சிறு வயது குழந்தை களுக்கும், இப்போது நீரிழிவு நோய் தாக்குவது சகஜமாகியிருக்கிறது. அய்ந்து, ஆறு வயதினரும், இன்சுலின் ஊசியை தினமும் போட வேண்டி யிருக்கிறது. ஆனால், ஒரே இடத்தில் தினமும் ஊசி போட நேர்வ தால், அந்த இடத்தில் தோல் பாதிக்கப் படும்.

மேலும் நீரிழிவுள்ள சிறுவர் - சிறுமியரே ஊசியைப் போட்டு கொள்ள முடிவதில்லை.

இதேபோன்ற சிக்கலை சந்தித்த தன் உறவினரான, ஆறு வயது சிறுவன் படும் பாட்டைக் கண்ட மெக்சிகோவைச் சேர்ந்த ரெனாடா சவுசா, ஒரு  இதற்கு தீர்வு காண வேண்டும் என, முடிவெடுத்தார்.

அதன்படியே, சிறுவர் களுக்கான நீரிழிவு ஊசி, ‘கிட்’ ஒன்றை வடிவமைத்துள்ளார். பள்ளி மாணவர்கள் ஸ்டிக்கர் வடிவில் தற்காலிக பச்சை குத்திக் கொள்வதை பார்த்த அவர், அதேபோல, பல உருவங்கள் கொண்ட கறுப்பு, வெள்ளை ஸ்டிக்கர்களை தயாரித்தார்.

ஊசி குத்த வேண்டிய இடங்களில் மட்டும் வண்ணப் புள்ளிகள் இருக்கின்றன. ஒரு புள்ளியின் மேல், பஞ்சால் ஆல்கஹாலை தொட்டு துடைத்தால் அந்தப் புள்ளி மறைந்து விடும். அந்த இடத்தில் இன்சுலின் ஊசியை போடலாம். தற்காலிக ஸ்டிக்கர் பச்சை குத்திய இடத்தில், வண்ணப் புள்ளிகள் எல்லாவற்றின் மீதும் ஊசி போட்ட பின், வேறொரு இடத்தில் பச்சை குத்தலாம்.

இதனால், தோல் புண்ணாவது தவிர்க் கப்படும். அதேபோல ஊசியையும் சிறுவர் களே பிடித்து குத்திக்கொள்ளும் விதத்தில், பாதுகாப்பாக, ரெனாடா வடிவமைத்திருக் கிறார்.

‘தோமி கிட்’  என, பெயரிடப்பட்டுள்ள தன் வடிவமைப்பை, உலகெங்கும் விற்பனை செய்ய, ரெனாடா திட்டமிட்டு வருகிறார்.

புதிய சர்க்கரை நோய் வகை கண்டுபிடிப்பு!

நீரிழிவு நோயை மருத்துவர்கள் இரண்டு வகையாகப் பிரித்து, அகற்கு ஏற்றபடி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால், சர்க்கரை நோயில் மேலும் மூன்று வகைகள் இருப்பதாக, பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டு ஆராய்ச் சியாளர்கள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அது இந்த அய்ந்தில் எந்த வகை என தெரிந்து, அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்க முடியும் என, ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

உடல் சர்க்கரையை சக்தியாக மாற்ற உதவும் இன்சுலின் உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகளை சார்ந்து இரண்டு வகையும், உடல் பருமன் சார்ந்து இரண்டு வகையும், வயது சார்ந்து ஒருவகையுமாக இனி சர்க்கரை நோய்களை வகைப்படுத்த வேண்டும் என, இரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அறிவு றுத்துகின்றனர்.

‘தி லான்செட் டயாபெட்டிஸ் அண்ட் எண்டோக்ரினாலஜி’ இதழில் வெளிவந்துள்ள இந்த புதிய வகைப்பாட்டுக்கு உலகெங்கும் உள்ள நீரிழிவு மருத்துவர்கள் வரவேற்புத் தெரிவித்து உள்ளனர்.

அதேசமயம், உலகெங்கும் உள்ள பல தரப்பட்ட நோயாளிகளுக்கு மேலும் பல வகை சர்க்கரை நோய்கள் இருக்கலாம்.

அவற்றையும் வகைப்படுத்தினால், அந் தந்த நோயாளிக்கு வந்துள்ள வகை சர்க்கரை நோய்க்கு ஏற்ற துல்லியமான மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும் என, கருத்து தெரிவித்து உள்ளனர்.

புதிய மென்மையான உலோகம் கலினினி!  

கிராபீன் என்ற விந்தைப் பொருளின் உறுதியையும், இரு பரிமாணத் தன்மை யையும், விஞ்ஞானிகள் சமீபகால மாக அதிகம் மெச்சி வருகின்றனர்.

ஆனால், காலியம் உலோகத்தின் இரு பரிமாண வடிவமாக ஓர் உலோகம் இருப்பதை, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகளும், அமெரிக் காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தி னரும் கண்டறிந்துள்ளனர். காலியத்தின் வேறுபட்ட வடிவத்திற்கு, அவர்கள் ‘கலினினி’ என, பெயரிட்டுள்ளனர்.

மிக மென்மையான தன்மை கொண்ட கலினினி உலகத்தை, மின்ணனு சர்க்யூட்டு களில் தொடு முனைகளாக பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பொதுவாக, இரு பரிமாண உலோகங்களை பிரித்தெடுப்பது கடின மாக இருக்கும்.

ஆனால், கலினினி விதிவிலக்காக மென் மையான உலோகமாக இருப்பது, வேலையை எளிதாக்கியுள்ளது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுனாமியை கணிக்கும் கணிதம்

சுனாமியின் பேரலை கள் வரும் முன்எச்சரிக்க கணிதத்தை பயன்படுத்த முடியும் என, இங்கி லாந்தைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கரையிலிருந்து பல மைல்கள் தொலைவில், கடலுக்கு அடியில் நில நடுக்கம் துவங்கும்போதே ஒலி அலைகள் ஏற்படுவதுண்டு.

இந்த ஒலி அலைகள், நில நடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலைகள் பயணிப்பதைவிட, வேகமாக, கடலடி நீர் பரப்பில் நாலா பக்கமும் பயணிக்கும் திறன் கொண்டவை.
எனவே, கடலடியில் நிலத்தட்டுக்கள் நகரும் போது எழும் மெல்லிய ஒலி அலைகளின் இடம், திசை, வேகம், அகலம், நிகழும் நேரம் போன்ற வற்றை வைத்து, சுனாமி அலைகள் கடலை எட்ட எவ்வளவு நேரமாகும் என்பதை, சில நிமிடங்களில் கணித்துவிட முடியும் என, கார்டிப் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்புக்கு உதவும் கணித முறையை, விஞ்ஞானிகள், ‘ஜர்னல் ஆப் புளூயிட் மெக் கானிக்ஸ்’ இதழில், சமீபத்தில் வெளியான கட்டு ரையில் விவரித்துள்ளனர்.

மரச்சாமான்களை செய்யும் ‘ரோபோ’ தச்சர்

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே இருக்கும் ரோபோடிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தானியங்கி முறையில் பாதுகாப் பான வகையில் மரச்சாமான்களை உருவாக்கும் அமைப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.அய்.டி) பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தற்போதுள்ள ரோபோடிக் தொழில் நுட்பம் மற்றும் ரூம்பா என்ற தரையை சுத்தம் செய்யும் ரோபோவில் சில மாற்றங்களை செய்து இந்த புதிய அமைப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

தங்களது கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு அதா வது தச்சர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்றும், இவை தச்சர்கள் வடிவமைப்பு போன்ற முக்கியமான விடயங்களில் அதிக கவனத்தை செலுத்துவதற்கு பயன்படுமென்றும் இந்த புதிய அமைப்பு முறையை உருவாக்கியுள்ள அணியினர் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற அமைப்பு முறைகள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளை வெகுவாக குறைக்கு மென்றும் அவர்கள் நம்பு கின்றனர். “ஒவ் வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான தச்சர்கள் மரங்களை அறுக்கும் பணி யில் ஈடுபடும் போது தங்களது கைகளையும், விரல் களையும் தவறுதலாக காயப்படுத்திக் கொள்கின்றனர்” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

“இந்த செயல்முறையில் நிபுணரல்லாதோர் கூட பல்வேறுபட்ட பொருட் களை கொண்டு வடிவத்தை நிர்மாணித்து அதை ரோபோக்களின் உதவியோடு உருவாக்க முடியும்“ என்று ‘ஆட்டோசா’ என்ற இந்த அமைப்பு முறையை உருவாக்கியுள்ள ஆராச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை மிகப்பெரிய மரச் சாமான்களை தயாரிப்பதற்கு ரோபோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது எம்.அய்.டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித் துள்ள இந்த புதிய அமைப்பு முறையின் மூலம் குறிப் பிட்ட தேவைகள் மற்றும் வேறுபட்ட வடிவங்களை கொண்ட மரச்சா மான்களை ரோபோட்டுக்களை கொண்டு தயாரிப்பதற்குரிய வழி உருவாகியுள்ளது.


ஒருவரது விழித் திரையின், ‘ஸ்கேன்’ மட்டும் இருந்தால், அதை வைத்தே, அவருக்கு இதயக் கோளாறு ஏதும் வருமா வராதா என்பதை கணிக்க முடியுமா... முடியும் என்கிறது, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனமான வெரிலி லைப் சயன்சஸ் ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் செய்துள்ள ஓர் ஆய்வு.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சம் பேர், சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த விழித்திரை ஸ்கேன்களை சேகரித் தனர், ஆராய்ச்சியாளர்கள்.

பின் அவற்றை, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் கொடுத்து அலச கூறினர். நோயாளிகளின் பொதுவான உடல்நலத் தகவல்களுடன் அதை அலசிப் பார்த்து, இந்த நபருக்கு, அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இதயம் தொடர்பான கோளாறுகள் வரக்கூடும் என, 70 சதவீத துல்லியத்துடன் கூகுளின் செயற்கை நுண்ணறிவு கணித்துச் சொல்லி விட்டது.

ஏற்கெனவே, இதய நோயை கணிக்க உதவும், ‘ஸ்கோர்’ என்ற சோதனை முறை, ரத்த மாதிரிகளை வைத்து, 72 சதவீத துல்லியத்துடன் கணித்து வருகிறது. ஆனால், கூகுளின் சோதனைக்கு ஊசி குத்தி, ரத்தம் எடுக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பழைய துணிகளை புதுப்பிக்கும் லேசர்!  

புதியதையும் பழையதுபோல ஆக்கி விற்பதில் லீவைஸ் ஜீன்ஸ் கம்பெனியை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இதுவரை புதிய ஜீன்சை பழசு போல தோற்றமளிக்க வைக்க, 18 முதல், 20 தடவை பல வேதிப் பொருட்களில் முக்கியெடுத்து வந்தனர்.

இந்த முறையில் லீவைஸ் ஆலையில் ஒருவர் மூன்று ஜீன்ஸ்களையே தயாரிக்க முடியும். ஆனால், அண்மையில் லேசர் கதிர்களை பயன்படுத்தி ஜீன்களை பழசுபோல ஆக்க ஆரம்பித்துள்ளது லீவைஸ். இதற்கென தனியாக உடை வடிவமைப்பாளர்களை அமர்த்தி, எங்கே கிழிசல், எங்கே பிசிறு, எங்கே வெளிரல் என்று எல்லாவற்றையும் வடிவமைத்து, ஒரு கணினியில் பதிவு செய்ய, ஒரு லேசர் கதிர் இயந்திரம் ஒவ்வொரு ஜீன்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் ஒரு வருடு வருடுகிறது. அவ்வளவுதான், 90 வினாடிகளில் புத்தம்புதிய பழைய ஜீன்ஸ் தயார்!

ஆடைத் தொழிலில் ஒரு தலைமுறைக்கு ஒரு தடவை தான். இதுபோன்ற, ‘புரட்சிகர’ தொழில்நுட்பம் வரும். அது இப்போது லீவைசுக்கு வாய்த்திருக்கிறது என, லீவைசின் வடிவமைப்பாளர்கள் குழுவின் தலைவர், ஊடகங்களிடம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மனித கண்ணை மிஞ்சும் செயற்கைக் கண்

ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானி கள், செயற்கை குவி ஆடி ஒன்றை உருவாக் கியுள்ளனர். வெறும், 30 மைக்ரான் அளவே உள்ள இந்த குவி ஆடி, மனித கண்களில் குவி ஆடி தசையால் இயக்கப் படுவதைப் போலவே இயங்குகிறது.

ஒளிப்படக் கருவி, தொலைநோக்கி, நுண் நோக்கி, போன்றவற்றில் பலவித ஆடிகளை வரிசையாக வைத்து ஒளியை குவியச் செய்வர். இப்படி பல ஆடிகளை வைக்கும் போது, உள்ளே வரும் ஒளிக் கற்றைகள் பாதிப்படைந்து, அவை திரையில் உரு வாக்கும் தோற்றம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய ஆடி, தட்டையாக இருந்தாலும், மின் துண்டுதலால் தசைகள் போல இயங்கி ஒளியை திரையில் குவிக்கிறது.

இதனால், படத்தின் துல்லியம் பாதிக்கப்படு வதில்லை என, ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த ஆடியில் ஒளி ஊடுருவும் புதிய வகை, ‘எலாஸ்டோமர்’ செயற்கை தசையாக செயல்படுகிறது. இந்த தசை மின்துண்டலில் விரியவும் சுருங்கவும் எடுத்துக்கொள்ளும் நேரத்தை மேலும் குறைக்க முடியுமா... என, ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

காகிதத்தால் ஆன பேட்டரி!

பார்சிலோனாவைச் சேர்ந்த, ‘பியூயலியம்‘ என்ற ஆய்வு மய்யம், காகிதத்தால் ஆன மின் கலனை வடிவமைத்திருக்கிறது. இந்த புரட்சிகரமான மின் கலன், 1 வோல்ட் முதல், 6 வோல்ட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.

இன்று, நோயறிய உதவும் கருவிகளில் பொத் தானைவிட சிறிய அளவே உள்ள மின் கலன்கள், பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறிந்துவிடுவர். இதனால், பொத்தான் மின் கலன்களில் உள்ள நச்சுப் பொருட் கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. பியூ யலியத்தின் காகித பேட்டரிகளில் வேதிப் பொருட் கள் எதுவும் இல்லை. மாறாக, நோயறிவதற்காக பயன்படுத்தப்படும் ரத்தம் மற்றும் சிறுநீர் போன்றவை, காகிதத்தின் மீது படும்போது ஏற்படும் வேதிமாற்றத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரத்தை வைத்து, நோயறியும் கருவியிலுள்ள, உணரிகள் மற்றும் திரை ஆகியவற்றுக்கு போதிய மின்சாரம் கிடைக்கும். இதை ரத்தப் பரி சோதனை, கருத்தரித்திருப்பதை அறியும் சோதனை, சிறு நீர் சோதனை போன்றவற்றுக்கான கருவி களுக்கு, இக்காகித மின்கலன் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதும் என, இதன் கண்டு பிடிப் பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு முறை பயன்படுத்தி குப்பையில் போடப் படும் பல நோயறியும் கருவிகளை தயாரிக்கும் போதே, பியூயலியம் மின் கலன்களையும் சேர்த்து தயாரிக்க முடியும். இது போன்ற காகித பேட்டரிகளை பெரிய கருவிகளிலும் பயன்படுத்த முடியுமா... என, ஆய்வுகள் நடக்கின்றன.

மறுசுழற்சிக்கென்றே தயாரிக்கப்பட்ட கார்!

நெதர்லாந்திலுள்ள இந்தோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆண்டுக்கொரு புதிய காரை வடிவமைத்து வெள்ளோட்டம் பார்த்து வருகிறது. இந்த வரிசையில் அண்மையில், ‘நோவா’ என்ற மின்சார காரின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள, 90 சதவீத பொருட்கள் உயிரி பிளாஸ்டிக் போன்ற சுற்றுச் சூழலுக்கு கெடுதல் செய்யாதவை.

அதுமட்டுமல்ல, நோவா காரை வடிவமைக்கும் போதே, அதை மறுபயன் மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்றவாறு வடிவமைத்திருப்பதாக இந்தோவென் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இரண்டு பேர் பயணிக்கும் நகர்புற காரான நோவாவின், உற்பத்தி முறையும் சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வகையில் இருக்கும். ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 240 கி.மீ., தூரம் பயணிக்கும் நோவாவின் அதிக பட்ச வேகம் மணிக்கு, 100 கி.மீ., அதுமட்டுமல்ல, இந்த வண்டியிலுள்ள ஆறு மின் தேக்கிகளையும், தேவைப்பட்டால், உடனே கழற்றிவிட்டு, மின் னேற்றம் நிறைந்த மின் தேக்கிகளை பொருத்தி பய ணத்தை தொடரும் வகையில் வடிவமைத்தி ருக்கின்றனர் விஞ்ஞானிகள். உலோக மோட்டார், சேசிஸ் போன்றவற்றைத் தவிர, 350 கிலோ எடையுள்ள இந்த வண்டியில், கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட பாலிலாக்டிக் அமிலம் போன்ற இயற்கை பாலிமர்களால் ஆன பாகங்களே அதிகம்.

வாகனங்கள் மறுசுழற்சி நோக்கில் தயாரிக்கப் படுவது இன்று அவசியம், அவசரம் என்கின்றனர் இந்தோவென் விஞ்ஞானிகள்.மாட்டுக் கறி என்றாலே சர்ச்சைதான். சில ஆண்டு களாக, மாட்டிறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கும் சோதனைகள் வெற்றி கண்டுள்ளன. அத்தகைய ஆய்வக இறைச்சிக்கும், அசல் மாட்டிறைச்சிக்கும் சுவையில் அதிக வித்தியாசம் இல்லை. எனவே, விரைவில் அத்தகைய இறைச்சியை பெருமளவில் தயாரிக்கும் முயற்சி, அமெரிக்காவில் துவங்கியிருக்கிறது.

உடனே அந்நாட்டின் கால்நடை வளர்ப்போர் சங்கம், போர்க்கொடியை உயர்த்தியிருக்கிறது. பண்ணை அல்லது புல்வெளிகளில் மேய்த்து வளர்த்து, வெட்டி விற்கப்படும் இறைச்சிதான் மாட்டிறைச்சி என்பது அவர்கள் வாதம். எனவே, ‘பீப்’ எனப்படும் ‘மாட்டுக் கறி’ மற்றும், ‘மீட்’ எனப்படும், ‘இறைச்சி’ ஆகிய இரு சொற்களையும், ஆய்வுக்கூட இறைச்சியை தயாரித்து விற்பனைக்கு விடவிருக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தவே கூடாது என, கால்நடை சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.

‘மெம்பிஸ் மீட்ஸ்’ என்ற ஆய்வக இறைச்சி நிறுவனம், 2021இல் தங்கள் ஆய்வக மாட்டுக்கறி விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், ‘ஜஸ்ட்’ என்ற இன்னொரு ஆய்வகக் கறி நிறுவனம், 2018 டிசம்பருக்குள் தங்கள் மாட்டு செல்லில் விளைந்த மாட்டுக்கறியை, பெட்டிகளில் அடைத்து விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

தோற்றத்திலும், சுவையிலும் இயற்கை மாட்டுக் கறியைப் போலவே ஆய்வகத்தில் வளர்ந்த கறி இருப்பதோடு, மேய்சலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் தங்கள் கறியால் ஏற்படாது என, அந்நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்கின்றன.

முக்கியமாக, இனி ஒரு மாட்டையும் இறைச்சிக்காக கொல்லவேண்டியிருக்காது என்றும் அவை தெரிவித்துள்ளன. பல சமையல் கலை பிரபலங்களிடம் தந்து சமைக்கச் சொல்லி, ‘ஆஹா, பேஷ், பேஷ்’ என்று பாராட்டுக்களையும் வாங்கியிருக்கின்றன மெம்பிஸ் மற்றும் ஜஸ்ட் போன்ற நிறுவனங்கள்.

வண்ணங்களை பிரதிபலிக்கும் பாக்டீரியா

காலனி, காலனியாக உயிர்களின் உடலில் குடியேறி, நோய்களை பரப்பி, கொல்பவைதான் பாக்டீரியா என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதே பாக்டீரியாவின் மரபணுக்களை திருத்தினால், நமக்கு பயனுள்ள வேலைகளையும் அவை செய்யும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், ஹோகோமைன் பி.வி., என்ற நிறுவனமும் இணைந்து, வண்ணங்களையும், சாயங்களையும் தயாரிக்க உதவும் பாக்டீரியாவை படைத்திருக்கின்றனர்.

‘பிளாவோ பாக்டீரியா’ என்ற ஒரு வகை பாக்டீரியாக்கள் வண்ணங்களை உமிழ்பவை. அவை குறிப்பிட்ட நிறமிகளை சுரப்பவை அல்ல. அவற்றின் உடலமைப்பு, ஒளியை பிரதிபலிக்கும்போது, நுண்ணோக்கி வழியே பார்க்கும் மனித கண்களுக்கு, குறிப்பிட்ட நிறங்களில் தெரிகின்றன என்பதை விஞ்ஞானி கள் கண்டறிந்தனர்.

மயிலின் தோகை, பட்டாம்பூச்சியின் இறக்கை போன்றவற்றிலும் இதே போன்ற ஒளிப் பிரதிபலிப்புதான் நம் கண்களுக்கு வண்ணங்களை காட்டுகின்றன. எனவே, அடுத்த கட்ட ஆராய்ச்சியில், பாக்டீரியாக்களின் மரபணுவில் மாற்றங்களை செய்து, குறிப்பிட்ட வண்ணங்களை, வண்ணக் கலவைகளை, அல்லது வண்ணமே இல்லாத வகையிலும் பாக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

சில ஆண்டுகளில் நச்சுத் தன்மை இல்லாத, இயற்கையான வண்ணப் பூச்சுக்களை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள்.
பலப்படுத்தப்படும் உலக விதைக் காப்பகம்!

இயற்கைப் பேரிடராலோ அல்லது மனிதர்களின் அழிவுச் செயலாலோ உணவுப் பயிர்கள் பூண்டோடு அழிந்துபோனால் என்ன செய்வது? அப்படி அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிலிருந்து தப்பிக்கத் தான், ‘ஸ்வால்பார்டு உலக விதைக் காப்பகம்‘, 2008ல் உருவாக்கப்பட்டது.

நார்வேயிற்கும், வட துருவத்திற்கும் இடைப் பட்ட ஒரு பகுதியில் அந்த விதைக் காப்பகம் கட்டப்பட்டு, அதில் உலக நாடுகளிடமிருந்து சேமிக்கப்பட்ட 8.90 லட்சம் வகை பயிர்கள், தாவரங்களின் விதைகள் பத்திரப்படுத்தப் பட்டுள் ளன. ஆனால் பாருங்கள், கடந்த ஆண்டு நார் வேயின் உறைபனிப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பனி உருக ஆரம்பித்தது. இதனால், பூமிக்கடியில் சுரங்கம் போலக் கட்டப்பட்டுள்ள விதைக் காப்பகத்தின் ஒரு பகுதிக்குள் நீர் புகுந்துவிட்டது.

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால், சுரங்கக் கட்டடத்தை புதுப்பிக்கவும், மாற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நார்வே அரசு, 83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உடனடியாக வேலையை துவங்கி,விட்டது.

சுவர்களை பலப்படுத்துவது, காப்பகத்தினுள், விதைகள் கெட்டுப்போகாமல் இருக்க, தட்ப வெப்பத்தை சீராக வைப்பது, மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்படி செய்வது ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தத்தால் பயிர்கள் நாசமானதால், ஸ்வால்பார்டிடம் கொடுத்து வைத்திருந்த விதைகளை வாங்கிச் சென்றது. பிறகு, 2015இல் எடுத்த விளைச்சலில் கிடைத்த விதைகளை மீண்டும் ஸ்வால்பார்டிடமே ‘டிபாசிட்’ செய்தது. எதிர்கால உலக உணவு வினியோகத்தில், ஸ்வால்பார்டுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும்.

குளு குளு தலைக்கவசம்!

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், அதை மீறுபவர்கள்தான் அதிகம். ஹெல்மெட் அணிவதால் தலையில் ஏற்படும் கடும் புழுக்கமே இதற்கு காரணம்.

அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினரிடம் வாகன ஓட்டிகள் இதைக் கூற முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தலையை குளு குளுவென வைத்துக் கொள்ளவும், வியர்க் காமல் தவிர்க் கவும் “ஏசி’ தலைகவசத்தை அய்தராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கவுஸ்துப் கவுன்டின்யா, சிறீகாந்த் கொமுல்லா, ஆனந்த் குமார் ஆகி யோர் தயாரித்துள்ளனர்.

கல்லூரியில் பயில தினந்தோறும் 60 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று வந்த போதுதான் ஏசி தலைக்கவசத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், 2016-இல் படிப்பை முடித்தவுடன் ஏசி தலைக் கவசத்துக்கான ஆய்வுகளில் இறங்கி விட்ட தாகவும் கவுஸ்துப் தெரிவித்தார்.

முதல்கட்டமாக, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஏசி ஹெல்மெட்டுகளை இவர்கள் தயாரித்து வெற்றி கண்டுள்ளனர்.

2 மணி நேரம் பேட்டரி சேமிப்புத் திறன் கொண்ட தொழிற்சாலை ஏசி ஹெல்மெட்டை ரூ. 5,000 விலையிலும், 8-மணி நேரம் பேட்டரி திறன் கொண்ட ஏசி தலைக் கவசத்தை ரூ. 5,500 விலையிலும் இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சாதாரண தலைக்கவசங்களை விட 250 கிராம் கூடுதல் எடை கொண்ட இந்த குளு  குளு தொழிற்சாலை ஏசி தலைகவசங்களை மொபைல் போன் பேட்டரிகளைச் சார்ஜ் செய்து போல சார்ஜ் கொள்ளலாம்.

இந்திய கடற்படை கப்பல்களில் அடித் தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், டாட்டா மோட்டார் நிறுவனம் தனது தொழிற் சாலையில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கும் இந்த தலைக்கவசங்களை வாங்க முன்வந்துள்ளன.

மாதம்தோறும் 1000 ஏசி தலைக்கவசங் களைத் தயாரிக்கும் வகையில், தொழிற்சாலை அமைக்க இந்த இளைஞர்களுக்கு தெலங் கானா அரசும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஏசி தலைக்கவசங்களை உருவாக்கும் பணியில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் சந்தைகளிலேயே கிடைக்கும் 85 சதவீத பொருள்களைக் கொண்டே இவர்கள் ஏசி தலைக்கவசங்களை தயாரிக்கின்றனர் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

Banner
Banner