மாற்று உறுப்புக்காக காத்திருப் போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து, வளர்த்து புதிய உறுப்பை பொருத்த, ஆய்வுகள் நடக்கின்றன.

இதற்கு ‘3டி பயோ பிரின்டர்’ எனப்படும் உயிரி முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படும்.

ஆனால், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள், ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து, மருத்துவமனைக்கு வரும் வரை ‘உயிருடன்’ இருக்க வேண்டுமல்லவா? அதற்கு, அந்த உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உயிர்ச் சத்துக்களை, ரத்தத்தின் வழியே தருவதற்கு ரத்த நாளங்கள் தேவை.

‘பெரிலிஸ் பயோலாஜிக்ஸ்’ என்ற நிறுவனம், நுண் ரத்தக் குழாய் களுடன் கூடிய உறுப்பை, உயிரி முப்பரிமாண அச்சில் உருவாக்க முயல்கிறது.

லேசர் மூலம், ஹைட்ரோஜெல் என்ற பொருளை, ரத்த நாளங்களுக்கு சாரம் போல அச்சிட முடியும் என்றும், ஒரு முழு சிறுநீரகத்தை, ரத்தநாளங்களுடன், 12 மணி நேரத்திற்குள் அச்சிட்டு எடுக்கும் தொழில் நுட்பத்தை பரிசோதித்து வருவதாக பெரிலிஸ் பயோலாஜிக்ஸ் அறிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்சின் பறக்கும் கார்!

ஜெட் விமானங்களை தயா ரித்து வரும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’, விரைவில் அய்ந்து பேர் பயணிக்கும் வகையில், பறக்கும் காரை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் காருக்கு ஓடுபாதை தேவையில்லை என்றும், நிற்குமிடத்திலிருந்து செங்குத்தாக கிளம்பி, வானில் பறக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்றும், ரோல்ஸ் ராய்ஸ் அண்மையில் அறிவித்தது.

முழுக்க முழுக்க மின் சக்தியால் பறக்கும், அதிக சத்தமில்லாத இந்த காரின் இறக்கைகள், வால் பகுதிகள் உட்பட அய்ந்து மின் விசிறிகளை கொண்டிருக்கும். மின்சாரத்தால் பறந்தாலும், இந்த காருக்கு வேண்டிய மின்சாரத்தை, உற்பத்தி செய்து தரப்போவது, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு டர்பைன்கள் தான். எனவே, துவக்கத்தில் இந்த கார் மின்சாரம் மற்றும் எரிவாயுவால் இயங்கும், ‘அய்பிரிட்’ வாகனமாகவே இருக்கும். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 800 கி.மீ., தூரம் செல்லும். ரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு, 330 கி.மீட்டர்.

ரயில் விபத்தைத் தடுக்கும் ரோபோட்!

பணக்கார நாடுகளோடு போட்டிபோடவே தொழில் நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது இந்தியா. தவிர, சாதாரணர்களின் வாழ்க்கையை உயர்த்தும் தொழில் நுட்பங்களை வடிவமைப்பதில் முனைப்பு காட்டுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப் பட்டுவருகிறது. இதற்குப் பதில் சொல்லும் விதமாக, மலக்குழிக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபோட்டை கேரளத்து இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன்னால் வடிவமைத்திருந்தார்கள்.

அதை அங்கீகரித்து அந்த ரோபோட்டைப் பயன் படுத்த கேரள அரசும் முடிவெடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இத்தகைய உணர்வு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமும் இருக்கிறது என்பதைத் தற்போது வேறொரு ரோபோட் கண்டுபிடிப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார்கள் சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்.

மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள்!

நாங்கள் மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள், பிரச்சினைக்குத் தீர்வு காண்பவர்கள். அந்த உணர்வுதான் எங்களை ஆர்டிமிஸ் ரோபோட்டைக் கண்டுபிடிக்க உந்தித் தள்ளியது என்றார்கள் சென்னை அய்.அய்.டி.யின் சென்டர் ஃபார் இன்னொவேசன் மய்யத்தைச் சேர்ந்த அக்சய், கிருஷ்ணா, கவன் சவ்லா, அனுபவ் அகர்வால், சாஸ்வத் சாஹூ, யாஷ் படேல் ஆகிய மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருப்பது ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பதன் மூலம் ரயில் விபத்துகளைத் தடுத்து நிறுத்த உதவும் ஆர்டிமிஸ் ரோபோட்.

கட்டுமானப் பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது பராமரிப்புப் பணியும். அதிலும் ரயில் தண்டவாளங்கள் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டியவை. தண்டவாளத்தில் சிறு விரிசலோ ரயில்பாதையில் சிறிதளவு விலகலோ ஏற்பட்டால்கூட மோசமான விபத்துகள் நேர்ந்துவிடும்.

ரயில் தடம்புரண்டதால் ரயிலில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளான செய்திகளை அடிக்கடி கேள்விப்படு கிறோம். அதே நேரம், மறுபுறம் மறைந்துகிடக்கிறது மற்றொரு செய்தி. அது, இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட ரயில்பாதைப் பராமரிப்புப் பணியாளர்கள் பணியை மேற்கொள்ளும்போது ரயில் விபத்துகளால் உயிரிழக் கிறார்கள் என்பது.

தண்டவாளங்களைச் சோதனையிட்டுப் பராமரிக் கும் பணியை ரயில்பாதைப் பரா மரிப்புப் பணியாளர்கள் தாம் இத்தனை காலமாகச் செய்து வருகிறார்கள்.

அபாயகரமான இந்தப் பணியை மேற்கொள்ளும் டிராக்மென், டிராக்

மெயிண்டனர்ஸ், ரயில் பொறியாளர்கள் உள்ளிட்ட ரயில் பணியாளர்களில் பலர் ஆண்டுதோறும் விபத்து களை எதிர்கொள்கிறார்கள்; சில நேரம் உயிரிழந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் ரயில் பயணிகள், ரயில் பணியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மனத்தில் கொண்டு சென்னை அய்.அய்.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது ஆர்டிமிஸ் ரோபோட்..

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் படித்தோம் உச்சபட்ச சம்பளம் பெறும் வேலையில் சேர்ந்தோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பதல்ல எங்களுடைய இலக்கு. சாதாரணமானவர்களுக்குப் பயனுள்ளவற்றைக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்துகிறோம். நடைமுறை சார்ந்த பிரச் சினைகள் எங்களைக் கலங்கடிக்கின்றன. அதிலும் பெரு வாரியான மக்களால் பயன்படுத்தப்படும் போக்கு வரத்துச் சாதனங்களில் ஒன்று ரயில். அதில் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பவர்கள் அனேகர். இதற்குக் குறைந்த செலவில் தீர்வு கண்டிருக்கிறோம் என்றார் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வந்து மூன்றாமாண்டு பையலா ஜிக்கல் இன்ஜினீயரிங்க் படித்துக் கொண்டிருக்கும் சாஸ்வத் சாஹூ.

ஆர்டிமிஸ் எப்படிச் செயல்படும்?

தற்போதுவரை   கருவியைக் கொண்டுதான் ரயில் ஊழியர்கள் தண்டவாள விரிசலைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தக் கருவியைக் கையில் பிடித்துக்கொண்டு அவர்கள் தொலைதூரம் நடக்க வேண்டி இருக்கும். அடிக்கடி ரயில்கள் கடந்து செல்லும் தண்டவாளங்களில் அதைப் பயன்படுத்தும் போதுதான் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். நாங்கள் வடிவமைத்திருப்பது 1.5 அடி நீளத்தில் ஆறு சக்கரங்கள் கொண்ட குட்டி ரோபோட்.

ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இது தண்ட வாளத்துக்கு இடையில் ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் என்ற வேகத்தில் ஓடியபடியே ,  சென்சார்கள் மூலமாகத் தகவல் சேகரிக்கும். அந்தத் தகவலை ரோபோட்டில் பொருத்தப் பட்டிருக்கும் மைக்ரோ சிப்புக்கு அனுப்பி விடும். இதில் ஜி.பி.எஸ். வசதி இணைக்கப்பட்டுள்ள தால் எங்கிருந்து வேண்டு மானாலும் இதை இயக்க லாம். கூடவே சென்று நேரடி யாக இயக்க வேண்டிய தில்லை என்றார் மூன்றா மாண்டு சிவில் இன்ஜினீயரிங் மாணவரான யாஷ் படேல்.

ரயில் விபத்தைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்ற வும் கைகொடுக்கும் உங்களுடைய ரோபோட் பராமரிப்புப் பணியாளர்களின் வேலையைப் பறித்துவிடாதா? என்று கேட்டால், தானியங்கியாக ஆர்டிமிஸ் இருந்தாலும் இது பிரச்சினை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இதன் மூலமாக நெடுந்தூரம் நடக்க வேண்டிய வேலைப் பளு குறையும்.

மற்றபடி சீர் செய்யும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் தாம் செய்ய வேண்டும் என்பதால் அவர்களுடைய வேலைக்கு வேட்டுவைக்காது. அதுமட்டுமல்லாமல் ரூ.20 ஆயிரத்திலேயே இதைத் தயாரிக்க முடியும் என்பதால் நிச்சயம் அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் ஒத்துவரும் என்றார் இந்தக் கூட்டணியின் ஒரே சென்னை மாணவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் மூன்றாமாண்டு படிக்கும் அக்சய்.

சோதனை முயற்சிகளில் வெற்றிகரமாகச் செயல் பட்டதன் மூலமாகச் சமீபத்தில் நடைபெற்ற இண்டர்-அய்.அய்..டி. மீட் 2018இல் அனைவரின் கவனத்தை ஈர்த்தி ருக்கிறது ஆர்டிமிஸ் ரோபோட் - கூடிய விரைவில் இந்திய ரயில்வே துறையும் இவர்களுடைய கண்டுபிடிப்பை அங்கீகரித்துப் பயன்படுத்த முன்வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதிநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் சென்னை அய்.அய்.டி மாணவர்கள்.

 

 

பல வடிவங்களில் ரோபோக்களை செய்து வருகின்றனர் ரோபோவியல் பொறியாளர்கள்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, ‘சீட்டா 3’ என்ற ரோபோவை சோதித்து வருகின்றனர்.

அது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏற பயிற்சி தரத் துவங்கி உள்ளனர்.

ரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.

எனவே, சீட்டா 3 யின் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

ரோபோவின் கால்கள் இருக்கும் நிலை, கோணம் போன்றவற்றை உணரிகள் உணர்ந்து, வினாடிக்கு, 20 முறை தகவல்களை மென்பொருள் நிரல்களுக்கு அனுப்ப, அந்த மென்பொருள்கள் இடும் கட்டளைப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கிறது, சீட்டா 3.

இந்தத் திறனைக் கொண்டு சீட்டா 3, விபத்து நிகழ்ந்த இடங்கள், ஆபத்தான தொழிற்சாலைகளில் தெம்பாக நடந்து சென்று வேலை பார்க்க முடியும்.

உப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்:

திருப்பூர் மாணவி சாதனை

மனிதர் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர், மற்றொன்று எரிபொருள். உலகின் பெரும் தட்டுப்பாடாக மாறவிருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக மாற்று எரிபொருளை வெற்றிகரமாகக் கண்டு பிடித்திருக்கிறார் திருப்பூர் மாணவி எம். யோகேஸ்வரி. இவர் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பையர் எனப்படும்        போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இந்தப் போட்டியில் முதல் பரிசை 17 பேரும் இரண்டாம் பரிசை 16 பேரும் மூன்றாம் பரிசை 17 பேரும் வென்றுள்ளனர். இவர்களுக்கு இடையில் மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறை யுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதை மாணவி யோகேஸ்வரியிடம் கேட்டதற்கு, வீடுகளில் நீரைச் சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதைப் போல, உப்பு நீரில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, அது ஹைட் ரஜன், ஆக்சிஜன் என இரு அயனிகளாகத் தனித் தனியாகப் பிரியும். நான் கிராஃபைட் கம்பி கொண்டு உப்புநீரைச் சூடு செய்தேன்.

இப்படிச் செய்யும்போது, உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். அந்த ஹைட்ரஜன் நீர்க்குமிழி முட்டைகளில் இருந்து வெளியேறும் வாயுவைச் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்பு நீரில் போட்டேன். அதன் வழியாகத் தயாராக வைக்கப் பட்டுள்ள சிலிண்டரில் வாயுவைச் சேகரித்தேன்.

இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கிவிட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்கத் தொடங்கியது.

இந்த ஆய்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை எனக்கு ரூ. 10,000 வழங்கியது. கிராஃபைட்டுக்கு மாற்றாக காரியம், தாமிரம், ஸ்டீல் இவற்றில் ஏதாவது ஓர் உலோகத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சோதனையை நான் பலமுறை செய்துபார்த்து இப்போது வெற்றி கண்டிருக்கிறேன் என்றார்.

தானோட்டி கார்கள்

பிரிட்டனிலுள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியரான, அமர் ஷா மற்றும் அலெக்ஸ் கென்டால் இணை சேர்ந்து, ‘வேவி’ என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.

தானோட்டி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள வேவி, சிறிய காரான ‘ரேனால்ட் ட்விஸ்சி’ குட்டி காருக்கு தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி சோதித்துள் ளனர்.

கூகுளைப் போல ஏராளமான உணரிகள், நவீன கருவிகளை பொருத்தாமல், ட்விஸ்சியில் ஒரு கேமரா, சில உணரிகள் மற்றும் புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமர் ஷா பொருத்தி இருக்கிறார்.

இந்த மென்பொருள் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது. ஒரு சோதனையின்போது, சாலையில் ட்விஸ்சி, தானே காரை ஓட்டிச் செல்கிறது. அப்போது, அது சாலையை விட்டு விலகினால் மட்டும், அதில் அமர்ந்துள்ள பயிற்சியாளர் ஸ்டியரிங்கை சரி செய்கிறார்.

அதை புரிந்துகொண்டு, அடுத்த முறை அந்த தவறை தானோட்டி மென்பொருள் செய்வதில்லை. இப்படி, 20 நிமிடங்களுக்குள், அந்த வாகனம் சாலையில் தவறு ஏதும் செய்யாமல், சென்று, திரும்பி வரப் பழகிவிட்டது!

மக்கள் நடமாடும் சாலைகளிலும் ட்விஸ்சியை ஓட்டிப் பழக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், அமர் ஷா.

பிளாஸ்டிக்கை

மட்கச் செய்யும் பாக்டீரியா!

குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால்.

இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த, 2016ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது.

அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் என்சைம்களுக்கு அதிக திறன் உண்டானது.

அதாவது, ஏற்கெனவே சாதாரண பிளாஸ்டிக்குகளை மட்கச் செய்யும் திறன் கொண்ட அந்த பாக்டீரியா, ‘பெட்’ எனப்படும் பாலிஎத்திலின் டெரப்தாலேட் வகை பிளாஸ்டிக்கையும் சிதைக்கும் அளவுக்கு அடர்த்தியான என்சைமை சுரக்க ஆரம்பித்தது.

அந்த என்சைமால் சில நாட்களிலேயே, பிளாஸ்டிக்கை மட்கச் செய்ய முடிந்தது.

இந்த கண்டுபிடிப்பால் உற்சாகமடைந்துள்ள விஞ்ஞானிகள், பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு ஏற்றபடி, பாக்டீரியாக்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

புகையிலையில் உருவாகும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்து!

தொற்று நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழிக்கும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்துகள், கடந்த நுற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

ஆனால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்க பழகிவிட்டன என்கின்றனர் மருத்துவர்கள்.

புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான தேடல் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த, லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், புகையிலைச் செடியிலுள்ள பூக்களிலிருந்து புதிய வகை ஆன்டிபயாடிக்குகளை உருவாக்க முடியும் என, அண்மையில் அறிவித்துள்ளனர்.

புகையிலைப்பூக்களில், ‘என்.ஏ.டி.1’ என்ற செல் மூலக்கூறு இருப்பதால், சிலவகை நோய்கள் புகையிலையை தொற்றுவதில்லை.

அதே மூலக் கூறுகளை வைத்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்கினால், எச்.அய்.வி., முதல், ‘டெங்கு’ வரை பல கிருமிகளை தடுக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

எதிர்காலத்தில் விவசாயிகள் மின் உற்பத்தியாளர்களாகப் போகின்றனர். அதற்கு தடையாக இருப்பது நிழல். சூரிய மின் பலகைகளை விளை நிலத்தில் வைத்தால், விவசாய நிலங்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

ஆனால், மின் பலகைகளுக்கு கீழே நிழல் விழும். அது பயிர்களுக்கு எதிரி. இந்த சிக்கலை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது சீனாவிலுள்ள யு.எஸ்.டி.சி., தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு.

சூரிய மின்பலகைகளுக்குப் பதிலாக, சூரிய ஒளியை குவியவைக்கும் ‘கான்சன்ட்ரேட்டர்’களை வைக்கலாம் என்கிறார் சீன ஆய்வுக்குழுவின் தலைவரான ஜான் இன்ஜென்ஹாப்.

இந்தக் கருவியில் குவி ஆடிக்கு பதிலாக, சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதியவகை பாலிமர் காகிதத்தை ஆடிபோல பயன்படுத்தலாம். அதே சமயம், கண்ணாடி காகிதத்தை ஊடுருவும் சூரிய ஒளி, கீழே விளையும் பயிர்களுக்கும் கிடைக்கும் என்கிறார் ஜான். பெரும்பாலான பயிர்களுக்கு சூரிய ஒளியில், 10 சதவீதம் கிடைத்தாலே போதும் என்பது அறிவியல் உண்மை. சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களில் நீலம் மற்றும் சிவப்பு ஒளிக் கற்றைகள் இருந்தாலே பயிர்கள் வளரும். விவசாயி என்ன பயிரிடுகிறாரோ, அதற்கு ஏற்ற ஒளி வண்ணத்தை மட்டும் வழிவிடும் பாலிமர் காகிதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக, ஜான் அறிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் பரவலாகக் கிடைத்தால், விவசாயி, தன் விளை நிலத்தில் மின் உற்பத்தி செய்து அதை மின்வாரியத்திற்கு விற்கலாம்.

சூரிய ஒளி குறையும் பருவத்தில், பயிர்களுக்கு போதிய சிவப்பு, நீல ஒளி கிடைக்க, மின் பலகைகளுக்கடியில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி, கிடைக்கும் மின்சாரத்தில் பயிர்களுக்கு வேண்டிய சிவப்பு, நீல ஒளியை பாய்ச்சி விளைச்சலை பெருக்கலாம். இவை தடுக்கப்பட்டால், பயிர்களுக்கு நீர்த் தேவையும் கணிசமாக குறையும் என்கிறார் ஜான்.

நிலவின் மீது பூமியின் நிழல் விழும்

வானியல் நிகழ்வு

ஜூலை 27ஆம் தேதி, இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் (நிலவின் மீது பூமியின் நிழல் விழும் வானியல் நிகழ்வு) நிகழ இருக்கின்றது. இந்த சந்திர கிரகணத்தின் மிக முக்கிய நிகழ்வாக, ஆரம்பத்திலேயே பிளட் மூன் எனப்படும்  இளஞ்சிவப்பு நிலவு தோன்ற இருக்கிறது.

நீல நிலவு, கருமையான நிலவு, செந்நிற நிலவு, மற்றும் மிகபெரிய நிலவு என்று அடிக்கடி நாம் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் இந்த நிலாக்களுக்கும், இந்த பெயர்களுக்கும் உள்ள காரணம் ஏன் என்று தெரியுமா?

நீல நிலவு இதை புளு மூன் என்று ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் அழைக்கின்றனர்.

இந்த பெயரில் இருக்கும் நிறத்திற்கும் நிலவின் நிறத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழுநிலவின் பெயர் தான் நீல நிலவு என்று கூறுகிறார்கள். ஆனால் சில சமயங்களில் இது மிகபெரிதாக காட்சிதரும் 1940களில் தான் நில நிற நிலவு(புளு மூன்) என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 31ஆம் தேதி நீல நிலவுடன் கூடிய நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வு தோன்றியது குறிப்பிடத்தக்கது. 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்ற அரிய நிகழ்வுகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் ஒரு நீல நிற நிலவு தோன்றியது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆண்டில் இரண்டு மிகபெரிய நீல நிலவுகள் தோன்றுவதும் மிகவும் அரிது. அடுத்து இது போன்ற இரண்டு நீல நிலவுகள் 2037ஆம் ஆண்டில் மட்டுமே தோன்றும்.

கருப்பு நிலவு

ஒரே மாதத்தில் நிகழும் இரண்டாவது அமாவாசை (நிலவில்லா இரவைக் குறிக்கும் நிகழ்வினைக் குறிப் பிடுவது இந்த கருப்பு நிலவு ஆகும்.  ஒவ்வொரு 32 மாதங்களுக்கும் ஒரு முறை இந்நிகழ்வு நடக்கும்.

இளஞ்சிவப்பு நிற நிலவு

இளஞ்சிவப்பு நிற நிலவு பிளட் மூன் என்பது  பூமி சூரியனுக்கும் நிலவிற்கும்  நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சூரிய ஒளியும் பூமியின் பட்டு எதிரொளிக்கும் சூரிய ஒளியும் சேர்ந்து நிலவை இளஞ்சிவப்பு நிறத்தில் .அழகாக தோன்றும் இதனையே ப்ளட் மூன் என்று சொல்கின்றார்கள்.

சூரியனின் நிலவின் நிழல் விழும்போது ஏற்படும் சூரிய கிரகணம் போன்று இதை பாதுகாப்பான கண்ணாடிகள் வழியாக பார்ப்பதைப் போல் இல்லாமல் நேராடியாகவே வெறும் கண்களால் இந்த இளஞ்சிவப்பு நிலவைக் காணலாம். வருகின்ற ஜூலை 27ஆம் தேதி இந்நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நூற்றாண்டில் நடைப்பெற இருக்கும் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும்.

சூப்பர் மூன்

இது பூமிக்கு மிக அருகில் தோன்றும் முழுநிலவாகும். இந்த முழுநிலவு, 30விழுக்காடு பிரகாசமாகவும், 14விழுக் காடு பெரியதாகவும் தோன்றும். ஜனவரி 31ஆம் தேதி தோன்றிய முழுநிலவு சூப்பர் மூன் ஆகும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் புள்ளி பெரெகே எனப்படும்.

‘ஆட்டோஃபோகல்’

கண் கண்ணாடி!

வயது ஆக, ஆக, கண்களின் பார்வைத் துல்லியம் குறைகிறது. இந்தக் குறையை போக்க, கண் கண்ணாடிகள் பெருமளவு உதவினாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.

ஒரே கண்ணாடியில் படிப்பது, கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற மூன்று வசதிகளையும் கொண்ட, ‘புரகிரசிவ்’ கண்ணாடிகள்கூட, கண்களுக்கு அசதியைத் தரக்கூடியவைதான். இதற்கு தீர்வு கண்டிருக்கிறார் நிதீஷ் பத்மனாபன். அமெரிக்காவிலுள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இவரும், இவரது குழுவினரும், ‘ஆட்டோஃபோகல்’ என்ற புத்திசாலி கண்ணாடியை வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கண்ணாடியில், கண்கள் பார்க்கும் திசை, தூரம் போன்றவற்றை அளக்கும் உணரிகள் உள்ளன.

அணிபவரின் பார்வைக் குறைபாட்டின் அளவு களை, இந்தக் கண்ணாடியிலுள்ள சிறிய கணினிக்கு முன்பே தந்துவிட்டால், அந்தக் குறைபாட்டை இட்டுக்கட்டி ‘20/20’ எனப்படும் துல்லியமான பார் வையை ஆட்டோஃபோகல் கண்ணாடி தந்துவிடுகிறது.

நிதீஷ் வடிவமைத்துள்ள இக் கருவியிலுள்ள ஆடிக்குள் உள்ள திரவத்தை மின் துண்டல் மூலம் கிட்டப் பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை வினாடியில் மாற்றிவிட முடிகிறது. வரும் ஆகஸ்டில் வெள்ளோட்டம் விடப்பட விருக்கும் ஆட்டோஃபோகல் கண்ணாடியை, ஒருவர் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்த முடியும் என, ஊடகங்களிடம் தெரிவித்தி ருக்கிறார் நிதீஷ்.

மனிதனின் மனதை புரிந்துகொள்ளும் ரோபோ!

மனிதனும், ஹியூமனாயிடு எனப்படும் மனித வடிவ ரோபோக்களும், சகாக்களாக சேர்ந்து வேலை செய்யும் காலம் விரைவில் வரப்போகிறது. அப்போது, மனிதர்கள் சொல்வதை புரிந்து கொண்டு வேலை செய்யும் திறன், ரோபோக்களுக்கு அவசியம்.

இதற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது அமெரிக்கா விலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம். அதன் செயற்கை நுண்ணறிவுத் துறையிலுள்ள ஆய் வாளர்கள், ‘பாக்ஸ்டர்’ என்ற மனித வடிவ ரோபோவை, தங்கள் மனதாலும், சைகையாலும் கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கி உள்ளனர். ஒரு ஆய்வாளர் மூளையின் மின்னலைகளை உணரும், இ.இ.ஜி., சாதனத்தை தலையில் அணிந்தபடி பாக்ஸ்டர் ரோபோ செய்யும் வேலையை கவனிக்கிறார்.

அந்த ரோபோ, தவறான இடத்தில் துளையிடும் கருவியால் துளை போடப் போகும்போது, ஆய்வாளரின் மூளையில் அது தவறு என்று தோன்றுகிறது. அதை மின்னலைகள் மூலம் படிக்கும் ரோபோ தன் செயலலை நிறுத்தி விடுகிறது.

 

Banner
Banner