எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனம் தயாரித்து வரும், ‘பால்கன் ஹெவி’ என்ற சக்தி வாய்ந்த ராக்கெட்டின் புகைப்படத்தை, சமீபத்தில், ‘டுவிட்டர்’ மூலம் அதிபர், எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். இந்த ராக்கெட், 2018இல் செவ்வாய் கிரகத்தை சுற்றும் வெள்ளோட்ட முயற்சிக்கு பயன்படுத்தப்படும்.

ஏற்கெனவே பலமுறை, ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பிய, ‘பால்கன் 9’ ராக்கெட்டைப் போல, மூன்று ராக்கெட்டுகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது பால்கன் ஹெவி. இதன் உந்து சக்தி, 18 போயிங், 747 விமானங்களின் உந்து சக்திக்கு இணையானது.

இதற்கு முன் இத்தனை சக்தி வாய்ந்த ராக்கெட், 1973இல் அமெரிக்கா அனுப்பிய, ‘சாட்டர்ன் 5’ ராக்கெட் தான். எனவே தற்போது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் பால்கன் ஹெவி தான். ‘’வழக்கமாக இது போன்ற வெள்ளோட்டங்களுக்கு கான்கிரீட் துண்டுகள் போன்றவற்றை நிரப்பி அனுப்புவர். அது எங்களுக்கு போரடித்துவிட்டது. ‘’எனவே, என் சிவப்பு நிற ரோட்ஸ்டரை, சிவப்பு கிரகத்தை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு சுற்றிக்கொண்டிருக்கும் ராக்கெட்டில் வைத்து அனுப்பப் போகிறோம்,’’ என, அவர் விளக்கினார்.

நாசாவின், சாட்டர்ன் 5 ராக்கெட் கிளம்பிய அதே தளத்திலிருந்து, 2018 ஜனவரியில் பால்கன் ஹெவி கிளம்பும். அந்த சோதனையின்போது ராக்கெட் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால், நாசாவின் தளத்தை சேதப்படுத்தாமல் வெகு தூரம் போய் வெடித்தால் நல்லது, என, ஒரு மாநாட்டில் தெரிவித்தார் மஸ்க்.

வயதானால் மறதி வருவது ஏன்?

தூங்கும்போது மூளையில் ஏற்படும் மின் அலை மாற்றங் களுக்கும், வயதானவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாம் தூங்கும்போது, மூளை, அன்றைய நிகழ்வுகள் குறித்த நினைவுகளை, தன் தற்காலிக நினைவகத்திலிருந்து, நீண்டகால நினைவகத்திற்கு மாற்றி வைக்கும் வேலையைச் செய்கிறது.

இந்த வேலை நடக்கும்போது மூளையிலிருந்து இரு வகையான அலைகள் வெளிப்படுகின்றன.

ஓர் அலை சற்றே வேகமானது. இன்னொன்று சற்றே மெதுவானது. இந்த இரு அலைகளும், சில வினாடிகள் சுருதி சேரும்போது, நினைவாற்றல் பரிமாற்றம் சிறப்பாக நடப்பதாக, கலிபோர்னிய பல்கலைக்கழக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட விரிவான தூக்க ஆய்வில், இளம் வயதினருக்கு இரு அலைகளும் சுருதி சேர்வது நன்றாக நடப்பதை கண்டறிந்தனர்.அதே சமயம், வயதானவர்கள் துங்கும்போது இரு அலைகளுக்கும் சுருதி பேதம் ஏற்படுவதையும் கவனித்தனர். இதனால் தான், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைய ஆரம்பிக்கிறது என, அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி, வயதானவர்களுக்கு இந்த சுருதி பேதத்தை மாற்ற முடியாதா? மூளைக்கு மெல்லிய மின் தூண்டலை தருவதன் மூலம், வயதானவர்களுக்கு சுருதி பேதமில்லாத, ஆழ்ந்த தூக்கத்தை தர முடியும் என, மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆய்வுகள் தொடர்கின்றன.

மென்பொருள் அரசியல்வாதி!

சவுதி அரேபிய அரசு, அக்டோபரில், சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடிமகளாக அறிவித்தது. அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்திலிருந்து வந்திருக்கிறது இந்த செய்தி. செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார், அங் குள்ள தொழிலதிபர், நிக் கெர்ரிட்சென்.

இந்த மென்பொருள் வடிவ அரசியல்வாதிக்கு, ‘சாம்‘ என, பெயர். வாக்காளர்களின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதியும், அவர்கள் உண் மையில் செய்வது ஆகியவற்றுக்குள்ள இடைவெளியை குறைக்க, இந்த செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி உதவும் என்கிறார், கெர்ரிட்சென்.

வழக்கமான அரசியல்வாதிகளைப் போல கேள் விக்கு, எதிர் கேள்வி கேட்பது, மழுப்புவது, அல்லது யாரும் கேள்வி கேட்பாரே இல்லாதது போல நடந்து கொள்வது போன்றவை சாமுக்கு வராது. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களின் பிரதிநிதியாக சாம் செயல்படும். நியூசிலாந்துவாசிகளின் சமூக ஊடகங்கள் அனைத் துடனும் சாமுக்கு தொடர்பு உண்டு. எனவே அந்நாட்டு மக்கள் எவரும், எப்போதும் சாமிடம் கேள்விகள் கேட்கலாம். சாம் எல்லோரது கருத்துகள், கேள்விகள், தகவல்களையும் சம அளவு முக்கியத்துவம் தந்து அலசும். இதன் விளைவாக எல்லோருக்கும் பலன் தரும் திட்டங்களை அது முன்னிருத்த முடியும் என் கிறார் கெர்ரிட்சென்.

நிலவில் ஆய்வு: சந்திராயன்-2 செயற்கைக்கோள்

2018 மார்ச்சில் நிலவில் தரையிறங்கும்

மயில்சாமி அண்ணாதுரை தகவல்

நிலவில் ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 செயற்கைக்கோள் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவில் தரையிறக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெங்களூரு செயற்கைக்கோள் மய்ய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக நிலவில் விரிவான ஆய்வு மேற்கொள்ள சந்திராயன்-2 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3-ஆம் கட்டமாக (லூனார் ஆர்பிட்டர், லேன்டர், ரோவர்) துருவ வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோளில் லேண்ட் ரோவர் கருவி எனப்படும் தானே இயங்கும் கருவி உள்ளது.

மேலும், சிறிய 6 சக்கர வாகனம் போன்ற கருவி துருவப்பாதையில் சென்று, அங்குள்ள படிமங்களை எடுத்து ஆய்வுக்கு வழங்கும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது. நிலவின் மத்திய ரேகைப் பகுதியில் துருவப்பாதைக்கு அருகில் இதனை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்

நிலவில் உள்ள கல், மண் உள்ளிட்ட அனைத்தையும் இது ஆய்வு செய்யும். இப்போது, ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் இந்த ஆய்வு நடைபெறுகிறது.

வருங்காலங்களில் மனிதர்கள் சென்று அங்கு ஆராய்ச்சி நடத்தவும், பின்னர் திரும்பி வரவும் வழிகாணும் வகையில் சந்திராயன்-2 ஆய்வு நடைபெறுகிறது. நிலவில் வசிப்பதற்கு தகுந்த உடைகள் மற்றும் நிலவிலிருந்து திரும்பி வருவதற்கான முறைகளை உள்ளடக்கி, இந்த இந்த ஆய்வு நடத்தப்படும். சந்திராயன் -1 விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு பல நாடுகளும் இந்தியாவின் விண்வெளி ஆய்வை வரவேற்று, பாராட்டி வருகின்றன.

எனவே, நிலவில் மனிதன் சென்றுவரும் வகையிலான ஆய்வுக்கு இந்தியாவுடன் சர்வதேச நாடுகள் கைகோர்க்க வேண்டும். அய்.நா.சபையில் உள்ள இதற்கான அமைப்பிடம் வலியுறுத்தி சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியும் உள்ளது. நிலவில் கண்டறிந்த ஆய்வுகள் குறித்தும், சந்திராயன் குறித்தும் பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் பரவுகின்றன. எதனையும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டும். நிலவில் ஈர்ப்பு விசை மிகவும் குறைவாக உள்ளதால் கொடியை நடுவதில் சற்று சிரமம் இருந்தது. சந்திராயன் குறித்து அறிவியல் பூர்வமாக விவாதித்தால் அதற்கான ஆதாரங்களுடன் விளக்கத் தயாராகவுள்ளோம்.

ஆதித்யா-1: நிலவில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் அனுப்பப்பட்டதைப் போன்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆதித்யா-1 என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படவுள்ளது.

இந்த விண்கலத்தை கட்டமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விண்கலம் மாதிரி குறித்த ஓவியம், வடிவம் குறித்து பணிகள் நடைபெறுகின்றன.

2019-20-ஆம் ஆண்டில் இது விண்ணில் ஏவப்படும் என்றார். ஆண்டுக்கு 18 செயற்கைக்கோள்கள் அனுப்ப திட்டம் இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் விண்வெளி ஆய்வுக்காக கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டுக்கு 12 செயற்கைகோள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 2018ஆம் ஆண்டு முதல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டுக்கு 18 செயற்கைக்கோள்கள் ஏவப்படவுள்ளன. தனியார் பங்களிப்புடன் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதில், 10 முதல் 12 வரையிலான செயற்கைக் கோள்களை இஸ்ரோ மூலமும், 6 செயற்கைக்கோள்களை தனியார் பங்களிப்புடனும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்களிக்கும் தனியார்துறைக்கு தேவையான உதவிகளை இஸ்ரோ வழங்கும். இதன் மூலம் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் உதவியை நாடி வரும் நிலை ஏற்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner