எழுத்துரு அளவு Larger Font Smaller Font


விநோதமான சுருட்டு வடிவ விண் கல் ஒன்று சூரியனின் திசையில் அதிவேகமாகப் பயணித்து கொண்டிருந்தது கடந்த அக்டோபரில் வானியலாளர்களால் கவனிக்கப்பட்டது. இதில் வேற்றுக் கிரகத் தொழில்நுட்ப சாதனங்களோ, உயிரின் சுவடுகளோ இருக்குமா என்பதற்கான ஆராய்ச்சி தற்போது நடக்கிறது.

இதில் வழக்கத்துக்கு மாறான நீள வடிவிலான இந்த விண்கல் அக்டோபர் 19ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனுடைய கூறுகள், அந்தப் பொருள் இன்னொரு நட்சத்திரத்தில் இருந்து உருவானது என்பதை காட்டுகின்றன. நம்முடைய விண்வெளிப் பகுதியின் அருகில் கண்டறியப் பட்டுள்ள இத்தகைய முதல் பொருள் இதுவே.

செல்வந்தர் யுரி மில்னரால் நிதி ஆதரவு அளிக்கப்படும் ஓர் ஆய்வுத் திட்டம், இந்தப் பொருளில் இருந்து சமிக்கைகள் ஏதேனும் வருகிறதா என்பதைப் பார்க்க ஒரு ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தும்.

வானியலாளர்கள் இந்த விண்கல்லை கண்காணிக்கும் இந்த ஆய்வுக்குழுவின் முயற்சிகள் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த விண்கல் தற்போது நம்முடைய சூரிய குடும்பத்தில் இருந்து நான்கு வேறுபட்ட வானொலி அலைவரிசை பகுதிகளை விரைவாகக் கடந்து, சூரிய மண்டலத்தை விட்டு விலகிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வெஸ்ட் வெர்ஜீனியாவில் இருக்கும் ராபர்ட் சி பைர்ட் கிரீன் பாங்க் தொலைநோக்கியில் மேற்கொள்ளப்படும் முதல் கண்காணிப்பு ஆய்வு, 10 மணிநேரம் நீடிக்கும்.

‘ஒமுவாமுவா’ என்று அழைக்கப்படும் இந்தப் பொருளின் மீது நடத்தப்பட்ட முந்தைய கண்காணிப்புகள் விநோதமான, நீள வடிவத்தில் அதனை சுருட்டு போல தோன்றுவதாக காட்டியுள்ளன.

மில்னரின் ‘பிரேக்த்ரூ லிசன்’ திட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். “விண்மண்டலங்களின் வாயு மற்றும் தூசி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே செல்லும் ஓர் உத்தேச வாகனத்தின் வடிவம் ஓர் ஊசி போன்றதாகவோ, சுருட்டு போன்றதாகவோ இருக்கவே வாய்ப்பு உள்ளது,” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெர்க்லே எஸ்இடிஅய் ஆய்வக மய்யத்தின் இயக்குநர் ஆன்ட்ரூ சியமியன், “அதிவேகமாகச் செல்லும் விண் பொருள்களில் இருக்கச் சாத்தியமுள்ள டிரான்ஸ்பாண்டர்களை தமது அதி நவீன உணர்திறன் கருவிகளால் எட்ட முடிகிறதா என்பதைப் பார்க்க பிரேக்துரூ லிசன் திட்டத்துக்கு ஒமுவாமுவாவின் வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது,” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பொருள் செயற்கையானதாகவோ அல்லது இயற்கையானதாகவோ இருந்தாலும் கவனித்துப் பார்க்க உகந்த ஒன்று என்கிறார் சியமியன்.

இந்த திட்டத்தைச் சேராத, டோர்கிங்கிலுள்ள யுசிஎல் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ கெயேற்றடஸ், “இந்தப் பொருளில் உயிரின் தடயம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிவ தற்கான சோதனையாக இது இருக்குமென நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“இது மிகவும் சாத்தியமற்றது என நினைக்கிறேன், ஏனென்றால் அது வேறு எங்கோ உள்ள கிரக அமைப்பின் எச்சம். வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்வதற்கு சிறந்த வழிகள் 2020ஆம் ஆண்டு செலுத்தப்பட இருக்கும் ‘எக்ஸோமார்ஸ் திட்டம்‘ போன்றவையாகும். அதற்கு நாம் கேமரா அமைப்பை கட்டியமைக்கிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

“சாத்தியமில்லை என்றபோதும் கவனித்துப் பார்க்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

தரையில் அமைந்திருக்கும் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை கண்காணித்து ஆய்வு செய்துள்ள பிற ஆய்வாளர்கள், சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள இயற்கைப் போலவே இது தோன்றுகிறது என்கிறார்கள்.

அதிக நோய்களைப் பரப்பும் ஈக்கள்

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும்.

மீன் உடலில் மின்சாரம்!

அதிசய மீனான ஈல், எப்படி உடலில் மின்சாரத்தை தயாரிக்கிறது... அது போல செயற்கையாக மின்சாரத்தை தயாரிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு, பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், அண்மையில் அமெரிக்காவிலுள்ள கலி போர்னியா, மிச்சிகன் மற்றும் பிரைபோர்க் பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘செயற்கை மின் உறுப்பு’ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஈல் மீன் 600 வோல்ட்டுகள் வரை மின்சாரத்தை உடலில் உற்பத்தி செய்ய உதவும், அதே முறையை ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்க முயன்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஈல் மீனின் உடலில் உள்ள, ‘எலக்ட்ரோசைட்’கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. எலக்ட்ரோசைட்டில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அயனிகள் வினை புரிவதால், மின்சாரம் உற்பத்தியாகிறது. எனவே, விஞ்ஞானிகள் ஒரு பிளாஸ்டிக் தாளில் ஹைட்ரோ ஜெல் குமிழிகளில் உப்புநீர் மற்றும் சாதாரண நீரை மாற்றி மாற்றி ஒட்டவைத்தனர். அவற்றை சவ்வுகளால் பிரித்தும் வைத்தனர்.

இந்த குமிழ்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட போது, மின் வேதி வினையால், 100 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தியானது.

இது, ஈல் தயாரிக்கும் மின்சாரத்தை விட மிகவும் குறைவு தான். ஆனால் விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ச்சி செய்தால், மின் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும் என, ‘நேச்சர்’ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித் துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால், இதய துடிப்புக் கருவி, கருவிழி மேல் பொருத்தும் மெய்நிகர் திரை, செயற்கை கை, கால் போன்ற உறுப்புகள் போன்றவற்றை இயக்க உதவும் மின்கலன்களை தயாரிக்க உதவும்.

கொசு ஒழிப்பில், ‘ட்ரோன்கள்!’

டெங்கு கொசுக்களை ஒழிப் பதற்கு, ஆளின்றிப் பறக்கும் சிறு வாகனங்களான, ‘ட்ரோன்’களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபல் கார்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வெள்ளோட்டமாக, அண்மையில் ஒரு ட்ரோனை வெற்றி கரமாக பயன்படுத்தி உள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீர் தான், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ் எஜிப்தி’ வகை கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடம். தரையில் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை முனிசிபல் பணியாளர்கள் பார்த்து, அக்கம் பக்கத்தினரை எச்சரிக்க முடியும்.

ஆனால், அடுக்குமாடி கட்டடங்களின் மொட்டை மாடியில், மழைநீர் அல்லது நீர்த்தொட்டிகள் நிரம்பி வெளியேறும் நீர் தேங்கியிருந்தால், அதை சோதனை இடுவது கடினம்.

எனவே, ஒளிப்படக் கருவி பொருத்திய ட்ரோன்களை, கட்டடங்களின் மேல் பறக்க விட்டு சோதித்து, நீர் தேங்கியிருந்தால், அதை வெளியேற்றும்படி, கட்டடத்தில் வசிப்போரை எச்சரிக்கலாம்.

ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம் நல்ல பலனளிப்பதாக வெள்ளோட்டத்தில் தெரிய வந்ததால், 2018 மார்ச் முதல், கொசு ஒழிப்பில் மேலும் பல ட்ரோன்களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபாலிட்டி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். குஜராத்திலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆடை போல் அணியும், ‘ட்ரிப்ஸ்’

நோயாளிகளுக்கு, ‘ட்ரிப்ஸ்’ மூலம் மருந்து செலுத்தும் போது, கூடவே, மருந்து புட்டியை தலைகீழாக தொங்க விடுவதற்கு, ஓர் உலோக ஸ்டாண்டையும் நிறுத்தி விடுவர்.

வாரக் கணக்கில் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டியிருந்தால், நோயாளியையும் இந்த ஸ்டாண் டையும் பிரிக்கவே முடியாது. இயற்கை உபாதைக்குப் போக வேண்டி இருந்தாலும், கூடவே இந்த ஸ்டாண்டும் வரும். இது போல அவஸ்தையை அனுபவித்த, அலிசா ரீஸ் என்ற டென்மார்க் வடிவமைப்பாளர், இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய, ‘அய்.வி., வாக்’ என்ற ட்ரிப்ஸ் பையை, நோயாளி தன் மேல் உடை போல அணியலாம்.பையில் மருந்துகளை ஊற்றி வைக்கலாம்.

அய்.வி., வாக்குடன் இருக்கும் ஒரு மின் பம்ப், மருந்தை குழாய் வழியாக உடலுக்குள் மெதுவாக செலுத்தும். எப்போதும் படுத்த படியே இருக்க நேரும் நோயாளிகள், அய்.வி.வாக்கை அணிந்து, சற்று காலாற நடக்க முடிந்தால், சீக்கிரம் குணடைய முடியும் என்கிறார் ரீஸ்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner