பாட்டில் குடிநீர். மனிதர்களின் குடல். ஆர்க்டிக் உறைக்கடல் பனி. இப்படி எங்கும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை, அண்மைக்கால ஆய்வுகள் உறுதி செய்து உள்ளன. அதேபோல, கடலில் பிளாஸ்டிக் குப்பை, தீவுகள் போல மிதப்பதும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக மாறியிருக்கிறது. கடலில் எங்கெல்லாம் பிளாஸ்டிக் கழிவுத் தீவுகள் இருக்கின்றன என, சூழலியல் விஞ்ஞானிகள் ஒரு வரைபடத்தையே உருவாக்க முயன்று வருகின்றனர்.

இருந்தாலும், கடல் வாழ் உயிரினங்கள் மீது, பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன என்பதை, இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

எக்செட்டர் பல்கலைக்கழகம், பிளைமவுத் கடல் ஆய்வகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடலில் இறந்து மிதந்த, 102 ஆமைகளை எடுத்து வந்து ஆராய்ந்தனர். அவை எல்லாவற்றின் வயிற்றிலும், பிளாஸ்டிக் இழைகள் இருந்ததைக் கண்டு, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆடைகள், சிகரெட் நுனி வடிகட்டிகள், மீன் வலைகள் ஆகியவற்றிலிருந்து கடல் அலையால் சிதறடிக்கப்பட்ட பிளாஸ்டிக் இழைகள், ஆமைகளின் தொண்டையில் சிக்காமல், குடலுக்குள் சென்றுள்ளன.

இறந்த ஆமைகளை ஆய்வாளர்கள், பசிபிக், அட்லான்டிக் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் இருந்து எடுத்து வந்தவை என்பதால், உலகின் அனைத்துக் கடல்களில் உள்ள ஆமைகளின் கதியும் இது தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் பயன்படுத்தி வீசும் குப்பை என்பதால், நுண் பிளாஸ்டிக் துகள்களில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கடல்வாழ் உயிரி னங்களை பாதிக்கின்றனவா... என்பதையும் ஆராய வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ளதிலேயே வெகு தொலைவில் இருக்கும் ஒரு விண்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த, மூன்று பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள் ளனர். விண்வெளித் துறையின் வழக்கப்படி, 2018 வி.ஜி.18 என்று இலக்கம் இடப்பட்டுள்ள அந்த விண்பொருளுக்கு, வெகுதொலைவு என்பதைக் குறிப்பதற்காக ஆங்கிலத்தில், பார் அவுட் என்ற செல்லப் பெயரையும் சூட்டியுள்ளனர்.

வெறும், 500 கி.மீ., விட்டமே உள்ள பார்அவுட், ஒரு குள்ளக் கிரகம். விண்தொலை நோக்கியில் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரிந்தாலும், அதன் மேல் பனிபோர்த்தி இருக்கலாம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  சூரியனிலிருந்து பூமி இருக்கும் துரத்தைப் போல, 120 மடங்கு தொலைவில் இருக்கிறது பார்அவுட். சூரியனை சுற்றிவர பார்அவுட், 1,000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என மதிப்பிடப்பட்டாலும், அது சூரியனை மையமாக சுற்றுகிறதா, அல்லது வேறு ஏதேனும் ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசைக்கு மயங்கி, வலம் வருகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பிரிட்டனில் விவசாயத்தில் ரோபோக் களை களமிறக்க தீவிர ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதைச் செய்வது, ஒரு பல் கலைக்கழகமாக இருந்தால், வெறும் ஆராய்ச் சியோடு நின்றுவிடும். ஆனால், விவசாய ரோபோக்கள் மீது ஆர்வம் காட்டுவது, பிரபலமான சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் கடையான, வெய்ட்ரோஸ் அண்ட் பார்ட்னர்ஸ். தங்கள் கடைகளுக்கு, விளை நிலத்திலி ருந்து வேகமாக, சிக்கனமாக வேளாண் பொருட்களை விளைவித்து எடுத்து வர, விவசாய ரோபோக்கள் உதவும் என, அந் நிறுவனம் நினைக்கிறது.

இதற்கென, ஸ்மால் ரோபோட் கம்பெனி என்ற ஆராய்ச்சி நிறுவனத்திடம், விதைத்தல், களை எடுத்தல் மற்றும் வயல்வெளியை கண் காணித்தல் ஆகிய மூன்று வேலைகளைச் செய்யும் ரோபோக்களை, தயாரித்துத் தரும் படி கேட்டிருக்கிறது, வெயிட்ரோஸ்.

அதற்கேற்றபடி, டாம், டிக் மற்றும் ஹாரி என்ற மூன்று ரோபோக்களை பரிசோதனை முறையாக வடிவமைத்து, பிரிட்டனிலுள்ள ஆம்ப்சையரில், 2.5 ஏக்கர் நிலத்தில் வெள் ளோட்டம் பார்த்து வருகிறது, ஸ்மால் ரோ போட் கம்பெனி. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆராய்ச்சி செய்து, விவசாய ரோபோக்களை உருவாக்கிவிட முடியும் என்கின்றனர், ரோபோ நிறுவன அதிகாரிகள்.

ஹாரி ரோபோ துல்லியமாக நிலத்தில் விதைக்க பயன்படும். டிக் ரோபோ, இயந்திரக் கண்கள் மூலம் பார்த்து, களைகளை மட்டும் லேசர் கதிர்களால் பொசுக்கிவிடும். டாம் ரோபோ, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம், வயலில் உள்ள ஒவ்வொரு கோதுமை பயிரையும் நினைவில் வைத்து, அவற்றிற்கு, நீர், சத்துக்கள் போன் றவை கிடைத்திருக்கிறதா; பூச்சிகள் வந்திருக் கிறதா என்பதையெல்லாம் கண்டறிந்து, மற்ற ரோபோக்களை அதற்கேற்ற நடவடிக்கை களை எடுக்கப் பணிக்கும்.

ரோபோக்களுக்கு சம்பளம் கிடையாது. 24 மணி நேரமும் வயலே கதியாக இருக்க முடியும். எனவே அதிக செலவில்லாமல்,  நல்லபடியாக அறுவடை பார்க்கலாம் என, வெயிட்ரோஸ் கடை முதலாளிகள் காத்திருக் கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Banner
Banner