எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திண்டுக்கல்லில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆர். ரூபாதேவி கால்பந்து விளையாட்டில் சிறுவயது முதலே கொண்ட ஆர்வம் காரணமாக இன்று சர்வதேசக் கால்பந்துப் போட்டி நடுவராக உயர்ந்து நிற்கிறார்.
திண்டுக்கல் நகரின் மய்யத்தில் அமைந்துள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் கால்பந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். அதுவே தன் வாழ்க்கையாக மாறப் போவதை அப்போது அவர் நினைத்திருக்கவில்லை. அப்போதெல்லாம் மாலையில் வகுப்பு முடிந்ததும் கால்பந்து விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர் ஜெசின்ஜெஸ்டின் என்னைத் தினமும் கால்பந்து விளையாட ஊக்குவித்துப் பயிற்சியளித்தார். எனது முதல் பயிற்சியாளர் அவர்தான். பத்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டிகளில் விளையாடினேன். என்கிறார் ரூபாதேவி

அதுவரை அணியில் தானும் ஒருத்தி என்று நினைத்துவந்தவர் விளையாட்டில் தன் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணம் வந்தவுடன் கடும் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பு, பட்டயப் படிப்பு என எனது கல்வியை ஒருபக்கம் தொடர்ந் தாலும், காலை, மாலை நேரம் மைதானத்தில் இருக்கத் தவறியதில்லை. காரணம் எனது முழுக் கவனமும் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது என்கிறார்.

இவரது அர்ப்பணிப்பைத் தெரிந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டக் கால்பந்து கழகத் தலைவர் ஜி.சுந்தரராஜன், செயலாளர் எஸ்.சண்முகம் ஆகியோர் இவரை ஊக்கப்படுத்தியதுடன் பயிற்சிக்குத் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளையும் செய்துள்ளனர். அத் துடன் தமிழ்நாடு கால்பந்துக் கழகம் தனக்கு முழு ஆதரவளித்தததையும் அவர்களது ஊக்கமும் உதவியுமே தன்னை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார் ரூபாதேவி.

கிடைத்தது நடுவர் பணி

 

தமிழக அணிக்காக சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என அனைத்துப் பிரிவுக் கால்பந்துப் போட்டிகளிலும் ரூபா விளையாடியுள்ளார். இடையில் சில ஆண்டுகள் போட்டிகள் அதிகம் நடைபெறாததால், இவரது கவனம் நடுவர் பணி மீது திரும்பியது.

2007ஆம் ஆண்டு முதன்முறையாகக் கால்பந்து நடுவருக்கான தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்போது மத்திய அரசு புராஜெக்ட் பியூச்சர் ரெஃப்ரி என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் கால்பந்து நடுவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதற்குத் தேர்வு செய்யப்பட்டு புதுடில்லி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஆகிய இடங்களுக்குப் பயிற்சி பெறச் சென்றேன். இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றேன் என்று தான் நடுவரான கதையை விவரிக்கிறார் ருபாதேவி

ஒலிம்பிக் கனவு

தொடர்ந்து இந்திய கால்பந்துக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் மலேசியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற தெற்காசியக் கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார் ரூபாதேவி.
எனது செயல்பாட்டைப் பார்த்த ஆசிய கால்பந்துக் கழகம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் நடுவராகப் பங்கேற்க வாய்ப்பளித்தது. இந்திய, ஆசிய அளவிலான போட்டிகளில் எனது பங்களிப்பைப் பார்த்த இந்திய, ஆசிய கால்பந்துக் கழகங்கள் என்னை சர்வதேச நடுவராக ஃபிஃபா கால்பந்து அமைப்புக்குப் பரிந்துரை செய்தன. அதற்கான தேர்விலும் தேர்ச்சிபெற்றேன். எனது செயல்பாடு, தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு என்னை சர்வதேச கால்பந்து நடுவராக ஃபிஃபா அறிவித்தது என்கிறார்.

மாநில அளவில், தேசிய அளவில், ஆசிய அளவில், சர்வதேச அளவில் படிப்படியாக உயர்ந்த இவருக்கு ஒலிம்பிக், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியம். தீரா ஆர்வம், கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கும் ரூபாதேவி எப்படிப்பட்ட இலக்கையும் அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக நம்பலாம்.

போர்க்கப்பல்களைக் கண்காணிக்கும் வீராங்கனைகள்

இந்திய விமானப்படையில் சென்ற மாதம்தான் மூன்று பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்க அனுமதித்துள்ளனர். அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோஹனா சிங் என்ற மூன்று பெண்களும் ஓராண்டு கடினப் பயிற்சிக்குப் பிறகு போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக்கியிருக்கின்றனர்.

“ஆண் போர் விமானிகளுக்கு எந்த விதத்திலும் குறைந் தவர்கள் அல்ல இந்த மூன்று பெண் விமானிகள்’ என்று இந்திய விமானப்படைத் தளபதி இவர்களை பாராட்டியிருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் இந்த மூன்று பெண்களும் முழு நேர போர் விமானிகளாவார்கள். இந்திய விமானப்படை பெண்களைப் போருக்குத் தயார் செய்யும்போது, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கப்பல்படை நினைத்ததோ என்னவோ 20 கடல் படை வீராங்கனைகளைக் கண்டெடுத்து சீன போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்களைத் தீவிர மாகக் கண்காணிக்க நியமித்துள்ளது.

இந்தப் பெண்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் திறமை வாய்ந்த விமானத்தில் பறந்து கண் காணிப்பார்கள்.  இந்தக் கண்காணிப்புக்குப் பயன்படும் “பொசிடியன் - 8’  என்னும் கப்பல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் செலவில் எட்டு விமானங்கள் சென்னையை அடுத்த அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு விமானங்கள் வர உள்ளன.  இன்னொரு ரஷ்ய விமானத்தில் 30 பெண்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானங்கள் 250 கி.மீ. தூரத்தில் கடலின் உள்ளே பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பலைக்கூட கண்டு பிடித்து அழிக்கக்கூடிய திறன் பெற்றது. ஆனால் இந்த ரஷ்ய விமானம், அமெரிக்க விமானத்தைவிட திறன் குறைவானதுதான்.

இந்தப் போர் விமானங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க வல்ல  ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதே சமயம் எதிரியின் கப்பல்களில் இருக்கும் பீரங்கிகள் இவர்கள் பறக்கும் விமானத்தை வீழ்த்தும் அபாயமும் உள்ளது. இந்த அபாய சூழ்நிலையில் சுமார் 50 வீராங்கனைகள் இந்திய மண்ணின் பாதுகாப்புக்காக கடல் மேல் பறந்து கண் மூடாமல் கண்காணித்து வருகின்றனர்.

“சமீபத்தில் 26 இந்திய வீரர்களுடன் காணாமல் போன எம்வி எமரால்டு கப்பலைப் பெண் குழு ஒன்றுதான் கண்டுபிடித்தது. 16 போர் வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பத்து பேர் சம்பவ இடத்தில் இறந்து போயிருக்கலாம். இந்த ரோந்து மற்றும் போர் விமானங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் பெண்களே. அவர்களால் எந்தச் சவால்களையும் சந்திக்க முடியும்” என்கிறார் இந்திய கப்பல்படைத் துணைத் தளபதி சாவ்லா.

இந்திய சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அதிநவீன கண்காணிப்பு இந்தியாவுக்கு வெகு அவசியமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்புப் பணியை 50 வீராங்கனைகள் ஏற்றிருக்கின்றனர் என்பது இந்தியப் பெண்களுக்குப் பெருமை தரும் விசயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்திய பெண்கள் ஆக்கி கேப்டன் ராணி ராம்பால்

சென்ற மாதம் டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியப் பெண்கள் அணியும்  ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

பெண்கள் அணி தோற்கடித்தி ருப்பது சீன அணியை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பதிமூன்று ஆண்டுகள் கழித்து தற் போதுதான்  கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான பெண்கள் ஆக்கி அணி தங்கக் கோப்பையைப் பெற்று பெருமையுடன் தாயகம் திரும்பி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த “ஆசிய வாகையர்’ கோப்பைக்கான ஆக்கி போட் டியிலும் சீன அணியை இந்திய பெண்கள்   அணி வென்றது.

அந்தப் போட்டியை விட முக்கியத் துவம் வாய்ந்த ஆசியக் கோப்பைக்கான போட்டியில் வென்றது   இந்தியப் பெண்கள் அணிக்கு அதிகப் புகழையும் முக்கி யத்துவத்தையும் அளித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner