மகளிர்

விருது பெற்றுத்தந்த மயானம்

பெரும்பாலும் ஆண்களே நிறைந் திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், சவாலான துறையில் சாதித்த முதல் பெண் என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த  பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.

அங்கீகாரம்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது.  அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்கு விக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.

‘அழகு’க்கு விருது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில்  விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.

முதன்மை அதிகாரி

சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா  அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண் டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

தாய் மண்ணே வணக்கம்

ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் அய்ந்தாண்டு களுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிர வாதிகளால் சுடப் பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ் தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மாற்றத்தின் அடையாளம்

பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியசிறீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞராகப் பதிவுசெய் திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்த இவரைத் தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.

செய்திகள் வாசிப்பவர்...

பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோகினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாள ராக நியமித்து உள்ளது.

அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

நோபல் பெண்கள்

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை  இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற்றுள்ள னர்.  இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த  டோனா ஸ்ட்ரிக் லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத் துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப் படும் வன்முறைக்கு எதிராகவும் போராடி வரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது.

போர்ப் பறவைகள்

இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமை யைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் மிக்-21  பைசன் என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள் ளார்.

இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப் லைன் திட்டத்தைத் தமிழக அரசு கடந்த திங்கள் அன்று தொடங்கியது. பாலியல் சீண்டல், மன அழுத்தம், குடும்பப் பிரச்சினை, காவல் - மருத்துவ உதவி எனப் பெண்களுக்காகப் பிரத்யேக உதவி மய்யமாக இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உதவி மய்யம் 24 மணி நேரமும் செயல்படும். 181-க்குப் பெண்கள் போன்செய்து புகார் தெரிவித்தால், அந்தப் புகார்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேவையான காவல் உதவியோ மருத்துவ உதவியோ கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த எண்ணை அழைக்கலாம். 181 ஹெல்ப்லைன் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் 5,500 அழைப்புகள் இந்த மய்யத்துக்கு வந்துள்ளன. இதில் 2 ஆயிரம் பெண்களுக்கு, அவர்களது பிரச்சினைகளைக் களைய  ஆலோசனை வழங்கப்பட்டது. 300 பெண்களுக்குத் தேவையான உதவிகள் உடனடியாகச் செய்யப்பட்டன.

ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற சாகச விளையாட்டு இந்தியாவிலும் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்தியவர் அந்தப் பெண். இந்திய ஒலிம் பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் பெண் என்ற இமாலய சாதனையைப் படைத்தவர். அவரால் இன்று இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துளிர்த்து வளரத் தொடங்கியிருக்கிறது. இளம் பெண்களின் புதிய ரோல் மாடலாக உருவெடுத்திருக்கும் அவர், 25 வயதாகும் தீபா கர்மாகர்!

புகழ்பெற்ற வீராங்கனைகளை அள்ளிக் கொடுத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவைச் சேர்ந்தவர் இவர். எளிமையான குடும்பத்தில் பிறந்த தீபாவின் அப்பா துலா கர்மாகர், பளு தூக்கும் வீரர். சிறு வயதிலிருந்தே தன்னைப் போலவே மகளை யும் விளையாட்டு வீராங்கனையாக்க வேண் டும் என்பது அவரது கனவு. மகளுக்காக ஜிம் னாஸ்டிக்கை அவர் தேர்ந்தெடுத்தார். இந்தி யாவில் பெரிய அளவில் வளராத ஜிம்னாஸ் டிக்ஸில் தன் மகளை வீராங்கனையாக்க வேண்டும் என அவர் விரும்பியது ஆச்சரி யம்தான்.

தீபாவுக்கு ஆறு வயதானபோதே ஜிம் னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்தார் அவரு டைய அப்பா.  விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு மீது அவருக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை.

அதற்கான காரணத்தை அவருடைய பயிற்சியாளர் சோமா நந்தி கண்டுபிடித்தார். தீபாவின் கால்கள் தட்டையாக இருந்ததால், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் அவரால் ஈடுபாட்டுடன் விளையாட முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார். சாகச விளை யாட்டான ஜிம்னாஸ்டிக்ஸின் பலமே கால்கள் தாம். கால்கள் வலிமையாகவும் நெகிழும் தன்மையுடனும் சமநிலைத் தன்மை யுடனும் இருப்பது அவசியம். தட்டையான பாதங்கள் இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸில் ஜொலிக்க முடியாது என்பதால், தீபாவுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார் பயிற்சி யாளர். குறிப்பாக கால்களுக்கு மட்டும் தனிப் பயிற்சி அளித்தார். தொடர்ச்சியான பயிற்சியும் எல்லையில்லா முயற்சியும் வெற்றியானது. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடும் அள வுக்கு தீபாவின் பாதங்கள் நெகிழ்வாயின. இதன் பின்னரே தீபாவுக்கு முறையான ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் தொடங்கின. தொடக்கத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், தன்னு டைய குறைதான் அதற்குத் தடையாக இருக் கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து மீள சிறு வயதில் தீபா கொடுத்த ஒத்து ழைப்புதான், அவர் பிற்காலத்தில் வாகையராக மாறத் துணை நின்றது.

2007ஆம்  ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேசிய இளையோர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வென்றதுதான் அவரது முதல் பதக்கம். டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் தீபாவுக்கும் இடம் கிடைத்தது.

காமன்வெல்த் போட்டியில் தீபா பெரிதாகச் சாதிக்கவில்லையென்றாலும், இந்தியாவின் ஆண்கள் அணியைச் சேர்ந்த ஆசிஷ் குமார் முதன்முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் வென்றார். ஆசிஷ் வென்ற பதக்கம் ஜிம் னாஸ்டிக்ஸில் சர்வதேசப் பதக்கம் வெல்ல தீபாவுக்கு உந்துதலைத் தந்தது.

தொடர்ந்து ஜிம்னாஸ்டிக்ஸில் பல்வேறு வகையான  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட தீபாவுக்கு 2014ஆம் ஆண்டு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த முறையும் அவரது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதும் காமன்வெல்த் போட்டிதான்.

2014இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் தீபா. ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் சூடிக்கொண்டார். 2015இல் ஜப்பான் ஏஆர்டி ஜிம்னாஸ்டிக்ஸ் ஏசியன் வாகையர் பட்டப் போட்டியில் வெண் கலப் பதக்கம் வென் றார்.

ஒலிம்பிக் பெருமை

2016, தீபாவின் வாழ்க்கையில் மறக்க முடி யாத ஆண்டு. உலகின் மிகப் பெரிய விளை யாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்க தீபா தகுதி பெற்றார். இந்தப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஒலிம் பிக்கில் 4ஆவது இடத் தைப் பிடித்து நூலி ழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால்,  இந்திய வீராங்கனை ஒருவரின் ஜிம் னாஸ்டிக்ஸ் திறமையை  உலகமே திரும்பிப் பார்த்தது.

கடந்த 11 ஆண்டுகளில் மாநிலம், தேசம், சர்வதேசம் எனப் பல பிரிவுகளிலும் 77 பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இவற்றில் 67 தங்கப் பதக்கங்கள்! தீபாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் திறமையைக் கண்டு 2016ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு பத்மசிறீ விருதையும் வழங்கியது.  2017ஆம் ஆண்டு 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த சாதனையாளர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டி யலில் தீபா கர்மாகரும் இடம்பிடித்தார்.

ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் ஆபத்தான புரோடுனோவா வால்ட்டில் பங்கேற்ற அய்ந்து சர்வதேச வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் தீபா தவிர மற்றவர்கள் ஒலிம்பிக்கிலும் தடம் பதித்தவர்கள். தீபாவுக்கும் அந்தத் தருணம் ஒரு நாள் நிச்சயம் அமையும். அப்போதுதான் அவரது அந்தரச் சாகசம் முழுமைபெறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் அக்குடும் பத்தில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில்தான் உள்ளது. பெண்களின் உடலும் மனமும் நன்றாக இருந்தால்தான் அவர்களால் குடும்ப உறுப்பி னர்களின் நலனின் அக்கறை செலுத்த முடியும். ஆனால், நம் ஊரில் பெண்கள் மணமாகி குழந் தைகள் பெற்ற பிறகு தங்கள் உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை.

பிரசவத்துக்குப் பின்னும் மாதவிடாய் நின்ற பின்பும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு பெண்கள் முறையான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெறுவது கட்டாயம்.

பெண்களைத் தாக்கும் நோய்கள்

இளம்வயதில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், உடல் எடை குறித்த குறைபாடுகள் போன்றவை இருக்கக்கூடும். உடலின் ஹார்மோன் செயல்பாட்டுக்கும் மாதவிடாய்க்கும் நிறைய தொடர்புண்டு. எனவே, மாதவிடாய் தள்ளிப்போவது, மாதவிடாயின்போது மிதமிஞ்சிய வலி ஏற்படுவது, அதிக உதிரப்போக்கு ஆகியவை உடனே கவ னிக்கப்பட வேண்டும். இல்லையெனில் பின் னாளில் குழந்தை  பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படக் கூடும். உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம். அது கூடினாலும் குறைந்தாலும் சிக்கலே.

பெண்கள் பலர் இன்று வேலைக்குச் செல்கின் றனர். இதனால் தூக்கமின்மை, முறையற்ற உண வுப்பழக்கம்,  வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல்நலம் பாதிப் படைகிறது. நடுத்தர வயதுப் பெண்கள் ரத்த அழுத்தம், ரத்த சோகை, கருப்பை கட்டிகள், தைராய்டு பிரச்சினை, இதயக் கோளாறு கருவுற்றி ருக்கும்போது ஏற்படும் டைப் 1 நீரிழிவு, சத்துக் குறைபாடு போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்.  இந்தப் பிரச்சினைகளை ஆரம் பத்திலேயே கவனிக்கவில்லையென்றால்  40 வயதுக்கு மேல் நிலைமை மோசமாகிவிடக் கூடும். 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கக்கூடும். இதனால் ஏற்படும் ஹார்மோன்கள் குறைபாடு வயதான பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கிறது. இந்தியாவில் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய். இதைச் சுய பரிசோதனை மூலமாகவோ மருத்துவ ஆலோசனை பெற்றோ அறிந்துகொள்ள முடியும்.

சிறப்பு மருத்துவ முகாம்

பெண்களின் நலம் காக்கும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அங்கே குறைந்த கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் உள்ள பீவெல் மருத்துவமனை சார்பில் டிசம்பர் 31-வரை பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இந்த முகாமில் பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். தியாகராயர் நகர், கீழ்ப்பாக்கம், பூவிருந்தவல்லி,  அம்பத்தூர் ஆகிய பீவெல் மருத்துவமனை கிளைகளிலும் முகாம்  நடைபெறுகிறது.

ஆண்கள் கோலோச்சும் பின்னலாடைத் தொழில்துறையில் சாதனைப் பெண்ணாக ஜொலிக்கிறார் 45 வயது லீலாவதி.  தொழிலில் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு, ஆண்டுக்கு 100 கோடி ஏற்றுமதி வர்த்தகம் செய்து சாதித்துவருகிறார் லீலாவதி.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி. கணவர் திருக் குமர னுக்குச் சொந்த ஊர் ஈரோடு. திருமணத்துக்கு முன்பே பின்னலாடைத் துறையில் ஈடுபட்டுவந்தார் திருக்குமரன். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதி, ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். தொழில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் அந்த நேரம் பார்த்து விலகிச்செல்ல, பெரும் சிரமத்துக்கு ஆளாயினர் லீலாவதி-  திருக்குமரன் தம்பதி.

குழந்தை  சிறீநிதிக்கு ஆறு மாதமானபோது குடும்பச் சூழலால் பின்னலாடைத் தொழி லுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் லீலாவதிக்கு. தனியொரு பெண்ணாக எவ்வித முன் அனுபவமும் இன்றித் துணிந்து கால்பதித்தார். தொழிலில் கணவருக்குப் பக்கபலமாக இருந்து, தொழில் நிர்வாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியபோது லீலாவதிக்கு 25 வயது!

திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் 20 பேருடன் நிறுவனத்தை நடத்தத் தொடங் கினார் லீலாவதி. இன்று அவரது நிறுவனத்தில் 1,000 பேர் வேலை செய்கிறார்கள் என்பதே அவர் எட்டியிருக்கும் உயரத்துக்குச் சான்று. 700 ஆண்கள், 300 பெண்கள் எனப் பரந்து விரிந்த பின்னலாடைத் தொழிற்சாலையாக, வடக்கு பூலுவபட்டியில் உள்ளது லீலாவதியின் எஸ்.டி.  பின்னலாடை உற்பத்தி  ஏற்றுமதி நிறுவனம்.

பரபரவென்று பம்பரமாக நிறுவனத்தில் சுழன்றபடி பேசத் தொடங்குகிறார் லீலாவதி. நான் பி.காம். பட்டதாரி.  1997இல் திருமணம் நடந்தது. மணம் முடித்த கையோடு, பின் னலாடைத் தொழிலுக்குள் நுழைந்தேன். நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பைப் பெரும் நெருக்கடிக்கு இடையே ஏற்றேன். மிகச் சிறிய அளவில் மிகுந்த சிரமத்தோடு தொழிலைத் தொடங்கினோம். அப்போது வங்கியில் கடனுதவிப் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினோம்.

எனக்கு வேலைசெய்யப் பிடிக்கும். நேரம், காலம் பார்க்காமல் வேலைசெய்யத் தொடங் கினேன் என்று பேசியபடியே அலுவலக வேலையையும் இடையிடையே செய்து விடுகிறார் லீலாவதி.

பிறகு பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பின்ன லாடையை ஏற்றுமதி செய்யத் தொடங்கி னார்கள். தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த கடன் நெருக்கடியால் தான் மனம் தளரவில்லை என்று சிரித்தபடியே சொல்கிறார் லீலாவதி.

நம் பிரச்சினையை நாம்தான் எதிர் கொள்ள வேண்டும் என்பதால், அதிலிருந்து பின்வாங்கவில்லை. மாறாக, கடன் பெற்றவர்களிடம், சிறிது சிறிதாகப் பணம் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தினோம். பெண் என்பதைக் காரணமாக வைத்து நான் எதிலும் பின்வாங்க வில்லை. பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கிய பிறகு,  தொழிலும் மெதுவாக வளரத் தொடங்கியது. இதையடுத்து 50 பேருடன் வடக்கு பூலுவபட்டியில் 2005இல் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனத் தைத் தொடங்கினோம் என்கிறார் லீலாவதி.

நேர்மையும் நேரம் தவறாமையும்

நேர்மை, நேரம் தவறாமை ஆகிய இரண்டு இரண்டையும் தொழிலுக்கு மிக முக்கியமானவையாகக்  கருதுவதாகச் சொல் கிறார். தொழிலைத் தொழிலாக மட்டுமன்றி, வாழ்க்கையாகவும் அவர் பார்த்தார்.

பெண்கள் அலுவலக நெருக்கடியையும் கையாள வேண்டும்; அதே நேரம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் பாவப்பட்டவர்கள் என்று சொல்லும் லீலாவதி போட்டி நிறைந்த பின்னலாடைத் துறையில் சாதிப்பது பெரும் சவால் நிறைந்ததாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

லேசாகக் கவனம் திசை திரும்பினால் தொழிலும் தடம்புரளும். கணவர் மார்கெட்டிங் துறையை மட்டும் பார்த்துக்கொண்டதால், அலுவலகத்தில் என்னால் நிர்வாகத்தை நன்கு கவனிக்க முடிந்தது. தொழிலில் ஏற்ற இறக்கங்கள்  இருந்தும்,   இருபது ஆண்டுகளாக நிர்வாகத்தைச் சிறப்பாகக் கவனித்து வருகிறேன்.

இதை நான்  சாதனையாகக் கருதவில்லை. என் திறமையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.  தொழிலைக் கடந்து சமூகத்தில் பணியாற்றுவதும் தற்போது பிடித்துள்ளது. தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழியக் கூடாது. அவற்றை எதிர்கொள்ளப் பழகுவதே வெற்றிக்கான வழி என்று சொல் லும் லீலாவதி, தனது சொல்லுக்கு இலக் கணமாக வாழ்கிறார்.

Banner
Banner