மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவிலுள்ள சோமர்வில்லியைச் சேர்ந்த, பெனிக் அறிமுகப் படுத்தியுள்ளது.

யுமா - 6எல் என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இந்தப் பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி வெளியேற ஆரம்பிக் கிறது. இதனால், பெட்டிக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெப்பமும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. விளைவு? பெட்டிக்குள், 35 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ச்சி ஏற்படுகிறது. வழக்கமான மின்சார, பிரிஜ்களின் உள்ளே ஈரப்பதம் வெகுவாக குறைந்திருக்கும். எனவே, தக்காளி, வாழைப்பழம், மிளகாய் போன்றவை சுருங்கி சுவையை இழக்கின்றன. ஆனால், யூமா - 6எல் சாதனத்தில் அது நேர்வதில்லை.

மின்சாரம் துளியும் இல்லாமல், ஒரு வீட்டுக்குத் தேவையான உணவு காய்கறிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும், யூமா குளிர் சாதனத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும்?

உலகெங்கும் குளிர்பதன வசதி இல்லாததால் மட்டும், 50 சதவீத உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதனால், நல்ல உணவை உண்ணும் வாய்ப்பு, 1.2 பில்லியன் பேருக்கு தினமும் மறுக்கப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால், யூமா குளிர் பெட்டிக்கு நல்ல மவுசு இருக்கும் என்றே தோன்றுகிறது.

மொபைல் மற்றும் பிற மின்னணுப் பொருட்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இவை சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பலவிதமான உருமாற்றங்களை தாண்டி மதிப்புமிக்க உலோகமாக மாறுகிறது.

ஒரு சுரங்கத்தில் இருந்து மூன்று முதல் நான்கு கிராம் வரை தங்கம் எடுக்க வேண்டுமானால் அதற்காக சுமார் ஒரு டன் அளவிலான தாதுப் பொருட்கள் தேவைப்படும். ஆனால் மொபைல் போன், மடிக்கணினி போன்ற ஒரு டன் மின்னணுக் கழிவுகளில் இருந்து 350 கிராம் தங்கம் எடுக்கப்படுகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.

மனிதர்கள் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களின் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் பிரிக்கப்பட்ட தங்கத்தை கொண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தங்கம், வெள்ளி, வெண்கலம் என கிட்டத்தட்ட 5000 பதக்கங்கள் உருவாக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் மின்னணுக் கழிவுகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது. இந்த ஆபத்தான, நச்சு நிரம்பிய கழிவுகளில் மதிப்புமிக்க உலோகச் சுரங்கமும் பொதிந்திருக்கிறது.

இந்த மின்னணு கழிவுச் சுரங்கங்களில் இருந்து தயாரிக்கவிருக்கும் பதக்கங்களுக்காக, பயனற்ற மின்னணுப் பொருட்களை நன்கொடை கொடுக்கலாம் என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படாமல் வைத்திருக்கும் மின்னணுப் பொருட்களை நன்கொடையாக கொடுப் பார்கள் என்றும், அதிலுள்ள உலோகங்கள் பயன் படுத்தப்படும் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

இந்தத் திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை மின்னணுக் கழிவுகளில் இருந்து 16.5 கிலோ தங்கமும், 1800 கிலோ வெள்ளியும் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. பதக்கங்கள் செய்ய தேவைப்படும் 2700 கிலோ வெண்கலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து ஏற்கெனவே கிடைத்துவிட்டது.

தங்கப் பதக்கத்திற்கு தேவையான 54.5 சதவீத  தங்கமும், வெள்ளிப் பதக்கத்திற்கு தேவையான 43.9 சதவீத வெள்ளியும் கிடைத்திருக்கிறது என்று 2020 டோக் கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மாசா டக்காயா பிபிசிக்கு அனுப்பிய மின்ன்ஞ்சல் தகவலில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய ‘இன்சைட் லேண்டர்’ ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்று செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது.

ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார்.

“இன்சைட் ஆய்வுக் கலம் தமது காதுகளைக் கூர்மையாக வைத்துக் கேட்பதைப் போன்றது இது”. இந்த காற்றால் ஏற்பட்ட அதிர்வை கொடிக் கம்பத்தில் உள்ள கொடி காற்றில் அசைவதுடன் ஒப்பிடுகிறார்.

காற்றை இடைமறித்து கொடி அசையும்போது அலைவரிசையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு அதனை மனிதக் காதுகளால் கேட்க முடிகிறது. இதையே கொடி படபடக்கிறது என்கிறோம் என்கிறார் அவர்.

இன்சைட் ஆய்வுக் கலத்தில் உள்ள அழுத்தத்தை உணரும் கருவியும் காற்று கடந்து போனதைப் பதிவு செய்துள்ளது.

வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி இந்த காற்று வீசும் வேகம், விநாடிக்கு 5 முதல் 7 மீட்டர் வேகத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

இந்த திசையில் காற்றுவீசும்போது விட்டுச் சென்ற தூசுப் படிமங்கள் இருப்பதைக் காட்டும் படங்கள் சொல்லும் செய்தியுடன் இந்தக் கண்டுபிடிப்பும் ஒத்துப் போகிறது.

ஆறுமாத காலம் பயணித்து செவ்வாய்க்கு சென்ற இந்த ஆய்வு வாகனம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. அத் துடன் இது செவ்வாயின் சுற்றுப்புறங்களையும் ஆராய்ந்துவருகிறது.

Banner
Banner