எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பிளாஸ்டிக் கழிவுகள் ஆறு, ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றன. மறு சுழற்சி முறையை பரவலாக கடைபிடிக்கும் பிரான்சு போன்ற நாட்டில் கூட, பெட்ரோலியப் பொருட்களால் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்களில், 45 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படாமல் நேரடியாக குப்பைக்கூளமாக நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்சின் முன்னணி பிளாஸ்டிக் பாட்டில் களைத் தயாரிக்கும், ‘லைஸ் பேக்கேஜிங்’ அண்மையில், ‘வேகன் பாட்டில்’ என்ற புதிய வகை பிளாஸ்டிக் பாட்டில்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வேகன் பாட்டில்கள் உயிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப் பட்டவை. அதாவது, இந்த வகை பிளாஸ்டிக்குகள் இயற்கையான பொருட்களைப் போலவே, மண்ணில் புதைந்ததும் விரைவில் மட்கிப் போகும் தன்மை உடையவை. வேகன் பாட்டில்களின் மூடி, அதன் மேல் ஒட்டப்படும் லேபிள் ஆகியவையும் எளிதில் மட்கும் தன்மை உடையவை என்கிறது லைஸ் பேக்கேஜிங்.

எத்தனை நாட்களில் வேகன் பாட்டில் மட்கிப் போகும்? வெறும், 90 நாட்கள் போதும் என்கிறது அந்நிறுவனம். அதே சமயம், வேகன் பாட்டில்களை பல முறை மறு சுழற்சி செய்யவும் முடியுமாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களைத் தயாரிக்க, அய்ரோப்பாவில் ஒரு பெரும் இயக்கமே ஆரம்பித்திருக்கிறது. வேகன் பாட்டில் அதன் முக்கிய மைல்கல் எனலாம்.

ஓட்டுநரில்லா லாரி சோதனை  

தானோட்டி வாகனங்களை பயன்படுத்துவதில் பயணியர் போக்குவரத்தை விட சரக்குப் போக்குவரத்து துறை முந்திக்கொள்ளும் போலத் தெரிகிறது. அமெரிக்காவில் கடந்த அக்டோபர் முதல்

வாரத்திலிருந்து, ‘எம்பார்க்‘ நிறுவனத்தின் தானோட்டி லாரிகள்,

‘பிரிஜிடைர்’ என்ற குளிர்பதன பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, 1,000 கி.மீ., தூரம் சென்று இறக்கிவிட்டு திரும்பி வர ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து, கலிபோர்னியா மாகாணம் வரையிலான இந்த பயணத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மனித ஓட்டுநர் தான் ஓட்டுகிறார். ஆனால், இடைப்பட்ட தூரத்தில் ஓட்டுநர் சும்மா அமர்ந்திருக்க, எம்பார்க் லாரி தன்னைத்தானே பத்திரமாக ஓட்டிச் செல்கிறது. அடுத்த சில ஆண்டுகள் வரை, லாரியில் ஓட்டுநர் துணைக்கு இருப்பார். வெள்ளோட்டம் முடிந்ததும், முழு பயணத்தையும் எங்கள் தானோட்டி லாரியே கவனித்துக் கொள்ளும் என்று அறிவித்திருக்கிறது எம்பார்க்.
சரக்கு லாரி ஓட்டுநர்களுக்கு அமெரிக்காவில் பற்றாக்குறை ஏற் பட்டிருக்கிறது. மேலும், அனுபவமுள்ள லாரி ஓட்டுநர்கள் வயதான வர்கள் என்பதால், ஆண்டுதோறும் கணிசமானோர் ஓய்வு பெற ஆரம்பித்துள்ளனர். இதனால் தான், கூகுளின், ‘வேமோ, டெஸ்லா, உபேர், வால்வோ, டெய்ம்லர்’ ஆகிய பல வாகன தயாரிப்பாளர்களும், தானோட்டி லாரிகளை சாலையில் இறக்கி விடும் சோதனைகளில் மும்முரமாகியுள்ளனர்.

மிகப் பழைய
டைனோசர் கால் தடங்கள்

பிரான்சில் உள்ள பிளாக்னே என்ற மலைக் கிராமப் பகுதி யில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள டைனோசர் கால் தடங்கள் தான், உலகின் மிகப் பழை யவை என வல்லுநர்கள் அறிவித்து உள்ளனர். சவுரோபாட் வகை டைனோசர்களின் கால் தடங்கள் அப்பகுதியில், அரை கி.மீ., தூரம் வரை பதிந்துள்ளன. மொத்தம், 110 தனித்தனி டைனோசர் பாதப் பதிவுகள் அங்கு இப்போதும் உள்ளன.

பிளாக்னே கிராமத்தில், 2009இல் கண்டுபிடிக்கப்பட்ட இத் தடங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், இந்த டைனோசர்கள்,

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று

அறிவித்துள்ளனர். இவற்றின் உடல், 115 அடி நீளமும், 40 டன் வரை எடையும் உள்ளவையாக இருக்கலாம் என்று கணித் துள்ளனர்.

‘சூப்பர் கம்ப்யூட்டர்’ - முதலிடத்தில் சீனா!

அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில், பருவநிலை கணிப்பு, ராணுவ நடவடிக்கைகள் போன்ற பல வற்றுக்காக, ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ எனப்படும் மீத்திறன் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மீத்திறன் கணினிகளை தயாரித்து பயன்படுத்துவதில், வல்லரசு நாடுகளுக்குள் பெரும் போட்டியே நடக்கிறது. இந்தப் போட்டியில் முன்னணியில் இருந்த அமெரிக்காவை, கடந்த சில ஆண்டுகளாகவே சீனா பின்னுக்குத் தள்ளி வருகிறது.

மீத்திறன் கணினிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடும் இணையதளமான, ‘டாப்500.ஆர்க்‘ அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, எண்ணிக்கையில் அதிகமான மீத்திறன் கணினிகளை சொந்தமாக வைத்திருக்கும் நாடுகளில், சீனா முதலிடம் வகிக்கிறது. உலகின் மிக வேகமான மீத்திறன் கணினியான, ‘சன்வே டாய்ஹு லைட்’ உட்பட, மொத்தம், 202 மீத்திறன் கணினிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவிடம், 143 மீத்திறன் கணினிகள் உள்ளன. மூன்றாம் இடத்திலிருக்கும் ஜப்பானிடம், 35 மீத்திறன் கணினிகள் உள்ளன.

கடந்த ஜூலையில், சீனா தன் சன்வே டாய்ஹு லைட் மீத்திறன் கணினி மூலம், பேரண்டத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் போன்றவை அடங்கிய மிக விரிவான டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறது.

பொன் நிற உருளைக் கிழங்கு!

பல வளரும் நாடுகளில், ‘வைட்டமின் ஏ’ சத்து குறைபாடுள்ளவர்கள் இருப்பது இன்றும் நீடிக்கிறது. இதை தடுக்க, இன்று அன்றாட உணவாகிவிட்ட உருளைக் கிழங்கை பயன்படுத்தலாம் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாண பல்கலைக் கழகம் மற்றும் இத்தாலிய பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு திருத்தம் மூலம் பொன்னிற உருளைக் கிழங்கை உருவாக்கி உள்ளனர். இந்த புதிய வகை உருளைக் கிழங்கை வெட்டிப் பார்த்தால், வழக்கமான வெளிர் நிற சதைப் பகுதிக்குப் பதிலாக, பொன் மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதி இருக்கிறது.

அது மட்டுமல்ல, இதில், ‘புரோ வைட்டமின் ஏ’ மற்றும் வைட்டமின் ஆகிய சத்துகள் செறிவாக உள்ளன. ‘புரோ வைட்டமின் ஏ’வைத்தான் நம் உடல் செரிமானம் செய்து, ‘வைட்டமின் ஏ’ சத்தாக மாற்றிக் கொள்கிறது.

‘வைட்டமின் ஏ’ சத்து, இளம் வயதில் கண் பார்வை பறி போவதைத் தடுக்கக்கூடியது.

மேலும், தொற்றுகளை எதிர்க்கும் சக்தியை உடலுக்குத் தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந் தையைப் பெறவும், ‘வைட்டமின் ஏ’ முக்கியம்.’ வைட்டமின் இ’ சத்து நரம்புகளுக்கும், தசைகளுக்கும் வலுவைத் தர உதவுகிறது.
பொன்னிற உருளைக் கிழங்குகள் இத்தகைய நன்மைகளை எளிய மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner