எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கட்டடத்துக்கு வெளியே உள்ள வெப்பமும் குளிரும், உள்ளே வராமல் தடுக்க, ‘ஏரோஜெல்’ என்ற விந்தைப் பொருளை பயன்படுத்தலாம் என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோ ஜெல்லை, ‘இன்சுலேஷன்’ எனப்படும் தட்பவெப்ப தடுப்பானாக சுவர்களில் பயன்படுத்தினால், 30 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என சுவிட்சர்லாந்தின் ‘எம்பா’ ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று சுவர்களுக்கு, நடுவில் காலி இடம் உள்ள செங்கற்களை பயன்படுத்துவது பரவலாகியிருக்கிறது. இந்த காலி இடத்தில் செயற்கை கம்பளி போன்ற பொருட்களை நிரப்பி, பின் சிமென்டை பூசி சுவர்களை எழுப்புகின்றனர். இதனால் வெளி தட்பவெப்பம் கட்டடத்திற்குள் வருவதை வெகுவாக குறைக்க முடியும்.

நுண்ணிய ஏரோஜெல் குளிகைகளை கலந்த கலவையை செங்கல்லுக்கு நடுவே நிரப்பினால், வெப்பக் கடத்தலை மேலும் குறைக்க முடியும்.

இதனால் வெயில் காலத்தில் குளிர் சாதனம் மற்றும் குளிர் காலத்தில் வெப்பமேற்றும் சாதனங்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைக்கலாம். இருந்தாலும், உலக சந்தையில் ஏரொஜெல்லின் உற்பத்தி குறைவாகவும், விலை அதிகமாகவும் இருப்பதுதான் இடிக்கிறது.

ஆனால், ஏரொஜெல்லுக்கு கட்டுமானத் துறையில் கிராக்கி அதிகரித்தால், உற்பத்தி அதிகரித்து விலை சரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தங்கத்தை சுரக்கும் பாக்டீரியா!


பொன் சுரக்கும் பேக்டீரியா வகை ஒன்று இருப்பது பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஆனால் ‘சி.மெடாலிடியூரன்ஸ்’ எனும் அந்த பாக்டீரியா எப்படி நேனோ அளவு தங்கத்தை உற்பத்தி செய்து தள்ளுகிறது என்பதுதான் பெரிய புதிராக இருந்தது.

தற்போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அந்த ரசவாதம் என்ன என்பதை ஓரளவு தெரிந்து தெளிந்திருக்கின்றனர்.

‘அப்ளைடு என்விரோன்மென்டல் மைக்ரோபயாலஜி’ இதழில் இரு நாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வினை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, பல உயிரிகளால் தாங்க முடியாத நச்சுத் தன்மை உள்ள மண்ணில்தான் சி.மெடாலிடியூரன்ஸ், வளர்கிறது. அதற்கு செம்பு உலோக தாதுக்கள் தான் உணவு.

ஆனால், செம்பினை அளவுக்கு அதிகமாக உண்ண முடியாத அந்த பாக்டீரியா, தங்கத் தாதுக்களையும் உட்கொள்கின்றன.

அவற்றை ஜீரணிக்க வினோதமான வேதிவினையை நிகழ்த்தி சிறிதளவு செம்பை செறிமானம் செய்து, தங்கத் தாதுவை உலோகமாக மாற்றி வெளியேற்றிவிடுகின்றன.

தற்போது, தங்கத் தாதுவிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க, நச்சு மிக்க பாதரசத்தைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

சி.மெடாலிடியூரன் நிகழ்த்தும் இந்த வேதிவினையை மேலும் ஆராய்ந்தால், அவற்றை பயன்படுத்தி, தங்கத் தாதுக்களிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க, அவற்றையே பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடுகு எண்ணெயில் பறந்த போயிங் விமானம்!

உலகிலேயே முதல் முறையாக, உயிரி எரி பொருளை பயன்படுத்தி பெரிய விமானம் ஒன்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.

கடந்த வாரம், அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலி யாவுக்கு புறப்பட்ட குவான்டாஸ் விமான சேவையின் போயிங் டிரீம்லைனர் 787-9 விமானம்தான் இந்த சாதனையை செய்திருக்கிறது.

வழக்கமான எரிபொருளை, 90 சதவீதமும், உயிரி எரிபொருளை, 10 சதவீதமும் கலந்து பயன்படுத்தி அந்த விமானம் பறந்தது.

கடுகு வகையை சேர்ந்த, பிராசிக்கா கறிநாடா என்ற விதையிலிருந்து தயாரிக்கப்பட்டது அந்த உயிரி எரிபொருள். குவான்டாஸ் வெளியிட்ட தகவல்படி, கடுகு எண்ணெய் எரிபொருளை பயன்படுத்தினால், விமானம் வெளியேற்றும் புகை மாசில், 80 சதவீதம் வரை குறையும். அதன்படி, இந்த கலவை எரிபொருள், 7 சதவீத கரியமில மாசினை குறைத்துள்ளது.

அதாவது, 18,000 கிலோ கார்பன் மாசின் காற்றில் கலக்காமல் அது தடுத்துள்ளது.

கனடாவை சேர்ந்த ‘அக்ரிசோமா பயோசயன்சஸ்’ தயாரித்துள்ள, இந்த உயிரி எரிபொருளுக்கு பயன் படும் கடுகு வகைப் பயிர் தரிசு நிலங்களிலும், ஊடு பயிராகவும் வளர்க்கலாம். எனவே, விவசாயி களுக்கும் லாபம் தரும் என்கிறது அக்ரிசோமா.

மின்சார பைக்!

இருசக்கர வாகன உலகில் சிறந்ததாக  கருதப்படுவது ஹார்லி டேவிட்சன் வண்டிகள் தான்.

அது, 2019இல் மின்சார பைக் ஒன்றை விற் பனைக்கு விட இருக்கிறது. ஏற்கனவே, 2014ல் ‘லைவ் வயர்’ என்ற மாதிரி மின்சார பைக் ஒன்றை வாகனக் காட்சிகளில் தன் வாடிக்கை யாளர்களிடம் காட்சி கருத்துக் கேட்டது.

ஹார்லியை கொண்டாடுபவர்கள் அதன் வண்டிகளில் வரும் லயமான இயந்திர ஒலியை ரசிப்பர். ஆனால் மின் பைக்கில் ஓசையே வராது.

எனவே லைவ் வயரில், ஆக்சிலேட்டரை முறுக்கும்போது, வண்டியின் வேகத்திற்கேற்ப, ஓட்டு நருக்கு கேட்கும்படி ஒரு ஒலியை சேர்த்திருந்தது ஹார்லி. தவிர, மின் வண்டிகளில் ‘கியர்’ இருக்காது. இந்த குறையை இட்டு நிரப்பினால் ஹார்லியால் சரியும் விற்பனையை தடுத்து நிறுத்த முடியும் என்று இரு சக்கர வாகன இதழாளர்கள் கருதுகின்றனர்.

இயற்கைப் பிரியர்களான ஹார்லி ரசிகர்கள், புகையால் காற்றை நச்சாக்காத மின்சார ஹார்லியை வெற்றிபெறச் செய்வரா?


நகரங்களை வடிவமைத்துத் தரும், ‘கூகுள்!’  

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 2017 அக்டோபரில், ‘சைட்வாக் லேப்ஸ்’ என்ற தனி நிறுவனத்தை துவங்கியது.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நகரங்களை வடிவமைத்து, அவை வசிப்பதற்கும், பயணிப்பதற்கும் இனிமையானவை யாக ஆக்குவதுதான் சைட்வாக் லேப்சின் நோக்கம்.

கனடாவின் டொரன் டோ நகரம், சைட்வாக் வடிவமைத்துத் தந்த மாதிரியே புதிய விரிவாக்கப் பகுதியை கட்டி வருகிறது. குப்பை குவிவது, புகை மாசு, நீர் மாசு, போக்குவரத்து நெரிசல், சைக்கிள் பயணி மற்றும் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் போன் றவை இல்லாத பகுதியாக புதிய விரிவாக்கம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதாக சைட் வாக் அறிவித்துள்ளது.

விரைவில் மற்ற நாடுகளின் நகரங்களுக்கும், ஆலோசனை தரத் தயார் என சைட்வாக் அறிவித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் போடப்பட்டு வருவதால், கூகுள் மட்டுமல்ல, அய்.பி.எம்., போர்டு, சீமென்ஸ், அமேசான் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங் களும் செம்மை நகரங்களை உருவாக்கித் தருவதில் போட்டியிடத் துவங்கியுள்ளன.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner