காமல், ‘ஸ்கேனர்’ ஒன்றை தலைக்கு அருகே வைத்து, மூளையில் சிறு மின் அலைகளாக உதிக்கும் எண்ணங்களை படித்து, புரிந்து கொண்டு, அவற்றை எழுத்துக்களாக கணினி திரையில் காட்டும் திறன் கொண்டது.

விரல்களால் விசைப் பலகையில் தட்டச்சு செய்வோர், நிமிடத்திற்கு, 35 முதல், 75 சொற்கள் வரை தட்டச்சு செய்வர். தற்போது வந்துள்ள குரல் உணர் தொழில்நுட்பங்கள் அதைவிட வேகமாக செயல்படுகின்றன.ஆனால், மனதில் எண்ணம் உதிக்கும் வேகம் அதிகம்.

எனவே, பேஸ்புக்கின் மூளை-க்கணினி இடைமுகத்தை பயன்படுத்துபவரால் நிமிடத்திற்கு, 100 சொற்கள் வரை தட்டச்சு செய்ய முடியும். அடுத்து, பிறர் பேசுவதை கேட்பதற்கு, மனிதத் தோலை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பேஸ்புக் உருவாக்கி வருகிறது.

மனித தோல் மீது சில உணர்வான் கருவிகளை வைத்து, குறிப்பிட்ட அலைவரிசை மூலம் தகவல்களை பரிமாற முடியும் என்கிறது பேஸ்புக். காது கேட்கும் திறன் இல்லாதவருக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.குறைப் பிரசவ குழந்தைகளை, மருத்துவமனையில், ‘இங்குபேட்டர்’ கருவியில் வைப்பது இன்று சகஜமாகியிருக்கிறது. இங்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் சில உணர்வான்களை பொருத்துவர்.

இந்த உணர்வான்கள், பிறந்த குழந்தை கை, கால்களை அசைக்க இடையூறாக இருப்பதோடு, சமயங்களில் தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதும் உண்டு.

இதற்கு மாற்றாக, குழந்தையின் உடலில் எதையும் பொருத்தாமல், கண்காணிக்க உதவும் கருவியை, சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்களான இ.பி.எப்.எல்., மற்றும் சி.எஸ்.இ.எம்., ஆகியவற்றின் மருத்துவர்கள் உருவாக்கி யிருக்கின்றனர்.

அந்தக் கருவி வேறு எதுவுமில்லை, கேமராக்கள் தான்! பிறந்த பச்சிளங் குழந்தையின் இதயம் துடிக்கும்போது, அதன் நெற்றிப் பகுதியில் அத்துடிப்பால் மாற்றம் வந்து வந்துபோகும். மேலும் சுவாசிப்பதை கண்காணிக்க குழந்தையின் நெஞ்சாங்கூடு மற்றும் தோள் பகுதிகளை கவனித்தாலே போதும். இந்த இரண்டையும் இரு சிறப்பு கேமராக்கள் படம் பிடித்தபடியே இருக்கும்.

இரவில், விளக்குகளை அணைத்த பிறகும், அகச்சிவப்பு ஒளியில் குழந்தையின் அறிகுறிகளை இக் கேமராக்கள் கண்காணிக்கும். இயல்புக்கு மாறான அறிகுறிகள் தோன்றும்போது, கேமராவின் தகவல்களை கவனிக்கும் மென்பொருள் நிரல், உடனே கண்டுபிடித்து செவிலியரை எச்சரிக்கும்.

தன் குழந்தை பிறந்ததுமே, சிக்கலான மின் கம்பிகளுக்கு மத்தியில் படுத்திருப்பதை பார்க்க நேரும் பெற்றோருக்கு, இப்புதிய கண்காணிப்பு கேமராக்கள் பெரும் ஆறுதலாக இருக்கும்.

Banner
Banner