நிலாவின் இருண்ட மறுபக்கத்தில் முதல் முறையாக ஒரு விண்கலனையும், நிலவு ஊர்தியையும் ஜனவரி 3 அன்று களமிறக்கி சீன விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

பூமி தன்னைத் தானே சுழல்வது போல, அதன் துணைக் கோளான சந்திரன் சுழல்வதில்லை. எனவே பூமியிலிருப்போருக்கு நிலவின் ஒரு பகுதியைத்தான் நேரடியாக பார்க்க முடியும். சூரிய ஒளி படாத, மறுபக்கத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது பல நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளின் விருப்பம்.அதை சீனா அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனாவின் ‘சாங்க-4’ ஆய்வுக் கலன் வெற்றிகரமாக நிலாவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கியது. அதன் பிறகு ஜனவரி 6 அன்று, நிலையாக நிற்கும் அக்கலனிலிருந்து ‘யுடு-2’ என்ற நிலவூர்தி இருப்புப் பாதை வழியே இறங்கி, சுற்றுப் புறத்தை ஆய்வு செய்யக் கிளம்பியது.

சாங்க-4 விண்கலம் அண்மையில் தரையி றங்கும் காட்சி உட்பட பல நிலாவின் காட்சிகளை சீன விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.

நிலாவின் தென்துருவப் பகுதியில் விண்கல் தாக்கியதால், ஏற்பட்டுள்ள 180 கி.மீ அகலமுள்ள வான் கார்மன் பள்ளத்தாக்கில் யுடு-2 ஆய்வுகளை துவங்கியுள்ளது. நிலவின் மறுபக்கத்தில் நீர் உள்ளதா, அதன் நில அமைப்பு எப்படி, நிலா எப்படி உருவானது போன்ற பல கேள்விகளுக்கு சாங்-4 கலனும், யுடு-2வும் விடை காண உதவும்.

கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது.

அதேபோலத் தான், மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்

என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ப்ளூ வைரஸ் தாக்கியவர்கள், அதிலிருந்து தப்பியவர்கள் ஆகியோரின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேமிக்கப்பட்ட பாக்டீரியாக்களை மிச்சிகன் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி ஆராய்ந்த போது, குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இந்த கண்டுபிடிப்பு, ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, மனித உடலில் நல்ல கிருமிகள் ஆற்றும் பங்கைப் பற்றியும் நமக்கு புரிதலை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒரு உணவுப் பொருள் கெட்டுவிட்டதா, இல்லையா என்பதை உறுதி செய்ய முடியாமல், 1.3 பில்லியன் டன் அளவுக்கு உணவுப் பொருட்களை, மக்கள் ஆண்டுதோறும் குப்பையில் கொட்டு கின்றனர். உணவு ஆய்வுக் கூடங்களில், ஒரு பொருள் கெட்டுவிட்டதா என்பதை கண்டுபிடிக்கும் கருவிகள் பல உண்டு.

ஆனால், காய், கனி, இறைச்சிகளை விற்கும் கடைகள், நுகர்வோரால் அந்த பெரிய கருவிகளை கையாள முடியாது. எனவே தான், ஜெர்மனியிலுள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கையடக்க அகச்சிவப்புக் கதிர் கருவியை உருவாக்கி உள்ளனர்.

மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஏற் பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி உரு வாக்கி இருப்பதால், இந்தக் கருவியை, எவரும் கையாள முடியும்.

இந்தக் கருவி, உணவின் மீது அகச்சிவப்புக் கதிரை பாய்ச்சுகிறது. உடனே, அந்தக் கதிரின் பிரதிபலிப்பை திரும்ப வாங்கி, அலைவரிசை மாற்றத்தை ஒப்பிடுகிறது.

இதன் மூலம், அந்த உணவு உண்ணும் தரத்தில் உள்ளதா என்பதை, உடனே காட்டிவிடும். தக்காளி, மாட்டிறைச்சி ஆகியவை கெட்டுவிட்டனவா, இல்லையா என்பதை, கையடக்க அகச்சிவப்புக் கதிர் ஸ்கேனர் மூலம் துல்லியமாக சொல்ல முடிந் ததாக, பிரான்ஹோபர் விஞ்ஞானிகள் அறிவித் துள்ளனர். எல்லா வகை உணவையும் சோதிக்கும்படி, ஸ்கேனரை மேம் படுத்த, ஆய்வுகள் தொடர்கின்றன.

Banner
Banner