மகளிர்

ஆறாண்டுகளுக்கு முன் மலையேறும் பயிற்சிப் பெற்ற ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ராதிகா ஜி.ஆர். ஆர்கனிசேஷன் ஃபார் கவுன்ட்டர் டெரரிஸ்ட் ஆபரேஷன்ஸ் ( ஆக்டோபஸ்) அமைப் பில் காவல்துறை மேலதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் அண்மையில் அன்டார்டிகாவில் உள்ள மிக உயரமான வின்சன் மலை சிகரத்தில் ( 4.892 மீட்டர்) ஏறி சாதனை புரிந்துள்ளார். உலகில் ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா , தென்அமெரிக்கா, அன்டார்டிகா, வட அமெரிக்கா என ஏழு கண்டங்களிலும் மிக உயர மான மலை சிகரங்கள் உள்ளன.

மலையேறுபவர்கள் இந்த ஏழு கண்டத்திலும் உள்ள மலைகள் மீது ஏறி முடித்தால். அவர்கள் சாதனையாளர்களாக கருதப்படுவர். இதில் முதல் ஆறு கண்டங்களில் உள்ள உயரமான மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை புரிந்துள்ள ராதிகா, இறுதியாக வட அமெரிக்கா, அலாஸ்காவில் உள்ள டெனாலி மலை மீது ஏறினால் இவரும் உலக சாதனையாளர் என்ற சிறப்பைப் பெறுவார். இனி அன்டார்டிகா வின்சன் மலை மீது ஏறிய அவரது அனுபவத்தைப் பற்றி கேட்போமா? கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, அன் டார்டிகா புண்ட்டா ஏரினாசில் உள்ள வின்சன் மலை மீது ஏறி, டிசம்பர் 18-ஆம் தேதி உச்சியை அடைவது என ராதிகா உள்பட 3 பெண்கள் அடங்கிய குழு புறப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி அவர்களால் மலை உச்சியை சென்றடைய முடியவில்லை. காரணம், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்த தால். மலை ஏறுவது சிரமமாக இருந்தது. மேலும் வின்சன் மலைமீது ஏறுவது மிகவும் சவாலாக இருந்தது என்று கூறும் ராதிகா, இந்த பயணத்தில் சாப்பாட்டுக்காக மிகவும் சிரமப்பட்டாராம். 2012-ஆம் ஆண்டுவரை எனக்கு மலையேறும் எண்ணமே இருந்ததில்லை. அந்த ஆண்டில் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை சென்று வந்த பின்னரே, 2013ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில் உள்ள ஜவகர் இன்ஸ்டிடியூட் ஆப் மவுண்டனீரிங் அண்ட் வின்ட்டர் ஸ்போர்ட்ஸில் மலையேறும் பயிற்சி பெறத் தொடங்கினேன். முதன்மை செயலாளர் ராஜீவ் திரிவேதி அளித்த ஊக்கம் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

முதன்முறையாக இமயமலை மீது ஏறியபோது, இமயமலை மீது ஏறிய முதல் இந்திய பெண் காவல்துறை அதிகாரி என்ற சிறப்பைப் பெற்றேன். மலையேறும் பயிற்சியின்போது தினமும் இரண்டு மைல்தூரம் ஓடுவேன். கூடவே ஜிம் பயிற் சியும் செய்வேன். இதுதவிர 20 கிலோ எடையுள்ள லாரி டயரை முதுகில் கட்டிக் கொண்டு நடப்பதுண்டு. அன்டார்டிகாவில் வின்சன் மலை அடி வாரத்தில் இருந்த முகாமுக்குச் செல்ல 14 கி.மீ. தொலைவு ஸ்லெட்ஜ் வண்டியை இழுத்துச் செல்ல இந்தப் பயிற்சி உதவியது. மலையேறும்போது பனிச் சுவரில் 400 மீட்டர் குறுக்காக ஏற பாதுகாப்புக்காக இடுப்பில் கயிறு கட்டப்பட்டது. இதற்குமுன் கோலப் காங்கிமலை, மென்தோசா மலை, குன்மலை ஆகிய மலைகளின் மீது ஏறியபோது, டிஜிபி ஹரிஷ் குமார், ஒ என்ஜிசி மூலம் பண உதவி பெற்றுத் தந்தார். 2017- ஆம் ஆண்டு செப்டம்பரில் அய்ரோப் பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீதும், அதே ஆண்டு டிசம்பரில் தென் அமெரிக்காவில் உள்ள அடுகான் குவா மலை மீதும் ஏறி சாதனை படைத்தேன். கடந்த ஆண்டு அன்டார்டிகா வின்சன் மலை மீது ஏற ஆந்திர அரசு பண உதவி அளித்தது.

இந்த சாதனைகளைச் செய்வதற்கு என்னுடைய 78 வயதான அம்மாவும் காரணமாக இருந்தார் என்று கூட சொல்லலாம்.  அடுத்து வட அமெரிக் காவில் உள்ள அலாஸ்காவில் டெனாலி மலை மீது ஏற ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளேன். உலகில் உள்ள ஏழு உயரமான மலைகள் மீது ஏறுவதென்பது உலக சாதனை அல்லவா? என்கிறார் ராதிகா ஜி.ஆர்.

கஷ்டமான துறைகள் என்றாலும், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் தெய்வா ஸ்டான்லி. சுற்றுச்சுழல் தாக்கம் பற்றியும், காடுகளை ஆராய்ச்சி செய் வதும் தான் இவரது முக்கியப்பணி. இந்தியா மட்டுமல்ல, உலகத்திலுள்ள காடுகளில் இவர் கால் தடம் படாத காடுகளே இல்லை என்று சொல்லலாம். பெண்களுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத இந்தத்துறைக்கு வந்தது எப்படி? புத்துணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்கிறார் தெய்வா: அப்பா ஸ்டான்லி, உடற்கல்வி ஆசிரியர். அம்மா அமலா, தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் பணிபுரிந்தவர். ஆனால் இருவரும் இப்போது இல்லை. ஒரு தங்கை, ஒரு தம்பி. இதுதான் என் குடும்பம். தூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் போது தாவரவியலில் இளங்கலைப் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுகலை படிப்பை முடித்தேன். பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பில் படிப்பை நிறைவு செய்தேன். பின்னர் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரி யில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு படித்த போது நாலாயிரம் ஆண்கள் மத்தியில் நான் ஒரே பெண்ணாக 5 ஆண்டு காலம் படித்தது, பிற பெண்களுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு புதுமையான அனுபவம். சிறு வயதிலிருந்தே வனம் மற்றும் கடல் பற்றிய விவரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது தொடர்பான படிப்பு தான் என்னுடைய மேல்நிலைக்கல்வி அனைத்துமே. அதனைத் தொடர்ந்து வனம் மற்றும் கடல் தொடர்பான ஆராய்ச்சியில் என்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறேன்.

காடுகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கடலோரம் மற்றும் கடல் வளங்கள், சதுப்பு நிலங்களை ஆராய்ச்சி செய்வதே என்னுடைய முக்கியமான பணி. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காடுகளில் அய்ந்து ஆண்டு களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து சதுப்பு நிலக் காடுகளின் நன்மைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். சதுப்பு நிலங்களில் என்னுடைய வேலை விவரிக்க முடியாத அளவு கடினமாகவே இருந்தது. காட்டுக்குள் செல்லும் போது தேவையான உணவு, தண்ணீரை எப்போதும் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் அவை சீக்கிரமே தீர்ந்துவிடும். நடக்கும் போது அதிக பசி ஏற்படுவதால் உணவும் இருக்காது. குடிக்க தண்ணீர் இல்லாமல் கலங்கின தண்ணீரை கைக்குட்டையில் வடிகட்டிக் குடித்த நாட் களும் உண்டு. குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களில் நீந்தியும் பல மைல்கள் நடந்தும் போயிருக்கிறேன். இரவு நேரத்தில் காடுகளில் பயணிப்பது ஒன்றும் சாதாரண செயலில்லை. அதற்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அதிகாரிகளிடம் மாட்டினால் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் காடுகளில் தங்கும் போது என் நண்பர்களை அழைத்துச் சென்று கூடாரம் அடித்து தங்குவேன். அப்போது பூச்சிகள் கடித்துவிடும். காட்டு எருமைகளும், குள்ள நரிகளும் கூடாரம் அருகே வந்து கூச்சல் போடும். நம் பயணத்தில் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு ஒரு ஏரியோ, ஆற்றையோ கடந்து செல்ல வேண்டியதிருக்கும். அந்தமாதிரி சமயத்தில் பல கி.மீ தூரத்திற்கு நீந்தியும், தண்ணீரில் நடந்தும் செல்ல வேண்டும். இன்னும் பூச்சிக்கடி, உடல்நலத்தில் மாற்றம், வழிதவறி செல்லுதல், சிக்கலான நிலப்பரப்புகள் என்று எத்தனையோ சவால்களும், ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால் நான் இம்மாதிரி கடினமான சூழலை ரசித்து வாழ்கிறேன். அந்த ஆர்வம்தான் ஒவ்வொரு காட்டுப் பயணத்தின் முடிவிலும் ஒரு வெற்றியைத் தருகின்றது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

கடல் மற்றும் வன ஆராய்ச்சியில் கற்றுக் கொண்ட விஷயம் ?

உலகளவில் மாங்குரோவ் காடுகள் (சுரபுன்னை) சுற்றுச்சுழல் பாதுகாவலனாக விளங்குகின்றது. இக்காடுகள் மீன் வளம் உள்ளிட்ட பல்லுயிர் இனப்பெருக்க தொட்டி லாகவும், பறவைகள், ஊர்வன பாலூட்டிகள் போன்ற அனைத்து உயிரினங்களின் தங்கு மிடமாகவும் கடல் அரிப்பை தவிர்க்கும் கேடய மாகவும் உள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங் களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக் குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித் தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு கடல் வளத்தையும் பாதித்து வருகிறது. உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றுக் குள் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருப்ப தாகவும், பென்குயின் உட்பட அறுபது சதவீத கடல் பறவைகளின் குடலில் பிளாஸ்டிக் இருப் பதாகவும், சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு எட்டு மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் கடல்களில் கொட்டப்படு கின்றன. இவை ரகசியமாக எல்லைவிட்டு எல்லை தாண்டியும் நடக்கின்றன, இவற்றைக் கட்டுப் படுத்த அனைத்து உலக நாடுகளும் முன்வரவேண்டும்.  இந்தத் துறையில் பெண் களின் பங்களிப்பு அதிகம் கிடையாது. சுய பாது காப்பு, உடல் ஒத்துழைப்பு, குடும்பத்தி னரின் சம்மதம், கஷ்டமான பயணம், வித்தியாசமான களப் பணி போன்றவைகளை அவர்கள் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் வெளி நாட்டுப் பெண்கள் கடல் மற்றும் காட்டு ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்து வருகி றார்கள். அவர் களைப் பற்றி தனி ஆவணப் படமே உள்ளது.

காவ்யா கோப்பரப்பு மூளையைப் பாதிக்கும் புற்று நோய் குறித்து ஆய்வு நடத்தி வருபவர். “மருத்துவ அறிவியலில் எத்தனையோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மூளைப் புற்று நோயைக் குணப்படுத்துவதில் பின்னடைவைத்தான் அனுபவப்பட்டு வருகிறோம்‘ என்று சொல்லுகிறார் பதினெட்டு வயது காவ்யா ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவி. .

மூளையில் புற்று நோய் பாதிக்கப்பட்ட பாகங்களை படம் எடுத்து கணினி தொழில் நுட்பம் மூலமாக எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள காவ்யாவின் கண்டுபிடிப்பு உதவும். இவரது கண்டுபிடிப்பிற்கு தற்காலிக காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவரது கண்டுபிடிப்பு மூளைப் புற்று நோய் சிகிச்சையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தொடர் ஆய்வுகள் நடந்து கொண்டுள்ளன. சென்ற ஆண்டு கண் நோய்களைக் கண்டுபிடிக்கும் “செயற்கை அறிவு நுட்பத்தை’ கண்டுபிடித் திருந்தார்.

இந்த ஆண்டு டில்லியில் நடந்த குடியரசு தின ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற வீரசாகச மோட்டார் சைக்கிள் விளையாட்டை நடத்தும் பொறுப்பை முதன் முறையாக கேப்டன் சிகா சுரபி ஏற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய, குடியரசு தினத்தன்று டில்லியில் நடக்கும் 2.4கி.மீ. தொலைவு ராணுவ அணி வகுப்பின் போது, 9 மோட்டார் சைக்கிள்களில் 32 வீரர்களுடன் மனித கோபுரம் அமைத்து, இந்திய தேசியக் கொடி, ராணுவக் கொடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் சிக்னல் கொடி ஆகிய கொடிகளை ஏந்தியபடி செல்லும்போது, புல்லட் மோட்டார் சைக்கிளில் நின்றபடி குடியரசு தலைவருக்கு சல்யூட் அடித்தபடி குழுவினரை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு இந்தமுறை பெண் ராணுவ அதிகாரி சிகா சுரபிக்கு வழங்கப்பட்டது. இது போன்ற சாகச நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.

“இது ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த உயர் அதிகாரிகளுக்கு, நான் நன்றி சொல்ல வேண்டும். ஏற்கெனவே ஃபைட்டர் பைலட் என்ற முறையில் இந்திய விமானத்துறையில் பல பெண்கள் வீரசாகசங்கள் புரிந்துள்ளனர். என்னுடைய துணிச்சல் இந்த நாட்டின் பெருமைக்குரிய பெண்களுக்கு உந்துதலையும், பெருமையையும் கொடுக்குமென நினைக்கிறேன்’’ என்று கூறும் சிகா சுரபி, “உறுதியுடனும், தீர்மானத்துடனும் மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து கடுமையான பயிற்சி மேற்கொண்டதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் காரணம்‘’ என்கிறார்.

ராணுவத்தில் சேர இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?: இவரது உறவினர்கள் பலர் ராணுவத்தில் உள்ளனர். இவருக்குச் சிறு வயதிலிருந்தே துணிச்சல் அதிகம். பத்து வயதிலேயே புல்லட் ஓட்ட பழகிக் கொண்ட இவர், கூடவே மலையேறும் பயிற்சி, மங்கிஜம்ப், மார்ஷல் ஆர்ட், நீண்டப் பயணம், கட்டுமர பயணம் எனப் பல வீர செயல்களில் பயிற்சி பெற்றிருந்ததால் ராணுவத்தில் சேர உதவியாக இருந்தது.

2014 ஆம் ஆண்டு அலகாபாத்தில் உள்ள சேவை தேர்வு மய்யம் மூலம் தேர்வு பெற்ற இவர், மேற்கொண்டு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று, 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக அருணாசல பிரதேசத்தில் பணியில் நியமிக்கப்பட்டார். தற்போது பஞ்சாபில் பணியாற்றி வருகிறார்.  “அபாயகரமான விளை யாட்டுகளில் பயிற்சி பெறுவது ஆபத்தானது என் றாலும், நாளடை வில், பழக்கமான பின்பு சாகசங்கள் செய்வது சுலபமாகிவிடும். முதலில் நான் பணியில் சேர்ந்தபோது, என் தலைமையின் கீழ் ராணுவ முகாமில் 136 வீரர்கள் இருந்தனர். அனைவரையும் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்கள் தோழமையுடன் பழகி, என் கட்டளைகளை ஏற்று ஒத்துழைப்பு அளித்து என் பயத்தை போக்கி உற்சாகத்துடன் பணிபுரிய வைத்தது. அதிகாரிகளும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். குறிப்பாக கேப்டன் அங்கிட் என்னிடம் காட்டிய பரிவு எனக்கு பெரும் பலமாக இருந்தது என்று கூறினார் சிகா சுரபி.

படித்து முடித்துவிட்டு சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் வேலைக் கிடைத்தால் போதும், என்று நினைக்கும் பட்டதாரிப் பெண்கள் மத்தியில், லட்சங்களில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, தனது லட்சியத்தை நிறைவேற்ற பத்திரிகையாளர் பணியை ஆர்வத்துடன் செய்து வருகிறார் சாதனா.

யார் இந்த சாதனா?

கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட சாதனா, மைசூரில் படித்து வளர்ந்தவர். அப்பா, அம்மா இருவருமே விவசாயிகள். தங்கை, தம்பி என இரு உடன்பிறப்புகள். தன்னுடைய 17 வயதில் லண்டன் சென்றார். அங்குக் கல்வி உதவித்தொகை பெற்று கணக்கியல் படித்தார். தொடர்ந்து அதே துறையில் பணிக்குச் சேர்ந்தார். தன்னுடைய உழைப்பால் பல்வேறு உயர்ப்பதவிகளை அடைந்தார். அங்கேயே திருமணமும் செய்து கொண்டார். அவர் இறுதியாக வாங்கிய சம்பளம் மட்டுமே 95 லட்சம். அதனைத் தொடர்ந்து அந்த வேலையை விட்டுவிட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ சர்வதேச வளர்ச்சி பற்றிப் படிப்பை தேர் தெடுத்துப் படித்தார். அந்தப் படிப்பின் மீது ஆர்வம் குறையவே, லண்டன் பல்கலைக் கழகத்தில் ஆவணப்படம் தயாரித்தல் மற்றும் புலனாய்வு இதழியல் பற்றிய படிப்பை முழு நேரம் படித்து, தற்போது புலனாய்வு இதழியல் பணியை மேற்கொண்டு வருகிறார்.

உங்கள் முதல் படைப்பு பற்றி...

“என்னுடைய புலனாய்வு இதழியல் படிப்பு தொடர்பாக ஆவணப்படம் ஒன்று எடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான தேடலில் இறங்கிய போது கவுசல்யா-சங்கர் திருமணம் பற்றியும், ஆணவப்படுகொலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே தமிழ் நாட்டிற்கு வந்தேன். கவுசல்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் பேசி ஆவணப் படப் பணிகளை தொடர்ந்தேன். இருதரப்பில் சொன்ன விஷயங்கள் அத்தனையும் பதிவு செய்தேன். அப்போது வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகவில்லை. தீர்ப்பு வரும் வரை காத்திருந்தேன். காரணம் தீர்ப்பு தான் என்னுடைய ஆவணப் படத்தின் முடிவாக இருந்தது. நான் ஆணவப்படுகொலைப் பற்றி படமெடுப்பதைக் கேள்விப்பட்ட ஒரு நிறு வனம், என்னுடைய படைப்பைப் பார்த்து விட்டு அதனை அல் ஜெசீரா தொலைக்காட்சியினரிடம் அனுப்பி னார்கள். அவர்கள் என்னிடமிருந்து ஆவணப்படத்தை வாங்கிக் கொண்டார்கள். 8 மாதங்களாக எடுக்கப்பட்ட படம் 2018- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அனைத்துத் தரப்பிலிருந்தும் வரவேற்பு பெற்றுத் தந்தது. ஆணவப் படுகொலைப் பற்றிய விஷயத்தை உலகத் திற்கு எடுத்துச் சென்றதற்காக இதுவரை எனக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. மேற்கொண்டு 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளேன். தமிழ்நாட்டுப் பெண்ணாக தமிழகத்தில் நடந்த விஷயத்தைப் படமாக் கியது மகிழ்ச்சியாக இருக்கிறது’’.

ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு வரவில்லையா?

“ஆமாம். 70 மணி நேரம் எடுக்கப்பட்ட படம். இதற்கான திரைக்கதையைப் பல நாட்கள் செதுக்கி இருந்தேன். ஆணவப் படுகொலையைப் பற்றிய விஷயங்களை மட்டும் 28 நிமிடங்கள் தொகுத்து வழங்கி னேன். படம் வெளியானது கவுசல்யா, மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்தும் என்னிடம் பேசினார்கள். நான் யாரையும் தவறாக காட்ட முயற்சிக்கவில்லை. நமது சமூகத்தின் தப்பு என்ன என்பதைச் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் சில ஆவணப் படைப்பாளிகள் இன்னும் இதனை அழகாகச் சொல்லியிருக்கலாம் எனக் கருத்து சொன் னார்கள். இங்கே படம் எடுப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கேட்பதில்லை. ஆனால், என்னுடைய படத்தில் ஒவ்வொரு காட்சியும் அவர்களிடம் அனுமதி கேட்காமல் படமாக்கவில்லை. அப்போது தான் அதனைச் சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்‘’.

உங்கள் அடுத்தப்படம் பற்றி?

“இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் இடத்தை பற்றி உண்மை நிகழ்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளேன். தொடர்ந்து மலை வாழ் மக்களைப் பற்றிய படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளேன் ‘’ என்றார்.

Banner
Banner