26.08.1928 - குடிஅரசிலிருந்து...

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவா ளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர் களைப் பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற்கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலா ளர்களை ரயில்வேக் காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங் களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்ன தின் பேரில் கவர்னர் துரைய வர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத் துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது.

பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மனவருத்தமடைந்ததாகவும் தெரிய வருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம் பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச் சாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக் கவனத் தைச் செலுத்தி அவைகளுக்குப் பரிகாரம் தேடு வதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வரு கின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரண மாகவே ஸ்தல போலீஸ் அதிகாரிகளின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின் வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமை யேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசர மானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வ தாகத் தெரியவருகிறது.

ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தி யாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாத மாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டி ருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப் பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர் களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும்.

ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரைகளும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வரு வார் களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்கமி ருக்கிறதா?
தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலை வர்கள் என்பவர்களும் ரயில்வேக்காரர் களுடை யவும், சர்க்காரு டையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர்களாகவும் இருக்கத் தக்கவர்களாகி விட்டார்கள்.

எனவே என்றைக் காவது தொழிலாளர்களும் கூலிக் காரர்களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங் களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரியாதை யில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

விஸ்வ நேசன்
- 02.09.1928,- குடிஅரசிலிருந்து... -

திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந. நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது. அது சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம். அப்பத்திரிகையானது ஏனைய சில சமுகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம். அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணையிலிருப்பவர். எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுயமரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?
26.08.1928 - குடிஅரசிலிருந்து...

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையா மையை ஒழித்து திரு. காந்தியையும் மூலை யில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழை யாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடை யவும் திரு. காந்தியவர்களுடையவும் செல் வாக்கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூல மாகவும் எவ்வளவு தூரம் தலைக் கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப் பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்து கொண்டு பார்ப்பனரால்லா தாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள். அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர் களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப் போது இந்தக் கூட்டம் வெளியில் தலை காட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.

தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர் களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப் பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்ற வர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டி யாக ஆட்களை நிறுத்துவதற்குக் கூட காங்கிரசுக்காரருக்கு தைரியமில்லாமல் போய் விட்டது.

இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங் களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.

நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப் பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்விய டைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார். இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர் களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன் றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.


அதிக உறுதி கொண்ட அலுமினிய அலோகம் ஒன்று, அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவா கியிருக்கிறது.

உருக்கு இரும்புடன் ஒப்பீட்டால், அலுமினியம் எளிதில் தோற்றுவிடும். ஏனெனில், அலுமினியம் மென்மையான, பலம் குறைவான உலோகம். இதனால் தான், வேறு உறுதி யான உலோகங்களைக் கலந்து, அலுமினியத்தை பயன்படுத்துகின்றனர்.

அப்படியும்கூட அலுமினிய உலோகம் அதிக வலுகொண்டதாக இருப்பதில்லை. ஆனால், அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக் கழகம், சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இரு நாட்டு விஞ்ஞானிகள், அலுமினி யத்தின் மூலக்கூறு கட்டமைப்பில் மாறுதல்களை செய்து, வலுவான அலுமினியத்தை உருவாக்கு வதில் வெற்றி கண்டுள்ளனர்.

ஆய்வுக்கூடத்தில் சோதித்துப் பார்த்தபோது, இரும்பு உருக்கை விட, அவர்கள் கண்டுபிடித்த புதிய வகை அலுமினியம் வலுவானதாக இருப் பது தெரியவந்தது. அதே சமயம் இரும்பைவிட இலகுவானதாகவும் அது இருக்கிறது.

இதனால், கட்டடங்களிலும், கன ரக உலோகம் தேவைப்படும் தொழில்துறைகளிலும், சைக்கிள் மற்றும் விமான தயாரிப்பு தொழில்களிலும், இந்த புதியவகை அலுமினியம் பயன்படும், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் களது ஆய்வு, ‘அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்’ இதழில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பணிகளில் ஈடுபடும் ரோபோ!

ஜெர்மனியில் பெருமளவில் விளையும் வெள்ளரிக் காய்களை பறிக்க, ரோபோ ஒன்றை வடிவமைத்திருக்கிறது, பிரான்ஹோபர் என்ற நிறுவனம். வெள்ளரிக்காய்களை மனிதர்கள் நிமிடத்திற்கு, 13 என்கிற வீதம் பறிப்பர்.
ஆனால், அவர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டியிருப்பதால், வெள்ளரி விவசாயம் கட்டுப்படியாகாமல் போனது.

எனவே அய்ரோப்பிய யூனியனின் விவசாயத் துறையும், சில ரோபோ ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து, ‘கேட்ச்‘ என்ற, வெள்ளரி பறிக்கும் ரோபோவை தயாரித்து உள்ளனர்.

பச்சை இலைகளுக்கு நடுவே, பச்சையாக இருக்கும் வெள்ளரிகளில், நன்கு விளைந்தவைகளை பறிக்க வேண்டும். வெளிச்சம் போதாத, இண்டு இடுக்குகளில், காய்த்தவைகளை எட்டிப் பறிக்கும்போது, செடி வேரோடு வந்துவிடக்கூடாது. பிஞ்சுகளை பறித்து விடக்கூடாது.

இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், அத்தனை வேலைகளையும், ‘கேட்ச்‘ ரோபோ சோதனை அறுவடையின்போது செய்து காட்டியிருக்கிறது.

ரோபோவுடன் இருக்கும் சிறப்பு ஒளிப்படக் கருவி, வெள்ளரிகளின் இருப்பிடம், அளவு போன்றவற்றை துல்லியமாக காட்டித்தர, இரு கரம் கொண்ட ரோபோ, நயமாக அதை மட்டும் பறித்து கூடையில் போடுகிறது.

சோதனைகளில் வெள்ளரி ரோபோ அசத்தி இருப்பதால், அடுத்த அறுவடைக்கு, கேட்ச் ரோபோ களமிறங்கப் போகிறது.

நான்கு கால்கள் கொண்ட ‘ரோபோ!’

‘ரோபோ’ உலகில் முன்னோடி யான பாஸ்டன் டைனமிக்ஸ், நான்கு கால்கள் கொண்ட, ‘ஸ்பாட் மினி’ ரோபோவை, 2016இல் அறிமுகப்படுத்தியது.

ஜப்பானின், ‘சாப்ட் பேங்க்‘ கூகுளிடமிருந்து விலைக்கு வாங் கிய அமெரிக்க ரோபோ நிறுவன மான பாஸ்டன் டைனமிக்ஸ், தற்போது, தன் ஸ்பாட் மினியின் அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய வடிவமைப்பு சற்று அழகாகவே இருக்கிறது. இதன் அறிமுகக் காணொளியில், ஒரு ஸ்பாட் மினி நான்கு காலில், ‘சலிங் சலிங்’ என்று நடந்து வருகிறது.

கதவு மூடியிருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பச் செல்கிறது. உடனே, தலைக்கு மேல் ரோபோ கரம் கொண்ட இன்னொரு ஸ்பாட் மினி, நான்கு காலில் நடந்து வந்து, கதவை திறந்து பிடித்துக் கொள்கிறது. தயங்கி நின்ற ரோபோ, நடந்து, கதவு வழியே வெளியேறுகிறது. பின்னாலேயே கதவை சாத்திவிட்டு அந்த ஸ்பாட் மினியும் வெளியேறுகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த காணொளி, ரோபோவியலில் முக்கியமான மைல் கல் என்கின்றனர் வல்லுனர்கள்.

கண்ணை பார்த்தே இதயத்தை படிக்கும் மென்பொருள்!

ஒருவரது விழித்திரையின், ‘ஸ்கேன்’ மட்டும் இருந்தால், அதை வைத்தே, அவருக்கு இதயக் கோளாறு ஏதும் வருமா வராதா என்பதை கணிக்க முடியுமா... முடியும் என்கிறது, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனமான வெரிலி லைப் சயன்சஸ் ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் செய்துள்ள ஓர் ஆய்வு.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சம் பேர், சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த விழித்திரை ஸ்கேன்களை சேகரித்தனர் , ஆராய்ச்சியாளர்கள்.

பின் அவற்றை, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் கொடுத்து அலச கூறினர். நோயாளிகளின் பொதுவான உடல்நலத் தகவல்களுடன் அதை அலசிப் பார்த்து, இந்த நபருக்கு, அடுத்த அய்ந்து ஆண்டு களில் இதயம் தொடர்பான கோளாறு கள் வரக்கூடும் என, 70 சதவீத துல்லியத்துடன் கூகுளின் செயற்கை நுண்ணறிவு கணித்துச் சொல்லி விட்டது.

ஏற்கெனவே, இதய நோயை கணிக்க உதவும், ‘ஸ்கோர்’ என்ற சோதனை முறை, ரத்த மாதிரி களை வைத்து, 72 சதவீத துல்லியத்துடன் கணித்து வருகிறது. ஆனால், கூகுளின் சோத னைக்கு ஊசி குத்தி, ரத்தம் எடுக்க வேண்டிய தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் அதிவேக ரயில்!

இந்தியாவில், ஏன் உலகிலேயே, முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தவி ருக்கிறது, ‘அய்ப்பர்லுப் ஒன்’.

மஹாராஷ்டிரத்தின் மும்பை - புனே நகர்களுக்கு இடையில் இத்திட்டத்திற்கான பூர்வாங்க ஆய்வுகளை அய்ப்பர்லுப் தொடங் கியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த, வர்ஜின் குழுமத்தின் அதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனம்தான் அய்ப்பர்லூர் ஒன்.

காற்று குறைவான பெரிய குழாய்களில், சிறிய பெட்டிகளில் பயணியரையும், சரக்கு களையும் மணிக்கு, 1,126 கி.மீ., வேகத்தில் பயணிக்கச் செய்வதுதான், அய்ப்பர்லுப்பின் திட்டம்.

இதுவரை சில, கி.மீ., தூர சோதனை ஓட்டத்தை மட்டுமே நடத்தியிருந்தாலும், மஹாராஷ்டிர அரசு இத்திட்டத்தை தங்கள் பக்கம் ஈர்த்திருக்கிறது. இது, நடைமுறைக்கு வந்தால், மும்பையிலிருந்து புனேவுக்கு, 25 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

ஆண்டுக்கு இரு நகரங்களுக்கும் இடையே, 1.5 கோடி பயணியரை கொண்டு செல்லலாம். இந்த பயணியர் கார், பஸ் போன்ற வாகனங் களை பயன்படுத்துவது தவிர்க்க முடியும். எனவே, ஆண்டுக்கு, 1.5 லட்சம் டன் கரியுமில வாயு காற்றில் கலப்பதை தடுக்கலாம் என, அய்ப்பர்லூப் ஒன் தெரிவித்துள்ளது.

பூர்வாங்க ஆய்வுகளைஅடுத்த ஆறு மாதங்களில் முடிக்கப்போவதாகவும், சோதனை தடம் ஒன்று அடுத்த மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும் என்றும், ஏழு ஆண்டுகளில் முழு நீள தடம் போடப்பட்டு, அய்ப்பர்லுப் ஒன் சேவை துவங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.


தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார் களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்குக் கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லை யென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம். இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதைப் பற்றி எந்த தேசிய பத்திரிக்கையும் எழுதாமல் சைமனே திரும்பிப்போ எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம் என்கின்றன. சைமனைத் திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை.

ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்றுப் பிழைப்புக் கும் கூலிக்கும் சைமனைப் பகிஷ்கரிப்பதால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பகிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள்,  அய்யோ பாவம்!

பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடையப் பிரயத்தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லா தவர்கள் தங்களது பொய்ப் பிரச்சாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம் பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை தினம் பெரும் பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது, தெருப்பொறுக்கிக் கூட தெரிந்த விஷயம்.

அத்தோடு போலீசையும் தடபுடலையும், சென்ற மாதம் 3ஆம் தேதி காங்கிரஸ் காலித்தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும். உதாரணமாக, அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26ஆம் தேதி தங்கள் பெண்டு பிள்ளை களை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் தேசியவீரர்களின் பிரச்சாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப் பெருமையால் அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழ முடி யுமோ தெரியவில்லை.
இன்னும் அடி

சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய்ப் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வரவில்லை, இந்தப் பார்ப்பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன் னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்குக் காரணம் வேறு விதமாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்ட தென்கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல.

சைமனுக்கு பாப்பனர்களின் விருந்து

சிறீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லாப் பார்ப்பனர்களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரச்சாரமும் செய்யப்பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாருமில்லை. தேசிய வீரர்களும், தேசியப் பத்திரிக்கைகளும் தங்களை மறைத்துக் கொண் டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவா விட்டால் அல்லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கியதையை வெளியாக்கி னால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக்கியத்தனம்!

சைமனுக்கு சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத் தன்றே நமது தேசிய வீரப்புலிகள் சட்ட சபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்துவிட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக்காரர்களின் சட்ட சபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதை வேண்டும். இவர்களை நம்பி எத்தனையோ சோணகிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுயராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரியவில்லை.

அதிசய விருந்து

ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான் களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கன வான்கள் அந்தச் சமுகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும் வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றுவரும் ஈரோடு தாலுகா போர்டு பிரசிடெண்டுமான பழைய கோட்டை பட்டக்காரர் சிறீராவ்பஹதூர் நல்ல தம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் ஆகிய கன வான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண் டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும்.

இதைப் பின்பற்றியாவது அச்சமுகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன் சிறீ பட்டக்காரர் அவர் களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்து கின்றோம்.

கல்யாணத்தின்போது பார்ப்பான் மந்திரம் கூறுகிறானே - என்ன பொருள் தெரியுமா? சீதை, திரவுபதை, மற்ற பத்தினிகள், இவர்கள் போல் நீங்களும் இருக்க வேண்டும் என்கிறான்.

சீதை யார்? ஒழுக்கங்கெட்டவள். இராவணனால் கர்ப்பமுற்றவள். திரவுபதை 5 பேருக்குப் பெண்டாட்டியாயிருந்தாள். அய்ந்தும் போதாமல் ஆறாவதாகக் கர்ணன் மேலும் ஆசைப்பட்டவள்.

- தந்தை பெரியார்-

பள்ளிக்கூடத்தில் புராண பாடம்
- சித்திரபுத்திரன் -

08.04.1928 - குடிஅரசிலிருந்து...

உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.
பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.

உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடையா?

பையன் : நான் கேட்டதில்லை சார். ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டி ருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணு வின் படுக்கை என்றும், அந்த விஷ்ணு இராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லட்சுமணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.

உபாத்தியாயர் : ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

பையன் : இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்...

உபாத்தியாயர் : என்ன சந்தேகம்? சீக்கிரம் சொல்.

பையன் : பூமியைத் தாங்கிக் கொண்டிருக் கின்ற, ஆதிசேஷன் விஷ்ணு வுக்கு படுக்கை யாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்.

உபாத்தியார் : நீ என்ன குடிஅரசு படிக்கிறாயோ! அது தான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய். பொறு! உனக்கு இந்த பரீட் சையில் சைபர் போடுகின்றேன்.

பையன் : இல்லவே இல்ல சார், நான் சத்தியமாய் குடி அரசைப் படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.

உபாத்தியார் : ஆதிசேஷன் தெய்வத் தன்மை பொருந்தியவன்.  ஒரே காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ்ணுவுக்கு படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்குப் போகும் போது லட்சுமணனாக கூடவும் போவான். தெரியுமா?

பையன் : இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப் போங்கள் இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.

உபாத்தியார் : என்ன சொல் பார்ப்போம்.

பையன் : பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் சரி, அதை நான் ஒப்புக் கொள்ளு கின்றேன். அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.

உபாத்தியார் : என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.

பையன் மறுபடியும் : பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் சார் (தலையை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர் எதன் மேலிருந்து கொண்டு தாங்கறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை சார்.

உபாத்தியார் : போக்கிரிப்பயலே நீ குடிஅரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு, பொறு, பேசிக் கொள்கிறேன். வாயை மூடிக்கொண்டு போய் உட்கார், அதிகப்பிரசிங்கிப் பயலே!

பையன் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சைக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி  கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக்கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக் கொண்டார்.

Banner
Banner