ஆளில்லாமல் பறக்கும், ‘ட்ரோன்’களை முதலில் பயன்படுத்த ஆரம்பித்திருப்போர், கடத்தல்காரர்கள், உளவு பார்ப்போர், குறும்புக்காரர்கள் போன்றோர் தான். இவர்களை தடுக்க, பலவித கருவிகளை உருவாக்கியிருக்கிறது, ‘ட்ரோன் ஷீல்டு’ நிறுவனம்.

துப்பாக்கி வடிவிலான, ‘ட்ரோன் கன்’ தொந்தரவு தரும் ட்ரோனை நோக்கி, ரேடியோ அலைகளை செலுத்துகிறது. இதனால், ரேடியோ அலை ஆணை மூலம் இயங்கும் ட்ரோன், குழப்பமடைந்து திரும்பிச் செல்லும் அல்லது தரையி றங்கிவிடும்.

‘ட்ரோன் சென்டினல், ட்ரோன் சென்ட்ரி’ ஆகிய இரண்டும், காவல் தூண் வடிவிலிருக்கும் அமைப்புகள். இவற்றை நிரந்தரமாகவும் நிறுவலாம் அல்லது தற்காலிகமாகவும் நட்டு வைக்கலாம்.

ரேடார், வானொலி அலை, வெப்பம், ஒலி, ஒளி ஆகியவற்றை கண்டறியும் உணரிகள் போன்ற வசதிகளை கொண்ட இவை, அத்துமீறும் ட்ரோன்களை அடையாளம் கண்டதும், அது பதிவு செய்யப்பட்டதா என, தகவல் களஞ்சியத்தில் தேடி பார்த்து, உரிமையாளருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை வினாடியில் அனுப்புகின்றன.

அப்போதும் திரும்பிச் செல்லாவிட்டால், வலுவான ரேடியோ அலைகளை அனுப்பி, அந்த ட்ரோனை குழப்பி, தரையிறங்கவோ திரும்பிச் செல்லவோ செய்கின்றன. 2 கி.மீ., துரம் வரை, இந்த வேலையை இரு அமைப்புகளும் செய்ய முடியும். சிறை சாலைகள், நாட்டின் தலைவர்களின் பாதுகாப்பு பிரிவுகள், சிவில் மற்றும் ராணுவ விமான நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து, விற்பனை செய்கிறது, ட்ரோன் ஷீல்டு.


தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்கென, மிகப்பெரிய மின் சேமிப்புக் கலனை நிறுவும் பணிகளில் இறங்கி உள்ளது, டெஸ்லா. மின் கார் தயாரிப்பாளரான, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், இதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில அரசுடன் கையெழுத்திட்டு உள்ளார்.

டெஸ்லா நிறுவனம், ‘பவர் வால்’ என்ற வீட்டு மின் சேமிப்புக் கலன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 2016இல் புயல், வெப்ப அலை ஆகியவற்றால், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மின் அமைப்புகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள், மின்சாரமின்றி பல நாட்கள் அவதிப்பட்டனர்.

எனவே தான், அம்மாநில முதல்வர், பெரிய மின் சேமிப்பு தொகுப்பை உருவாக்க முடிவு செய்தார்.இதற்கு டெஸ்லாவின், ‘பவர்பேக்‘ என்ற மின் சேமிப்புக் கலன் தொழிற்நுட்பம் உதவும் என, வல்லுனர்கள் கருதினர்.

இதையடுத்து, 126 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும், லித்தியம் அயனி மின் சேமிப்புக் கலன் தொகுப்பை அமைத்துத் தர, எலான் மஸ்க் முன்வந்தார்.

இந்த தொகுப்பிலிருந்து, 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கையெழுத்தானதிலிருந்து, 100 நாட்களுக்குள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரப்போவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

அதாவது, டிசம்பருக்குள் அது முடியாவிட்டால், பல கோடி பெருமானமுள்ள மின் சேமிப்புக் கலன் தொகுப்பை, தெற்கு ஆஸ்திரேலிய மக்களுக்கு இலவசமாக தரப்போவதாக, மஸ்க் உறுதியளித்து உள்ளார்.

காற்று மாசு, நாளடைவில் பல உயிர்களைக் குடிக்கிறது. சராசரியாக, ஒரு கியூபிக் மீட்டர் காற்றில், 10 மைக்ரோ கிராம் அளவுக்கு மாசுத் துகள்கள் அதிகரித்தால் கூட, அக்காற்றை சுவாசித்து வாழும் மனிதர்களின் வாழ்நாளில், ஒன்பது ஆண்டுகள் முதல், 11 ஆண்டுகள் வரை ஆயுள் குறையக்கூடும் என்று, அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, ‘சயின்ஸ் டைரக்ட்’  என்ற இணையதளத்தில் உள்ளது.

***
வயிற்றில் அதிக அமிலச் சுரப்பால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை குறைக்க, ‘புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்’ என்ற வகை மருந்துகள் பரவலாக கொடுக்கப்படுகின்றன. இந்த மருந் தின் பக்கவிளைவாக சிறுநீரக பாதிப்பு, எலும்பு பாதிப்பு, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படுவதாக பல ஆய்வுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஓர் ஆய்வின்படி, இந்த வகை மருந்துகளை வெகு நாட்களாக உபயோகிப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளது. 

***
நோய் பரப்பும் பல நுண்ணுயிரிகள், இப்போது, ‘ஆன்டிபயாடிக்’ எனும் நோய்த் தடுப்பு மருந்துகளையே எதிர்க்கும் சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதற்கு முக்கியமான காரணம், இன்று பரவலாக வீடுகளில் பயன்படுத்தப்படும், ‘டிரைக்ளோசான்’ என்ற வேதிப்பொருள் அடங்கிய கிருமி நாசினியே என்று, ‘ஜர்னல் ஆப் ஆன்டி மைக்ரோபியல் கீமோதெரபி’ என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

***
இதய நோய் உள்ளவர்களுக்கு, இன்று பல மருத்துவர்கள் தரும், ‘பீட்டா பிளாக்கர்’ வகை மருந்து, நோயாளிக்கு எந்த பயனையும் தரு வதில்லை.  ‘ஜர்னல் ஆப் அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி’ இதழில் வெளி யாகியுள்ள ஓர் ஆய்வுத் தகவல். இதயத் தாக்குதல் ஏற்பட்ட பலரது இதயம் செயலிழந்துவிடாமல் தானாகவே துடிப்பை தொடர்கிறது என கூறுகிறது.  

சாதாரண மிதிவண்டியை மின்சார மிதி வண்டியாக மாற்றலாம்!


ஒரு நபர் பயணிக்க மிக சிக்கனமான வாகனம் மிதிவண்டி தான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடல் நலப் பிரியர்கள் இன்று மிதிவண்டியின் பக்கம் திரும்புவதால், ஏற்கனவே உள்ள சைக்கிள்களுக்கு, மின் மோட்டார் பொருத்துவது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் அசாப் பிதர்மேன்.

இவர், அமெரிக்காவிலுள்ள மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின், ‘சென்ஸ் ஏபிள் சிட்டி’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தபோது, ஒரு மோட்டாரை கண் டுபிடித்தார். கோபன்ஹேகன் நகர நிர்வாக  ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த மிதிவண்டி இயந்திரத்திற்கு, ‘கோபன்ஹேகன் சக்கரம்‘ என்றே பெயர். மிதிவண்டியின் பின்சக்கரத்தில் பொருத்துவதற்கு ஏற்ற இந்த மோட்டார், பல முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரவே, ‘சூப்பர் பெடஸ்ட்ரியன்’ என்ற மிதிவண்டி தயாரிப்பு நிறுவனத்தை, 2009இல் துவங்கினார்.
உலகிலுள்ள பெரும்பாலான சைக்கிள்களின் பின்சக்கரத் தில் பொருத்தக்கூடிய, 350 வாட் மோட்டார் கொண்ட தட்டு போன்ற அமைப்பை பிதர்மேன் உருவாக்கினார். இதனுடன், 48 வோல்ட் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயான் மின்கலனும் இணைக்கப்பட்டுள்ளது. சைக்கிளை மிதிப்பவரின் திறனை அறிய பல உணரிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேடு, கடினமான சாலைகளில் மிதிக்க ஆரம்பிக்கும்போதே, மோட்டாரும் உணர்ந்து கொண்டு உதவி செய்கிறது. இதனால், மிதிவண்டி ஓட்டுவது அயர்ச்சி தருவதாகவோ, அதிக வியர்வை சிந்த வைக்கக் கூடியதாகவோ இருக்காது என்கிறார் பிதர்மேன்.

இந்த மோட்டாருடன், 7 முதல், 10 வேக மாற்றி கொண்ட அமைப்பையும் சேர்க்க முடியும். இது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது!  

மனதை படிக்கும் தொழில்நுட்பம்!


ஒருவரது மூளையில் உதிக்கும் சிந்தனைகளை, இன்னொருவர், ‘படிக்க’ உதவும் கருவிகள் சில ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை, ஒருவர் என்ன எண்ணை மனதில் நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு மட்டுமே துல்லியமானவை. மனதில் ஓடும் சிக்கலான எண்ணங்களை படிக்க, அவற்றால் முடிவதில்லை.

அண்மையில், அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித மூளையில் உருவாகும் முழு வாக்கியத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.மனித எண்ணங்கள் சொற்களால் ஆன கோர்வைகளாக மூளையில் உதிப்பதில்லை. அவை, பல கருத்துக்களின் கோர்வை. எனவே, ‘வாழைப்பழம்‘ என்ற பெயரோடு, எனக்கு வாழைப்பழம் பிடிக்கும்; என் நண்பருக்கு பிடிக்காது என்பது போன்ற சிக்கலான எண்ணக் கோவைகளும் மனதில் உதிக்கும். இந்த சிக்கலான எண்ணங்களை, எப்.எம்.ஆர்.அய்., ‘ஸ்கேன்’ மூலம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை படம் பிடித்து, அந்தப் படங்களை கணினி மென்பொருள் கொண்டு அலசி, எளிதில் கண்டுபிடிக்கும் கருவியைத் தான் கார்னகி மெலன் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அடுத்து, மேலும் சிக்கலான மனித எண்ணங்களை படிக்கும் ஆராய்ச்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

தற்கொலைக்கு தூண்டும் நுண்ணுயிரிகள்!


விலங்குகளின் வயிற்றில் வாழும் ஒட்டுண்ணி களான நுண்ணுயிரிகள், அந்த விலங்குகளின் சிந்தனை, நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்து வதை, பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஆனால், சில விலங்குகளின் உடலுக்குள் வசிக்கும் நுண்ணுயிரிகள் தங்கள் இனப் பெருக்கத்திற்காக, தாங்கள் வசிக்கும் விலங்கையே கொன்று விடவும் கூடும் என்கிறது, ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியான ஆய்வு ஒன்று. எறும்புகளுக்குள் வாழும் ஒரு வகை நுண்ணுயிரி, அந்த எறும்புகளை புல்லின் நுணிக்குப் போய் அதிக நேரம் காத்திருக்கும்படி தூண்டுகிறது.

இதனால், மாடுகள் புல்லை மேயும்போது, அதன் மூலம் மாடுகளின் உடலுக்குள் செல்ல முடியும் என்கிறது அந்த ஆய்வு. இதே போல பல விலங்குகள், நுண்ணுயிரிகளின் நலனுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யும் பல சான்றுகளை அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

உலகின் மிகப் பெரிய டைனோசர்

அண்மையில், ஸ்பெயின் நாட்டில் காஸலான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரமான மொராலியாவில் 20 மீட்டர் நீளமுள்ள டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜோஸ் மிகுவல் கஸூல்லா, பிரான்சிஸ்கோ ஓர்டெகா, பெர்னாண்டோ எஸ்காகோ ஆகிய தொல்லுயிர் அறிஞர்கள் சேர்ந்து இரண்டு தொடை எலும்புகள், ஒரு மேல் கால் எலும்பு, தண்டுவட எலும்பு உள்ளிட்ட 80 எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

பிராகியாசாரஸ் பேரின வகையைச் சேர்ந்த சாரோபாட் டைனோசர் வகை ஒன்றின் எலும்புகள் இவை என்று கூறப்படுகிறது. தொடை எலும்பின் நீளம் மட்டும் 5 அடி 3 அங்குலம். ஒட்டகச்சிவிங்கியைப் போல நீண்ட கழுத்துள்ள தாவர உண்ணி டைனோசர்தான் சாரோபாட்கள். இதுவரை பூமியில் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட பேருயிர்கள் சாரோபாட் டைனோசர்கள்தான். இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மொராலியா பகுதியில் பிராகிய சாரஸ் டைனோசர்கள் 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துவந்தன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அந்த டைனோசர்கள் நீளம் 65 அடி 7 அங்குல நீளத்தையும் பத்து மீட்டர் உயரத்தையும் கொண்டிருந்திருக்க வேண்டும். இந்தப் புதிய எலும்புகளின் கண்டுபிடிப்பு 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் வாழ்ந்த பிற தொல்லுயிர்கள் பற்றிய ஆய்வுக்கும் உற்சாகமூட்டுகிறது.

அத்துடன் மொராலியாவுக்கு அருகிலுள்ள பகுதியில் வாழ்ந்த டைனோசர்களுக்கும் இங்குள்ள டைனோசர்களுக்கும் இடையிலான உறவையும் புரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.

இப்போதைக்கு மொரலியாவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு இந்த  எலும்புகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. தொல்லுயிர் ஆய்வுகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மொராலியா பகுதி மாறியுள்ளதாக ஆய்வாளர் குழுவில் இடம்பெற்ற கஸுல்லா தெரிவித்துள்ளார்.

சுவர் சாயத்திலிருந்தே ஹைட்ரஜன் தயாரிக்கலாம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆர்.எம்.அய்.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் சுவர் சாயத்தை கண்டுபிடித்துள்ளனர்.இந்த சாயத்தில், ‘டைட்டானியம் ஆக்சைடு’ துகள்கள், புதிதாக உருவாக்கப்பட்ட, ‘மாலிப்டீனம் சல்பைடு’ ஆகியவை உள்ளன. இவை, காற்றின் ஈரப்பதத்திலுள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் தனித்தனியாக பிரித்தெடுக்க உதவுகின்றன. இந்த வேதி வினைக்குத் தேவையான சக்தி, சூரிய ஒளியிலிருந்தே கிடைத்துவிடுகிறது.பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். இந்த கண்டுபிடிப்பு, எந்த சுவரையும் ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலையாக மாற்றிவிடும். இந்த தொழில்நுட்பம் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்பதால், ஆர்.எம்.அய்.டி.,யின் விஞ்ஞானிகள் இதற்கு காப்புரிமை பெறாமல், திறந்த தொழில்நுட்பமாக அறிவித்துள்ளனர்.  


Banner
Banner