எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடிநீர் பாட்டிலின்றி அமையாது உலகு என்ற நிலைமை வந்து விட்டது. எங்கு பார்த்தாலும் காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், தட்டுப்பட ஆரம்பித்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு மட்கிப் போகாமல், மண்ணுக்கும், நீர் நிலைகளுக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றே கிடையாதா? உண்டு என்கிறது சூஸ் வாட்டர். சூஸ் வாட்டர் வடிவமைத்துள்ள குடிநீர் பாட்டில்கள் முழுவதும் காகிதத்தால் ஆனவை.

குடிநீரை இதில் அடைத்து வினியோகித்தாலும், நீரின் தன்மை கெடாது. இதை காலி செய்து குப்பையில் போட்டால், சில மாதங்களில் மட்கி மண்ணாகிவிடும். குப்பை மேடுகளில் சூஸ் வாட்டரின் பாட்டில்கள் சேர்ந்தால், அந்த குப்பைகளில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்கவும் செய்கிறது என்கின்றனர். இதை வடிவமைத்தவர்கள். கடலில் இந்த பாட்டில்கள் சேர்ந்தாலும் கூட கடல் உயிரிகளுக்கு சத்துள்ளதாக இருக்கும்.

மறுசுழற்சி செய்த காகிதத்தில் தயாராகும் இந்த பாட்டில்களின் உட்பகுதியில், சில தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் பூசப்பட்டிருக்கும். எனவே நீரில் காகிதம் ஊறி, பாட்டில் பிய்ந்துவிடாது.

சூஸ் வாட்டர் பாட்டில்களின் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் வாட்டர் பார் ஆப்ரிக்கா என்ற அமைப்புக்கு நன்கொடையாக அனுப்பப்படும். இன்று குடிநீர் தட்டுப்பாடுள்ள குடிசைப் பகுதிகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமே அதிகம் தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது. அப்பகுதிகளில் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடுகளை தடுக்க சூஸ் வாட்டரின் காகித பாட்டில்கள் உதவும்.

முப்பரிமாண பிளாஸ்திரி!

முப்பரிமாண அச்சு இயந்திர தொழில் நுட்பத்தை மருத்துவ உலகமும் அரவணைத்துக் கொண்டுள்ளது. ஒரு அண்மை எடுத்துக் காட்டு, பிளாஸ்திரிகள்.

காயம் எந்த வடிவில் இருந் தாலும் சதுரமாகவோ, வட்டமாக வோ, செவ்வக மாகவோ தான் பிளாஸ்திரிகளை போட வேண்டியிருக்கிறது. காயத்தின் வடிவத்திற்கு ஏற்றபடி ஒரு பிளாஸ்திரியை செய்ய முடிந்தால் எப்படியிருக்கும் என்று அமெரிக்காவிலுள்ள டெம்பிள் பல்கலைக் கழக உயிரிப் பொறியியல் விஞ்ஞானிகள் சிந்தித்தனர். இதன் விளைவாக, வளைந்து கொடுக்கக் கூடிய, இலகுவான பிளாஸ்திரிகளை, நோயாளிக்கு புண் உள்ள இடத்திலேயே அச்சிட்டுத் தரும் முப்பரிமாண அச்சு இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த முப்பரிமாண பிளாஸ்திரி இயந்திரத்தை இரண்டு அளவுகளில் விஞ்ஞானிகள் வடிவமைத் துள்ளனர்.  ஒன்று பெரியது. இன்னொன்று, கையில் எடுத்தாளும் அளவுக்கு சிறியது.

அடுத்த சில ஆண்டுகளில், முப்பரிமாண பிளாஸ்திரி அச்சியந்திரம் முதலுதவிப் பெட்டிகளில் இடம் பிடிக்கக்கூடும்.

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக் காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு கொடை பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

இப்போதைக்கு `க்ரையோபிரிசர்வேஷன்  முறை மட்டுமே இதற்குத் தீர்வு என்கிறது மருத்துவ உலகம். நம் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எப்படிக் குறிப்பிட்ட சில நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படு கிறதோ, அதே போன்றுதான் இம்முறையும் செயல்படுகிறது. உயிரிப்பொருள்களை மைனஸ் 70 முதல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் அந்தப் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடும், செல்களின் செயல்பாடும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இதனால் எவ்வித மாற்றத் துக்கும் உள்ளாகாத இந்த உயிரிப்பொருள்களைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடலின் செல்கள், உறுப்புகள் மட்டுமல்லாமல் முழு மனிதனையேகூட இந்த முறையில் எவ்வித மாற்றத்துக்கும் உட்படாமல் பாதுகாக்க முடியும் என்கிறது மருத்துவம்.

இது எப்படி சாத்தியம்? உறைய வைத்தல் மட்டுமே ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாக்குமா? செல்களை உறையவைக்கும்போது அதற்குள் இருக்கும் தண்ணீர் முதலில் உறைய ஆரம்பிக்கும். இதனால் செல்களுக்குள் இருக்கும் திரவத்தின் அடர்த்தியும் அளவும் குறைவதால் செல்லுக்குள் அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். செல்லினுள் மூன்றில் இரண்டு பங்கு நீர் முழுவதும் உறைந்த பிறகு ஏற்படும் வெற்றிடத்தால் செல்லின் வடிவம் முழுவதும் உருக்குலையும் அபாயம் உள்ளதே? ஆம் உறையவைக்கப்பட்ட உயிரிப்பொருள்  வேறெந்த பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதற் காகத்தான்   பாதுகாப்பான்கள் உதவுகின்றன. சுக் ரோஸ், ஆல்கஹால், கிளைகால், சில அமினோ அமிலங்கள் போன்றவை பாதுகாப்பான்களாக உபயோகப்படுத்தபடுகின்றன. இப்படிப் பதப் படுத்தப்பட்ட உயிரிப்பொருள்கள் திரவ நைட்ர ஜனில் பாதுகாக்கப்படுவதன் மூலம் நீண்ட நாள் களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளை மீண்டும் உருகச் செய்வதன் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், இப்படிச் செய்யும்போது செல்லுக்குள் வெற்றிடம் ஏற்படுவதால் செல்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

அண்டார்டிகா பகுதியில் காணப்படும் அண் டார்டிகா பூச்சி ஒன்று மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கைச் சுழற்சியில் இந்தப் பூச்சி பல நாள்களை இப்படி உறைநிலையிலே கழிக்கிறது, எவ்வித பாதிப்பும் இல்லாமல்!  இந்தப் பூச்சிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? யோசித்தபோதுதான் பாதுகாப்பான்கள், அதாவது கிளிசராலும், குளுகோசும் இயல்பாகவே சுரப்பது கண்டறியப்பட்டது. இந்தப் புரதங்கள் பெரும்பான்மையான நீரை உடலிலிருந்து வெளி யேற்றும் சவ்வாகச் செயல்படுவதுடன், அழுத்தத் தைச் சமம் செய்வதும் கண்டறியப் பட்டிருக்கிறது. நீரின் அளவும், அழுத்தத்தின் அளவும் சமன் செய்யப்படுவதால் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இந்தப் பூச்சிகளால் சமாளிக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது நீரைப் பெருமளவில் வெளி யேற்று வதால் மனிதர்களில் இந்த நடைமுறை சாத்தியப்பட வில்லை. பூச்சியின் உடலில் 70 சதவிகித அளவு நீரை வெளியேற்றினாலும் அதனால் உயிர் வாழ முடியும். மனித செல்களிலிருந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமான நீரை வெளியேற்றமுடியாது என்னும் நிலைதான் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததாக மாற்றியுள்ளது.

இருப்பினும், க்ரையோபிரிசர்வேஷன்  முறை சில குறிப்பிட்ட வகை செல்களைத் தவிர மற்ற செல்களில் பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கூடி யதுதான். இந்த நம்பிக்கையே இம்முறையை நடை முறைச் சாத்தியமாக்கியுள்ளது. மேற்கூறிய பிரச் சினைகளுக்கான தீர்வு எதிர்காலத்தில் கண்டறியப் படும் பட்சத்தில், டைனோசர் அழிந்தது போல எந்த இனமும் எதிர்காலத்தில் அழியாது. ஏனெனில் எல்லா செல்களையும் இந்த க்ரையோபிரிசர்வே ஷன் மூலம் பாதுகாத்து விடலாம்.

செயற்கை மழை

மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப் படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் பெரிதும் தேவையாக இருக்கும் தண்ணீர் நம்மிடம் போதுமானதாக இருக்கிறதா? நம்முடைய உரிமையான காவிரிக்காக கருநாடகாவிடமும் முல்லைப் பெரியாற்றுக் காக கேரளாவிடமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரும் கிடைத்தபாடில்லை. கேப்டவுனில் இருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தத் தண்ணீர் பற்றாக்குறை பெரும்பிரச்சினையாகவே இருக்கிறது. அதனைத் தீர்க்க அறிவியல்ரீதியாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடல் நீரை குடிநீராக்குதல், அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளை உருக்குவது, மேக விதையூட்டல் மூலமாகச் செயற்கை மழையினைப் பெறுவது எனப் பல முறைகள் சோதனை முயற்சியிலேயே உள்ளன. சில முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் படுகின்றன. அப்படி ஒரு முயற்சியைச் சீனா மிகப்பெரிய அளவில் செயல்படுத்த முனைந்துள்ளது.  உலகிலேயே மிக அதிக பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்கும் முயற்சியில் சீனா நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை பெரியளவில் திபெத் பீடபூமியில் அமைத்துள்ளது. திபெத் பீடபூமி உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி. பத்தாயிரக்கணக்கான எரி உலைகள் திபெத்திய மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியின் சராசரி மழைபொழிவை விட 10 பில்லியன் க்யூபிக் மீட்டர் வரை அதிக மழைப்பொழிவைப் பெற முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தத் திட்டம் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.

2016 ஆம் ஆண்டு சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய தியான்ஹே திட்டத்தின் விரிவாக்கமே இவ்வளவு பெரிய முயற்சி. சீனாவில் தியான்ஹே என்பதற்கு வான் நதி என்று பொருள். அதே பெயரிலேயே இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் முழு வெற்றி பெற்றால் சீனாவின் ஒரு ஆண்டிற்கான குடிநீர்த் தேவையில் 7% இதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்கின்றனர். அவர்கள் எந்த முறையில் செயற்கை மழையினை உருவாக்கப் போகிறார்கள்? அது எப்படி சாத்தியம் என பலருக்குள்ளும் கேள்விகள் இருக்கும். மேக விதையூட்டல்   எனும் முறையின் மூலம் வானிலையில் மாற்றம்  செய்து மழையைப் பெறுவதுதான் செயற்கை மழை.

இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்களில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பருவக் காலங்களில் மேகங்களில் நீர்கக்கூறுகள் சேமிக்கப்பட்டு குளிர்ந்த காற்றின் மூலமோ அல்லது புற விசையின் மூலம் மழையாகப் பொழி கிறது. இந்த இயற்கையான முறையில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை மேகங்களில் கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner