காது கேட்காமல் போவதை குணப்படுத்தும் ஆய்வில், முக்கிய முன்னேற்றத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாள்பட காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. உட்காதுப் பகுதியில் நத்தையின் சுருண்ட கொம்புகளைப் போல உள்ள பகுதியில் வளரும் முடி வடிவில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது அதில் ஒன்று. ஒரு மனிதருக்கு சராசரியாக, 15 ஆயிரம் செல்கள் இருக்கும்.

மிகையான இரைச்சல், அத்துமீறிய ஓசை போன்றவற்றால் இந்த நுண்ணிய செல்கள் நாள டைவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், காதின் ஒலி உணர் திறன் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் காது கேளாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

மனிதனின் உடலில் உள்ள பிற செல்களைப் போல முடி செல்கள் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் வளர்வதில்லை. எனவே, அவற்றின் வளர்ச்சியை மீண்டும் துண்ட முடியுமா என, விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனில் உள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் உள்ள முடி செல்கள், மீண்டும் வளர்வதற்கு சமிக்ஞை தரும் புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், அவை ஏனோ, முடி செல்கள் வளர்வதற்கு சமிக்ஞை தராமலேயே இருக்கின்றன. அந்த செல்களுக்கு தூண்டுதல் தந்த போது, அவை மீண்டும் வளர ஆரம்பித்தன.

எலிகளின் மீதான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இழந்த செவி கேட்கும் திறனை மீட்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதே போன்ற ஆய்வை செவித் திறனை இழந்தோர் மீது விரைவில் அவர்கள் துவங்கி வெற்றி கண்டால், காது கேளாமையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

உலகிலேயே முதல் முறையாக, ஒரு நாட்டின் நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டத் திற்கு ஒரு ரோபோ வந்து சாட்சியம் வழங்கியிருக்கிறது. அண்மையில் பிரிட்டனின் நாடாளு மன்றக் குழு ஒன்று, பள்ளி வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி விவாதித்தது.

அந்தக் கூட்டத்திற்கு, மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தின் ரோபோவியல் துறை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும், பெப்பர் என்ற ரோபோ அழைத்து வரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, எழுந்து நின்றபடி பெப்பர் ரோபோ, தெளிவாக பதில் சொன்னது. அவைத் தலைவருக்கு வணக்கம். என்று குனிந்து தலை வணங்கிய ரோபோ, நான் ஒரு மனித வடிவ ரோபோ. என் பெயர் பெப்பர் என்ற தன் அறிமுகத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தது.

ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் நிறுவனத்தின் தயாரிப்பான பெப்பரை, மிடில்செக்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள், சிறப்புத் திறன் சிறார்கள், பிறர் உதவி தேவைப்படுவோருக்கு ரோபோக்கள் மூலம் உதவிகளை வழங்குவது குறித்த பரிசோதனைகளில் ஈடுபட்டு உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பே எழுதித் தந்த கேள்விகளுக்கு, பதில் தயாரிக்கப்பட்டு, ரோபோவின் நிரல்களில் பதியப்பட்டிருந்தது. என்றாலும் பெப்பர் ரோபோ பேசிய விதமும் தந்த பதில்களும் உறுப்பினர்களை அசத்தியது.

முகத்தை நினைவில் வைத்திருப்பது, எல்லோருக்கும் வாய்த்திருக்கும் திறன். இந்தத் திறன், ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.

சரி, சராசரியாக உங்களால் எத்தனை முகங்களை அடையாளம் சொல்ல முடியும்? ‘புரசீடிங்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி ‘இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, ஒருவர் சராசரியாக 5,000 முகங்களை நினைவிலிருந்து அடையாளம் சொல்ல முடியும்.

ஆராய்ச்சியாளர்கள், 25 பேருக்கு, 1 மணி நேரம் கொடுத்து, அவர்களது தனி வாழ்க்கையில் தெரிந்த முகங்களை பட்டியலிடக் கூறினர்.

அடுத்து, மேலும், 1 மணி நேரம் கொடுத்து, 3,000 மேற்பட்ட திரைப்பட, அரசியல், விளையாட்டு பிரபலங்களின் புகைப்படங்களை கொடுத்து, அவர்கள் யார் என்று கேட்டனர்.

சோதனை துவங்கிய சில நிமிடங்கள் வரை வேகமாக அடையாளம் கண்ட பலர், போகப்போக நினைவு கூறும் வேகம் குறைந்தது.

என்றாலும், அந்த, 25 பேரும் நினைவு கூறிய முகங்களின் எண்ணிக்கையை வைத்து சராசரியாக ஒருவரால் 5,000 முகங்களை நினைவில் வைத்திருக் கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

ஆய்வில் பங்கேற்ற சிலரால் ஆயிரம் பேர்களின் முகங்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தன. சிலரால் பத்தாயிரம் முகங்கள் வரை நினைவுகூற முடிந்தது. இந்த ஆய்வின் முடிவு, முகம் நினைவு கூறல் குறித்த வேறு ஆராய்ச்சிகளுக்கு அடிப் படையாக இருக்கும். அடுத்தபடியாக, இதே ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வை மேற்கொள்ள வுள்ளனர்.

அது என்ன தெரியுமா? எப்படி சிலரால் மட்டும், 10,000 முகங்களுக்கு மேல் நினைவில் வைத்திருக்க முடிகிறது என்பதுதான்!

Banner
Banner