சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதுவும் கோடை வந்துவிட்டால் தண்ணீரைத் தேடி பெண்கள் அலையும் நிலை துயரமானது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேள்வரை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தண்ணீர்த் தட்டுப் பாட்டுக்குத் தீர்வு கண்டிருப்பதோடு அது தொடர்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கின்றனர்.

கடலோரப் பகுதியான மீமிசலிலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது வேள்வரை கிராமம். நிலம், நீர், காற்று என எல்லாமே உப்பாகிப்போன அந்தக் கிராமத்தில் சுவையான குடிநீரைப் பெறுவதற் காகத் தொழுவனாற்றில் உள்ள ஒரு மணல் திட்டை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த ஆறு குறித்துக் கேட்டால் மணல் கொள்ளையர்களா நீங்கள் எனக் கேட்டு எச்சரிக்கிறார்கள் பெண்கள்.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விளையக் காரணமாக இருந்த தொழுவனாற்றை ஒட்டியுள்ள குளங்களில் மழை நீர் தேக்கிவைக்கப் பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் அரசு மூலம் விநியோகிக்கப் பட்ட குடிநீரும் உப்புத் தன்மையின்றி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் மணல் சூறையாடப்பட்டதால் விவசாயம் பொய்த்தது. பிறகு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஆற்றில் மணல் இல்லாததால் முன்புபோல ஊற்று தோண்டவும் வழியில்லை. இதைச் சமாளிக்க அங்கே கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர்த் திட்டமும் பயனளிக்கவில்லை. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் விலை கொடுத்துக் குடிநீர் வாங்கும் சக்தியும் இப்பகுதி மக்களிடம் இல்லை.

மணல் அள்ளியதுதான் குடிநீர்ப் பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிந்தாலும் பக்கத்துக் கிராம மக்களால், அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சுதாரித்துக்கொண்ட வேள்வரை கிராம மக்களோ ஆற்றில் பனை மரங்களுக்கிடையே சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மணல் திட்டைப் பாதுகாத்துவருகிறார்கள். அந்த இடத்தில் பள்ளம் தோண்டி அதில் ஊறும் தண்ணீரை வேள்வரை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஒன்பது கிராம மக்களும் பயன்படுத்துகின்றனர்.

மழைக் காலத்தில் இலகுவாகத் தண்ணீர் எடுத்துவிடும் மக்கள், வெயில் காலத்தில் சிரமப்படுகிறார்கள். அப்போது ஒரு குடம் எடுக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதனால்தான் குடிநீரை அவர்கள் தங்கம்போல் பாவிக்கிறார்கள்.

மணலே ஆதாரம்

இன்றும் வீட்டில் காதுகுத்து, கல்யாணம் போன்ற விசேஷ நாட் களில் ஆற்றில் பள்ளம் தோண்டித் தண்ணீர் எடுத்து மாட்டுவண்டியில் எடுத்துப் போகிறார்கள். பங்காளி வீட்டுப் பெண்களுக்கான முக்கிய வேலையே அதுதான் என்று சிரித்தபடியே சொல்கிறார்கள் அங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண்கள்.

இந்த மணல் திட்டிலிருந்து மணலை அள்ள பலர் முயன்றுள்ளார்கள். ஊர் மக்கள் இரவும் பகலும் காவல் காத்து அதை முறியடித்துள்ளனர். ஊருக்குள் நுழையும் அந்நியர்களை நன்கு விசாரித்த பிறகே அனுமதிக் கிறார்கள். அந்த மணல் திட்டைப் பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம்கூட மனுவும் கொடுத்திருக்கிறார்கள்.

 

உழைப்பால் இணைந்த கைகள்

இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட சாலையில் சென்றால் பழமையான பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயில் வரவேற் கிறது. சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற் சாலையின் (அய்சிஎப்) கதவுகள் பலத்த பாதுகாப்புக்கிடையே திறக்கப்படுகின்றன. நெருப்பால் உருவான ஒளி வெள்ளத்தின் நடுவே அமர்ந்து ரயில் பெட்டியின் பாகங்களைப் பற்றவைத்துக் கொண்டிருந்தனர் பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்கள். அந்தக் கவசங்களுக்குப் பின்னால் உழைத்துக்கொண்டிருந்தவர்களில் பெண்கள் சிலரும் இருந்தார்கள்.

நீண்ட ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபட்டுவருவது, முன்னேற்றத்தின் குறியீ டாகவே தெரிகிறது. சென்னை அய்சிஎப்பில் மட்டும்

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது போன்ற கடினமான பணிகளில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரு கிறார்கள். இந்நிலையில் 2018 மகளிர்  நாளை முன்னிட்டு அய்சிஎப் தொழிற்சாலையில் பெண்களை மட்டும் கொண்ட மகிளா என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த 30 பெண்கள், பயணிகள் ரயிலின் ஒரு முழுப் பெட்டியைத் தயாரித்து இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தக் குழுவுக்குப் பொறுப்பாளராக இருக்கிறார் முதுநிலைப் பகுதிப் பொறியாளர் சாருலதா. சமீபத்தில்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும் தனக்குக் கொடுக்கப் பட்ட வேலைகளைச் சிறப்பாக முடிப்பதுடன் குழுவினரை ஒன்றிணைத்துச் செயல்படுவதிலும் பாராட்டைப் பெற்றுள் ளார். இந்தக் குழுவில் 27 வயதிலிருந்து 57 வயதுவரையுள்ள முதுநிலைப் பொறியாளர்கள், வெல்டர்கள், ஃபிட்டர்கள், உதவியாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பெண் ஊழி யர்கள் உள்ளனர். இந்த உற்சாகமான பெண்கள் அணியைச் சந்திக்கச் சென்றபோது ரயில் பெட்டியின் கனமான ஒரு பாகத்தை வெல்டிங் செய்வதற்காகத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்தார் 57 வயதாகும் வசந்தா.

வெல்டிங் பிரிவில் வயதில் சீனியரான வசந்தாவை அங்குள்ள அனைத்து ஊழியர்களும் வசந்தாம்மா என்று அன்பாக அழைக்கிறார்கள். கணவர் இறந்த பிறகு அவருடைய வேலை வசந்தாம்மாவுக்குக் கிடைத்துள்ளது. முதலில் ரயில்வே உணவகத்தில் பணியாற்றிவந்த வசந் தாம்மா பின்னர் ரயில் பெட்டிகள் செய்யும் தொழிற் சாலையில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 2014 முதல் வெல்டராகப் பணியாற்றிவருகிறார்.

நான் உதவியாளரா இருந்தப்ப மத்தவங்க வெல்டிங் செய்யறதை ஆசையா பார்ப்பேன். அப்போதிருந்தே வெல்டிங் மேல ஆர்வம் ஏற்பட்டுப்போச்சு. இந்த வயசுல வீட்டுல இருந்தா சோம்பேறியா ஆகிடுவோம். வேலை செய்யறதுக்கு உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உழைச்சிட்டே இருக்கணுங்கறதுதான் என் ஆசை என்று சிரித்தபடியே சொல்கிறார் வசந்தா. ஒரு முறை வெல்டிங் செய்துகொண்டிருந்தபோது வசந்தாவின் புடவையில் தீப்பிடித்துக்கொண்டது. இதனால் அவருடைய கால் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த விபத்து நடந்த இரண்டே மாதத்தில் புல்லட் ரயில்போல் அவர் வேலைக்குத் திரும்பியதை மற்ற ஊழியர்கள் ஆச்சரி யத்துடன் நினைவுகூர்கிறார்கள்.

ஃபிட்டர் முனீஸ்வரி

ஒரு ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கான துணை பாகங்கள் ஒன்றிணைக்கப்படும். ஒவ்வொரு பாகத்தையும் கச்சிதமாக இணைப்பதில் பலரது பாராட்டையும் பெற்றவர் ஃபிட்டராகப் பணிபுரிந்துவரும் முனீஸ்வரி. ரயில் பெட்டியைத் தயாரிக்கும் இடத்தில் முனீஸ்வரி இருந்தால் வெல்டரின் பணி சுலபமாகிவிடுமாம். ஃபிட்டராக வேலை செய்வதற்கு முன்பு அய்சிஎப்பில் துப்புரவுப் பணியாளராக இருந்துள்ளார். இங்கு ஃபிட்டராகப் பணியாற்றிவந்த அவருடைய தந்தை மரணமடைந்த நிலையில் அந்த வேலை முனீஸ்வரிக்குக் கிடைத்தது.

இதெல்லாம் ஆண்கள் செய்யும் வேலை, உனக் கெல்லாம் இது எதுக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா எனக்கு இந்த மாதிரி வேலைதான் பிடிச்சிருக்கு. கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் வேலை பார்த்த மாதிரி இருக்கும். அதேபோல் இங்க எங்ககூட வேலை செய்யற ஆண்கள் எல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காங்க. இங்க இருக்கிற பெண்கள் எல்லாம் தைரியமாக வேலை செய்கிறோம் அதுக்கு ஆண் ஊழியர்களோட பங்கு முக்கியமானது என சக ஊழியர்களைப் பற்றிச் சொல்கிறார் முனீஸ்வரி.

மகிளா குழுவில் மிகவும் இளையவரான கலைவாணி, அய்சிஎப்பில் உள்ள தொழிற்பயிற்சி மய்யத்தில் படித்தவர். ரயில்வே தேர்வில் வெற்றிபெற்று நான்கு ஆண்டுகளாக வெல்டராகப் பணியாற்றிவருகிறார். நான் ஸ்கூல் படிச்ச போது அய்சிஎப் பத்தி எதுவும் தெரியாது. என் அம்மாதான் இதைப் பத்தி எடுத்துச் சொன்னாங்க. அவங்க எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. கட்டட வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வச்சாங்க. அம்மாதான் நிறைய பேர்கிட்ட விசாரிச்சு ரயில்வே தொழிற்பயிற்சி மய்யத்தில் படிக்கறதுக்கு என்னைச் சேர்த்துவிட்டாங்க. நான் இன் னைக்கு இந்த அரசாங்க வேலையில் இருக்கேன்னா, அதுக்கு எங்க அம்மாதான் காரணம் என்கிறார் கலைவாணி.

தற்போது இந்தப் பெண்கள் குழுவினர்  ஜிக்ஷீணீவீஸீ 18 என்ற புதிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட ரயிலைத் தயாரிப் பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் வெற்றி நிச்சயம் என்பதை அவர்களது செயலில் வெளிப்படும் வேகம் உணர்த்துகிறது.

 

ஈராக்கில் செங்கொடி

பறக்கவிட்ட முதல் பெண்

ஈராக்கின் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. அந்தத் தேர்தலில், ஈராக்கின்  நகரான நஜாபில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாப் அல் கதீப் எனும் பெண் வெற்றி பெற் றுள்ளார்.

அத்துடன், 2008இல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகக் காலணி வீசிய பெண் பத்திரி கையாளர் மும்தாஸ் அல் செய்தி என்பவரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள் ளார்.  இசுலாமிய நாட்டில், அதுவும் அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல் படும் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது ஆட்சி யாளர்கள் மீதான மக்களின் வெறுப்பையும் எதிர் காலத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.

 

மலேரியா கிருமிகள் தொற்றிக்கொண்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்துக்கூட, அந்த நோய் இருப்பதை கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன. இந்த நிலையில், எந்த அறிகுறிகளுமே இல்லாமல் மலேரியா கிருமிகளை சுமப்போருக்கு, அந்த நோய் இருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியம்.

இந்த நிலையில் மலேரியாவை சுமப்பவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் தனித் தன்மையுடன் இருக்கும் என்பதை மேற்கு கென்யாவில் உள்ள மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்களால் இதை முகர்ந்து பார்த்து துல்லியமாக சொல்லிவிட முடியும் என்று பொருளல்ல. தோல் மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து கேஸ் குரோமடோகிராபி, மாஸ் ஸ்பெக்ட்ரோகிராபி சோதனைகள் மூலம், மலேரியா கிருமித் தொற்று உள்ளோரையும், இல்லாதோரையும் கென்ய மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது.

மேலும், அறிகுறிகள் உள்ளோர், அறிகுறிகள் இல்லாமலேயே ரத்தத்தில் மலேரிய தொற்றை சுமப்போரையும், மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது. இந்த கண்டுபிடிப்பு முறைப்படுத்தப்பட்டு பரவலானால், மலேரியா தாக்கியோரை விரைவில் கண்டறிந்து சிகிச்சையை சீக்கிரமே துவங்க முடியும்.

செவ்வாயில் பறக்கப்போகும் ஹெலிகாப்டர்!

மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக் காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’. ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம்.

மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா எடுத்துள்ளது. என்றாலும் பறவைப் பார்வையில் செவ்வாயின் மேற்பரப்புகளை படம்பிடித்து ஆராய்வதன் மூலம், அக்கிரகத்தைப் பற்றி நமக்கு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என, நாசா நம்புகிறது.

காற்று மாசை கண்டறியும் கருவி: தமிழக மாணவர்கள் சாதனை

நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது.

காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியா வசியமாகிவிட்ட பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு மாசுபடுத்துகிறது.

வாகனப்புகையில் கலந்துள்ள சல்பர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சுக்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கக்கூடிய காற்றை விஷமாக மாற்றுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந்த பொறியியல் மாணவர்களான முத்துக்கருப்பன், லியோ ஆல்டர்ன்ராஜ், மதன்ராஜ், மனோரஞ்சன் ஆகியோரது கண்டுபிடிப்பு தான் “ஃபால்கான்”.

இந்த கருவி காற்றில் உள்ள நச்சுக்களை படம்பிடித்து அதை அப்படியே கணினியில் காட்டுகிறது.  இந்த ஃபால்கான் கருவியானது கண்காணிப்பு கேமரா மற்றும் இணைய இணைப்பு கொண்ட கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

ஃபால்கானை ட்ரோனுடன் இணைத்து பறக்கவிடும் போது பறக்கும் பகுதியில் எவ்வளவு வாகனங்கள் உள் ளன. அவற்றிலிருந்து வெளிவரும் புகையால் காற்றில் என்னென்ன நச்சுக்கள் எவ்வளவு விகிதத்தில் கலந் துள்ளன என்பதை இணைய இணைப்பு கொண்ட கணினியில் நேரிடையாக பார்க்கலாம். மேலும் கணினியின் வாயிலாகவே இந்த கருவியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இந்த ஃபால்கான் கருவியினை கூகுளுடன் இணைத்துக் கொண்டு வாகனம் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பொருத்தினால் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, அந்த இடத்தில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்கள், நச்சுக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். இந்த காற்று மாசு தகவலை அருகிலுள்ள காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையத்திற்கு தெரிவித்து காற்று மாசினையும் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இந்த ஒரு கருவியின் மூலம் நாம் சிறந்த பயன்களை பெறமுடியும் என்கின்றனர் இதனை வடிவமைத்த மாணவர்கள்.

காற்று மாசு

இது குறித்து பேசிய நான்கு மாணவர்களுள் ஒருவரான முத்துக்கருப்பன் கூறுகையில், “இந்தியாவில் காற்று மாசானது தொழிற்சாலை புகைகளுக்கு அடுத்து நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் தான். அதிலும் குறிப்பாக வாகன நெரிசலின் போது மட்டுமே இந்தியாவில் சுமார் 22 சதவிகித காற்று மாசடைகிறதாக இந்திய காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மொத்தமாக 39 காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 90 சதவிகித  அதாவது சுமார் 23 நிலையங்கள் மனித சக்தியால் இயங்கக் கூடியவையாக உள்ளன. இங்கு பயன்படுத்தக்கூடிய கண்காணிப்பு கேமராக் களானது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலானது. இந்த கேமராக்களால் பதிவுகளை சேமிக்க முடியும், நேரலையாக பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள ஃபால்கான் கருவியால் தகவல்களை சேமிப்பதோடு நேரலையாக பார்க்கவும் முடியும். இதனை நாங்கள் வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு உருவாக்கி யுள்ளோம்“, என்கிறார் மகிழ்வுடன்.

இந்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின் ஆதர வோடு பாம்பே அய்அய்டி நிறுவனமானது அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆலோசனைகளை அளிக்க கோரியது. அதாவது பொறியியல் படிக்கும் மாணவர் களிடமிருந்து உலக பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி அவற்றை காட்சிபடுத்தலாம் என்று கோரியிருந்தது. அதில் ஃபால்கான் கருவியோடு சாரநாதன் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து லியோ ஆல்டர்ன்ராஜ் என்ற மாணவர் கூறுகையில், “இந்த போட்டியில் இந்தியா முழுவதிலு மிருந்து சுமார் 256 கல்லூரிகள் கலந்து கொண்டன. அவற் றில் முதல் சுற்றில் 105 கல்லூரிகள் தேர்வாகின. இக் கல்லூரிகளில் 72 கல்லூரிகள் மட்டுமே தங்களது ஆய்வு ஆலோசனைகளை, கருவிகளின் மாதிரிகளோடு சமர்பித் தன. இந்தியாவை அய்ந்து மண்டலங்களாக பிரித்து 72 கல்லூரிகளுக்குக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.

தென்மண்டலத்திலிருந்து தேர்வான இரண்டு கல்லூரிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. அதில் எங்களது கல்லூரியும் ஒன்று. எங்களது ஆய்வுகளையும், ஆலோ சனைகளையும் மாதிரிகளோடு செயல்முறை படுத்திக் காட்டினோம். இந்த போட்டியில் எங்களது தயாரிப்பான ஃபால்கான் முதல் பதினெட்டு இடங்களுக்குள் தேர்வாகியுள்ளது. இதனை மேலும் செம்மைபடுத்தி, நவீனப்படுத்த முயன்று வருகிறோம். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது பெற்றோர், கல்லூரி நிர்வாகம், முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என அனைவரும் முழு ஆதரவளித்து, ஊக்கப்படுத்தினர்”, என்றார் அவர்.

மாணவர்களின் சாதனை

இம்மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியை காயத்ரி கூறுகையில், “ஃபால்கான் எனும் இந்தக் கருவியை அவர்களாகவே யோசித்து உருவாக் கியது. அவர்களை சுதந்திரமாக யோசிக்க விட்டதால் பல கல்லூரிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் முதல் பதினெட்டு இடங்களுக்குள் வர முடிந்தது. இதற்கு அவர்களின் முயற்சியே காரணம்.

அடுத்த கட்டமாக இந்தக் கருவிக்கு காப்புரிமை பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்தக் கருவி எதிர்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். திறமையும், உழைப்பும் நூறு சதவீதம் மாணவர்களுடையதே. நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி, முன்னேறும் வழியை காட்டும் வழிகாட்டி களாக மட்டுமே உள்ளோம்,” என்கிறார் இந்த உதவிப் பேராசிரியை.

மண் மற்றும் தண்ணீர் மீதான விழிப்புணர்வை பெற்ற அளவிற்கு மக்கள் மத்தியில் காற்றை பற்றிய விழிப் புணர்வானது குறைவாகவே உள்ளது. அடுத்த தெருவிற்கு கூட நடக்காமல் வாகனத்தில் செல்வதால் காற்றில் என்ன மாதிரியான நச்சுக்கள் கலந்து மாசடைகிறது என்பதை கண்முன்னே காட்சிப்படுத்தி காட்டுகிறது ஃபால்கான்.

மாற்று எரிபொருளுக்கான மாபெரும் தேடலை மேற்கொண்டி ருப்பவை கார்கள் மட்டுமல்ல, லாரிகளும்தான். அமெரிக்காவிலுள்ள ‘நிக்கோலா மோட்டார்ஸ்,’ ஹைட்ரஜனில் ஓடும் கனரக லாரிகளை தயாரித்து வருகிறது.

ஹைட்ரஜனை ஒரு முறை நிரப்பினால், 1,280 முதல் 1930 கி.மீ., வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது தங்களின் ‘நிக்கோலா ஒன்’ என்கிறது நிக்கோலா மோட்டார்ஸ்.

மதுபானங்களை விற்கும் ஆன்ஹியுசர் புஷ் நிறுவனம், அண்மையில் நிக்கோலாவிடம் 800 ஹைட்ரஜன் லாரிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

பிரபலமான மது மற்றும் பீர் பானங்களை தயாரித்து விற்கும் ஆன்ஹியுசர், தனது ‘சரக்கு’களை லாரிகள் மூலமே வினியோகிக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என, மின்சார லாரி உட்பட பல மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.  நிக்கோலாவின் லாரிகளை, 2019இல் தங்கள் நிறுவனத்தில் ஆன்ஹியுசர் பன்படுத்த ஆரம்பிக்கும்.

நிக்கோலா ஒன் லாரியில் பயன்படும் ஹைட்ரஜனால், துளிகூட காற்று மாசு ஏற்படாது.  எனவே, ஆன்ஹியுசர் பயன்படுத்தும், 800 ஹைட்ரஜன் லாரிகளால், ஆண்டுக்கு 13 ஆயிரம் பெட்ரோலிய கார்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க முடியும்.

ஹைட்ரஜன் லாரிகள் உலகெங்கும் பரவலானால் நிச்சயம் காற்று மற்றும் ஒலி மாசு வெகுவாக குறையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சுற்றுலாவினால் காற்று மாசுபடுகிறதா?

உலகின் 92 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காற்று, பலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய அளவுக்கு கெட்டுள்ளது. இப்படி மாசு ஏற்படுவதற்கு, என்னென்ன தொழில்கள் காரணம் என, ஆராய்ந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

அண்மையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக காற்று மாசுபாட்டில்  சதவீதம், சுற்றுலா பயணம் மேற்கொள் பவர்களால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுற்றுலா செல்வோர் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியேற்றும் புகையால் மட்டுமல்ல, அவர்கள் பொருட்களை வாங்குவது, உண்ணும் உணவு போன்றவற்றாலும் காற்றில் நச்சுக்கள் கலக்கின்றன. இந்த ஆய்வு 2009லிருந்து 2013 காலகட்டத்திற்குள் மட்டுமே ஏற்பட்ட பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, எந்தெந்த நாடுகளில் சுற்றுலாவால் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டது... அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த நாடுகளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால்தான் அதிக அளவுக்கு காற்று மாசு ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’

சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணை மண்டலத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டி களின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது.

“முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்ற போது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணை மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை,” என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித் தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ணிகீ 95 என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ்  என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், “2004 ணிகீ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும்.

இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது,” என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், “கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை,” என்று கூறு கிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் அனுமானம்‘  தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண் டிருக்கலாம். 2004 ணிகீ 95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது.

2004 ணிகீ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல். நாசாவின் நியூ ஹாரிசான்ஸ்  ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தரவுகளை அறிய முடியும்.

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு

அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற அய்ரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்  சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது.  பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித்ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்

Banner
Banner