கூகுளுக்கு சொந்தமான தானோட்டி வாகன பிரிவுதான் ‘வேமோ.’ இது அண்மையில் ஒரு முக்கியமான மைல் கல்லை கடந்திருக்கிறது. வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும் இல்லாமல், பரபரப்பான நகர சாலைகளில் வோமோவின் தானோட்டி வாகனங்கள், 10 லட்சம் மைல்களை கடந்திருக்கின்றன.
தற்போது வேமோ, அமெரிக்காவின், 25 நகரங் களில், வேமோ தானோட்டி கார்களை சோதித்து வருகிறது. இந்த வாகனங்களில் முன், ஸ்டியரிங்கை பிடிக்காமல் ஒருவர் அமர்ந்திருப்பார். அடுத்த கட்டமாக, ஸ்டியரிங்கிற்கு பக்கத்தில் சோதனை யாளர்களை அமர்த்தி, சோதனைகளை வேமோ நடத்தியது.
இது எதிரே வரும் வாகன ஓட்டிகள் பார்த்து பயந்துவிடாமல் இருப்பதற்காக செய்த ஏற்பாடு.
பிறகு, எங்கள் தானோட்டி வாகன தொழில்நுட்பம் துல்லியமானது என்பதை நிரூபிக்க, வண்டியின் முன்சீட்டில் யாருமே இல்லாமல், தானோட்டி வாகன சோதனைகளை நடத்த ஆரம்பித்தது. அந்த வகையில்தான் தற்போது, 10 லட்சம் மைல்களை வேமோ வின் வாகனங்கள் தாண்டியுள்ளன.
கூடவே, பீனிக்ஸ் நகரில், 400 பேருக்கு வேமோ வின் மொபைல் செயலியைத் தந்து, அவர்கள் வேலைக்குப் போவது, திரும்ப வீட்டுக்குப் போவது போன்ற பயணங்களுக்கு பயன்படுத்தும்படி சொல்லியிருக்கிறது, கூகுள். அந்த சோதனையும் பிசிறில்லாமல் தற்போது நடந்துவருகிறது. ஆக, தானோட்டி வாகனங்கள் பரவலாகப்போவது உறுதி.