ஒரு சிறிய ட்ரோன் பறப்பதற்கு தேவையான கனமில்லாத, மிகச் சிறிய மோட்டார் கிடைக்குமா என்று தேடினார், பொறியாளரான கார்ல் புகேஜா. மத்திய தரைக்கடல் தீவான மால்டாவைச் சேர்ந்த அவர் தேடியது கிடைக்கவில்லை.

செம்புக் கம்பியில் காயில் கட்டி, பியரிங் வைத்து காந்தத்தை உருவாக்கும் போது, எவ்வளவு சிறிய மோட்டாரும் சற்று கனமாகவே இருந்தது.

கார்லுக்கு திடீரென ஒரு யோசனை... சர்க்கியூட் போர்டுகளை அச்சிடுவது போல ஏன், நாமே ஒரு சிறிய மோட்டாரை அச்சிடக் கூடாது? உடனே, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தி காயில்களை அச்சிட்டு, பியரிங்கை பொருத்தி இயக்கிப் பார்த்தார்.

பலகீனமான விசையுடன் தான் அது சுழன்றது. பல முறை முயன்ற பின், அவர் அச்சிட்ட மோட்டார், ஒரு ட்ரோனை அந்தரத்தில் பறக்கவைக்கும் அளவுக்கு விசையுள்ளதாக, வெற்றிகரமாக உருவானது.

உண்மையில் கார்ல், ட்ரோன் தயாரிப்பாளரல்ல. காப்புரிமை இல்லாத திறமூல ரோபோக்களை உருவாக்குவதில் தான் அவருக்கு நாட்டம் அதிகம். எனவே, மோட்டாரை அச்சிட்டது போல, ரோபோக்களின் கைகளையும், கால்களையும் இயக்கு வதற்குத் தேவையான, ‘லீனியர் ஆக்சுவேட்டர்’கள் எனப்படும் விசை முடுக்கிகளையும் இதேபோல அச்சிட முடியுமா என, கார்ல் ஆராய்ந்து வருகிறார்.

நியூசிலாந்தில் குப்பையாகும் மின்னணு கருவிகளி லிருந்து பயனுள்ள உலோகங்களை பிரித்தெடுக்க, புதுமையான உயிரியல் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

கணினி, அலைபேசி போன்ற கருவிகள் பழைய தானதும், அவற்றை சேகரிக்க சில அமைப்புகள் நியூசிலாந்தில் உள்ளன.

ஆனால், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக மறுசுழற்சி செய்வதில்லை.

எனவே, ‘மின்ட் இன்னோவேசன்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு, உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி முறையை உருவாக்கியுள்ளது.

சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகளை வேதியியல் திரவங்களில் கரைத்து, அந்த திரவங்களில் நுண்ணு யிரிகளைச் சேர்க்கிறது மின்ட். அந்தக் கரைசலில் இருக்கும் தங்கம், செம்பு போன்ற உலோகங்களை, நுண்ணுயிரிகள் உணவாக உண்கின்றன.

பிறகு, அந்த உலோகங்களை பிரித்தெடுத்துக் கொள்கிறது மின்ட்.

இன்றுள்ள மறுசுழற்சி முறைகள் நச்சு வாயுக்களை உமிழும் நிலையில், அதிக செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாமல் உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என்கின்றனர், மின்ட் அதிகாரிகள்.

ஆக்லாந்திலுள்ள, ‘ரிமார்க்கிட்’ என்ற மின்னணு கழிவுகளை சேமிக்கும் நிறுவனத்துடன் மின்ட் இணைந்து, 2019இல் உயிரி மறுசுழற்சி ஆலையை துவங்க இருக்கிறது.

டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ரோபோ வியல் ஆய்வாளர்கள், புதிய வகை ரோபோவை வடிவமைத்து பரிசோதித்து வருகின்றனர். இந்த ரோபோவுக்கு இரண்டு கால்கள் உண்டு. இருந்தாலும், தன் எடையை சுமந்து நடப்பதற்கு, அது தன் கால்களை மட்டும் நம்பவில்லை.

கூடுதலாக அதன் தலையில், ‘ட்ரோன்’ எனப்படும் குட்டி விமானங் களை பொருத்தியுள்ளனர். எனவே ரோபோவின் எடையில் முக்கால்வாசியை, ட்ரோன் சுமக்க, ரோபோ மிதந்த படியே இரு கால்களால் நடக்கிறது. தங்கள் கண்டுபிடிப்பிற்கு, ‘ஏரியல் பைபெட்’ என, டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இரண்டு கால்களைக் கொண்ட ரோபோக்களை நடக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம். எடை காரணமாக அவை அடிக்கடி கீழே விழுகின்றன.

இதனால் தான், ட்ரோன்களை, கிடங்கு களில் பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பார்சல்கள் கொண்டு போய் போடுவது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்த லாம் என, தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

ஆனால், ஏரியல் பைபெட் ரோபோ, 2 கால்களையும், இறக்கைகளையும் கொண்டிருப்பதால், தடுமாறி விழுவது போன்றவை தவிர்க்கப்படும்.

எனவே இதை, பொருட்களை எடுத்து வரும் எடுபிடி வேலைகளைச் செய்ய வைப்பது முதல் பொழுதுபோக்கு மய்யங்களில் வேடிக்கை காட்டுவது வரை, பயன்படுத்தலாம் என, அதன் கண்டுபிடிப் பாளர்கள் கருதுகின்றனர்.


ஓட்டுநரில்லா காரில் வீடு வரும் மளிகை!

உயர் தொழில்நுட்பத்துடன் மளிகை பொருட் களின் தேவையை சேர்த்தால் ஒரு புதிய தொழில் தான்!

இன்னமும் பரிசோதனையில் இருக்கும் ஓட்டுநரில்லா கார்களை வைத்து, வாடிக்கையாளரின் வீட்டுக்கே பொருட்களைக் கொண்டு வந்து தரும் சேவையை, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ‘ஆட்டோ எக்ஸ்’ சோதித்து

வருகிறது.

வீட்டில் இருக்கும் வாடிக்கையாளர், ஒரு மொபைல் செயலி மூலம் வேண்டிய மளிகை பொருட்களை, ‘ஆர்டர்’ செய்தால், அவர் கேட்கும் நேரத்தில் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கிறது, ஓட்டுநரில்லா வாகனம்.

மொபைலில் ஆர்டர் செய்தவரின் வீட்டு முகவரியை, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவும், ஓட்டுனரில்லா வாகன தொழில்நுட்பமும் சேர்ந்து, காரை பத்திரமாக ஓட்டி வந்துவிடும்.

மொபைல் செயலியில் ஒரு பொத்தானை அழுத்தினால், ஓட்டுநரில்லா காரின் கதவு திறக்கும்; மளிகை பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

தவிர, காரின் ஜன்னலில் அடுக்கப்பட்டுள்ள குளிர்பானம், சாக்லேட் போன்ற வற்றையும் விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம்.

‘சூப்பர் மார்க்கெட்’டுக்குப் போய் பொருட்களை வாங்கி வர நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, அதை வீட்டில் இருப்பவர்களுடன் செலவிடலாமே என்கிறது, ஆட்டோ எக்ஸ்! அதுவும் சரிதான்.

Banner
Banner