எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல வடிவங்களில் ரோபோக்களை செய்து வருகின்றனர் ரோபோவியல் பொறியாளர்கள்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, ‘சீட்டா 3’ என்ற ரோபோவை சோதித்து வருகின்றனர்.

அது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏற பயிற்சி தரத் துவங்கி உள்ளனர்.

ரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.

எனவே, சீட்டா 3 யின் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

ரோபோவின் கால்கள் இருக்கும் நிலை, கோணம் போன்றவற்றை உணரிகள் உணர்ந்து, வினாடிக்கு, 20 முறை தகவல்களை மென்பொருள் நிரல்களுக்கு அனுப்ப, அந்த மென்பொருள்கள் இடும் கட்டளைப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கிறது, சீட்டா 3.

இந்தத் திறனைக் கொண்டு சீட்டா 3, விபத்து நிகழ்ந்த இடங்கள், ஆபத்தான தொழிற்சாலைகளில் தெம்பாக நடந்து சென்று வேலை பார்க்க முடியும்.

உப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்:

திருப்பூர் மாணவி சாதனை

மனிதர் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர், மற்றொன்று எரிபொருள். உலகின் பெரும் தட்டுப்பாடாக மாறவிருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக மாற்று எரிபொருளை வெற்றிகரமாகக் கண்டு பிடித்திருக்கிறார் திருப்பூர் மாணவி எம். யோகேஸ்வரி. இவர் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பையர் எனப்படும்        போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இந்தப் போட்டியில் முதல் பரிசை 17 பேரும் இரண்டாம் பரிசை 16 பேரும் மூன்றாம் பரிசை 17 பேரும் வென்றுள்ளனர். இவர்களுக்கு இடையில் மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறை யுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதை மாணவி யோகேஸ்வரியிடம் கேட்டதற்கு, வீடுகளில் நீரைச் சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதைப் போல, உப்பு நீரில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, அது ஹைட் ரஜன், ஆக்சிஜன் என இரு அயனிகளாகத் தனித் தனியாகப் பிரியும். நான் கிராஃபைட் கம்பி கொண்டு உப்புநீரைச் சூடு செய்தேன்.

இப்படிச் செய்யும்போது, உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். அந்த ஹைட்ரஜன் நீர்க்குமிழி முட்டைகளில் இருந்து வெளியேறும் வாயுவைச் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்பு நீரில் போட்டேன். அதன் வழியாகத் தயாராக வைக்கப் பட்டுள்ள சிலிண்டரில் வாயுவைச் சேகரித்தேன்.

இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கிவிட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்கத் தொடங்கியது.

இந்த ஆய்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை எனக்கு ரூ. 10,000 வழங்கியது. கிராஃபைட்டுக்கு மாற்றாக காரியம், தாமிரம், ஸ்டீல் இவற்றில் ஏதாவது ஓர் உலோகத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சோதனையை நான் பலமுறை செய்துபார்த்து இப்போது வெற்றி கண்டிருக்கிறேன் என்றார்.

தானோட்டி கார்கள்

பிரிட்டனிலுள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியரான, அமர் ஷா மற்றும் அலெக்ஸ் கென்டால் இணை சேர்ந்து, ‘வேவி’ என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.

தானோட்டி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள வேவி, சிறிய காரான ‘ரேனால்ட் ட்விஸ்சி’ குட்டி காருக்கு தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி சோதித்துள் ளனர்.

கூகுளைப் போல ஏராளமான உணரிகள், நவீன கருவிகளை பொருத்தாமல், ட்விஸ்சியில் ஒரு கேமரா, சில உணரிகள் மற்றும் புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமர் ஷா பொருத்தி இருக்கிறார்.

இந்த மென்பொருள் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது. ஒரு சோதனையின்போது, சாலையில் ட்விஸ்சி, தானே காரை ஓட்டிச் செல்கிறது. அப்போது, அது சாலையை விட்டு விலகினால் மட்டும், அதில் அமர்ந்துள்ள பயிற்சியாளர் ஸ்டியரிங்கை சரி செய்கிறார்.

அதை புரிந்துகொண்டு, அடுத்த முறை அந்த தவறை தானோட்டி மென்பொருள் செய்வதில்லை. இப்படி, 20 நிமிடங்களுக்குள், அந்த வாகனம் சாலையில் தவறு ஏதும் செய்யாமல், சென்று, திரும்பி வரப் பழகிவிட்டது!

மக்கள் நடமாடும் சாலைகளிலும் ட்விஸ்சியை ஓட்டிப் பழக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், அமர் ஷா.

பிளாஸ்டிக்கை

மட்கச் செய்யும் பாக்டீரியா!

குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால்.

இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த, 2016ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது.

அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் என்சைம்களுக்கு அதிக திறன் உண்டானது.

அதாவது, ஏற்கெனவே சாதாரண பிளாஸ்டிக்குகளை மட்கச் செய்யும் திறன் கொண்ட அந்த பாக்டீரியா, ‘பெட்’ எனப்படும் பாலிஎத்திலின் டெரப்தாலேட் வகை பிளாஸ்டிக்கையும் சிதைக்கும் அளவுக்கு அடர்த்தியான என்சைமை சுரக்க ஆரம்பித்தது.

அந்த என்சைமால் சில நாட்களிலேயே, பிளாஸ்டிக்கை மட்கச் செய்ய முடிந்தது.

இந்த கண்டுபிடிப்பால் உற்சாகமடைந்துள்ள விஞ்ஞானிகள், பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு ஏற்றபடி, பாக்டீரியாக்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

புகையிலையில் உருவாகும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்து!

தொற்று நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழிக்கும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்துகள், கடந்த நுற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

ஆனால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்க பழகிவிட்டன என்கின்றனர் மருத்துவர்கள்.

புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான தேடல் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த, லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், புகையிலைச் செடியிலுள்ள பூக்களிலிருந்து புதிய வகை ஆன்டிபயாடிக்குகளை உருவாக்க முடியும் என, அண்மையில் அறிவித்துள்ளனர்.

புகையிலைப்பூக்களில், ‘என்.ஏ.டி.1’ என்ற செல் மூலக்கூறு இருப்பதால், சிலவகை நோய்கள் புகையிலையை தொற்றுவதில்லை.

அதே மூலக் கூறுகளை வைத்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்கினால், எச்.அய்.வி., முதல், ‘டெங்கு’ வரை பல கிருமிகளை தடுக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner