எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிறிய தோட்டத்தை நடவு முதல், அறுவடை வரை செய்து பராமரிக்க, ஒரு ரோபோ வந்திருக்கிறது. ‘கார்டன் ஸ்பேஸ்’ என்ற பெயர் உள்ள இந்த ரோபோவை, உரிமையாளர் தனது மொபைல் மூலம் கண்காணிக்கலாம்.

ஒரு மொபைல் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டதும், அதன் மூலம் உரிமையாளருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது கார்டன் ஸ்பேஸ் ரோபோ. அந்த செயலியில் என்ன செடிகளை நடப்போகிறார் என்பதை உரிமையாளர் பதிவு செய்ததும், அதை எங்கே, எப்படி நட வேண்டும் என ரோபோ வழி சொல்கிறது.

சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் இந்த ரோபோவுடன் ஒரு நீர் குழாயை இணைத்துவிட்டால் தோட்டத்தை வலம் வந்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறது. பூச்சிகள் வந்து அமர்ந்தால், நீரை பீய்ச்சியடித்து விரட்டுகிறது. செடியில் விளைச்சலை எப்போது அறுவடை செய்யலாம் என்பதையும் உரிமையாளருக்கு நினைவூட்டும் இந்த ரோபோவில், 360 கோணத்திலும் சுழலும் வீடியோ மற்றும் புகைப்பட கேமராக்கள் உள்ளன.

மாதாந்திர சந்தா அடிப்படையில் இந்த ரோபோவை மேகக் கணினி சேவையுடனும் இணைத்து, தோட்டப் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை பெற முடியும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போடுவோரை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, இப்போதைக்கு, 100 சதுர அடி தோட்டத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் என்கிறது, கார்டன் ஸ்பேசை தயாரித்துள்ள ஆஸ்திரேலிய நிறுவனம்.

‘பச்சோந்தி’ போல நிறம் மாறும் கருவிகள்!

ஒரு தயாரிக்கப்பட்ட பொருளால், பச்சோந்தியைப் போல நிறத்தை மாற்றிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்... முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் அச்சிடப்பட்ட ஒரு பொருளின் நிறத்தை நினைத்தபடி மாற்றும் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின், எம்.அய்.டி ஆய்வு மய்யத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
இந்த அசத்தல் தொழில்நுட்பத்திற்கு, ‘கலர் பேப்’ என, பெயரிடப்பட்டு உள்ளது. திரையில் தெரியும் உருவங்களின் துல்லியத்தை அளக்க, ‘பிக்செல்’ என்ற அளவு பயன்படுவதைப் போல, முப்பரிமாண பொருட்களின் துல்லியத்தை அளக்க, ‘வோக்செல்’ என்ற அளவை பயன்படுகிறது. கலர் பேப் முறையில் முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிடப்படும் பொருட்களின் மேற்பரப்பில் சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களைக் கொண்ட வோக்செல்கள் இருக்கும்.

இந்தப் பொருளை புறஊதா கதிர்களில் காட்டினால், மூன்று வண்ணங்களும் முடுக்கப்பட, நம் கண்களுக்கு நன்றாகத் தெரியும். புற ஊதாக் கதிரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பிறகும், அந்த மூன்று வண்ணங்களும் கலவையாக நமக்குத் தெரிந்தபடியே இருக்கும். அதேபோல நம் கண்ணுக்குத் தெரியும் ஒலியின் குறிப்பிட்ட அலைவரிசையை அந்த பொருளின் மீது பாய்ச்சும் போது, அதை மட்டும் நம் கண்ணுக்குத் தெரியாதபடி அணைக்கவும் முடியும். இந்த முறையில் நமக்கு வேண்டிய வண்ணத்திற்கு ஒரு பொருளை மாற்ற முடியும்.

இப்போதைக்கு எம்.அய்.டி.,யின் தொழில்நுட்பம் மூன்று அடிப்படை நிறங்களை மட்டுமே கையாள்கிறது. அதன் துல்லியமும் சற்று குறைவாகவே இருக்கிறது. ஆனால், மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் வண்ணங்களின் அளவை அதிகரிக்கவும், துல்லியத்தை அதிகரிக்கவும் முடியும் என்கின்றனர், எம்.அய்.டி., விஞ்ஞானிகள். தினமும் பயன்படுத்தப்படும் கருவிகள் நன்றாக இருந்தாலும், அவை பழையவை என்பதாலேயே தூக்கி எறியும் கலாச்சாரம் உலகெங்கும் பரவி இருக்கிறது. இந்த வண்ணம் மாற்றும் தொழில்நுட்பம், ஒரு பொருளின் நிறத்தை மாற்றி புதியது போல ஆக்கிவிடுவதால், அத்தகைய விரயங்களை தடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆளில்லாமல் பயணிக்கும் தானோட்டிப் படகு

வானூர்தி, கார், லாரி என்று பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பம் வந்துவிட்டது. கப்பலில் அப்படி வராமலா இருக்கும்... இதோ வந்தாச்சு! அன்டார்டிகா கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக, ஆஸ்திரேலிய அரசின் அறிவியல் அமைப்பான, சி.எஸ்.அய்.ஆர்.ஓ., ஆளில்லாமல் கடலில் பயணிக்கும் ‘செயில் ட்ரோன்’ என்ற ஆய்வுப் படகை பயன்படுத்தவிருக்கிறது.

சி.எஸ்.அய்.ஆர்.ஓ.,வும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஓர் அமைப்பும் கூட்டாக செயில் ட்ரோனை உருவாக்கியுள்ளன. இந்த தானோட்டிப் படகில் உள்ள பாய்மரம், காற்றின் சக்தியை பயன்படுத்தி பயணிக்க, இதன் மீதுள்ள சூரிய மின் பலகை, பல கருவிகளுக்குத் தேவையான மின்சாரத்தை தரும்.

தன் இருப்பிடத்தையும், போக வேண்டிய கடல் பாதையையும் அறிய, செயற்கைக் கோளை செயில் ட்ரோன் பயன்படுத்துகிறது. எதிரே வரும் படகுகள், பனிப் பாறைகளை தவிர்க்க உதவும் உணரி போன்ற கருவிகள் இப்படகில் இருக்கின்றன. தேவைப்பட்டால், ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக் கோள் வழியே, படகை செலுத்தவும் முடியும்.

அன்டார்டிகா பகுதியின் வானிலை, கடல் நீரிலுள்ள கரியமிலம் மற்றும் இதர தன்மைகளை அளக்கும் கருவிகள் செயில் ட்ரோனில் பொருத்தப் பட்டுள்ளன.

இரவு - பகல் பாராமல் கடலின் தன்மைகளை தன் கருவிகள் மூலம் உணர்ந்து, அந்த தகவல்களை கரையிலிருக்கும் ஆய்வகத்திற்கு தொடர்ந்து அனுப்ப வல்லது செயில் ட்ரோன். ‘இதுவரை கடல் குறித்து பெற முடியாத தகவல்களை இந்த தானோட்டிப் படகு தொழில்நுட்பம் மூலம் அறிவியல் உலகம் பெற முடியும்‘ என்கிறார், சி.எஸ்.அய்.ஆர்.ஓ.,வின் ஆய்வுத் தலைவரான ஆண்ட்ரியாஸ் மருசோஸ்.

பேரிடரிலிருந்து மீட்க உதவும் செயலி!

 

இயற்கைப் பேரிடர் நிகழ்ந்த இடங்களில் சிக்கியவர்களால், பல மணி நேரங்கள் உயிர் பிழைத்திருக்க முடிகிறது. அப்படி பிழைத்திருப் பவர்களுக்கு உரிய நேரத்திற்குள் முதலுதவி மற்றும் மீட்பு உதவிகள் சென்று சேராதபோது தான் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

அப்படி பேரிடர்களில் சிக்கியவர்கள், தங்கள் இருப்பிடத்தை தெரிவிக்க உதவும் தொழில்நுட்பத்தை, ஸ்பெயினின் அலிகான்ட் ஆய்வுப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் செயலி வடிவிலான இந்த தொழில்நுட்பம், ஆபத்துக்கு உதவி கோரும் சமிக்ஞைகளை ‘வை--பை’ மூலம் அனுப்பியபடி இருக்கும். இந்த சமிக்ஞைகளை தேடும் பணியில் உள்ளோர் ஒரு சிறிய ஆன்டெனா பொருத்திய கருவியை மொபைலில் இணைத்து பயன்படுத்தலாம். பேரிடரில் சிக்கியவர்களின் இருப் பிடத்தை காட்டித் தரும் சமிக்ஞைகள் கிடைத்ததும் உடனே அந்த இடத்தை நோக்கி சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஆபத்தில் சிக்கியவர்கள் இந்த செயலியை முடுக்கி விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. மொபைல் டவர்கள் இல்லாத இடங்களிலும், குறைந்தது, 4 கி.மீ., தொலைவு வரை இந்தச் செயலியால் சமிக்ஞைகளை அனுப்ப முடியும்.

மலை, காடுகள், கட்டட இடிபாடுகள், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கியவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து மீட்க இத்தொழில்நுட்பம் உதவும் என, ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.