எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘எக்சிமா’ போன்ற தோல் நோய் உள்ளவர்களுக்கு, தோல் அரிப்பு ஒரு பெரும் தொல்லை. இதற்கு, தற்போது உள்ள முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிகிச்சையை, ரோம் நகரிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.

அய்ரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், இ.எம்.பி.எல்.,லைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஒளி மூலம் முடுக்கிவிடப்படும் மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

தோலின் மேற்புறத்திலுள்ள சில குறிப்பிட்ட நரம்பு செல்கள் துண்டப்படுவதால் தான், அந்த இடத்தில் அரிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

ரோம் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள மருந்தை, ஊசி மூலம் தோலில் செலுத்தினால், அந்த மருந்து, குறிப்பிட்ட நரம்பு செல்களில் மட்டும் ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது. மருந்து சென்ற இடத்தில் அகச் சிவப்புக் கதிர்களை பாய்ச்சினால், அவை தோலை ஊடுருவிச் சென்று மருந்தை முடுக்கிவிட, அரிப்புணர்வைத் தரும் நரம்பு செல்கள், தோலின் மேற்பரப்பிலிருந்து பின்வாங்கி விடுகின்றன. அரிப்பு நின்றுவிடுகிறது.

இந்த மருந்தை எலிகளுக்குக் கொடுத்து சோதித்த போது, எக்சிமா உள்ள எலிகளுக்கு உடனே அரிப்பு நின்றுவிட்டது.  பல மாதங்களுக்கு அரிப்பு இல்லாமல் எலிகளால் இருக்க முடிந்தது. தவிர, நகங்களால் சொறிந்து கொள்வது நின்றதால், அந்த இடத்தில் இருந்த புண்களும் வேகமாக ஆறிவிட்டன. ‘நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்’ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வை, மனிதர்கள் மீதும் விரைவில் நடத்திப் பார்க்க, ரோம் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner