சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானிய லாளர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்‘ எனப்படும்.

எனவே, விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

‘நேச்சர்’ ஆய்விதழில் இந்த ஆய்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விமானங்களின் பயன்பாட்டை விரைவு படுத்தும் இங்கிலாந்து அரசின் திட்டத்தில் இணைந்திருக்கிறது, ‘ரோல்ஸ் ராய்ஸ்!’ சக்தி வாய்ந்த பெட்ரோலிய விமான இயந்திரங்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ், அண்மையில், ஒரு நபர் பயணிக்கும் மின் விமானத்தை தயாரித்துள்ளது.

மணிக்கு, 480 கி.மீ., வேகத்தில் பறக்கும் இந்த விமானத்தில், 750 கி.வாட் மின்சாரத்தைத் தரும், 6,000 சிறிய பேட்டரிகள் இருக்கின்றன.

ஒரு முறை, ‘சார்ஜ்’ செய்தால், இந்த மின் விமானம், லண்டனிலிருந்து கிளம்பி, பாரீசில் போய் தரையிறங்கும்.ஏற்கனவே, 2017ல், ‘சீமன்ஸ்’ தயாரித்த மின்சார விமானம் மணிக்கு, 338 கி.மீ., வேகத்தில் பறந்து சாதனை புரிந்திருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் மின் விமானம், அந்த சாதனையை விரைவில் முறியடிக்கும்.

தொழிற்சாலைகளில் பளுவான பொருட்களை கையாள்பவர்கள் முதல், முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் உதவும் வகையில், பேனாசோனிக் ஒரு புதிய வகை கருவியை உருவாக்கியுள்ளது.

பாதி ரோபோ போலவும், பாதி விசை இயந்திரம் போலவும் செயல்படும் அந்தக் கருவி ‘எக்சோஸ்கெலட்டன்’ என, அழைக்கப்படுகிறது.அண்மையில் சி.இ.எஸ்., 2019 பொருட்காட்சியில் பேனாசோனிக் அறிமுகப்படுத்திய, ‘மாடல் ஒய்’ என்ற எஸ்சோஸ்கெலட்டனை முதுகில் பையை மாட்டுவது போல பொருத்திக் கொள்ளலாம். உறுதியான பிடிப்புக்காக நெஞ்சுப் பகுதியிலும், தொடைகளிலும் ஸ்ட்ராப் போட்டுக்கொள்ள வேண்டும்.மாடல் ஒய்யில் உள்ள இரண்டு மின் மோட்டார்கள், 10 கிலோ விசையை பயனாளியின் இடுப்புக்குத் தருகிறது.

இதை பயன்படுத்தி, அதிக சிரமமில்லாமல், குனிந்து கனமான பொருட்களை தூக்கவும், நகர்த்தி வைக்கவும் முடியும். ‘அசிஸ்ட், வாக், பிரேக்‘ ஆகிய மூன்று நிலைகளில் இயங்கும் மாடல் ஒய், பயனாளிகளின் உடல் இருக்கும் நிலையை வைத்து எந்த மாதிரியான உதவியை தரவேண்டும் என, அதுவே தீர்மானித்து இயங்கும்.

படிகள், மேடுகளில் சிரமமின்றி ஏறுவது, வெகு தூரம் பாரம் தூக்கி நடப்பது போன்ற தேவைகள் உள்ள ராணுவத்தினரையும் மனதில் வைத்தே பேனாசோனிக் மாடல் ஒய் கருவியை உருவாக்கியுள்ளது.

Banner
Banner