பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், கடந்த வாரம் ஒரு சிறப்பு ஆன்டனாவை, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர்.

இந்த ஆன்டனா, பூமியிலுள்ள பறவைகள், விலங்குகளின் இடப்பெயர்ச்சி முதல் இனப் பெருக்கம் வரை கண்காணிக்க உதவும் என, அமெரிக்கா மற்றும் இசுரேல் விஞ்ஞானிகள்

தெரிவித் துள்ளனர்.

‘அய்காரஸ்’ எனப்படும், விண்ணில் இருந்து விலங்குகளை ஆராய உதவும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தற்போது அந்த ஆன்டனாவை பயன்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர்.

இதற்கென, அதி நவீன அய்காரஸ், ‘டிரான்ஸ் மீட்டர்’ கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.

முன், வலசைப் பறவைகளை கண்காணிக்க, ரேடியோ சமிக்ஞையை அனுப்பும் நுண் கருவிகளே பயன்படுத்தப்பட்டன.

ஆனால் அய்காரஸ் கருவிகள், எடை குறைவாக, சிறிதாக இருந்தாலும், அதில் காட்டுயிர்களின் இருப்பிடம் அறியும், ஜி.பி.எஸ்., வெப்பம், வேகம், ஈரப்பதத்தை பதிவு செய்யும் உணரிகளும், சமிக்ஞை அனுப்பும் சிறிய கம்பியும் உண்டு.

இந்த உணரிகள் சேகரிக்கும் தகவல்கள், விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்படும். ஆய்வு நிலையம், தினமும் பூமியை, நான்கு முறை வலம் வரும். எனவே ஆன்டனாவின் எல்லைக்குள் வரும் விலங்குகளின் உடலில் கட்டப்பட்டுள்ள கருவிகளில் இருந்து தகவல்களை பெற்று, மீண்டும் பூமியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தகவல்கள் திருப்பி அனுப்பப்படும்.

வரும், 2019க்குள், 1,000 விலங்குகள் மீது அய் காரஸ் டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்படும்.

அடுத்த சில ஆண்டுகளில், ஒரு லட்சம் விலங் குகள் மீது பொருத்த விஞ்ஞானிகள் திட்டமிட் டுள்ளனர்.

அழியும் ஆபத்தில் இருப்பவை தவிர்த்து, மற்ற விலங்குகள், பறவைகள் பற்றி சேகரித்த தகவல்களை, ‘மூவ் பேங்க்‘ என்ற தகவல் களஞ்சியத்தில் போட்டு வைத்து, அதை எவரும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதாக, அய்காரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. .

நிலாவில் தண்ணீர் இருப்பது உறுதி!

சந்திரனின் இரு துருவப் பகுதிகளிலும் தண்ணீர் இருப்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ அறிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி அமைப்பான, ‘இஸ்ரோ’ அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலன் பல ஆய்வுக் கருவிகளை சுமந்து சென்று, நிலாவை வலம் வந்தது.

அதில், நிலாவில் உள்ள தாதுக்களின் வரைபடம் தயாரிப்பதற்காக, ‘நாசா’ வடிவமைத்த ஒரு கருவியும் ஒன்று.

‘எம் - 3’ எனப்படும் அந்தக் கருவி, நிலவின் மேற்பரப்பில் ஒளியைச் செலுத்தி, அது பிரதிபலிக்கும் விதத்தை வைத்து, அங்கு உள்ள தாதுக்கள் பற்றிய தகவல்களை சேகரித்தது.

அந்த தகவல்களை ஆராய்ந்த, ‘நாசா’ விஞ்ஞானிகள், பூமியில் இருப்பவர்களின் கண்களுக்குத் தெரியாத, நிலாவின் இரண்டு துருவப் பகுதிகளிலும், பனிக் கட்டி வடிவில் நீர் இருக்கிறது என்பதை அண்மையில் உறுதி செய்துள்ளனர்.

நிலாவில் போதிய நீர்வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டால், மனிதர்கள் நிலாவில் அதிக காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய முடியும் என்றும், மனிதக் குடியிருப்புகளை அமைக்க முடியும் என்றும், நாசா விஞ்ஞானிகள் அண்மையில் அறிக்கை வெளியிட் டுள்ளனர்.

அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்!

மாசில்லாத ஹைட்ரஜன் எரி பொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்த, உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அண்மையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள் அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரித்து ஓடும் இரண்டு கார்களை வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்து உள்ளனர்.

ஹைட்ரஜனை வாகனங்களுக்குப் பயன் படுத்தும்போது, புகை ஏதும் வராது, நீர் துளிகள் மட்டுமே வெளியேறும் என்பதால், ஹைட்ரஜன் எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாகிவிடும் என, விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர்.

ஆனால், அடர்த்தி குறைவான ஹைட் ரஜன் திரவம், எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. அதை பெட்ரோலைப் போல சாலையோரங் களில் வினியோகிப்பதும் சவாலாக உள்ளது.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் எனப்படும் சி.எஸ்.அய்.ஆர்.ஓ., அண் மையில் காற்றிலிருந்து நைட்ரஜனை எடுத்து அம்மோனியாவை உருவாக்கி, பிறகு, அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜனை ஒரு உலோக சவ்வு மூலம் பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கியுள்ளது.

அம்மோனியாவை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது என்பதாலும், உலோக சவ்வு முறையில் வேண்டிய இடத்தில் வைத்து ஹைட்ரஜனை தயாரித்து வினி யோகிக்க முடியும் என்பதாலும் இந்தத் தொழில்நுட்பம் ஹைட்ரஜன் எரிபொருள் பரவலை எளிதாக்கும் என, சி.எஸ்.அய்.ஆர்.ஓ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த முறையில் தயாரிக்கப்படும் ஹைட் ரஜன், மிகவும் துய்மையானதாக இருப்ப தாகவும், விஞ்ஞானிகள் தெரிவித்து

உள்ளனர்.

இந்த முறையில் தயாரித்த ஹைட்ரஜனை வைத்துத்தான் அண்மையில் இரண்டு கார் களை ஆஸ்திரேலியர்கள் ஓட்டிப் பார்த் துள்ளனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஹைட்ர ஜனில் ஓடும் கார்களை ஆஸ்திரேலிய நகர்களில் பார்க்க முடியும் என்றும், ஆசிய நாடுகளில் இதே தொழில்நுட்பத்தை பரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள்

தெரிவித்து உள்ளனர்.

அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்க அதிக செலவோ, மாசுபாடோ ஏற்படாது என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கட்டில் ஒரு ஆய்வுக்கூடம்!

கையில் அணிந்துகொள்ளும் உடல் நல கண்காணிப்புக் கருவியை, ரட்கெர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பல புதிய தொழில்நுட்பங்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த, ‘ஸ்மார்ட் பேண்ட்’ அணிந்திருப்பவரின் ரத்தத்திலுள்ள செல்களை அளப்பது முதல், அணிந்துள்ளவரைச் சுற்றியுள்ள காற்றில் மாசுக்கள், நச்சுக்களையும் அளக்கும் திறன் கொண்டது.

அதி நவீன நுண்திரவ உணரி, மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் புளூடூத் ஆகிய தொழில் நுட்பங்களைக் கொண்டி ருக்கும் இந்த புத்திசாலி கைப்பட்டை, அணிந்திருப்பவரின் மொபைல் செயலிக்கு, அளவுகளை அனுப்பிவிடும். அதை மருத்துவரிடம் காட்டினால், அவர் உடல் நலத்தைப் பற்றி துல்லியமாகக் கணிக்க முடியும்.

இந்தக் கருவியை பலவித நோய்களுக்கான அறிகுறிகளை அறியும் விதத்தில், அவற்றுக்குரிய உணரிகளை மாற்றிக் கொள்ள முடியும். எனவே நோயறிதலுக்காக பெரிய ஆய்வகங்கள், மற்றும் அதிக கட்டணம் போன்றவற்றை தவிர்க்க, இந்தக் கருவி உதவும். தற்போது சில மாதிரிகளையே ரட்கெர்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தாலும், நம்பிக்கை தரும் கருவி என, ‘மைக்ரோசிஸ்டம்ஸ் அண்ட் இன்ஜினியரிங்’ இதழ் பாராட்டியுள்ளது.

கண்களைக் கெடுக்கும் திரை ஒளி

தினமும் நாம் பயன்படுத்தும், கணினி, செல்பேசி, தொலைக்காட்சி ஆகிய வற்றின் திரைகளிலிலிருந்து வெளிப்படும், நீல நிற ஒளி, நம் கண்களை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வந்துள்ள, ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது.

இரவில், ஒளிரும் திரையுள்ள கருவிகளை பயன்படுத்துவதால், ‘சர்க்காடியன் ரிதம்‘ எனப்படும் நம் உடலின் பகல் -இரவு நேர கதியை உணரும் திறன் பாதிக்கப்படுவதை, ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தூக்கம், மூளையின் செயல்திறன், உடலியக்கம் போன்றவற்றை பாதிக்கிறது. என்றாலும் திரைக் கருவிகளிலிருந்து வெளியேறும் ஒளியில், நீல நிறம் கண்களில் உள்ள ஒளி உணர் திறனை நேரடியாக பாதிப்பதை, அந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் டொலீடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் உறுதி செய்துள்ளனர். நீல நிற ஒளி, நம் விழித்திரையில் உள்ள ஒளிவாங்கிகளில் இருக்கும் ‘ரெடீனல்’ என்ற மூலக்கூறுகளை நிலைகுலையச் செய்கின்றன. ரெடீனல் மூலக் கூறுகள் தான் விழித்திரையில் படும் ஒளியை மூளை உணர்வதற்கு உதவுபவை. நீல ஒளி படுவதால் ரெடீனல் மூலக்கூறுகள் வேதி மாற்றமடைந்து, விழித்திரையில் உள்ள ஒளிவாங்கிகளை தாக்க ஆரம்பித்துவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

வடிகட்டிகள்: சில செல்பேசி நிறுவனங்கள், நீல ஒளியை திரையிலிருந்து வெளியேறாமல் தடுக்கும் வடிகட்டிகளை அறிமுகப்படுத்தியிருப்பதை ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர்.

 

 

வாங்கிய சில மாதங்களில் மொபைல் போனின் திரை உடைந்து விடுவது பரவலாக நடக்கிறது. அதுவும் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ‘ஸ்மார்ட் போன்’ விரிசல் கண்டது என்றால், வாங்கியவரின் துயரத்தை சொல்லவே வேண்டியதில்லை.

அடுத்த ஆண்டு முதல் கிடைக்கவிருக்கும் அதிக விலை சாம்சங் ஸ்மார்ட் போன்களில் உடையாத, ஓ.எல்.இ.டி., திரை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இதற்கான அங்கீகாரத்தை, அமெரிக்க அரசு சார்பில் சான்று வழங்கும், ‘அண்டர்ரைட்டர்ஸ் லேபாரட்டரீஸ்’ என்ற அமைப்பிடம் பெற்றிருக்கிறது சாம்சங்.

ஓ.எல்.இ.டி., திரையை தயாரிக்கும் இடுபொருட்களில் புதுமையை புகுத்தியிருப்பதோடு, அதன் வெளிப்பாகத்தில் கண்ணாடிக்குப் பதில், வலுவூட்டப்பட்ட புதிய வகை பிளாஸ்டிக்கையும் வைத்திருப்பதால், சாம்சங்கின் தொடு திரைகள் உடையாமல் இருப்பதோடு, வளைத்தாலும் பாதிப்படையாது.

சோதனைகளின் போது, 6 அடி உயரத்திலிருந்து, ‘தொப்’பென்று போட்டாலும் உடையாமல் இருந்ததோடு, ஒரு சுத்தியலால் பலமாக அடித்த பிறகும் சாம்சங்கின், ஓ.எல்.இ.டி., திரை வேலை செய்தது.

மேலும், 71 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் வரை தாக்குப்பிடிக்கிறது இந்தத் திரை.

 


‘கருந்துளை’ பற்றிய அய்ன்ஸ்டீனின் கணக்கு சரி!

அன்றே சொன்னார் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். அது இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கருந்துளை எனப்படும் காலாவதியான நட்சத்திரம், தன்னைச் சுற்றியுள்ள எதையும் கபளீகரம் செய்யுமளவுக்கு, அசாதாரணமான ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது அய்ன்ஸ்டீனின் கணிப்புகளுள் ஒன்று.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளைக் கூட கருந்துளை ஈர்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

அண்மையில், நமது பால் வீதியின் மத்தியில் உள்ள ‘சாஜிட் டாரியஸ்- - ஏ’ என்ற கருந்துளை அதைச் செய்து காட்டியிருப்பதாக அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.

சாஜிட்டாரியஸ் - ஏ கருந்துளையை சில நட்சத்திரக் கூட்டங்கள் அதிவேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றான, ‘எஸ் 2’ என்ற நட்சத்திரம் சாஜிட்டாரியஸ் - ஏவை ஒருமுறை வலம் வர, 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

கடந்த மே, 19 அன்று எஸ் 2 நட்சத்திரம் கருந்துளைக்கு அருகா மையில் கடந்து போனது.

அப்போது அது வெளிவிடும் ஒளியை கருந்துளை அப்படியே ஈர்த்துக் கொண்டதை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளனர். இதனால் அய்ன்ஸ்டீனின் கருந்துளை பற்றிய முக்கியமான கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமியை சுற்றிப் படர்ந்துள்ள வாயு மண்டலத்தில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு அபாய அளவை எட்டியிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக் கிறது.

கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலந்திருக்க வில்லை என்கிறது அந்த ஆய்வு.

காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை, பி.பி.எம் என்ற அளவை மூலம் அளப்பர். அதாவது, ‘பார்ட்ஸ் பெர் மில்லியன்’. இதன்படி, 2017இல் எடுக்கப்பட்ட அளவு, 405 பி.பி.எம்.,இருந்தது.

இதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உறைந்த பனிப் பாறைகளுக்கு இடையே இருக்கும் குமிழிகளில் சிக்கிய காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அதன்படி, 2017இல் தான் கரியமில வாயுவின் அளவு மிக அதிகமாக இருந்தாகத் தெரிய வந் துள்ளது.

அதேபோல, 2017இல் தான் பூமி காணாத அளவுக்கு வெப்பமாக இருந்ததாகவும் வேறு சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம், காற்றில் கார்பனின் அளவைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்தி இருக்கிறது.

 


உயிருள்ள செயற்கை இதயத்தை உருவாக்க முடியுமா?

இதய நோய்களுக்கான மருந்துகள் சோதித்துப் பார்க்க, எலி போன்ற விலங்குகளின் இதயத்தைத் தான் மருத்துவர்கள் பயன்படுத்துவர். ஆனால், எலியின் இதயத்தில் வேலை செய்த மருந்துகள், எல்லா வேளைகளிலும் மனித இதயத்தில் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழக மருத் துவர்கள், மனித இதயத்தை ஆய்வகத்தில் உரு வாக்க முடியுமா என சோதித்து வருகின்றனர்.

அண்மையில், ஹார்வர்டு மருத்துவர் குழு, ஜெலாட்டின் போன்ற நுண் பொருட்களை வைத்து, இதயத்தின் இடது பக்க அறையைப் போன்ற வடிவத்தை உருவாக்கினர்.

அந்த வடிவத்தை சாரமாக வைத்து, நிஜ மனித இதயத்திலிருந்து செல்களை ஆய்வகத்தில் வளர்த்தனர்.

சில வாரங்களில், ஜெலாடின் கரைந்து போகவே, இதய செல்கள் கூட்டாக வளர்ந்து துடிக்க ஆரம்பித்தன.

இது ஒரு மருத்துவ சாதனை என அறிவியல் இதழ்கள் புகழாரம் சூட்டியுள்ளன. விரைவில், இதே போல இதயத்தை செய்து மருந்துகளை சோதிக்க இருப்பதாக ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

Banner
Banner