எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிளாஸ்டிக் கடலில் கலப்பது பெரும் சிக்கல். அதே கடலில் உள்ள உயிரியைக் கொண்டு, இயற்கையான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய வழி இருந்தால் எப்படி இருக்கும்?

காலப்போக்கில் சிதையும், ‘பயோ பிளாஸ்டிக்‘ எனப்படும் உயிரி பிளாஸ்டிக்கை தயாரிக்கும் தொழிற் சாலைகள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஆனால், உயிரி பிளாஸ்டிக்குகளை தயாரிக்க அதிக நீரும், நிலமும் தேவைப்படுகின்றன.

எனவே தான், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கடலிலேயே ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். கடலில் வளரும் இலைக் கோசு தாவரத்தை, ஒருவகை நுண்ணுயிரிக்கு உணவாக அளித்தனர், விஞ்ஞானிகள்.

அந்த நுண்ணுயிரிகள் வெளியேற்றும் கழிவில் பி.எச்.ஏ., என்ற உயிரி பிளாஸ்டிக் பாலிமர் இருந்தது. அதைக் கொண்டு தயாரிக்கப்படும் உயிரி பிளாஸ்டிக், விரைவில் சிதைந்து மட்கிப் போகும் தன்மையுடன் இருக்கிறது. மேலும், இந்த வகை உயிரி பிளாஸ்டிக்கால் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவித நச்சுத் தன்மையும் ஏற்படுவதில்லை.

தண்ணீர் தட்டுப்பாடும், மக்கள் தொகையும் அதிக முள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள், பெட்ரோலியப் பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கைத் தயாரிப்பதற்கு பதில், தங்களது புதிய தொழில்நுட்பத்தின் மூலம், உயிரி பிளாஸ்டிக்கை தயாரிக்கலாம் என்கின்றனர், டெல் அவிவ் விஞ்ஞானிகள். இதனால் நல்ல நீரும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.